நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மணல்மேட்டு மழலைகள்


மணல்மேட்டு மழலைகள்

என் எழுத்து ஈடுபாடு பாட்டுத்துறையில்தான் முதன்முதலில் இருந்தது. கரணியம் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஆகியோரின் பாட்டுநூல்களில் இளம் அகவையில் யான் ஈடுபட்டுக்கிடந்தேன். ஆய்வுத்துறைக்கு வராமல் இருந்தால் நான் ஒரு பாவலனாகவே அறிமுகமாகியிருப்பேன். அந்தத் துறையில் யாரேனும் என்னை ஊக்கப்படுத்தி வளர்த்திருந்தால் ஒரு பாவியம் புனையும் ஆற்றலைப் பெற்றிருப்பேன்.

மாணவப்பருவத்தில் பல மரபு வடிவங்களை அவ்வப்பொழுது எழுதிப் பழகிப் பல பாடல்கள், நூல்கள் வெளியிட்டிருந்தாலும் என்னையும் என் படைப்புகளையும் அறிமுகம் செய்வதற்கோ எடுத்துப் பேசுவதற்கோ நண்பர்கள் அமையாமல் போனதால் நம் முயற்சிகள் பல வெளியுலகிற்குத் தெரியாமலே போயின(என் ஆசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் மிகப்பெரிய பாவலர். சங்கப்பாடல் ஒத்தே அவர் உரைநடை இருக்கும். எழிற்பாண்டியம் உள்ளிட்ட பல நூல் எழுதிய அவரையே பலர் அறியாமல் இருக்கும்பொழுது நாம் அறியப்படாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் பற்றி விரைவில் எழுதுவேன்).

சங்க இலக்கிய நடையில் பாடல்புனைபவர்கள் தமிழகத்தில் அருகியே உள்ளனர். அவர்களை அரசும், தமிழமைப்புகளும் போற்ற வேண்டும். விளம்பர வெளிச்சம் இருப்பவர்களே இன்றைய நிலையில் பல்வேறு பரிசில்களைக் கவர்ந்துவிடுகின்றனர். இந்நிலையில் உண்மையான தமிழ்ப்புலமை உடையவர்கள் போற்றப்படவேண்டும். என் அரங்கேறும் சிலம்புகள் நூல் பொதிகள் புதுவையில் நேர்ந்த மழைப்பாதிப்பில் அனைத்தும் பாழடைந்தன. அரங்கேறாமல் என் நூல் “சிலம்புகள்” குப்பைக்குச் சென்றன. அதன் பிறகு மரபுப்பாடல்களை எழுதுவதிலும் வெளியிடுவதிலும் நாட்டம் இல்லாமல் போனது.

ஆனால் மணல்மேட்டு மழலைகள் என்ற மழலைப் பாடல் தொகுப்பை அவ்வாறு என்னால் ஒதுக்கிவைக்கமுடியாது. இந்த நூலின் ஒவ்வொரு பாடல்கள் எழுந்ததற்கும் ஒரு கரணியம் இருக்கும். தமிழகத்தின் தாய்த்தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு என் பாடல்கள் பயன்பட்டன என்பதை அண்மையில் அறிந்து மகிழ்கின்றேன். நல்ல தமிழ்ப்பற்றுடைய குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று எழுதிய நோக்கம் பத்தாண்டுகளாக நடைமுறையில் இருந்துள்ளதை மேட்டூரில் உள்ள தாய்த்தமிழ்ப்பள்ளியின் முன்னோடி அன்பர் திரு.தமிழ்க்குரிசில் அவர்கள் அறிவித்ததை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன். தாய்த்தமிழ்ப்பள்ளிக்கு உருவாக்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இனி மணல்மேட்டு மழலைகள் என்ற பாட்டு நூலுக்கு வருவோம்:

மணல்மேட்டு மழலைகள் என்ற பாட்டு நூல்1997 இல் வெளிவந்தது. இது 80 பக்கம் கொண்ட நூல் ஆகும். இந்த நூலில் 33 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு படம் அச்சிடப்பட்டிருக்கும். இந்தப் படங்கள் 1992 இல் நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் படித்தப்பொழுது என் நண்பர் மதிசூடி அவர்களின் தட்டச்சுப் பயிலகத்தில் தங்கியபொழுது ஒரு சுதைச்சிற்பியால் வரையப்பட்டது. அந்த ஓவியர் பெயர் திருவாளர் செல்வம் ஆகும். ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த நூல் அச்சானது(1997). அண்ணன் திரு. நாகராசன் அவர்கள்(மாணவர் நகலகம்) அச்சிடுவதற்கு உதவினார்கள். நூல் படிகள் யாவும் தீர்ந்தன. மறுபதிப்புக்கு வாய்ப்பு இல்லை. தேவைப்படும் அன்பர்களுக்கு ஒளியச்சில்தான் இந்த நூல்படிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

மணல்மேட்டு மழலைகள் நூலுக்கு மலேசியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர், பாப்பா பாவலர் முரசு.நெடுமாறன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். இந்த அணிந்துரையில் பின்வருமாறு முரசு அவர்கள் பாராட்டியுள்ளார்.

”இப்போது ஆராய்ச்சியுலகின் இளந்தளிரான தம்பி மு.இளங்கோவன் “மணல்மேட்டு மழலைகளை” அறிமுகப்படுத்துகிறார். குழந்தை இலக்கியத்தில் இது இவர்தம் கன்னி முயற்சியாகும். படைப்புலகில் அடியெடுத்து வைக்கும் இவர்தம் முதல் அடியை அழுத்தமாகவே ஊன்றியிருக்கிறார். இவர் எழுப்பும் பாட்டுக்குரல் மழலைத் தென்றலாய்த் தவழ்ந்து வந்து பிஞ்சு மனங்களைத் தாலாட்டுகிறது. தட்டிக்கொடுக்கிறது; ஊக்கமூட்டுகிறது; உயர்நெறிகளை அவர் நெஞ்சில் பதியவைக்கிறது…….
ஒரு நல்ல குழந்தைப்பாவலர் உருவாகிறார் என்னும் நம்பிக்கையை ஊட்டும் இப் படைப்பு, தமிழ்க்குழந்தை இலக்கிய உலகிற்கு ஒரு புதுவரவாகும். வாழ்க! வளர்க! வெல்க! தம்பி இளங்கோவன்! என்று வாழ்த்தியிருந்தார்.

மணல்மேட்டு மழலைகள் நூலில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் அத்தையைப் பற்றி அமைந்திருக்கும். பாவலர்கள் பெரும்பாலும் அம்மா பற்றியே மிகுதியாக எழுதியிருப்பார்கள். எங்கள் அத்தை எங்கள் மீது அளவுகடந்த பாசம் செலுத்துவார். எனவே அவர் நினைவைப்போற்றி முதல்பாடல் அமைகின்றது

1.அத்தை

அத்தை நீங்கள் வருக!
ஆப்பம் சுட்டுத்தருக!
முத்தம் ஒன்று கொடுப்பேன்!
முன்னே நானும் குதிப்பேன்!

அத்தை நீங்கள் வருக!
அருமைத் தமிழ்நூல் தருக!
முத்தாய் அதனைக் கற்பேன்!
முன்னோர் வழியில் நிற்பேன்!


2.ஏண்டா கண்ணே அழுகின்றாய்

பச்சைக் கிளியே இங்கே வா!
பஞ்சுக் கையால் ஒன்றைத் தா!
இச்சிச் என்றே முத்தங்கள்
எச்சில் ஒழுக அள்ளித்தா!

சோழப்புலியே பாய்ந்துவா!
சுவையாய்க் கனிகள் தந்திடுவேன்!
வேழப் புலியாய் விளங்கிடவே
ஏண்டா கண்டே அழுகின்றாய்!

தென்னன் மீனே திரும்பிப்பார்!
தென்தமிழ் இனத்தை விரும்பிப்பார்!
கன்னல்மொழியில் கதைசொல்வேன்!
கருத்தாய் நீயும் கேட்டுப்பார்!

சேரன் வில்லே செந்தமிழே!
செக்கச் சிவந்த கொய்யாவே
வீரம் நீயும் விளைவிப்பாய்!
வீழ்ந்த தமிழை மலர்விப்பாய்!

3.பொங்கல்விழா

பொங்கல் விழா வந்தது!
புதிய ஆடை தந்தது!
எங்கள் அப்பா வருவார்!
இனிய பழங்கள் தருவார்!

கட்டுக்கரும்பு வாங்குவோம்!
கடித்துத் தின்ன ஏங்குவோம்!
வெட்டித் தருவார் பாதியை!
வீட்டில் வைப்பார் மீதியை!

வெள்ளைச் சோறு பொங்குவோம்!
வெல்லச் சோறும் பொங்குவோம்!
பிள்ளை நாங்கள் உண்ணுவோம்!
பெரிதும் மகிழ்ந்து துள்ளுவோம்!

4.கணிப்பொறி

கணிப்பொறியாம் கணிப்பொறி!
கணக்குப் போடும் கணிப்பொறி!
மணித்துளியில் நூறுவகை
மாற்றம் செய்யும் கணிப்பொறி!

அச்சு வேலை செய்யலாம்!
அழகுப்பொம்மைப் போடலாம்!
வேண்டும் பொழுது மகிழ்ந்திட
விளையாட்டும் ஆடலாம்!

அறிவு உலகின் நுட்பங்கள்
அறிய இதனைக் கண்டனர்!
இளைய தம்பி இதனைநீ
இயக்க இன்றே பழகிடு!

வெளியீடு:
வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி)
அரியலூர் மாவட்டம்-612 901

கருத்துகள் இல்லை: