நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 டிசம்பர், 2009

சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரித் தமிழ் இணையப்பயிலரங்கம்-நிகழ்வும்,படங்களும்


சக்தி மாரியம்மன் பொறியியல்கல்லூரி முகப்பு

சென்னை,தண்டலம்,நாராயணசாமி நகரில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை 10.00 மணிக்குத் தொடங்கியது. முதற்கண் கல்லூரியில் இந்திய கணிப்பொறிச்சங்கம் தொடங்கப்பட்டது.திரு.முருகேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.கல்லூரி நிருவுநர் திரு.கே.என்.இராமச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழனின் உள்ளங்கையில் உலகம் என்ற பொருளில் தமிழ் இணையப்பயிலரங்கத்தில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க நான் அழைக்கப்பட்டேன்.பகல் 12 மணிக்குத் தொடங்கிய என் உரை 1.30 மணி வரையும் உணவு இடைவேளைக்குப் பிறகு 2 மணிக்குத் தொடங்கிப் பிற்பகல் 3.30 மணி வரையும் அமைந்தது.

என் வருகையறிந்த கல்லூரி நிருவுநர் அவர்கள் மிகச்சிறந்த ஊக்கவுரைகளைத் தந்து,தம் தமிழ்ப்பற்றை உறுதி செய்தார்கள்.கல்லூரி முதல்வர்,கணிப்பொறித்துறை,பிற துறை சார்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மருத்துவர் தாரா நடராசன் அவர்கள் தம் கணிப்பொறி,இணைய ஆர்வத்தால் பயிற்சிக்கு வந்ததுடன் மாணவர்களுக்குத் தம் வாழ்த்தினையும் தெரிவித்தார்.மாணவர்கள்,பேராசிரியர்கள் அவர் வருகையால் மகிழ்ந்தனர்.

என் பேச்சில் கணிப்பொறியில் தமிழ் நுழைந்த வரலாறு,தமிழுக்கு உழைத்த கணிப்பொறி வல்லுநர்கள்,சிறந்த தமிழ்த்தளங்கள்,தமிழ் விக்கிபீடியா,தமிழ்த்தட்டச்சு,தமிழில் மின்னஞ்சல் அனுப்பல்,உரையாடல், எ.கலப்பை,என்.எச்.எம்.எழுதி பற்றி எடுத்துரைத்தேன்.தமிழில் தட்டச்சிட்டால் சொற்களை ஒலித்துக்காட்டும் பெங்களூர் அறிவியல் கழகத்துப் பேராசிரியரின் மென்பொருளை அறிமுகம் செய்தேன்.அனைவரும் வியந்தனர்.

தமிழ்க் கணிப்பொறி சார்ந்த அமைப்புகளுள் உத்தமம்,கணித்தமிழ்ச்சங்கம்,கணியத்தமிழ் நிறுவன மென்பொருள்களை அறிமுகம் செய்தேன்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகளையும் எடுத்துரைத்தேன்.தமிழில் தேடுபொறி உருவாக்கவும்,புதுப்புது மென்பொருள்கள் கண்டுபிடித்து வழங்கவும் மாணவர்களை வேண்டினேன்.

தமிழ்க்கணிப்பொறித்துறைக்கு உழைத்தவர்களுள் முத்துநெடுமாறன், கோவிந்தசாமி, சுஜாதா,காசி,முகுந்து,கோபி,உள்ளிட்ட பலரின் பணிகளை எடுத்துரைத்து விளக்கினேன். கல்யாணசுந்தரம்,கொரியா கண்ணன் உள்ளிட்டவர்களின் தளங்களையும் எடுத்துரைத்தேன்.

நான் வீடு வந்து சேர்வதற்குள் பல மாணவர்கள் எனக்கு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு பல ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர்.தொடர்ந்து இவர்கள் தமிழுக்கு உழைக்க வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது நம் கடமையாகத் தெரிகிறது.

பல பேராசிரியர்கள்,மாணவர்கள் எனக்கு நண்பரானார்கள்.தொடர்ந்து தமிழ் இணைய வளர்ச்சிக்கு அனைவரும் உழைப்போம்.


கல்லூரி நிறுவுநர் திரு.கே.என்.இராமச்சந்திரன் அவர்கள் சிறப்புச்செய்தல்


கல்லூரி நிறுவுநர் திரு.கே.என்.இராமச்சந்திரன் அவர்களுடன் நான்


பயிற்சிபெற்ற மாணவியர்


பயிற்சி பெறும் மாணவர்கள்


தமிழ் இணையம் - பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள்


பயிற்சியளிக்கும் நான்


மருத்துவர் தாரா நடராசன் அவர்களுக்குச் சிறப்பு செய்யப்படுதல்


கணிப்பொறிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர்


கணிப்பொறித்துறைத் தலைவர் இளங்கோவன் அவர்கள்


சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்புப் பதாகை

4 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

தமிழிலும் இணையத்திலும் தனது சாதனைகளை படைத்து வரும் முனைவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

புளியங்குடி சொன்னது…

அருமை ஐயா!

Nilavan சொன்னது…

தாங்களின் பயலிரங்கம் சிறப்பாக அமைந்தமைக்கு வாழ்த்துக்களும், தாங்களின் பணிக்கு எமது வணக்கங்களும்.


வாழ்க தமிழுடன்,
நிலவன்.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

முனைவர் ஐயா!ஆக, தாங்கள் இளைய தலைமுறையினரையும் தமிழார்வம் மிக்கவர்களாக வளர அந்தப் பிஞ்சுகள் மனதில் இணையத்தைப் பயிர் செய்கிறீர்கள். நல்ல பணி.
நன்றி
அன்புடன்
க.நா.சாந்தி லக்ஷ்மன்