நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜூலை, 2018

பொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு!


கோனேரி பா. இராமசாமி

 புதுவையின் புகழ்பெற்ற தெருக்கூத்துக் கலைஞரும், புதுவை அரசின் பொறியாளரும், பன்னூலாசிரியருமாகிய கலைமாமணி கோனேரி பா. இராமசாமி அவர்கள் உடல்நலம் குன்றி, இன்று(10.07.2018) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து பெருந்துயருற்றேன்.

  கோனேரியார் அவர்களைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நன்கு அறிவேன். தெருக்கூத்துக் கலையில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு அவர்தம் பணிகளைக் கல்வியுலகிற்கு நான் முன்பே அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். அவர்தம் குரலையும், கலையார்வத்தையும் பதிவு செய்து காணொளியாக இணையத்தில் ஏற்றியுள்ளேன். திருமுதுகுன்றத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றிற்கு அழைத்துச் சென்று, நாட்டுப்புற ஆய்வாளர்கள் முன்பாகப் பாடச்செய்து அவரை அறிமுகம் செய்தேன். அவரின் கலைப்பணிகளை நம் மாணவர் ஒருவர் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்து வருகின்றார். கிழமைக்கு ஒருமுறை என்னுடன் பேசி, புதுச்சேரியின் தெருக்கூத்து வரலாற்றை எழுதுவதற்குப் பெருந்துணை செய்தவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

  புதுச்சேரி மாநிலம் கோனேரிக்குப்பத்தில் 15.11.1966 இல் பிறந்த கோனேரியார் புதுச்சேரியில் உள்ள தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து, மக்கள் கலைக்கழகம் என்ற அமைப்பு நிறுவி, கலைப்பணி செய்தவர். அவர்தம் வாழ்க்கைக் குறிப்பு அறிய விரும்புவோரும், அவர்தம் கலையீடுபாட்டைக் காண விரும்புவோரும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கவும்.

வாழ்க்கைக் குறிப்பு அறிய




  கோனேரி பா. இராமசாமியாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர், நண்பர் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திங்கள், 18 செப்டம்பர், 2017

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை(டிவிடி), மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு ஆலோசகர் சௌமியா அன்புமணி வெளியிட, புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொள்கின்றார். அருகில் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து, ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன்,முனைவர் ஒப்பிலா. மதிவாணன், தூ. சடகோபன்.

       முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 16.09.2017 மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைமாமணி கா. இராஜமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு அறிவுரைஞர் திருமதி சௌமியா அன்புமணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆவணப்படத்தின் ஒளிவட்டினை (டிவிடி) வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். ஆவணப்படத்தின் முதல்படியினைப் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருஷ்ணன் அவர்களும், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் அவர்களும் பெற்றுக்கொண்டனர். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, முனைவர் க. இளமதி சானகிராமன், முனைவர் ஒப்பிலா. மதிவாணன், நீதியரசர் இராமபத்திரன், முனைவர் இரா. வசந்தகுமாரி, முனைவர் ஔவை நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      எழுத்தாளரும் கவிஞருமான ஜெயபாஸ்கரன் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்கினார். விபுலாநந்த அடிகாளர் ஆவணப்படத்தில் பங்கேற்றுத் தொழில்நுட்ப உதவிபுரிந்தவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் புதுச்சேரி க. குணத்தொகையன் சிறப்புச் செய்தார். நிகழ்ச்சியைக் கவிஞர் உமா மோகன் தொகுத்து வழங்கினார். தூ.சடகோபன் நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, புலவர் கி.த.பச்சையப்பன், புலவர் சீனு.இராமச்சந்திரன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் இலங்கையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இசையமைப்பாளர் இராஜ்குமார் இராஜமாணிக்கம் சிறப்பிக்கப்படுதல்

வில்லியனூர் கி. முனுசாமி சிறப்பிக்கப்படுதல்

நாட்டியக் கலைஞர் கிருஷ்ணன் சிறப்பிக்கப்படுதல்


நாட்டியக் கலைஞர்கள் சிறப்பிக்கப்படுதல்

விழாவுக்கு வருகைபுரிந்த இலங்கை மாணவர்கள்

பார்வையாளர்களின் ஒருபகுதியினர்

பார்வையாளர்களின் ஒரு பகுதியினர்

ஞாயிறு, 5 மார்ச், 2017

தெருக்கூத்துக் கலைஞர் பட்டு கவுண்டர்!


தெருக்கூத்துக் கலைஞர் பட்டு கவுண்டர்


நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு இரண்டு நண்பர்கள் அண்மையில் வந்தனர். ஒருவர் முன்பே அறிமுகம் ஆனவர். அவரின் பெயர் திரு. குணசேகரன் என்பதாகும்.  பொ.தி.ப. சாந்தசீல உடையார் அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்தவர். உடன் வந்தவர் அவரின் தம்பி திரு. சரவணன் ஆவார். வந்தவர்கள் பலபொருள்குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் எங்களின் பேச்சானது தெருக்கூத்து நோக்கி நகர்ந்தது.

புதுச்சேரியில் மிகுதியான தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்துள்ளமையையும் அவர்களைப் பற்றிய போதிய பதிவுகள் இல்லாமல் உள்ளதையும் அவர்களிடம் தெரிவித்தேன். என்னுடன் உரையாடிய சரவணன் தெருக்கூத்துக் கலைஞர் என்பதையும், கலைமாமணி கோனேரி இராமசாமி அவர்களின் கலைக்குழுவில் உள்ளவர் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

சரவணன் அவர்களிடம், தங்களுக்குத் தெரிந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞர்கள் புதுவையில் உள்ளனரா? என்று வினவினேன். கல்விப் புலத்திலிருந்து தங்கள் கலையை நோக்கி வினவுபவர் உள்ளாரே என நினைத்து, ஆர்வமுடன் உரையாடலை அவரும் தொடர்ந்தார். தங்கள் உறவினர்கள் பலர் கூத்துக்கலைஞர்கள் எனவும், தங்கள் உறவினருள் அகவை முதிர்ந்த கூத்துக்கலைஞர் ஒருவர் இப்பொழுதும் உள்ளார் எனவும் தெரிவித்தார். அன்றுமுதல் அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக் கலைஞரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டேன்.

கூத்துக்கலைஞர் சரவணன் தம வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலாகத் திருமணக்கூடங்கள், விழா மேடைகள் ஆகியவற்றை ஒப்பனைப்படுத்தும் கலைஞராகவும் கூடுதல் பணிகளைச் செய்வது உண்டு. திருமண நாளில் மண்டபங்களில் மணமேடையை அழகுப்படுத்துவது, அதனைப் பிரித்தெடுத்து மீண்டும் அடுத்த  மண்டபத்துக்குக் கொண்டு செல்வது, அங்குப் பணி முடிந்த பிறகு வீட்டுக்குக் கொண்டுவருவது என்று எப்பொழுதும் பணி அழுத்தமாக இருப்பவர். நான் அழைக்கும்பொழுது இதனைக் கூறி, விலகிக்கொள்வார். அவர் அழைக்கும்பொழுது நான் அலுவலகத்தில் உழன்றுகொண்டிருப்பேன்; அல்லது அயலகப் பயணங்களில் இருப்பேன். இருவரும் சந்திக்கும்பொழுது ஒளி ஓவியர் எங்களுடன் இணையமுடியாதபடி சூழல் இருக்கும்.

இன்று(04.03.2017) மாலை ஒளி ஓவியர், கூத்துக்கலைஞர், நான் மூவரும் ஒருபுள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் புதுவையின் கடைசி எல்லைப்பகுதியில் இருந்த நாவற்குளம் பகுதியை அடைந்தோம். ஒருகாலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்த பெரும் தோப்புகளும், பனந்தோப்புகளும், பொன்விளையும் பூமியுமாக இருந்த நாவற்குளம் என்ற செம்மண் நிலம் இன்று, சிமெண்டு மாளிகைகள் எழுப்பப்பெற்று, சமூகத்தில் முதன்மையானவர்கள் வாழும் இடமாக மாறிவிட்டது.

எங்களின் வருகைக்குக் குணசேகரனும் சரவணனும் காத்திருந்தனர். சாலையை ஒட்டிய ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் முன்பகுதியில் ஒரு அகவை முதிர்ந்த பெரியவர் அமர்ந்திருந்தார். என்னை அழைத்துச் சென்று அந்தப் பெருமகனாரிடம் அறிமுகம் செய்தனர். முன்பு என்னைப் போல் மூவர் சென்று உரையாடித் திரும்பியுள்ளனர். அவர்களின் செயலால் சோர்வுற்று இருந்த பெரியவர் என்னையும் அந்தப் பட்டியலில் இணைத்து, நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. மனச்சோர்வுடன்தான் பேசினார்.

குடும்பத்தில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தனர். அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக்கலைஞரை உள்ளே அழைத்து, விளக்கொளியில் அமரச் செய்து உரையாடத் தொடங்கினோம். “பேட்டி” காணும் செய்தியாளர்கள் என்ற பெயரில் யாரேனும் வந்திருந்தால் வந்த வேகத்தில் திரும்பியிருப்பார்கள். ஐயாவை எங்களின் வழிக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் பாடுபட்டோம்.

என் பெயர் பட்டு கவுண்டர்.  அப்பா பெயர்  பெரியதம்பி, அம்மா பெயர் காத்தாயி. இப்பொழுது எனக்குத் தொண்ணூற்றெட்டு வயது ஆகிறது என்றார். பிறந்து வளர்ந்தது, படித்தது, வாழ்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். தாய் மாமன் சு. இராஜகோபால் அவர்களிடம் தெருக்கூத்துப் பாடல்களையும், நாடகப் பாடல்களையும் கற்றுக்கொண்டேன் என்றார். இந்தத் தகவலைப் பெறுவதற்குள் பெரும் முயற்சி எனக்குத் தேவைப்பட்டது. நான் கத்திக் கதறி விவரங்களை வாங்குவதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடினர். அகவை தொண்ணூற்று எட்டு என்றாலும் இன்னும் கண்ணாடியில்லாமல் செய்தித்தாளைப் படிக்கின்றார்.

தெருக்கூத்துக் கலைஞர் பட்டு கவுண்டர்


திரு. பட்டு கவுண்டர் அவர்கள் பெருகிய நிலங்களைக் கொண்ட வளமான வாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அந்நாளைய பிரெஞ்சு அரசுக்குத் துப்பாக்கிக்குப் பயன்படும் பொருள்களைச் செய்து வழங்கியுள்ளார். அதனால் புதுவையின் ஒதுக்குப்புறமாக இருந்த இவர்களின் நிலங்கள் வரை புதுச்சேரியின் எல்லையைப் பிரெஞ்சியர் அமைத்தனர் என்பதை அறியமுடிந்தது. சற்றுத் தொலைவில் ஆங்கிலேயர்களின் முகாம்(கேம்ப்) இருந்துள்ளதையும் உரையாடலில் அறிந்தேன்.

பட்டு கவுண்டர் தம் வீட்டை ஒட்டிய பகுதியில் அக்காலத்து இளைஞர்களாக இருந்த உறவினர்களை ஒன்றிணைத்துத் தெருக்கூத்தினைக் கற்றுள்ளார். இவர்களுக்கு ஆசிரியராக இருந்து, இராஜகோபால் என்பவர் தெருக்கூத்துக் கலையை அனைவருக்கும் பயிற்றுவித்துள்ளார். பலநாள் பயிற்சி எடுத்து, அரங்கேறிய தெருக்கூத்துக் கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும், கோடைக் காலங்களிலும்  அந்தநாளில் தெருக்கூத்து ஆடியுள்ளனர். பக்கத்து ஊர்களிலிருந்து தெருக்கூத்துக்குத் தேவையான இசைக்கருவிகள், ஒப்பனை செய்வதற்குரிய அணிகலன்கள், கட்டைகள் வாடகைக்கு அமர்த்திப் பயன்படுத்தியுள்ளனர். அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று தெருக்கூத்து ஆடியுள்ளனர்.

பட்டு கவுண்டர்  தருமன், கண்ணன், நாரதன் வசிஷ்டர், அபிமன்யு என்று பல்வேறு பாத்திரங்களில் ஆர்வமாக நடித்தவர். இன்றும் மெல்லிய குரலில் இந்தப் பாத்திரங்கள் பாடும் பாடல்களைப் பாடிக்காட்டித் தம் இளமைக்காலத் தெருக்கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பாடல்களைப் பாடும்பொழுது அடிக்கடி களைப்படைந்துவிடுகின்றார். நினைவுக்குச் சில பாடல்களையும் உரையாடல்களையும் ஒளிப்பதிவு செய்துகொண்டோம். இருபத்தைந்து வயதில் தெருக்கூத்து ஆடத் தொடங்கிய பட்டு கவுண்டர் 60 வயது வரையும் தெருக்கூத்தின் உச்ச நிலையைத் தொட்ட கலைஞராக விளங்கியுள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்கள் சிலரிடம் புகுந்துள்ள மது, புலால் உண்ணுதல் என்ற பழக்கங்கள் இல்லாதவராகவும், அறச்சிந்தனை கொண்டவராகவும் விளங்கும் பட்டு கவுண்டர் அவர்கள் போற்றி மதிக்கத்தக்க கலைஞர் என்பதில் ஐயமில்லை.
தெருக்கூத்துக் கலைஞர்கள் பட்டு கவுண்டர், பெருமாள்சாமி, மு.இ.

பட்டு கவுண்டர் அவர்களின் மகன் பெருமாள்சாமியும் தெருக்கூத்துக் கலைஞர். இப்பொழுது பகலில் தச்சுத்தொழிலும், இரவில் தெருக்கூத்துப் பணியுமாக உள்ளார். பட்டு கவுண்டரின் பெயரன் பற்குணன் கணினி வரைகலையில் பயிற்சிபெற்று வருகின்றார். இவரும் இளம் அகவையிலையே தாத்தாவுடன் இணைந்து தெருக்கூத்தினைப் பார்ப்பது, பாரதக் கதை கேட்பது என்று விருப்பத்துடன் இருந்து, தெருக்கூத்தில் கண்ணன் வேடம் அணிந்து, பாட்டிசைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருபவர். மூன்று தலைமுறைக் கூத்துக்கலைஞர்களை ஓரிடத்தில் சந்தித்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. மூவரின் பாடலையும் ஒளிப்பதிவு செய்தோம்.

நாவற்குளம் பகுதி வளர்ச்சி அடைவதற்குச் சாலை அமைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும், கோயில் கட்டவும் கோடிக்கணக்கான மதிப்புடைய தம் நிலங்களை அன்பளிப்பாக வழங்கிய கொடை நெஞ்சர்  பட்டு கவுண்டர் என்பதை அறிந்து கைகுவித்து வணங்கித் திரும்பினேன்.

வியாழன், 2 மார்ச், 2017

தொல்காப்பியத்தில் சிக்கல்கள் என்னும் தலைப்பில் தொடர்பொழிவு

முனைவர் இராச. திருமாவளவன்

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு 02.03.2017 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி நீட இராசப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற தொடர்பொழிவுக்குப் பேராசிரியர் கு. சிவமணி தலைமை தாங்கினார். வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன்  தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு. இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்.

பேராசிரியர் கு. சிவமணி தொல்காப்பியச் சிறப்புகளை எடுத்துரைத்து, தொல்காப்பியர் காலம் குறித்தும், கடல்கொண்ட தென்னாடு தொடர்பாக ஆகமங்களிலும் வடமொழி நூல்களிலும் இடம்பெற்றுள்ள குறிப்புகளையும் எடுத்துரைத்தார்.

தமிழறிஞர் இராச. திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிக்கல்கள் என்ற தலைப்பில் அரியதொரு ஆராய்ச்சி உரை நிகழ்த்தினார். தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள சிக்கல்கள் சிலவற்றை  அறிஞர்களின் கவனத்திற்கு முன்வைத்தார். தொல்காப்பிய நூலின் மூலம், உரையாசிரியர் கருத்துகள், இவற்றை விளக்கிக்காட்டினார். மேலும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூல்மரபு நூற்பாக்களில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார். இவர்தம் உரையில் இடம்பெற்ற கருத்துகளை ஒட்டி அறிஞர்கள் உடன்பட்டும், உறழ்ந்தும் கருத்துரைத்தனர். தமிழாகரர் தெ. முருகசாமி, பேராசிரியர் விசயவேணுகோபால், முனைவர் தி. செல்வம், பாவலர் மு.இளமுருகன், முனைவர் சிவ. இளங்கோ, தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், பாவலர் சீனு. தமிழ்மணி, புதுவைத் தமிழ்நெஞ்சன், கல்வித்துறையின் முன்னை இணை இயக்குநர் அ. இராமதாசு, திரு. தூ. சடகோபன், அறிவியல் அறிஞர் தாமரைக்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாவலர் மு. இளமுருகன் நன்றியுரை வழங்கினார்.

முனைவர் கு. சிவமணி அவர்களின் தலைமையுரை

தமிழாகரர் தெ. முருகசாமி

மு.இளங்கோவன்(அறிமுகவுரை)


வியாழன், 16 பிப்ரவரி, 2017

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு! ஊரன் அடிகளார் சிறப்புரை!


 தவத்திரு ஊரன் அடிகளார் உரை
புதுச்சேரியில் அமைந்துள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு வரிசையில் இன்று(16.02.2017) வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் ஊரன் அடிகள் சிறப்புரையாற்றினார். தொல்காப்பியமும் வள்ளலாரும் என்ற தலைப்பில் இவர் உரை அமைந்திருந்தது. சிறப்புரையில் தொல்காப்பியத்தின் சிறப்பினையும், தொல்காப்பிய நூற்பாக்களுக்கு வள்ளலார் வழங்கியிருந்த விளக்கத்தினையும் ஊரன் அடிகள் எடுத்துரைத்து, தமிழ் இலக்கியத்தில் தவறாகப் பதிவுபெற்றிருந்த முக்கியமான செய்தியை விளக்கித் தெளிவுப்படுத்தினார். ஐந்திரம் என்பதற்கு உரிய சொல் விளக்கமும், தொல்காப்பிய ஆய்வுகளைக் குறித்தும் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள பொருளதிகாரப் பகுதி எந்த மொழியிலும் இல்லாத வகையில் வாழ்வியல் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றது. எழுத்ததிகாரத்தில் ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்களுக்கு உரிய புணர்ச்சியைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடும் இடங்களில் உள்ள பொருத்தமின்மையை வள்ளலார் வழியில் ஊரன் அடிகள் இந்த உரையில் விளக்கினார். பாவாணர், மு. வரதராசனார் கருத்துகளையும், உரையாசிரியர்களின் கருத்துகளையும் துணையாகக் கொண்டு ஊரன் அடிகளார் உரையாற்றினார்.

தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார்; , மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்; பேராசிரியர் தெ. முருகசாமி தலைமையுரை வழங்கினார். இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். பிரான்சிலிருந்து வருகை தந்த பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சிறப்பிக்கப்பட்டார். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கணப் புலவர்களும் தமிழார்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழாகரர் தெ. முருகசாமி தலைமையுரை
முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரை
மு.இளங்கோவன் அறிமுகவுரை
 அறிஞர் பெருமக்கள்

முனைவர் இரா.கோவலன் நன்றியுரை

 அறிஞர் பெருமக்கள்
அடிகளாரிடம் வாழ்த்தினைப் பெறுவோர்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள் சிறப்பிக்கப்படுதல்( முனைவர் இரா. நிர்மலா, ஈகியர் அப்துல் மஜீத்)
அடியார்கள் வாழ்த்தினைப் பெறுதல்

அடிகளாரின் உரையைக் கேட்க இங்கே அழுத்தவும்

வியாழன், 15 டிசம்பர், 2016

'வைணவ இலக்கியச்செம்மல்' பாவலர்மணி சித்தன்


பாவலர்மணி சித்தன்

புதுவையின் பழைய வரலாற்றை நெஞ்சில் சுமந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் அறிஞர்களுள் பாவலர்மணி சித்தன் குறிப்பிடத்தக்கவர். 96 அகவையைக் கடந்தபோதிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருபவர். வைணவ இலக்கியத்தில் நல்ல புலமையும், பயிற்சியும் உடைய பாவலர்மணி சித்தன், பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர். இவர்தம் தமிழ்ப்பணியை அறிவதற்குப் பல நாட்களாகத் திட்டமிட்டும் இயலாமல் இருந்தது. கல்வெட்டு அறிஞர் வில்லியனூர் வேங்கடேசனாருடன் இன்று சித்தன் அவர்களின் இல்லம் சென்றேன். மூன்று மணி நேரம் உரையாடி, அரிய செய்திகள் பலவற்றை அறிந்துகொண்டேன். வழக்கம்போல் காணொளியில் இவர் பேச்சைப் பதிவுசெய்தேன்.

