நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 22 மே, 2014

பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு ஒளிபரப்பு


கயலெழுதி, வில்லெழுதி பாடலுக்குரிய காட்சி

சிலப்பதிகாரம் கானல்வரியைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு நாட்டியமாடும் செல்வி கிருத்திகா இரவிச்சந்திரன்(இடம்: பூம்புகார் கடற்கரை)

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசையைப் பருகிய பின்னர் அவர் வாழ்க்கையை இத்தமிழுலகம் முழுமையாக அறியாமல் உள்ளதை நினைத்து யான் பலநாள்... பலவாண்டுகள் கவலைகொண்டிருந்தேன்.

தமிழகத்தில் தமிழிசையை மீட்பதற்கு உழைத்த ஒரு போராளியை இம்மக்கள் கண்டுகொள்ளாமல்விட்டதை நினைத்து இனி அமைதியாக இருத்தல்கூடாது என்று கடந்த கால் நூற்றாண்டுகளாகத் தகவல் தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். இப்பொழுதும் இது தொடர்கின்றது.

குடந்தை கதிர். தமிழ்வாணன், பேராசிரியர் தமிழண்ணல் ஐயா, பொன்னாவாரம்பட்டிப் பொறியாளர் மு.அறவாழி, த. அன்புவாணன் வெற்றிச்செல்வி, கு. வெ.கி. செந்தில், சூலூர் கௌதமன், முனைவர் மு.இளமுருகன், ப. திருநாவுக்கரசு, புலவர் நா. தியாகராசன், புலவர் சுவை. மருதவாணன், புலவர் திருநாவுக்கரசு, நிழல் திருநாவுக்கரசு, அ. தேவநேயன் உள்ளிட்டோரின் தொடர் ஒத்துழைப்பால் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் குரலில் பல பாடல்களை ஒருவாறு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து திரட்டினேன். அயல்நாடுகளிலிருந்தும் திரட்டினேன்.

குடந்தை ப. சுந்தரேசனாரைத் தம் வழிபடு கடவுளாகப் போற்றியவர்களும், தம் ஆசிரியராக நினைத்து ஆதரித்தவர்களும், உறவினர்களாகப் பேணிக்கொண்டவர்களும், தமிழ்ப் பெரியவராக அவரை நினைத்துத் தம்மை மெய்யடியாராக நினைத்துப் பணிவிடைசெய்தவர்களும் தமிழகத்தில் மிகுந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைக் களப்பணிகளில் காணநேர்ந்தது. குடந்தை ப. சுந்தரேசனாருக்குக் களம் அமைத்துத் தந்தவர்களும், கைகோர்த்துச் செலவு செய்தவர்களும் ஏராளம்.

இத்தகு பெருமைக்குரிய பெரியவரின் பணிகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் நூற்றாண்டு விழா நடத்த பெட்னா அமைப்பைச் சேர்ந்த அன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். முழு மனத்துடன் விழா கொண்டாட முன்வந்த அவர்களைத் தமிழுலகம் என்றும் நினைக்கும்.

அதுபோல் புதுச்சேரியில் நூற்றாண்டு விழா நடத்தியும் நினைவுகூர்ந்தோம். அடுத்தடுத்து பல ஊர்களில் நூற்றாண்டு விழா நடப்பதற்குத் திட்டமிட்டு வருகின்றோம். அந்தவகையில் திருவாரூரில் நூற்றாண்டு விழா நடந்துள்ளது. வரும் 28.05. 2014 இல் இலால்குடியிலும், 01.06.2014 இல் சென்னையிலும் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஊடகங்களின் வழியாக ப. சு. ஐயாவின் பாடல்களை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த முயன்றோம்.

பொதிகை தொலைக்காட்சியில் ஐயாவின் பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பும் முயற்சிக்குப் புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தார் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கினர். இந்திய மக்களின் கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் அளப்பரிய தொண்டாற்றிவரும் பொதிகை தொலைக்காட்சியில் பண்ணாராய்ச்சியாளர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கைக் குறிப்புகளும் பாடல்களும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பாக உள்ளன.

வரும் காரி(சனி)க்கிழமை 24. 05. 2014 இந்திய நேரம் முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை இந்தச் சிறப்பு ஒளிபரப்பு நிகழ உள்ளது. பொதிகை தொலைக்காட்சியில் இந்த ஒளிபரப்பை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்க்கமுடியும். இணையத்தின் வழியாகவும் உடனுக்குடன் பார்க்கலாம்.

இணையத்தில் பார்க்க


குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்தும், சிலப்பதிகாரத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும், திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டி பிள்ளைத்தமிழிலிருந்தும் சில பாடல்களைப் பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலில் கேட்கலாம்.

அடுத்த வாய்ப்புகளில் சங்க இலக்கியம், கம்பராமாயணம், ஆழ்வார் பாடல்களிலிருந்து பாடிய பாடல்களைக் கேட்கும் வாய்ப்பினை உருவாக்குவோம். தமிழ்ச்செல்வர்கள் யாரேனும் முன்வந்து பொருட்கொடை வழங்கினால் ப. சுந்தரேசனாரின் குரலில் சிலப்பதிகாரத்தின் முதன்மையான பாடல்கள், பரிபாடல் பகுதிகள், திருமுருகாற்றுப்படை, திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல்களின் பகுதிகளைத் தமிழுலகிற்குத் தொகுத்து வழங்கமுடியும். எமக்கு அமையும் ஒத்துழைப்பு, தடைகளைப் பொறுத்து எங்கள் பணி அமையும்.

தமிழிசை மீட்க துணைநின்ற அனைத்து நல்லுள்ளங்களையும் நன்றியுடன் போற்றுகின்றோம்.


 அரவஞ்சி வாழ்வதுவே என்னும் வரிக்கு...


திமில் வாழ்நர் சீரூர் காட்சி



படப்பிடிப்பு குழு

3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பொதிகைத் தொலைக்காட்சியில் 1 மணி நேரம் முழுமையாக ஒளிபரப்பினைக் கண்டு இன்புற்றேன். சங்க காலத்திற்கே இந்நிகழ்வு என்னை அழைத்துச்சென்றது. நான்காம் வகுப்பே படித்த இப்பெருமகனார் தமிழிசை உலகிற்கும், வரலாற்றிற்கும் அளித்த பங்களிப்பினைத் தங்கள் வாயிலாகவும் அறிந்து மகிழ்கின்றேன். பூம்புகாரில் தொடங்கி நாட்டியப் பாடலுடன், மதுரையம்பதியின் அரிய புகைப்படங்கள்,தொடர்ந்து பெருமக்கள் அன்னாருக்குச் சூட்டிய புகழாரங்கள், புதுச்சேரியில் கொண்டாடப்பட்ட விழா உள்ளிட்ட அனைத்தையும் மனதார ரசித்தேன். இப் பெருமகனாரின் குரலைக் கேட்டு அகமகிழ்ந்தேன். அன்னாரின் புகழ் பரப்ப தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்.