நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மூக்கால்,நாக்கால் மவுத்ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இரா.இராசாராமன்


இசைக்கலைஞர் இரா.இராசாராமன்

மவுத் ஆர்கன் என்ற இசைக்கருவியை வாயால் இசைத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை.
புதுச்சேரியில் ஒரு முதியவர் மவுத் ஆர்கனை மிகவும் நயமாக மூக்காலும் நாக்காலும் இசைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.

“திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்”என்று இவர் மவுத் ஆர்கன் துணையால் மூக்கால் இசைக்கும் பொழுது யாரும் சிறிதுநேரம் நின்று கேட்காமல் போகமாட்டார்கள்.மூக்கால் வாசிக்கும்பொழுது நாக்கால் வாசிக்கவும் என்று சொன்னால் நாக்கை மடக்கிக் காற்றை வெளிவிட்டு மவுத் ஆர்கனைத் தன் ஏவலுக்குக் கட்டுப்படச் செய்கிறார்.

இளையராசா,இரகுமான்,புட்பவனம் குப்புசாமி பாடல்கள், இந்தி,மலையாள மொழிப்பாடல்கள் என எதனையும் தன் மூக்கு முனையிலும் நாக்குமுனையிலும் வைத்திருக்கும் இவர் புதுச்சேரியில் பல பள்ளிகளில் பாடி மாணவர்கள் திரட்டித்தரும் காசு கொண்டு வாழ்ந்து வருகிறார்.

கல்கத்தா முதலான பிற மாநிலங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கும் பறந்துவிடுவார். பல இடங்களிலும் பாடினாலும் இன்னும் எளிய நிலையில் வாடகை வீட்டில்தான் வாழ்க்கை நடத்துகிறார்.இவரின் திறமை அறிந்த புதுவை அரசு இவருக்குக் கலைமாமணி விருது அளித்துப் பாராட்டியுள்ளது.

இவர் வாழ்க்கை பற்றிய பின்னோட்டம்.

தரங்கம்பாடியை அடுத்த மாணிக்கப்பங்கு என்ற ஊரில் 13.07.1949 இல் பிறந்தவர் இரா.இராசாராம்.பெற்றோர் இராசு,வைரக்கண்ணு அம்மாள்.பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர் .அதன்பின்பு தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்.தொழில்நுட்பத்தில் பொருத்துநராகக் கல்வி கற்றுப் புதுவைச் சுதேசி மில்லில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.நாற்பதாண்டுகளாக மவுத் ஆர்கன் வாசிக்கும் இவர் எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால் மறுமுறை அதனை மவுத் ஆர்கனில் வாசிக்கும் நினைவு ஆற்றல் பெற்றவர்.

மலையாளத் திரைப்படமான செம்மீனில் இடம்பெறும் பாடல்களை உயிர் உருக மூக்காலும், நாக்காலும் வாயாலும் மவுத் ஆர்களை இயக்கிப் பாடும்பொழுது மொழி மறந்து சுவைக்க வேண்டியுள்ளது.அதுபோல் “மேரே தேக்கா கோயி கானாசனம்” என்று இந்திப் பாடலைப் பாடும்பொழுது மெய்ம்மறந்து கேட்கலாம்.

ஆண்டு,மாதம்,நாள் சொன்ன்னால் அடுத்த நொடியே நாம் பிறந்த கிழமையைச் சொல்லிவிடுவார்.அந்த அளவு நினைவாற்றல்.

“என் ஜோடி மஞ்சக்குருவி” பாடலை இவர் மவுத் ஆர்கன் மன்னிக்கவும் மூக்கு ஆர்கனில் வாசித்தால் இளையராசாவே உள்ளம் குளிர்ந்து பாராட்டுவார்.” கவிதை அரங்கேறும் நேரம் ,மலர்க் கணைகள் பரிமாறும் நேரம்” பாடச்சொன்னேன்.மூக்காலும் நாக்காலும் வாயாலும் ஒரேநேரத்தில் மாறி மாறி இசைத்து எங்களை அசத்திவிட்டார்.

இசையார்வம்கொண்டவர்கள் இவரின் மூக்கிசையை,நாக்கிசையைப் பதிவு செய்து பாதுகாக்கலாம். எந்த ஊருக்கு அழைத்தாலும் உடன் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார் இந்த மூத்த இசைக்கலைஞர்.மிதிவண்டியில் புதுவையை வலம் வரும் இந்த இசைப்புயலைக் கலை ஆர்வம் உடையவர்கள் ஊக்கப்படுத்தலாம்.


நாக்கால் மவுத் ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இராசாராமன்


மூக்கால் மவுத் ஆர்கன் இசைக்கும் இராசாராமன்


உங்களுக்கு அவர் பாடல் கேட்க விருப்பமா?

+91 9894575252 என்ற அவர் செல்பேசிக்கு அழையுங்கள்.

எங்கள் குழந்தைகளுக்குக் “கொக்கு பற பற”,”வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்று செல்பேசி வழியில் மூக்கு ஆர்க்கனால் மன்னிக்கவும் மவுத் ஆர்கனால் பாடி மயங்க வைத்துவிட்டார்.

வாழ்க கலைமாமணி இராசாராம்!

2 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

சுவராசியமான தகவல். அவரின் காணொளி காட்சி ஒன்றை இணைத்திருந்தால் நன்றாக இருக்கும்

புளியங்குடி சொன்னது…

தலைப்பே அனைத்தையும் கூறிவிட்டது.