பாவலர்மணி சித்தன் 1920 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆறாம் நாளில் புதுச்சேரியில் பிறந்தவர். இயற்பெயர் இராதாகிருஷ்ணன். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் முத்துசாமிப்பிள்ளை என்ற முதலியாண்டான், ஆதிலட்சுமி அம்மாள். தொடக்கக் கல்வியாக எழுத்துப் பயிற்சி முதல் எண்சுவடி வரை புதுச்சேரி காந்தி வீதியில் இருந்த பஜனை மடத்தில் பயின்றவர். கல்வே கல்லூரியில் பிரெஞ்சுப் படிப்பைப் படித்தவர். கல்வே கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவராகப் பயின்றவர். தனிப் பயிற்சியாகவும் பாவேந்தரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். புதுவையில் இருந்த புதுவைக் கல்விக் கழகத்தில் தேசிகம் பிள்ளை, தில்லை கோவிந்தன் உள்ளிட்டவர்களிடம் மொழிப்பயிற்சி பெற்றவர். 19 அகவையில் தமிழாசிரியராகத் தேர்வுபெற்றாலும் மருத்துவத்துறையில் ஊதியம் அதிகம் என்பதால் ஆசிரியர் பணிக்குச்  செல்லாமல் மருத்துவமனையில் உதவி மருத்துவராகப் பணியில் இணைந்தவர். தமிழார்வம் காரணமாகப் பண்டிதர் வீ. துரைசாமி முதலியார் அவர்களிடம் பயிற்சி பெற்று, வித்துவான் தேர்வு எழுதி, 22 ஆம் அகவையில் வித்துவான் பட்டம் பெற்றவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் தேர்வெழுதி வெற்றிபெற்றவர்.

சித்தன் அவர்களின் குடும்பம் மரபு வழியான வைணவக் குடும்பம். எனவே இளம் அகவையில் ஆழ்வார் பாசுரங்களை நாளும் மனப்பாடம் செய்ய வேண்டிய சூழல். அதற்காகப் புதுவை வரதராசலு நாயுடு என்பவரிடம் வியாழன், ஞாயிறு கிழமைகளில் காலை எட்டுமணி முதல் 12 மணிவரை பாசுரங்களைப் படித்து நெட்டுருப்படுத்தியவர். திருவரங்கம் மீ. கோ. இராமாநுச சுவாமிகளிடம் ஆழ்வார்களின் பாசுரங்களைச் சிறப்பாகப் பயின்றவர். 18 அகவைக்குள் ஆழ்வார்களின் நாலாயிரம் பாடல்களும் சித்தனுக்கு மனப்பாடமானது. பெற்றோர் இதற்காக ஒரு விழா எடுத்துப் பாராட்டினர். இதனை அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் தம்மைச் சந்திக்க சித்தனை அறிவுறுத்தினார். பாவேந்தரின் தொடர்பு அமைந்ததும் சித்தனுக்கு இலக்கிய இலக்கண ஈடுபாடு மிகுதியானது. ஆழமாகத் தமிழ் கற்கத் தொடங்கினார். வைணவ அமைப்புகள் பலவற்றில் இணைந்து இலக்கிய - சமயப் பணியாற்றவும் வாய்ப்புகள் அமைந்தன.

பாவலர்மணி சித்தன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பல் அறுவை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புதுவையில் வாழ்ந்த அறிஞர்கள், தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தனின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிப் புதுவை அரசு தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகளை அளித்துச் சிறப்பித்தது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் வைணவ இலக்கியங்கள் குறித்தும் கம்ப ராமாயணம் குறித்தும் அரிய சொற்பொழிவுகளாற்றியுள்ளார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைபாடியுள்ளார். இலக்கியப் பயணமாக இலங்கை, பிரான்சு, சுவிசு, உரோமாபுரி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அரிய உரையாற்றி மீண்டவர்.

பிரான்சு நாட்டு அறிஞர் பிலியோசா அவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தன் பிலியோசா அவர்களின் பன்மொழிப் புலமை, இலக்கிய ஈடுபாடு, தமிழாராய்ச்சித் திறத்தினை அறிந்து, அவர்மேல் உயர்ந்த மதிப்பினைக் கொண்டவர்.

புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனைச் சந்தித்து நாளும் உரையாடும் வாய்ப்பினைச் சித்தன் பெற்றிருந்தவர். காமராசர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, தமிழர் ஒருவர் முதலமைச்சாரனமையைப் பாராட்ட நினைத்துப் பாவேந்தர் விழாவெடுத்தார். அந்தநாளில் கவியரங்கம் ஒன்று நடந்தது. அப்பொழுது காமராசரின் சிறப்பினைக் கவிதையாகப் பாடிய சித்தனைப் புகழ்ந்து பாவேந்தர்,

வித்துவான் புதுவைச் சித்தர்
இராதா இந்நேர மிங்கே
நத்துவார்க் கெலாமி னிக்க
நறுங்குறிஞ் சித்தேன் பெய்தார்;
அத்தவக் கவிஞர் நன்னூல்
ஆய்ந்தவர், தமிழ்க்காப் பாளர்!
முத்தமிழ்ச் செல்வர் வாழி;
மொழிகின்றோம் அவர்க்கு நன்றி!

என்று பாடினார்.

குயில் இதழில் சித்த மருத்துவம் சார்ந்த பாடல்களை இராதாகிருஷ்ணன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவரைச் சித்தன் எனப் பெயரிட்டுப் பாவேந்தர் எழுதவைத்தார். அன்றுமுதல் சித்தன் என்ற புனைபெயரே நிலைபெறலாயிற்று.

சித்தன் புதுவைப் பல்கலைக்கழகத்திலும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திலும், புதுவைக் கம்பன் கழகத்திலும் அறக்கட்டளையை நிறுவி வைணவ இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். பல்வேறு  வைணவ மாநாடுகளை ஏற்பாடு செய்து திறம்பட நடத்தியவர். சைவ இலக்கிய ஈடுபாடும் இவருக்கு உண்டு.

பாவலர்மணி சித்தனின் தமிழ்க்கொடை:

1.   அருட்கவி சுத்தானந்தர்
2.   புதையுண்ட நாகரிகம்
3.   தாமரைக்காடு(கவிதைகள்)
4.   பாவேந்தருடன் பயின்ற நாள்கள்
5.   புதுமை நயந்த புலவர்
6.   துரை வடிவேலனார்
7.   பங்காரு பத்தர்
8.   வேளாளர்
9.   பாரதி கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்
10. கம்பன் பிள்ளைத்தமிழ்
11. கம்பனும் திருமங்கை மன்னனும்
12. மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்
13. கம்பன் கற்பகம்
14. பாட்டரங்கில் கம்பன்
15. கம்பனில் மனிதம்
16. கம்பனின் கற்பனைத் திறன்
17. கடல்கடந்த கம்பன்
18. கம்பர் வித்தகம்
19. தேவ தேவி(குறுங்காப்பியம்)
20. வைணவ மங்கையர்(கவிதை)
21. திருமால் திருநெறி
22. வஞ்சி விடுதூது
23. பாலகர்க்குப் பாட்டமுதம்
24. களம் கண்ட கவிதைகள்
25. இராமாநுசர்(புரட்சித்துறவி)


புலவர் அரசமணியின்  அன்புவிடு தூது நூலினைச் சித்தன் உரையுடன் பதிப்பித்துள்ளார்.


புதுவையில் வாழ்ந்த இலக்கியப் புலவர்கள், பாவலர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுடன் பழகியும், தமிழ்ப்பணியாற்றியும் தமிழுலகுக்குப் பன்னூல்களைத் தந்தும் பாவலர்மணி சித்தனின் தமிழ் வாழ்க்கை தொடர்கின்றது. வைணவ இலக்கியங்களைப் பயின்று கற்றுத் துறைபோகிய அறிஞராக விளங்குவதுடன் பாவலராகவும் நாவலராகவும் விளங்கும் இவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் தமிழர் கடன்!
பாவலர்மணி சித்தன்

மு.இ, பாவலர்மணி சித்தன், வில்லியனூர் வேங்கடேசனார்

குறிப்பு: கட்டுரை, படங்களை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

திங்கள், 21 நவம்பர், 2016

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்!



தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவையொட்டிப் புதுச்சேரியில் தனித்தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வரங்கில் அறிஞர்கள் ஆய்வுரை வழங்குகின்றனர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அதன் தலைவர் வி. முத்து அவர்களின் தலைமையில் நடைபெறும் ஆய்வரங்கில் புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு. வி. பி. சிவக்கொழுந்து அவர்களும் பொறியாளர் மு. பாலசுப்பிரமணியன் அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர். ஆணையர் திரு. த. தியாகராசன் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் பெருஞ்சித்திரனாரின் பாவியங்கள் என்ற தலைப்பிலும், முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி அவர்கள் பாவேந்தரின் பாவியங்கள் என்ற தலைப்பிலும் ஆய்வுரை வழங்க உள்ளனர்.

முனைவர் க. தமிழமல்லன் நன்றியுரை வழங்க உள்ளார்.

நாள்: 22.11.2016 செவ்வாய்க் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி
இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வேங்கட நகர், புதுச்சேரி-605 011

ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்!


தொடர்புக்கு: 0091 97916 29979

வெள்ளி, 7 அக்டோபர், 2016

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்க விழா - புதுச்சேரி உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்!


புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, சட்டப்பேரவையின் துணைத்தலைவர் மாண்புமிகு வே  .பொ. சிவக்கொழுந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு  இரா. கமலக்கண்ணன், தமிழறிஞர்கள்


மாண்புமிகு வே.பொ.சிவக்கொழுந்து அவர்கள் திருக்குறள் புதிய பதிப்பை வெளியிட, தில்லித் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் கி.வா.. பெருமாள் முதல்படியைப் பெற்றுக்கொள்ளும் காட்சி. அருகில் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு இரா. கமலக்கண்ணன், தமிழறிஞர்கள்

இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் என்ற நூலை எழுதி உலக அளவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னை இராமகிருஷ்ண மடத்தில் துறவியாக இணைந்து, அந்த மடத்தின் பணிகளை இலங்கையில் கவனித்தவர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உறவுப் பாலம் அமைத்தவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்கும் வகையில் அடிகளாரின் கடிதங்கள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள், புகைப்படங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றின் துணையுடன் இந்த ஆவணப்படம் உருவாக உள்ளது.

இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழா புதுச்சேரியில் 06.10.2016 வியாழன் மாலையில் நடைபெற்றது. புதுச்சேரி காமராசர் சாலையில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற்ற ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி உயர்கல்வித்துறை அமைச்சர் இரா. கமலக்கண்ணன் கலந்துகொண்டு ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார். புதுச்சேரி சட்டப்பேரவையின் துணைத்தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து. திருக்குறள் தமிழ் - ஆங்கிலப் பதிப்பினையும், இணையம் கற்போம் என்ற நூலினையும் வெளியிட்டார். தில்லித் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் கி.வா.. பெருமாள் நூலின் முதல்படிகளைப் பெற்றுக்கொண்டார்.

கனடாவைச் சேர்ந்த சிவம் வேலுப்பிள்ளை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

ஆய்வறிஞர் கு. சிவமணி, புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. இளமதி சானகிராமன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா. மதிவாணன்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அரங்க பாரி, வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் பேராசிரியர் ப. சிவராஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புலவர் இ. திருநாவலன், புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் அரங்க.மு. முருகையன் வரவேற்புரையாற்றவும், மு.இளங்கோவன் ஏற்புரையாற்றவும், பேராசிரியர் உரு. அசோகன் நன்றியுரையாற்றினர். நிகழ்ச்சியைப் பேராசிரியர் மா. சுஜாதா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மிகுதியாகக் கலந்துகொண்டனர்.


சட்டப்பேரவையின் துணைத்தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து அவர்களிடமிருந்து நூல் படியினைப் பெற்றுக்கொள்ளும் திருவாட்டி சிவமணிஅவர்கள்(கனடா) .