நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 டிசம்பர், 2009

மூத்த தமிழறிஞர் தி.சா.கங்காதரன் இயற்கை எய்தினார்!


அறிஞர் தி.சா.கங்காதரன் அவர்கள்(வலப்புறம்)

புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் தமிழ் ஆய்வாளராகப் பணிபுரிந்த அறிஞர் தி.சா.கங்காதரன் அவர்கள் உடல் நலமின்றிச் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனளிக்காமல் நேற்று 30.12.2009 இரவு 9.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் (இச்செய்தியை எனக்குத் தெரிவித்த பேராசிரியர் செவியா, பிரான்சு, பேராசிரியர் விசய வேணுகோபால் ஆகியோருக்கு நன்றி).

திரு.தி.சா.கங்காதரன் அவர்கள் அறிஞர் தி.வே.கோபாலையர் அவர்களின் உடன் பிறவாத தம்பி ஆவார்.இரண்டு பெரும் பேராசிரியர்களும் இணைந்து பல தமிழ்ப்பணிகளைச் செய்துள்ளனர். தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதியை (17 தொகுதிகள்) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் இருந்தவர். பதினொன்றாம் திருமுறையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் இருந்தவர். அயல்நாட்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அளவிற்குப் பன்மொழி அறிவு பெற்றவர்.

நான் பலவாண்டுகளாக கங்காதரனார் அவர்களை அறிவேன்.அவரிடம் இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட சில நூல்களைப் பாடம் கேட்க விழைந்திருந்தேன். என் போகூழை என்னென்பது?

தம் எண்பத்தொன்றாம் அகவையில் ஐயா அவர்கள் மறைந்தது மிகுந்த வருத்தம் தருகிறது.

புதுச்சேரியில் இன்று (31.12.2009) புலவர் பெருமானின் நல்லுடல் எரியூட்டப்பெற்றது.

அவர் பற்றி பின்னர் விரித்து எழுதுவேன்.


அறிஞர் கங்காதரனார் சிறப்பிக்கப்படும் ஒரு காட்சி


பயிலரங்கு ஒன்றில் மாணவர்கள் புடைசூழ கங்காதரனார்

அன்னாரின் மறைவால் துயருற்றுக் கலங்கும் அவரின் பன்னாட்டு மாணவர்கள், உடன் பணியாற்றும் தோழர்கள், தமிழாய்வுலகத்தினர் அவர்தம் குடும்பத்தினர் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள்!

கருத்துகள் இல்லை: