தமிழிசை வரலாற்றில் பஞ்சமரபு நூலுக்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு. மறைந்த நூல்கள் வரிசையில் புலவர்களால் அடிக்கடி குறிப்பிடப்பட்ட நூல் இதுவாகும். இதனை வே. இரா. தெய்வசிகாமணி கவுண்டர் அவர்கள் தம் ஓலைச்சுவடித் தொகுப்பில் பாதுகாத்து வந்தார். இச்சுவடி இருக்கும் செய்தியறிந்து பதிப்பிக்க கேட்டபொழுது முன்பு வேறு ஒரு நிறுவனத்திற்கு ஓலைச்சுவடி கொடுத்த கவுண்டர் ஐயா அவர்களின் உதவியை அந்த நிறுவனம் சுட்டாமல் பதிப்பித்தது. அதன் பிறகு இனி ஓலைச்சுவடியை யாருக்கும் தருவதில்லை என்று முடிவெடுத்திருந்த கவுண்டர் ஐயாவின் முடிவை நம் அருட்செல்வரின் வேண்டுகோள் மறுசிந்திப்புக்கு உள்ளாக்கியது. அதன் பயனாய் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் அரிய ஆராய்ச்சி, பதிப்பு நுட்பம் துணைகொண்டு பஞ்சமரபு தமிழர்களின் கையினுக்குக் கிடைத்தது.
1973 இல் முதல் பகுதி முதல்பதிப்பாக வெளிவந்தது. அடுத்த பகுதியும் இணைந்த முழுப்பதிப்பு 1975 இல் வெளிவந்தது. இந்த நூல் வெளிவந்தால் போதும் என்று பெருந்தன்மையுடன் பணியாற்றிய குடந்தை ப. சுந்தரேசனாரின் பெயர் அணிந்துரைப் பகுதியில் மட்டும் இடம்பெற்றது. இந்த நூலின் அடுத்த பதிப்பு என் இசை ஆசிரியர் முனைவர் வீ.ப. கா.சுந்தரம் அவர்கள் பதிப்பிக்க, கழகம் வழியாக 1991 திசம்பரில் வெளிவந்தது. இந்தப் பதிப்பிலும் சில குறைகள் உள்ளன. சிலப்பதிகார உரையாசிரியர் எடுத்துக்காட்டும் பஞ்சமரபு வெண்பாக்களின் விளக்கங்கள் பழந்தமிழர்களின் நுட்பமான அறிவைக் காட்டும் ஆவணங்களாகும். எந்தமிழரின் விழிப்பின்மையால் இந்த நூலின் சிறப்பும் தமிழகத்திற்குத் தெரியாமல் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக