பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் ப. சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)
தமிழுக்கு
உண்மையாக உழைத்த பெருமக்களை இத்தமிழுலகம் உரிய காலங்களில் போற்றுவதில்லை. அவர்களின் பேரறிவை மதிப்பதும் இல்லை. அவர்களை வறுமையில்
வாடாமல் காத்ததும் இல்லை. அவ்வாறு செய்திருந்தால் அத்தகு பெரியோர்களிடத்திருந்து இன்னும்
பல்வேறு ஆக்கங்கள் இம்மொழிக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்கும். அவ்வகையில் திரு.
வி. க, மயிலை சீனி. வேங்கடசாமியார், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பெருமக்கள்
பல்வேறு இன்னல்களை ஏற்று வாழ்ந்துள்ளனர். எனினும் தங்களால் இயன்ற வகையில் இவர்கள் தமிழுக்குப்
பாடுபட்டுள்ளனர்.
அந்த
வகையில் தமிழிசை மீட்சிக்கு உழைத்த குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் வறுமை வாழ்க்கையில்
தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துள்ளனர். அன்பர்கள் சிலர் அவரின் கடைசிக்காலத்தில் உதவியுள்ளனர்
எனினும் அவரின் துறைசார் அறிவுக்கு ஈடான பொருள்வளத்தையோ, புகழ்நிலையையோ அவர்கள் பெறவில்லை
என்பதுதான் உண்மை. தமிழிசைத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, பெருமைக்குரிய குடந்தை
ப. சுந்தரேசனாரை வாழும்காலத்தில் போற்றாத மக்கள், மறைந்த பிறகா போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவார்கள்?
இக்குறையை
ஓரளவு போக்கும் வகையில் தமிழ்ப்பற்றாளர்கள் அன்னாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழகத்திலும்
அயலகத்திலும் கொண்டாட முன்வந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூற்றாண்டு விழாவைப்
புதுச்சேரியில் கொண்டாடிய இந்நிலையில் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ் வாழ்க்கையை
ஆவணப்படுத்தும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் உள்ளோம்.
எத்தகு
பொருள் உதவியோ, ஆள் வலிமையோ இல்லாமல் மலையுடைக்கும் முயற்சிக்கு நிகரான படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டு
உழைத்த எனக்குப் பேராசிரியர் மு. இளமுருகன், புலவர் சூலூர் கௌதமன் உள்ளிட்டோர் ஊக்கமொழிகளைப்
பகர்ந்ததோடு, என் பயணத்தில் உடன் வந்தும் மகிழ்வித்தனர். ஆம். புதுச்சேரியில் படப்பிடிப்பு
என்று சொன்னவுடன் தம் பொருட்செலவில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு முழு ஒதுழ்ழைப்பு
நல்கினர். பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி அம்மா அவர்களும் எங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு
பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
பூம்புகார்
மாதவி மன்றத்தின் தலைவர் திரு. நா. தியாகராசன் ஐயா அவர்கள் தம் தள்ளாத அகவையிலும் தனித்து,
பூம்புகாரிலிருந்து புதுவைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுபோல் பேராசிரியர்
மா. வயித்தியலிங்கன்(சென்னை), பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் ஆகியோர் குடந்தை ப. சுந்தரேசனார்
குறித்த நினைவுகளைப் பெருந்தன்மையுடன் பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர்
புலவர் இரெ. சண்முகவடிவேல், தவத்திரு ஊரன் அடிகளார், மலேயா பல்கலைக்கழகப் பேராசிரியர்
சு. குமரன், ஆ. பிழைபொறுத்தான் ஆகியோர் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளனர்.
அடுத்த படப்பிடிப்பு அரியலூர், திருமழபாடி, புள்ளம்பாடி, பூவாளூர், திருத்தவத்துறை
(இலால்குடி), திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது.
புலவர் சூலூர் கௌதமன் ப.சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)
தவத்திரு ஊரன் அடிகளார் நினைவுரை( படப்பிடிப்பு)
திரு. நா. தியாகராசன்(பூம்புகார் மாதவி மன்றம்) ( படப்பிடிப்பு)
முனைவர் இ. அங்கயற்கண்ணி நினைவுரை( படப்பிடிப்பு)
முனைவர் மு.இளமுருகன் நினைவுரை( படப்பிடிப்பு)
படப்பிடிப்புக்குப் பிறகு ஓரிடத்தில் உரையாடியபொழுது







1 கருத்து:
தங்களின் முயற்சி பெரு முயற்சி ஐயா
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக