நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள்


தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள்

  தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 26.07.1942 இல் பிறந்தவர். பெற்றோர் சவுரிராசனார், சந்திரவுதயம் ஆவர். பள்ளிப் பருவத்தில் பாடல் புனையும் ஆற்றல்பெற்ற இவர் 1961 இல் தென்மொழி ஏட்டின் அறிமுகத்தால் தனித்தமிழில் பாடல்புனையும் ஆற்றல்பெற்றார். இவர் இயற்றிய கனித்தொகை நூலுக்குப் பேராசிரியர் ந.இராமநாதனார் அவர்கள் ஆய்வுரை வழங்கியுள்ளார்.

  தென்மொழி, பூஞ்சோலை, அறிவு, கைகாட்டி, மாணாக்கன், தமிழ்ச்சிட்டு, தமிழரசு, குயில்(திண்டிவனம் வகாபு), முதன்மொழி, நெய்தல், பாவேந்தர் குயில் (மன்னர் மன்னன்), இளந்தமிழன், தேசியம், கவியமுதம், செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட இலக்கிய ஏடுகளில் தொடர்ந்து பாடல் எழுதி வருபவர்.

  தரங்கை மறுமலர்ச்சி மன்றம், உலகத் தமிழ்க்கழகம், பகுத்தறிவாளர் கழகம், மாணாக்கம் (பொறுப்பாசிரியர்), வேந்தம் (திங்களிதழ் இயக்குநர்), தமிழ்ச்சான்றோர் பேரவை எனப் பொதுப்பணிகளில் கால்பதித்தவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஈடுபாடுடையவர். முனைவர் தமிழ்க்குடிமகனார், வெ.கோவலங்கண்ணனார், த.ச.தமிழனார், வி.பொ. பழனிவேலனார், ந.நாகராசன் உள்ளிட்டோரின் அன்பில் வளர்ந்தவர். பிள்ளைகளின் பள்ளிச் சான்றிதழ்களில் சாதி தமிழம் எனவும் மதம் நாத்திகம் எனவும் பதிந்தவர்.

இவர் மனைவி இரேணுகாதேவி ஆவார்.

மக்கள் செல்வம்:
ப.இ.செங்கதிர்ச்சோழன்
ப.இ.செம்மொழிப்பிராட்டி
ப.இ.செந்நாவளவன்
ப.இ.செம்புலச்செள்ளை
ப.இ.செந்தமிழ்க்கிள்ளி

தங்கைக்குச் சாதிமறுப்புத் திருமணம் செய்துவைத்தவர்.

தரங்கை. பன்னீர்ச்செல்வன் இயற்றிய நூல்கள்

1. நறுந்துணர்(1971)
2. ஐம்பதிகம்(1974)
3. தமிழ இனமே(1983)
4. இல்லறத்தாரே(1984)
5. தமிழா(1984,85)
6. தலைக்கடன்(1985)
7. நெய்தலகம்(1985)
8. கொற்றவெண்பா
9. பொற்குவை
10. புலனெறி
11. வேந்தம்
12. செந்தமிழ்ச்செய்யுட்கோவை
13. கனித்தொகை(1987)
14. தமிழ்த்தேன்

தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குச் சென்று தமிழ்முழக்கம் செய்த பெருமைக்குரியவர்.தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள்(இளமைத்தோற்றம்)நறுந்துணர்கனித்தொகைமுகவரி:
தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்கள்
6-39, கீழைக்குருவாடி,
போலகம் அஞ்சல்
திருமருகல்(வழி) 609 702, நாகை மாவட்டம்

தரங்கை. பன்னீர்ச்செல்வன் அவர்களுக்குரிய வலைப்பூ

1 கருத்து:

J.P Josephine Baba சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா!