பேராசிரியர்
இராசு. பவுன்துரை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைத்துறையில்
பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் இராசு. பவுன்துரை அவர்கள் இயற்கை எய்திய செய்தியைக்
காலம் கடந்து அறியமுடிந்தது. பேராசிரியர் இராசு. பவுன்துரை அவர்களைக் கடந்த கால்நூற்றாண்டாக
அறிவேன். இவர் கட்டடம், சிற்பம், ஓவியம், கோயிற்கலை
உள்ளிட்ட துறைகளில் பேரறிவு பெற்றிருந்த பெருமகனார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்ட வல்லுநர் குழுவில் அவருடன் இணைந்து பணியாற்றும்
வாய்ப்பு எனக்கு அமைந்தது. அன்பொழுகப் பேசிய அப்பெருமகனாரை “எப்பிறப்பில் காண்பேன்
இனி” என்று ஏங்குகின்றேன். எம் போலும் இளைய ஆய்வாளர்களை ஆற்றுப்படுத்தி வளர்த்த பெருமைக்குரியவர்.
துறைசார் பணிகளில் தம்மை முற்றாக இணைத்துக்கொண்டு உழைத்தவர். அவர் துறைசார்ந்த அரிய
நூல்களைத் தமிழில் எழுதித் தமிழர்களின் மரபுவழி அறிவுப்பெருமையை நிலைநாட்டியவர். பேராசிரியர்
அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.
பேராசிரியர் இராசு. பவுன்துரை அவர்கள் தேனி
மாவட்டம் தேவாரம் என்னும் ஊரில் 06.01.1953 இல்பிறந்தவர். தந்தையார் பெயர் திரு. பே.
இராசு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
தமிழ்ப் பல்கலைக்கழத்தில் 1987 முதல் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்
நிருவாகப் பணியில் இயக்குநர்(பொ) பொறுப்பு வகித்தவர். கொரியா, சீனா, இலங்கை, சிங்கப்பூர்,
போர்ச்சுக்கல், ஆங்காங்கு, மெக்காவ், இந்தோனேசியா, பாலித்தீவு, இங்கிலாந்து, அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகளுக்கு ஆய்வின்பொருட்டுச் சென்று வந்தவர். நான்கு பன்னாட்டு ஆய்வுத்திட்டங்களை
மேற்கொண்டவர். பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு நாற்பதிற்கும் மேற்பட்ட
ஆய்வுக்கட்டுரைகளை வரைந்தவர். 60 மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியவர். பதினைந்திற்கும்
மேற்பட்ட அமைப்புகளில் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர்.
பேராசிரியர்
இராசு. பவுன்துரை எழுதிய நூல்களுள் தமிழகப் பாறை ஓவியங்கள்( 1987) தமிழக ஓவியக்கலை
மரபும் பண்பாடும்(2004) ஆகியன சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற்றன.
தமிழர்களின்
பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் அவர்கள் உடல்நலக்
குறைவால் 19. 03. 2014 அன்று தம் புவிவாழ்வை நிறைவுசெய்துகொண்டார். புகழோடு என்றும் நம் நெஞ்சில்
நிலைபெறுவார். பேராசிரியர் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்களுக்கு என் ஆறுதல் உரியவாகட்டும்.
பேராசிரியர்
இராசு. பவுன்துரையின் தமிழ்க்கொடை:
1.
தமிழகப்
பாறை ஓவியங்கள்(1986)
2.
அருங்காட்சியகவியல்(1990)
3.
கும்பகோணம்
மகாமகத் திருவிழா(1991)
4.
மனோரா(1995)
5.
Manora
: Maritime History and Architecture(1996)
6.
தமிழகப்
பாறை ஓவியங்கள்(2000)
7.
பன்னாட்டுத்
தமிழரும் பண்பாடும்(2000)
8.
இந்திய
அருங்காட்சியகங்கள்(2004)
9.
தமிழக
நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு(2004)
10. பெங்சுய் : சீனக் கட்டடக்கலைமரபும் தொழில்நுட்பமும்(2004)
11. செட்டிநாட்டுக் கட்டடக்கலை மரபு(2004)
12. தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும்(2004)
13. மகாமகம் மலர் (பதி) தமிழக அரசு வெளியீடு
(2004)
14. தமிழகக் கட்ட்டக்கலை மரபு: மயன் அறிவியல்
தொழில்நுட்ப மரபு(2004)
15. தமிழகக் கோயிற் கட்டடக்கலை மரபு: தூண்கள்(2005)
16. முல்லைநிலத்து முகங்கள்(2005)
17. பண்டைத் தமிழர் வரைவுகளும் குறியீடுகளும்(2005)
18.தஞ்சை இராஜராஜீஸ்வரம் திருக்கற்றளி விமானக்
கட்டடக் கலை மரபு(2010)
19. தமிழர் கலை வரலாற்றில் பேரறிஞர் அண்ணா
20. தமிழகக் கலம்காரி ஓவியக்கலை மரபு
21. சிந்து சமவெளி நாகரிகமும் திராவிடக் கட்டடக்கலை
மரபும்
22. தமிழகப் பொற்கோயில்கள்
23. தமிழகப் பெருங்கற்காலம் கட்டடக்கலை மரபு
24.தமிழர் குடியேற்றங்களும் கட்டடக்கலைத் தொழில்நுட்ப
வரலாறும்
25. தமிழகத் திருக்குளங்களும் கட்டடக்கலை மரபும்
26. கம்பம் பள்ளத்தாக்கு வரலாறு
27. தமிழர் வரலாற்றில் சின்னமனூர்
28. தமிழகக் கோயில் விமானக் கட்டடக்கலை மரபு
29. T amil Cultural Connections with South Korea
30. Indian Architectural Traditions with
south East Asia
31. Korean studies in India
32. Tamil Cultural Connections with China
33. Tranquebar Fort - Danish Maritime
History and Architecture
34. Maritime Architectural Heritage in
Tamil Nadu
குறிப்பு
: கலைக்களஞ்சியத் தொகுப்பில் ஈடுபடுவோர் இக்குறிப்புகளைப் பயன்படுத்தும்பொழுது எடுக்கும் இடத்தைக் குறிப்பிடவும்.
1 கருத்து:
எப்பொழுதும் எழுத்து, ஆய்வு என்ற நிலையிலேயே இவரது சிந்தனை காணப்படும். பல அரிய நூல்களை தமிழுலகிற்குக் கொணர்ந்து பெருமை படுத்தியவர். வரலாற்றுலகில் அவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும். மனோரா நூல் சரஸ்வதி மகால் நூலகப் பதிப்பாக பிப்ரவரி 2000இல் வெளிவந்துள்ளது (ஆசிரியர்கள் மூ.இராசாராம் மற்றும் இராசு.பவுன்துரை) என்பதைத் தகவலுக்காகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துரையிடுக