நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 4 டிசம்பர், 2009

சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுடன் சந்திப்பு…


திரு.சாமிக்கண்ணு,முனைவர் திருமாவளவன்,மு.இ


உரை கேட்கும் ஆசிரியப்பெருமக்கள்


அரங்கில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள்


சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள்


புதுவைத் தமிழாசிரியர்கள்


சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளைப் பார்வையிடவும்,இங்குள்ள கல்வி முறைகளை அறியவும் திரு.சாமிக்கண்ணு அவர்களின் தலைமையில் 19 பேர் கொண்ட குழுவினராக வந்துள்ளனர்.

புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு வெ,வைத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்குச் சிறப்பான வரவேற்பு தொடக்க விழாவில் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் புதுவையின் புகழ் பெற்ற பள்ளிகளுக்குச் சென்று அங்கு நடைபெறும் வகுப்புகளைக் கண்டு மகிழ்ந்தனர்.ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் பழகி அவர்களுக்குப் பாடம் நடத்தினர்.

பல நூலகங்களுக்குச் சென்று நூல்களைப் பார்வையிட்டனர்.

முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,தமிழ் பயிற்றுவிக்கும் வகையில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார்.

2001 இல் நான் சிங்கப்பூர் சென்றிருந்தபொழுது அப்பொழுது நடைபெற்ற கருத்தரங்கில் பழையன புகுதலும் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றேன்.அவ்வுரை கேட்ட பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் மலேசியா அழைத்துச் சென்று பல கல்லூரிகளில் உரையாற்ற வாய்ப்பு அமைத்தார்கள்.அந்த அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் மேலும் அங்குள்ள தமிழர்கள் மீதும் எனக்கு அன்பும் மதிப்பும் உண்டு.

அவ்வகையில் தெரிந்தவர்களைக் கண்டு மகிழலாம் என்று நினைத்து நானும் உரையாற்ற இசைந்தேன்.திரு.சாமிக்கண்ணு அவர்களை முன்பே பல கருத்தரங்குகளில் கண்டு பழகியுள்ளேன். அவர்கள் தலைமையில் வந்துள்ளவர்களை வரவேற்கும் முகமாகவேனும் நாம் செல்ல வேண்டும் என்ற உறுதியில் பிற பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டுச் சென்றேன்.

என் சிங்கப்பூர் பயண அனுபவங்களை நினைவு கூர்ந்து முன்பு பழைமை பற்றி பேசியதை நினைவுப்படுத்தி இன்று வளர்ந்து நிற்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தித் தமிழ் வளர்த்தல், தமிழ் பயிற்றுவித்தல் என்ற பொருளில் சற்றொப்ப 45 மணித்துளிகள் உரை வழங்கினேன். 15 மணித்துளிகள் கலந்துரையாடலும் இருந்தது.

தமிழ் இணையத்துக்குப் பங்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் வலைப்பூ உள்ளிட்டவற்றை உருவாக்கி படைப்புகளை வழங்க வேண்டும் என்றும் தமிழ் விக்கிப் பீடியாவின் பயன்,பங்களிப்பு பற்றியும் என் உரை இருந்தது.சிங்கப்பூர் தேசிய நூலகம்,புதுவை பிரஞ்சு நிறுவன நூலகம் இணையம் வழி பார்வையிட முடியும் என்று இவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்தேன்.மதுரைத்திட்டம்,தமிழ் இணையப்பல்கலைக்கழகப் பணிகள்,தமிழ் மரபு அறக்கட்டளை,பொள்ளாச்சி நசன் அவர்களின் கல்வித்துறைப்பணிகள்,நூல் பாதுகாப்பு பற்றி காட்சிவழி விளக்க முயன்றேன்.திரு.சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் கல்வி தொடர்பாக எனக்கு அனுப்பியிருந்த சிறு காட்சிவிளக்கத்தையும் காட்டிப் பிறமொழிச்சூழலில் தமிழ் பயிற்றுவிக்க பல உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுரைத்தேன்.

திரைப்படம் மற்றும் நாட்டுப்புறப்பாடல்கள் பிற நாடுகளில் தமிழ் பயிற்றுவிக்கப் பெரிதும் உதவும் என்றேன்.

அனைவரும், உரைக்குப் பிறகு சிறிது உரையாடி மகிழ்ந்தோம்.

திரு.சாமிக்கண்ணு அவர்கள் 2011 இல் மீண்டும் சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற உள்ளதை நினைவூட்டி முன்கூட்டியே ஓர் அழைப்பு விடுத்தார்.சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுடன் புதுவைத் தமிழாசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.அனைவரும் மின்னஞ்சல் வழியாகச் சந்திக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம்.

2 கருத்துகள்:

rathinapugazhendi சொன்னது…

திரு சாமிக்கண்ணுவை நாம் முன்பு சந்தித்திருக்கிறோம் நினைவிருக்கிறதா

புளியங்குடி சொன்னது…

தங்கள் உலகளாவிய தமிழ்ப் பணி தொடரட்டும்.