நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 7 மே, 2014

தமிழைத் துறவாத துறவி ஊரன் அடிகளார்…

தவத்திரு ஊரன் அடிகளார்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரைப் பற்றி அறிந்தவர்களை அண்மைக் காலமாகத் தேடிச் சந்தித்து செய்திகளைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது ப. சு. அவர்களை அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஐயா அவர்களிடத்து ஆற்றுப்படுத்தியவர் தவத்திரு ஊரன் அடிகளார் என்று நினைவூட்டினர். என் பிறந்த ஊருக்குச் செல்லும்பொழுது வடலூரில் இறங்கி அடுத்த பேருந்து மாறுவது வழக்கம். வடலூரில் வாழும் ஊரன் அடிகளாரை இதுநாள்வரை அவர்தம் இல்லம் சென்று கண்டதில்லை. ஆனால் தவத்திரு ஊரன் அடிகளாரை முன்பே ஆர்க்காட்டில் ஒருமுறை கண்டு வணங்கியுள்ளேன். வேறு சில நிகழ்வுகளில் அவர்களின் இனிய உரையைச் செவிமடுத்துள்ளேன்.

     . சு. நூற்றாண்டு விழாவில் அடிகளாரை அழைத்துச் சிறப்பிக்க நினைத்தேன். அவர்களின் செல்பேசி எண் பெற்று உரையாடினேன். வரும் 25 ஆம் பக்கல் திருவருட்பா அகவலுக்கு அவர் வரைந்துள்ள உரைநூல் வெளிவர உள்ளதாகவும் அதுவரை எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இயலாது எனவும் முடிவெடுத்துள்ளதைத் தெரிவித்தார்கள். . சு. நூற்றாண்டு என்றதும் அந்தத் தூய துறவு உள்ளம் இளகியது. பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து ப. சு. வுக்கும் தமக்குமான நினைவுகளை அடிகளார் அசைபோட்டார்கள். விழாவுக்கு வருவதாக இசைவு தந்தார்கள். அழைப்பிதழை அணியப்படுத்தி அடிகளாருக்கு நேரில் வழங்க அமையம் பார்த்தேன்.

ஞாயிறு (04.05.2014) காலை 11. 30 மணிக்கு வடலூரில் இறங்கி அடிகளாரின் தவமனைக்குச் சென்றேன். அன்பொழுக வரவேற்றார்கள். என்னை அறிமுகம் செய்துகொண்டு உரையாடலைத் தொடங்கினேன். தவத்திரு ஊரன் அடிகளாரின் சைவ ஆதீனங்கள் உள்ளிட்ட நூல்களை நான் முன்பே படித்துள்ளதைச் சொன்னேன். அதுபோல் அவர்களின் வரிசை நூல்களையும் படித்துள்ளதை நினைவூட்டினேன். தம் நூல்கள் வெளிவந்தமைக்கான காரணத்தை அடிகளார் அவர்கள் சொன்னபொழுது அவர்களின் தமிழ்ப்பற்று விளங்கியது. அவர்களின் சமய ஈடுபாடு மதிக்கும்படியாக இருந்தது. தமிழகத்துத் திருமடங்களைப் பற்றியும் அவைகள் செய்துவரும் சமயப்பணிகள் பற்றியும் நெடுநாழிகை உரையாடினோம்.

. சு. நினைவுகளைத் தவத்திரு அடிகளார் தொடங்கும் முன் தாம் எழுதிய 10 பக்கத்தில் அமைந்த கட்டுரை ஒன்றை எனக்குப் படிக்கத் தந்தார்கள். படிக்கத் தொடங்கியது முதல் அடிகளார் மேல் எனக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டவண்ணம் இருந்தது. அடிகளாருக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த புலமை எனக்குப் பளிச்செனத் தெரிந்தது. தம் துறவு வாழ்க்கைக்கு அடிப்படையே சிலப்பதிகாரமும் அதன் ஆசிரியர் இளங்கோவடிகளுமே என்று குறிப்பிட்டார்கள். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அல்லவா?

தவத்திரு அடிகளாரிடம் மெதுவாகப் பேசத்தொடங்கினேன். . சு. பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அருட்செல்வரிடத்து நேரம் பார்த்து அறிமுகம் செய்த நிகழ்வுகளையும் பூம்புகாரில் ப.சு. அவர்களைச் சந்தித்தையும், . சு. அவர்களின் சைவ நெறி ஈடுபாட்டையும் ஆர்வமுடன் எடுத்துரைத்தார்கள். அனைத்தையும் என் கையிலிருந்த காணொளிக் கருவியில் படம் பிடித்துக்கொண்டேன். சில புகைப்படங்களையும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்


தவத்திரு ஊரன் அடிகளார் அவர்கள் தம் மனையின் முதல்மாடியில் நூலகத்தின் நடுவில் வாழ்ந்துவருகின்றார். அரிய, பெரிய நூல்கள் அவர்தம் நூலகத்தில் அணிசெய்கின்றன. முறைப்படுத்தி நூல்களை அடிகளார் அவர்கள் பாதுகாக்கின்றார்கள். அவர்கள் நூலகத்தில் உள்ள திருவருட்பா குறித்த பல பழைய பதிப்புகளை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். சமய நூல்கள், ஆய்வு நூல்கள் பல உள்ளன. தமிழாராய்ச்சியையே தம் வாழ்க்கையாகக் கொண்டுள்ள அடிகளாரிடம் விடைபெறும்பொழுது நெஞ்சார வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

 தவத்திரு ஊரன் அடிகளார் நூலகத்தில்

தவத்திரு ஊரன் அடிகள் நூலகத்தின் ஒரு பகுதி

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

அடிகளாரைப் பற்றிய தங்களின் பதிவு மூலமாக அவரின் மீதான எங்களின் மதிப்பை மேம்படுத்தியது. பல புதிய செய்திகளைத் தங்களுடைய பதிவின் மூலமாகத் தெரிந்துகொண்டேன். நன்றி.