நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 டிசம்பர், 2009

உள்கோட்டையில் ஐம்பெரும் விழா


தந்தை பெரியாருக்குச் சிலை எடுப்பித்த செம்மல்கள் 
திரு.சி.கலியபெருமாள், திரு.சி.மாணிக்கம்

எங்களின் பிறந்த ஊரான உள்கோட்டையில் ஐம்பெரும் விழா என்ற பெயரில் நேற்று (30.12.2009) மிகச்சிறந்த விழா ஒன்று நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, செம்மொழி விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, கொள்கைவழித் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாராட்டு எனும் ஐந்து நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இந்த விழா அமைந்தது.

சனதா பல்பொருள் அங்காடியின் உரிமையாளரும், தந்தை பெரியாருக்கு உள்கோட்டையில் சிலை எடுத்தவரும், மிகச்சிறந்த குமூகத் தொண்டாற்றுபவருமான "சனதா" சி.மாணிக்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவுக்குப் பெரியார் பெருந்தொண்டர் திரு. பரமசிவம் அவர்கள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திரு.காமராசு அவர்கள் வரவேற்றார்.

அண்மையில் செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் அடிகளாசிரியர், முனைவர் அரங்க.பாரி, முனைவர் மு.இளங்கோவன் ஆகியோரை முறையே தொளார் ஐயா, பேராசிரியர் உ.பிரபாகரன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) அ.சிவபெருமான் (அண்ணாமலைப் பல்கலைக்கழம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்தப் பகுதியில் முனைவர் பட்டம் பெற்றுக் கல்வித்துறையில் சிறந்து விளங்குபவர்கள் என்ற வகையில் பேராசிரியர் கு.அரசேந்திரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் பாராட்டப் பெற்றனர்.

கண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ. குலோத்துங்கன் அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

உள்கோட்டைப் பகுதியில் பிறந்த கல்வித்துறைகளில் புகழ்பெற்று விளங்கும் இந்த அறிஞர் பெருமக்களைப் பொதுவுடைமை இயக்கத்தச் சேர்ந்த தோழர் முருகேசன், திரு.பன்னீர்ச் செல்வம், புலவர் செல்வராசனார், கு. கணேசமூர்த்தி ஐயா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஏற்புரையாளர்கள் சார்பில் பேராசிரியர் கு.அரசேந்திரன், முனைவர் ஆ.கோ.குலோத்துங்கன் ஆகியோர் உரையாற்றினர்.

மணக்கொடை வாங்காமல் மாலைநேரத்தில் சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட திரு அம்பாள் ஆறுமுகம், திரு.சேகர், புலவர் திரு.தங்கராசு உள்ளிட்டவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்தும், பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களை அழைத்து ஊக்கப்படுத்தியும், குமூக அக்கறையுடன் பாடுபடுபவர்களுக்கு ஊக்கம் அளித்தும் இந்த விழா நடந்தது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவ்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பத்மபிரியா என்ற ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமி திருக்குறளின் அனைத்துக் குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் ஆற்றலை அரங்கத்தினர் அறிந்து மகிழ்ந்தனர். நான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் பேற்றினைப் பெற்றேன்.


பேராசிரியர் கு.அரசேந்திரன்


பேராசிரியர் உ.பிரபாகரன்

3 கருத்துகள்:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

மதிப்பிற்குரிய முனைவர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்கள் பதிவு ஐம்பெரும் விழாவைக் கண்டு களித்த உணர்வை அளித்தது.உங்களைச்சிறப்பு செய்த புகைப்படங்களை இணைத்திருக்கலாமே!
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

Thamizhan சொன்னது…

நம்மில் பெரும்பாலனவர்கள் கிராமங்களில் பிறந்து வளர்ந்து படித்து முன்னேறியவர்கள். ஆனால் பலர் கிராமங்களை மறந்து விடுகின்றனர்.
அங்குள்ள மக்களின் அன்பிற்கு ஈடு,இணை கிடையவே கிடையாது.
அங்கே உள்ளக் குழந்தைகளுக்குத் திருக்குறள் போட்டி நடத்தி புத்தகங்கள்,எழுதுகோல் பரிசளித்து மகிழ்ந்து பாருங்கள்.அனுபவித்தால் தான் தெரியும் அதன் அருமை.
மருத்துவர்கள் மருத்துவ முகாம் நடத்திப் பாருங்கள்.
அய்யா மு.இளங்கோவானாரின் அடக்கத்துடன் செய்யப் படும் பணிகள் அவரது ஊரின் முன்னேற்றத்திலே அவரது பணி, அவரடையும் பெருமை,அவர் ஊரார் அடையும் மகிழ்ச்சி , இது தான்
உண்மை இன்பம்.
பல நிறுவனங்கள் ஒத்துழைக்கக் காத்திருக்கின்றனர்.
கிரியாஊக்கியாக நாம் ஆரம்பிக்க வேண்டியது தான்,பின்னர் பாருங்கள்.

Unknown சொன்னது…

உள்கோட்டையின் பழம்பெருமையை நிலைநிறுத்தும் தங்களைப் போன்றோரின் பணிகள் மிகவும் போற்றக் கூடியவை,பாராட்டக்கூடியவை. எம் போன்றோரின் ஒத்துழைப்பு என்றென்றும் தொடரும். வாழ்த்துக்கள்.