நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

காவ்யா தமிழ் -கலை,இலக்கிய,பண்பாட்டு இதழ்


காவ்யா முதலிதழ் முகப்பட்டை

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களை நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபொழுதே அறிவேன்(1993). அவர் பெங்களூரில் தங்கிக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுதும் நாட்டுப்புறவியல் துறைசார்ந்து பல நூல்களை வெளியிட்டவர். அவர் வெளியிட்ட நூல்களை நான் ஆர்வமுடன் கற்றுள்ளேன். நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியர் அவர்களின் நூல்கள் எனக்கு அரிச்சுவடிபோல் அமைந்து அந்தத் துறையில் ஈடுபாடுகொள்ளச்செய்தது. மரபிலக்கண நூல்களில் பயிற்சிபெற்ற எனக்கு நாட்டுப்புறவியல் ஆய்வில் பேராசிரியர் போன்றவர்களின் நூல்கள்தான் ஈடுபாட்டை ஏற்படுத்தின.

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களை இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் ஆண்டுதோறும் சந்திப்பது வழக்கம். ஆய்வுப்படிப்பிற்குப் பிறகு கல்லூரியில் பணியாற்றிய காலங்களில் கருத்தரங்குகள், புத்தகக் கண்காட்சிகள், இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது உண்டு. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யான் பணிபுரிந்தபொழுது (1997-98) பேராசிரியர் நடத்திய தன்னனானே இதழில் கட்டுரை எழுதியதும் உண்டு.

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் பெங்களூரு கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்து பதிப்புத்துறையில் முழுவதும் கவனம் செலுத்தியபொழுது அடிக்கடி அவர்களின் பதிப்பக நூல்கள் புதிது புதிதாக வெளிவந்தவண்ணம் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ்ப்பேராசிரியர்களுள் பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன் ஐயாவைப் போல் தரமான தமிழ்நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதுடன் இன்னும் ஆய்வுமாணவரைப் போல் களப்பணியாற்றித் தகவல் திரட்டும் அவரின் செயல்பாடு எனக்கு வியப்பைத் தருகின்றது. சிறுகதை, புதினம், கவிதை, ஆய்வுகள் என்று பன்முகத்தளங்களில் தடம்பதித்த பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்நாட்டுப் பேராசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியானவர். ஆய்வுமாணவர்களுக்கு எடுத்துக்காட்டான ஆய்வுமாணவர். படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரும் ஒரு படைப்பாளி. எழுத்தாளர்களுக்கு இவர் பதிப்பகம் ஒரு வேடந்தாங்கல்.

இன்றையப் பதிப்புச்சூழல் மிகச்சிக்கலான காலகட்டதில் உள்ளது. அரசு நூலகத்துறை நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதை நிறுத்தியுள்ளது. புத்தகக் கண்காட்சிகளில் சோதிடம், சமையல், ஆன்மீகம், சமயச் சொற்பொழிவாளர்களின் நூல்கள், தொலைக்காட்சி அறிமுகப் பேச்சாளர்களின் நூல்களே பெருமளவு விற்பனையாகின்றன. கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்கள் ஆண்டுக்கணக்கைச் சரிசெய்யவே நூல்களை வாங்குகின்றன. அவற்றைக் கழிவு அடிப்படையில் பெரும் புத்தக நிறுவனங்கள் கணக்காக விற்பனைக் கணக்கை முடித்துவிடுகின்றன. இந்த நிலையில் தரமான தமிழ்நூல்களை வெளியிடுவோர் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. இந்த நிலையில் பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் தொடர்ச்சியாகப் பலதுறை நூல்களை வெளியிட்டு வருவது மகிழ்ச்சி தருகின்றது.

நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வு செய்பவர்களை இந்த உலகம் மற்ற துறையில் ஆர்வம் இல்லாதவர்கள் என்று முத்திரை குத்திவிடுவது உண்டு. சு.சண்முகசுந்தரம் அவர்கள் நாட்டுப்புறவியலிலும், சங்கநூல்களிலும், புத்திலக்கியங்களிலும், திரையிலக்கியங்களிலும் பரந்துபட்ட அறிவுடையவர் என்பதை அவர் பதிப்பித்துள்ள நூல்களே சான்றாக நின்று நமக்கு உணர்த்துகின்றன.

பேராசிரியர் அவர்கள் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்கள். இவை தமிழ் ஆராய்ச்சித்துறைக்கும், படைப்பிலக்கியத் துறைக்கும் பெரும் பங்களிப்புச் செய்வனவாகும். 1981 இல் பதிப்புப்பணியில் ஈடுபட்ட பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் தம் காவ்யா பதிப்பகம் சார்பில் இதுவரை 660 நூல்களைப் பதிப்பித்துள்ளார். 30 ஆண்டுகளாகப் பெங்களூருவில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி 2006 இல் விருப்ப ஓய்வு பெற்ற பெருமைக்குரியவர் இவர்.

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் நெல்லை மாவட்டம் கால்கரை என்ற ஊரில் 30.12.1949 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சுடலைமுத்து தேவர், இசக்கியம்மாள் ஆவர். பிறந்த ஊரிலும், வடக்கன்குளத்திலும் தொடக்கக் கல்வி பயின்ற நம் பேராசிரியர் அவர்கள் இளங்கலைப் பட்டத்தைப் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் முடித்தவர். முதுகலைத் தமிழிலக்கியத்தைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1977-இல் முனைவர் பட்டத்தைத் 'திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து பெற்றவர். 1978 முதல் பெங்களூரு செயின்ட் சோசப் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர். பணி ஓய்வுக்குப் பிறகும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். இதுவரை பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு, செம்மொழி நிறுவனம் ஆகியவற்றில் நான்கு ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டு நிறைவுசெய்துள்ளார்.

காவ்யா காலாண்டிதழ்

பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் அண்மையில் காவ்யா என்றபெயரில் இலக்கிய வளர்ச்சிக்குக் காலாண்டிதழ் ஒன்றினை வெளியிட்டுவருகின்றார். தரமான ஆய்வுக்கட்டுரைகள் இதழை அழகுப்படுத்துகின்றன. முதல் இதழில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், மதிப்புரைகள், திரை விமர்சனம், இலக்கிய நிகழ்வுகள், மூத்த எழுத்தாளர் செயகாந்தன் பேச்சு, உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மறவர்களும் குற்றப் பரம்பரைச் சட்டமும் என்ற பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களின் கட்டுரை, சங்க இலக்கியத் தொகை நூல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் என்ற பேராசிரியர் துளசி இராமசாமி அவர்களின் கட்டுரை, உடல் அரசியல் - கழிவறைக் கிறுக்கல்கள் என்ற முனைவர் இரா.அய்யப்பன் கட்டுரை, கோவை ஞானியின் வானம்பாடிகளின் கவிதை இயக்கம், பழந்தமிழ்ச் சமூகத்தில் சமயத்தின் தோற்றம் என்ற சிலம்பு நா.செல்வராசுவின் கட்டுரை முதலியன குறிப்பிடத்தக்கன.

காவ்யா தமிழ்

காவ்யா இரண்டாம் இதழ் முகப்பட்டை

காவ்யா இரண்டாம் இதழ் காவ்யா தமிழ் என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. செயகாந்தனின் உருசிய நட்புறவு விருது விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆற்றிய ஆழமான இலக்கிய உரை, திராவிடத் தெய்வம் கண்ணகி என்ற பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களின் கட்டுரை, தாமரைத்திரு ந.முத்துசாமியின் நாடகம், நீல பத்மநாபனின் மலையாள கவிதை மொழிபெயர்ப்பு, மா.அரங்கநாதனின் கட்டுரை, துளசி இராமசாமியின் சிலப்பதிகாரம் தெருக்கூத்துக் கதைப்பாடல், இதயகீதனின் கள்ளர்வரலாறு, குறிப்பிடத்தக்கன. மேலும் பதிவுகள், திரைப்பட விமர்சனம், நூல் மதிப்புரைகள், நிகழ்வுகள் காவ்யா புராணம் என்ற தலைப்புகளில் சுவையூட்டும் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.

பலதுறைசார்ந்த செய்திகளாகவும், பலதரப்பட்ட வாசகர்களுக்குப் பயன்படும் வகையிலும் இதழ் வெளிவந்துள்ளது. பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் கட்டும் முயற்சியில் காவ்யா ஈடுபட்டுள்ளதால் வாழ்த்துகின்றேன். ஆய்வுமாணவர்கள் படிக்க வேண்டிய இதழ், ஆராய்ச்சியாளர்கள் படைக்கத் தகுந்த கட்டுரைகளை இந்த இதழில் வெளியிட்டுத் தரமான வாசகர்களைப் பெறலாம்.

அச்சு ஊடகத்தில் இருக்கும் காவ்யா இதழைப் பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்கள் மின்வடிவப்படுத்தினால் உலகத் தமிழர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய இதழாகத் தரம் உயர்த்தலாம். தமிழ் வடவேங்கடம் தென்குமரி எல்லை கடந்து உலகப்பெருவெளியை எல்லையாகக் கொண்டுள்ளது. தமிழின் தரமான செய்திகளைப் படிப்பதற்கு உலகத் தமிழர்கள் ஆயத்தமாக உள்ளனர். கனடாவிலும், மலேசியாவிலும், தமிழீழத்திலும், ஆத்திரேலியாவிலும், சிங்கப்பூரிலும், குவைத்திலும், துபாயிலும் தரமான இலக்கிய ஆர்வலர்கள் தமிழகத்திலிருந்து வெளிவரும் இலக்கியப் படைப்புகளுக்கு - ஆய்வுரைகளுக்கு வானம்பாடி மழைத்தண்ணீருக்குக் காத்திருப்பதுபோல் காத்துள்ளனர். அவர்களுக்கு உரிய மின்வடிவில் காவ்யா தமிழ் அமுதம் படைக்கட்டும். மூத்த பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணியைத் தமிழ் உலகம் போற்றி மதிக்க வேண்டுகின்றேன்.

காவ்யா தமிழ்- காலாண்டிதழ்
விலை - தனி இதழ் 100-00 உருவா

தொடர்புக்கு:

காவ்யா,
16, இரண்டாம் குறுக்குத்தெரு,
டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை- 600 0024

மின்னஞ்சல்: kaavyabooks@gmail.com
செல்பேசி: +91 9840480232
பேசி: 044- 23726882

காவ்யா பதிப்பகத்தின் இணையதளம்

1 கருத்து:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

பயனுள்ள தகவல்கள்


வாங்கிப் படிக்க முயல்கிறேன்