பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன் தம்மைப் பற்றி எழுதிய பாடல்
தமிழி லக்கணம் தமிழி லக்கியம்
எனக்குச் சொல்லிக்கொடுத்தவர், புதுவைத்
திருப்புளி சாமி ஐயா, செந்தமிழ்
இருப்பே என்னும் பங்காரு பத்தர்,
புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு
பெரும்புகழ்ப் பெரிய சாமிப் பிள்ளை
என்பவர் ஆவர். இவர்களின் அருளினால்
பதினே ழாண்டும் பற்றா இளையேன்
நாற்பது புலவர் தேர்வில் முதலாத்
தெரிவு பெற்றேன். காரைக்காலின்
ஒரு பகுதியான நிரவியில் ஓர் இடம்
அந்த இடத்தை அடையக் கருதிப்
புலவர் பல்லோர் போட்டியிட்டனர்.
யானும் பதினெட்டாண் டெய்தினேன். ஆயினும்
இளையன் ஆதலால் அவன் அவ்விடத்தை
அடைதல் ஆகாதென்றனர் ஆள்வோர்.
ஆயினும் நானே அதனை அடையச்
சட்டங் காட்டித் தடைகளை நீக்கி
அன்றுஎனை நிரவி ஆசிரியன் ஆக்கினார்.
அவர் யார்? கல்வித்துறைச் செயலாளர்
பொய்இலா ராகிய “கையார்” என்க.
முப்பத் தேழாண் டலுவல் பார்த்தேன்.
ஓய்வு பெற்றேன் ஊதியப் பேற்றுடன்.
அலுவலில் இருந்த அத்தனை நாளிலும்
அறவழி தவறிய அதிகாரிகளின்
எதிர்ப்பிலா நேரமே இல்லை; அக்கடலை
வென்று நீந்தா வேளையே இல்லை.
அலுவல் கால நிலை இது. ஆயினும்,
ஆசை பற்றிய தமிழின் தொண்டில்
ஒட்டிய என்உளம் வெட்டினும் பிரியாது.
வெண்பா முதலிய எழுதும் என்கை;
வண்ணம் பாடிக் கொண்டிருக்கும் வாய்!
முப்பதாண்டு முடியும் வரைக்கும்நான்
எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்?
கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச்
“சுடச்சுட அவன்அருள் துய்ப்பீர்” என்னும்!
ஆயினும் கடவுளுருவம் அனைத்தையும்
தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்!
பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச்
சுப்பிரமணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.
நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர்
தொண்டினால் அவர்க்கும் புலவர்க்கும் தோன்றும்
சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்.
முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும்
கட்புலம் போல என்றன் உள்ளம்
சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும்
சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும்
இளைஞர்களுக்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர்
ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்தது.
நல்லாசிரியன்மார் நல்லாசிரியைமார்
பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும்
அலுவலில் அழகுற வாழ்கின்றார்கள்.
திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால்
கொலைமுதற் பற்பல குற்றம் சுமந்த
மாசிலா மனத்து மாடசாமியும்
அன்புறு பாரதி அரவிந் தர்முதல்
வன்முறையுடையரால் வருந்துவார்க்கு உதவியாய்ப்
பன்முறைப் புதுவையில் செத்துப் பிழைத்தேன்.
மக்கள்நலம் காத்தல் கண்டு ஆளவந்தார்
எக்கேடு சூழினும் அஞ்சேன்.ஒருநாள்
சிறைக்கதவு திறக்கப்பட்டது; சென்றேன்;
அறைக்கதவு புனிதப்பட்டது மீண்டேன்.
புதுவை அரசியற் போரில் இறங்குவேன்;
இதைவையேன் எனில் அதை விட்டுவையேன்.
நாய்பல நாற்புறம் வாய்திறக்கினும்
தாய்மொழித் தொண்டும் தவறியதில்லை.
நன்றி மறந்தவர் இன்று வரைக்கும்
குன்று கொணர்ந்து தூற்றுவர்; நன்றெனப்
பட்டதைச் செய்வேன்; பகைவருக்கு அஞ்சேன்.
வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
தூக்கிவிடுவதில் சோர்ந்ததே இல்லை.
படிப்புத் தந்தேன் சோறுதந்தேன்தலை
எடுக்கச் செய்தேன்; என்தலைதனை அவன்
அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்;
குறுக்கிற் பாய்ந்தும் பெரியவன் ஆகட்டும்
என்று நினைத்திருக்கின்றேன். இன்றும்!
என்கை பற்றி எழுந்து, பின்என்னையே
துன்புறுத்தும் பிள்ளைகள் பற்றிய
கதைகள் பலஉள. தடைகள் கணக்கில;
எதையும் தாண்டி இந்நாள் எழுபதாம்
ஆண்டினை ஈளைநோய் அங்காந்த வாயையும்
தாண்டி அடைந்தேன்; சாவு தோற்றது!
மெய்யே! ஆயினும் மெய்இலா உலகில்
என்னை இன்னும் வாழச் சொன்னார்
புலவர் இராம நாதன் அவர்கள்!
நானோர் பாவேந்தன் என்பதை
நானிலத் தமிழர் நன்றே அறிவர்.
என்பாட்டுச் சுவையில் ஈடுபட்டவர்
நோக்கினால் நூற்றுக்கு நாற்பதின்மர்.
என்நடை தம்நடை; என்யாப்புத் தம்யாப்பென்று
இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை
எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்
தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்.
திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவர்
இருப்பிடம் என்றன் நூல்களின் இருப்பிடம்!
அவரால் வெளிவந்துள்ள திரைப்படம்
என்நூற் சொல்லை மாற்றியது குறிப்பிடும்!
பழியே தவர்மேல்? என்நூல் அல்லது
வழியேதவர்க்கு? கற்பனை ஏது?
கட்சித் தலைவர்தம் கட்சிக் குழந்தையின்
தொட்டில் ஆட்டப் பாடிய பாட்டும்
வளர்க்கப் பாடி வந்த பாட்டும்
என்பாட்டாகும்! என்பாட்டுக்குப்
பின்பாட்டுப் பாடினோன் அதனைத் தன்பாட்டு
என்று இயம்பும்-இது குன்றின் விளக்காம்!
எனினும் நாட்டுப்பற்றுள நல்லவர்
மிகப்பலர் என்றன் பாட்டின் மேன்மையை
உணர்ந்து சிலசொல் உரைத்த துண்டு.
முட்டுக் கட்டை இட்டதில்லை
மற்றும் தமிழே உயிரென வாழும்
தோழர் சில்லோர் வாழ்வின் பயனென
என்பாட்டுக்களை என்றன் நூல்களை
வரப்படுத்தி முறைப்பட வாய்விட்டு
வீட்டிலும் கூட்டந்தன்னிலும் மிக்க
ஒழங்குறப் பாடுகின்றதும் உண்மையே.
ஒருநாள் ஓரிலக்கம் மக்கள் கூடிக்
கால் இலக்கம் வெண்பொற்காசும்
பொன்னின் ஆடையும் ஈந்ததும் பொய்யன்று.
இவர்களன்றி மேல்நான் இயம்பிய
இழிந்தோர் என்னை ஒழிக்கத் தமிழையே
ஒழிக்கவும் தயங்கா உள்ளம் படைத்தவர்.
புலவர் இராம நாதன் அவர்கள்
தமது பெருந்தமிழ்ப் புலமையால் தாவி
என்றன் நூல்கள் அனைத்தையும் எடுத்துக்
"கவிஞரும் காதலும்" எனப்பெயர் கொடுத்துத்
திறனாய்வு வையம் காணச்செய்தார்.
நான்காணும்அவர் நல்ல எண்ணம்
என்றன் எழுபதாம் ஆண்டின் பின்னும்
நன்றுநான் இன்பமாய் வாழ்வதற்கான
நோற்றலின் ஆற்றல் தருவதாம்! வள்ளுவர்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கென் றருளினார்.
புலவர் இராம நாதனார் நூல்பல
உலகினுக் களித்துல குளவரை வாழ்கவே.
(01.03.1960 ஆம் நாளன்று பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இந்தப் பாடல் தஞ்சைப் பேராசிரியர் புலவர் ந.இராமநாதனார் எழுதிய "கவிஞரும் காதலும்" நூலுக்கான வாழ்த்துப் பாவாகும். அனைவருக்கும் பயன்படும் வகையில் பாவேந்தர் பிறந்தநாளான இன்று (29.04.2012) தட்டச்சிட்டு இணையத்தில் பதிகின்றேன்)
3 கருத்துகள்:
நல்ல பதிவு ஐயா... பலருக்கும் தெரியாத சேதியினை பலரும் அறியும் வகையில் தந்தமைக்கு நன்றி
நல்ல பதிவு ஐயா... பலருக்கும் தெரியாத சேதியினை பலரும் அறியும் வகையில் தந்தமைக்கு நன்றி
நல்ல பதிவு ஐயா... பலருக்கும் தெரியாத சேதியினை பலரும் அறியும் வகையில் தந்தமைக்கு நன்றி
கருத்துரையிடுக