நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 ஏப்ரல், 2012

பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன்


பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் (18.04.1932- 29.10.2005)


 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மருதூரில் வாழ்ந்த கந்தசாமி முதலியார் தனபாக்கியம் அம்மாள் ஆகியோரின் அருமை மகனாகப் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலகிருட்டினன் என்பதாகும். இளங்கண்ணன் என்னும் பெயரில் பின்னாளில் அறியப்பட்டவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற பெருமைக்குரியவர். கரூர், கும்பகோணம், சேலம், திருவண்ணாமலை, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் பாட்டும் உரையும் வரைவதில் பேராற்றல் மிக்கவர். இவர்தம் உரைநடையில் ஆசிரிப்பாவின் அழகினைக் கண்டு மகிழலாம். சங்க நூற்புலவருக்கு நிகரான மொழிநடை கைவரப்பெற்றவர். இவர் இயற்றிய எழிற்பாண்டியம் நூல் இவர்தம் யாப்புநூற் பயிற்சிக்குச் சான்று பகரும். வனமலர், இன்ப வாழ்வு, மலர்வனம் என்னும் படைப்புகள் என்றும் இவருக்குப் புகழ்சேர்ப்பன. செயங்கொண்டம் உமையாள் தோட்டத்தில் அமைதி வாழ்வு வாழ்ந்து, அருந்தமிழ்த்தாயின் திருவடி அடைந்தவர்.

நூல்: எழிற்பாண்டியம்


எழிற்பாண்டியம்

 எழிற்பாண்டியம் நூலின் முதற்பதிப்பு 1980 இல் வெளிவந்தது. விலை 5.50 ஆகும். 1981 மதுரையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டுத் தமிழறிஞர்கட்கு நல்வரவியம்பிக் காணிக்கையாக்கப் பெற்றுள்ளது. 101 தலைப்புகளில் பாடல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் ஆசிரியர் விளக்கம் தந்துள்ளார். பாடல் புனைந்த நாள், நேரம் ஒவ்வொரு பாடலின் அடியிலும் குறிக்கப்பட்டுள்ளன.

 காதல் வாணிகம் என்னும் தலைப்பில் ஆசிரியர் வரைந்துள்ள பாடலுக்கு அறிமுகமும் பாடலும் கீழ்வருமாறு அமைந்துள்ளது.

 “ஆயிரம் பொருள்வரும் அங்காடி மருங்கில், வருபொருள் குறைவெனின் தருவிலை மிகுதி; வருபொருள் மிகையெனின் தருவிலை குறைவு. இது வாணிகத் துறையின் வழக்கென அறிவோம். ஆனால், அகத்துறை வாழ்விற்கும் அமையுமிவ் விதியெனப் புலம்புகூர் தலைவி புகல்கின்றாள் கேளுங்கள்.

அரும்பெறற் காலை அவா,விலை மிகுதலும்
மிகைவரின், அவாவொடு விலைவீழ்ந்து படுதலும்
வாணிப மருங்கில் வழக்கென மொழிப;அது
காதற்கும் பொருந்தல் காண்க!இன் களவில்
பெறற்கரி தாயநம் பீடுகெழு தோட்கவர்
நயப்போ டளியும் நனிபெரிது; இனியே
நினைதொறும் அதுபெறும் மனையறக் காலை
பொலிமலர் உண்கண் புதல்வற் பயந்ததும்
மலிபொருள் அனைத்துமன் தோளே!
விலையற்று அதற்கவர் விழைந்துசெய் அளியே!

22.10.68 பகல் 12.25

தொடுதோள் பணிமகன் என்னும் தலைப்பில் அமைந்த பாடல் பின்வருமாறு அமைகின்றது.

தெருவிடை அமர்ந்து செருப்புத்தொழில் செய்வோன், தெருப்போவார் அடியெலாம் பார்ப்பதே போல, மகளுக்கு அன்னை மாப்பிள்ளை பார்த்தாள். மகளோ, தன்மணப் பெருஞ்சுமை தன்பெற்றோருக்கில்லாமல், தனக்கேற்ற துணைவனைத் தானாகவே தேடிக்கொண்டாள். மகளின் திறனெண்ணி மகிழ்கின்றாள் அன்னை.

சிலைநிகர் இருபால் இளையரும் மேனிலைக்
கலைபயில் கழகத்து நிலைகுலை வின்றித்
தலைத்தலைச் சிறக்கும் சால்பின் ஒருவனொடு
இயம்படு மொழியின் நயம்படப் பழகி,அவன்
நல்ல்ல நெஞ்சகம் மெல்ல்லப்புக் கினியவன்
மனையகம் பொலியநற் துணையுமா யினளால்,
தொழில்பெறு வேட்கைய தொடுதோற் பணிமகன்
அதரிடைப் படுவோர் அழபார்ப் பதுபோல்
கலைபயில் இளையரைக் காண்தொறும் திரண்ட
மயிர்வார் முன்கையின் மடந்தைமெல் லாகம்
துயில்தகை உண்டுகொல் எனப்பல நோக்கிப்
பன்னாள் முயன்ற என்னினும்
நன்றுவல் லவளென் நல்வியன் னோளே!

நூல்: இன்பவாழ்வு

இன்பவாழ்வு

முதற்பதிப்பு நவம்பர்1958, இண்டாம் பதிப்பு மார்ச்சு 1980. விலை 5.50. இன்பவாழ்வு என்னும் நூல் 13 தலைப்புகளில் செய்திகளைக் கொண்டுள்ளது. ஆசிரியரின் எழிற்பாண்டியம் நூலில் இடம்பெற்ற பாடல்களை அனைவரும் படித்து மகிழ வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் உரையும் பாட்டுமாக இந்த நூலை யாத்துள்ளார். அரிய முன்னுரை நூலுக்கு அழகு சேர்க்கின்றது. ஆசிரியரின் உரைவரையும் திறனுக்கு இந்த நூல் அரிய சான்றாக விளங்குகின்றது.

நூல்: வனமலர் (கவிதைகள்)


வனமலர்

முதற்பதிப்பு 1978 இல் வெளிவந்தது. விலை 5 உருவா. தமிழ்த்தென்றல் திரு.வி.க, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் ஆகிய பெருமக்களை நினைவுகூர்ந்து ஆசிரியர் வனமலரைத் தமிழ்மக்கள்முன் படையல் செய்துள்ளார். ஆசிரியர் முன்னுரையில், “என் கவிதைகளில் கடுநடை மிக்கனவும் உண்டு. எளிமை மிக்கனவும் உண்டு. வனமலர் நடுத்தர நடையது ஈண்டும் சில அருஞ்சொற்கள் விழுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை. யான்பெற்ற பயிற்சி அப்படி. என் செய்வது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

27 தலைப்புகளில் பாடல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. பயன்தரு குறிப்புகளும் உள்ளன.

நூல்: TREASURE OF CHILDREN சிறுவர் செல்வம்

சிறுவர் செல்வம்

ஆங்கிலத்தில் பாடல் புனைவதிலும் பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் திறன்பெற்றவர். சிறுவர்களுக்கான ஆங்கிலப்பாடலும் அதற்கான தமிழ்ப்பாடலும் கொண்ட தொகுப்பாகச் சிறுவர் செல்வத்தை வழங்கியுளாளர். பதிப்பு ஆண்டு இல்லை. விலை 7.00


நூல்: மலர்வனம்

மலர்வனம்

மலர்வனம் என்னும் தலைப்பில் சிறு நூல் ஒன்றையும் மருதூர் இளங்கண்ணன் எழுதியுள்ளார். 50 காசு விலையுடையது. பதிப்பு ஆண்டு இல்லை. சிறுவர்களுக்கான பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது. தமிழ்ப்பாடல்களுடன் ஆங்கிலப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கொக்கு என்னும் தலைப்பில் உள்ள பாடல் சிறுவர்களைக் கவரும் என்பதுபோல் நம் உள்ளத்திலும் நிற்கிறது.

கொக்கு ஒன்று நின்றது!
குளத்து மீனைத் தின்றது!
மீனு விக்கிக் கொண்டது!
விண்ணில் கொக்கு சென்றது!
ஐயோ! எங்கே போனதோ!
அங்கே என்ன ஆனதோ!
உங்களுக்குத் தெரியுமேல்
எங்களுக்குஞ் சொல்லுங்கோ!

பாகற்காய்

பாகற்காய் என்ற தலைப்பில் கீழ்வரும் பாடல் அமைகின்றது.

குண்டுக் குண்டுப் பாகற்காய்!
கொம்பு போலும் பாகற்காய்!
வட்ட வட்டப் பாகற்காய்!
வறுவல் செய்த பாகற்காய்!
உண்டால் கீறிப் பூச்சியை
உடனே கொல்லும் பாகற்காய்!
உண்டு உண்டு மகிழலாம்!
ஓடி யெல்லாம் வாருங்கோ!

என்று அமைந்த பாடல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும்.

பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் நினைவுகள்…


 திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் நான் பயின்ற பொழுது பொது நூலகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறு ஒரு மாலை நேரத்தில் பழைய நூல்களைத் தேடிக்கொண்டிருந்தபொழுது ஒரு நூல் கண்ணில் தென்பட்டது. அதனை இயற்றியவர் மருதூர் இளங்கண்ணன், உமையாள் தோட்டம், செயங்கொண்டம் என்று இருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நம் பகுதியிலிருந்து ஒரு நூல் வெளியாகியுள்ளதே என்ற வியப்பே என் மகிழ்ச்சிக்கான காரணமாகும். மருதூர் இளங்கண்ணன் யார் என்று நண்பர்களை வினவி முகவரி அறிந்தேன்.


பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் 

 பின்பொரு நாள் செயங்கொண்டம் சென்று பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்களைக் கண்டு மகிழ்ந்தேன். திருவாளர் கருப்பையா அவர்களின் மருத்துவமனையின் பின்புறம் அகன்ற நிலப்பரப்பில் சிறிய அளவில் குடில் அமைத்துப் பேராசிரியர் தங்கியிருந்தார். எஞ்சிய நிலப்பகுதியைப் பாதுகாப்பதில் பேராசிரியர் அவர்களின் வாழ்க்கை அமைந்தது. பின்னாளில் இந்த நிலம் யாவும் வீட்டுமனைகளாக விற்கப்பட்டன.

 பேராசிரியர் மருதூரார் அவர்களிடம் சற்றொப்ப ஏழாண்டுகளுக்கும் மேலாகப் பழகியுள்ளேன். அவரின் தம்பிதான் பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். பின்னர் திருச்சிராப்பள்ளிக்குப் படிக்கச் சென்றபிறகு வேலாயுதனாருடன் நல்ல தொடர்பு அமைந்தமையை முன்பும் பதிந்துள்ளேன். இது நிற்க.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் பழகுதற்கு இனிய பண்பாளர். அவர்களின் துணைவியார் மிகப்பெரும் செல்வ வளம் படைத்த குடும்பத்தில் பிறந்தவர்கள். மருதூர் இளங்கண்ணன் அவர்களைச் சந்திக்கச் செல்லும்பொழுதெல்லாம் அம்மா அவர்கள் அன்புடன் விருந்தோம்புவதை வழக்கமாகக் கொண்டவர். என்னை அவர்கள் இருவரும் மகனாகப் பாவித்து அன்புகாட்டுவர். பேராசிரியர் அவர்கள் அன்பு மேலீட்டில் என்னை உரிமையுடன் கண்டிக்கவும் தயங்காதவர். அவரின் முரட்டுக்குரல் இன்றும் என் காதில் ஒலித்தவண்ணம் உள்ளது. பெருஞ்செல்வ வளம் உடையவராக ஐயா அவர்கள் இருந்தார்கள். அதேபொழுது சிக்கனமாகவும் இருப்பார்கள்.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்களின் துணைவியார் பெயர் பத்மாவதி ஆகும். நம் பேராசிரியர் இப்பெயரைத் தமிழ்ப்படுத்தி மருதவதி என்று அமைத்தார். இவர்களுக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர். முதல் மகன் எழிற்பாண்டியன், இரண்டாம் மகன் குமாரபாண்டியன் ஆவார்.

 1992 முதல் 1998 வரையில் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அதன்பிறகு ஐயாவைப் பற்றி வினவியவண்ணம் இருந்தேனே தவிர அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு பின்னாளில் அமையாமல் போனது. மருதூர் இளங்கண்ணன் அவர்கள் என் நூல் முயற்சியை அறிந்து ஊக்கப்படுத்துவார். என் நூல்களைப் படித்து, பிழை நீக்கி வழங்கியதும் உண்டு. ஒவ்வொரு வாரமும் அவர்களைக் காண வேண்டும் என்று விரும்புவார். ஒருமுறை நான் செல்லத் தவறினாலும் அன்பால் கடிந்துகொள்வார்.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் எழுதிய குழந்தைப்பாடல்கள் சிலவற்றை அச்சிட வேண்டும் என்று விரும்பினார் (1998அளவில்). திருச்சிராப்பள்ளியில் இருந்த அரசி கணிப்பொறியகத்தில் அவர்களின் அச்சாக்க விருப்பத்தைச் சொல்லி அறிமுகப்படுத்தினேன். ஆனால் பேராசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப அச்சகத்தாரால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த அளவு அச்சகத்தாரைப் பேராசிரியர் அவர்கள் விரைந்து முடிக்கச்சொல்லி விரைவுபடுத்தியதால் அந்த அச்சுப்பணி முடியவில்லை என்று பின்னாளில் அறிந்தேன். பேராசிரியர் அவர்களுக்கு சிறுநீரகக்கல் இருந்தது. ஆனால் இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இறையீடுபாட்டில் இருந்து நிறைவில் இயற்கை எய்தியதாக அறிந்தேன். அவரின் மறைவுக்குப் பிறகு அவர்தம் குடும்பத்தினரைச் சந்திக்க வாய்ப்பு எனக்கு அமையாமல் போனது.

 பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகும் இயல்பினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது அனைவராலும் கவிஞரே என்று அழைக்கப்பட்டவர். புகழ்பெற்ற பேராசிரியர்களிடம் கல்வி பயின்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் வல்லவர். பாட்டும் உரையும் வரைவதில் பெரும் புலமையுடையவர். உரைநடையில் எழுதினாலும் ஆசிரியப்பா அமைப்பு வந்து இயற்கையாகப் பொருந்தும். அதனால் அவரின் இளம் முனைவர் பட்ட ஆய்வேட்டை மொழிநடையைக் காரணம் காட்டி ஏற்கத் தயங்கினர். பட்டம் பெறமுடியாமல் போனது. ஔவையார் என்ற தலைப்பில் ஐயா அவர்கள் ஆய்வு செய்ததாக நினைவு. அருமையான ஆய்வு. ஆனால் நம் பல்கலைக்கழகங்களின் முரட்டுத்தனமான விதிமுறைகளால் பேராசிரியரால் பட்டம் பெற முடியாமல் போனது. அவரிடம் இருந்த பெரும் செல்வ வளத்தால் ஒரே நாளில் அவர் எழுதியவற்றை நூலாக்கியிருக்கமுடியும். ஆனால் அனுசரித்துப் போகும் இயல்பு ஐயாவிடம் இல்லாததால் அவர்களின் படைப்புகள் வெளிவராமலும் வெளிவந்தவை பரவலாக்கம் பெறாமலும் போயின. எனினும் தமிழ்நூற் பயிற்சியுடைய ஆய்வாளர்கள் முயன்றால் பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்யலாம். பதிப்பித்து வெளியுலகிற்குக் கொண்டுவரலாம்.

 பேராசிரியர் ஒரு மழலையர் பள்ளியை நடத்திய நினைவும் எனக்கு வருகின்றது.

 பேராசிரியர் வேலாயுதம் ஐயாவுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியை அறிந்து அதிர்ந்துபோனேன். அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை இணையத்தில் பதிவற்குப் வேலாயுதனாரிடம் பல ஆண்டுகளுக்கு முன் பெற்று வந்தாலும் பதியாமல் ஐயாவின் புகைப்படம் ஒன்றிற்காகக் காத்திருந்தேன். அரிய அந்தக் குறிப்பும் எங்கோ தவறிவிட்டது. எனவே இருக்கும் செய்திகளையாவது பதிந்துவைப்போம் என்று பதிகின்றேன். பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்களுடன் பழகிய பல நினைவுகள் என் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன.

 ஐயா அவர்கள் விருந்தோம்புவதில் பேரீடுபாடு கொண்டவர். ஒருமுறை  அவர்களின் செயங்கொண்டம் வீட்டில் மிகப்பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்களின் குடும்பத்தார் அனைவரும் கலந்துகொண்டனர். பகலுணவு கறி, கோழி என்று புலால்மணங்கமழ விருந்து நடந்தது. அனைவரும் வயிறார உண்டோம். அம்மா அனைவருக்கும் விருந்து (!) பரிமாறியது நினையுந்தொறும் மகிழ்ச்சி தருகின்றது. அப்பெருமகனார் என்மேல் கொண்டிருந்த அன்பு நினைத்து இருகண்ணில் நீர்பெருகுகிறது. அன்பிற்கு உண்டோ அடைக்குந் தாழ்? நனைகின்றேன்.

நன்றி: இரா.இரவி, மலங்கண்குடியிருப்பு
படம் உதவி:குமாரபாண்டியன்

2 கருத்துகள்:

முனைவர் ப. சரவணன், மதுரை. சொன்னது…

பேரன்புள்ள ஐயா
வணக்கம்
அறிந்திருக்கவேண்டிய தமிழறிஞர்களை நாம் அறிந்திராமல் இருக்கின்றோம். அக்குறையினைப் போக்கும் வகையில் தாங்கள் தமிழறிஞர்களைத் தமிழ்த் தொண்டர்களை அறிமுகப்படுத்திவருவது சிறப்புடையது.
நன்றி
முனைவர் ப.சரவணன்

blow lamp சொன்னது…

தமிழ் தட்டச்சு வேலை சம்மந்தமாக...

ஐயா,
வணக்கம், நான் புதுச்சேரியில் ஒரு தனியார் DTP கடையில் தட்டச்சராக வேலை செய்து வருகிறேன். நான் கணினியில் யுனிகோட் மற்றும் TTF முறையில் தமிழில் அனைத்து வேலைகளும் சிறந்த முறையில் விரைவாக தட்டச்சு செய்து தருவேன். தங்களுக்கு என்னுடைய சேவை தேவைப்பட்டால் தாங்கள் sinuvasan@gmail.com என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலும், 00918012174761 என்ற என்னுடைய மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு
சீனுவாசன்
www.typingtamil.blogspot.com