தனிநாயகம் அடிகளார்
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வடமொழி வல்லாண்மை மேல்நாடுகளிலும் கொடிகட்டிப் பறந்தது. அதன் பயனாக உலக மொழியியல் அறிஞர்கள் பலரும் தொடக்கத்தில் சமற்கிருதப் பட்டம் பெறுவதை இந்திய இலக்கியத்தை அறிவதன் உயர் தகுதியாக நினைத்திருந்தனர். இன்று அறியப்பட்டுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்பவர்கள் பெரும்பாலும் சமற்கிருத மொழிப்பயிற்சியுடையவர்களே ஆவர். அப்பெரு மக்களைத் தமிழின்பால் ஈடுபாடு கொள்ள அதற்குரிய வாய்ப்புகளை, சூழல்களை உருவாக்கியவர்களுள் தலைமையானவராகத் தனிநாயகம் அடிகளாரைக் குறிப்பிடலாம்.
அடிகளார் இளமைக் காலத்தில் ஆங்கிலமொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றிருந்தாலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் தமிழ் படிக்க வந்த பிறகு அவரின் தமிழ்வேட்கை மேம்பட்டது எனலாம். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், அ.சிதம்பரநாதனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வழியாகத் தமிழ் இலக்கியப் பரப்பை உணர்ந்த அடிகளார் பின்னாளில் தமிழ் ஆய்வுகளில் ஈடுபடவும் தமிழ்வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடவும் அவரின் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் படிப்பு பெருந்துணை புரிந்தது.
உலகின் 51 நாடுகளுக்குச் சென்று வந்தவர் அடிகளார்.
"அமெரிக்க ஐக்கியநாட்டுக் கொலம்பியா, ஹார்டுவர்டு, கலிபோர்னியா போன்ற பல்கலைக் கழகங்களில் கீழ்த்திசை நாடுகளைப் பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி நடந்துவருகிறது- ஆயினும் தமிழைப் பற்றிய ஆராய்ச்சி மிகக் குறைவேயாம்" என வருந்திய தனிநாயக அடிகளார் அக்குறையைப் போக்கும் மனவிருப்பம் கொண்டு உலகத்து அறிஞர்களைத் தமிழின் பக்கம் திருப்பத் தமிழ்குறித்த செய்திகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினால்தான் பிறநாட்டார் தமிழின் சிறப்பை உணர்வார்கள் என நினைத்து Tamil Culture என்னும் முத்திங்களிதழை (1952 பெப்ருவரி)த் தொடங்கியும், உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் கண்டு அதன் வழியாக உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறக் களம் அமைத்தும் உலகத்து அறிஞர்களின் ஆய்வுகளைத் தமிழின் பக்கம் திருப்பினார். அன்னாரின் தமிழ் வாழ்வை இங்கு எண்ணிப் பார்ப்போம்.
இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த என்றி எசுதனிசுலாசு கணபதிப்பிள்ளை, செசில் இராசம்மா வசுதியாம்பிள்ளை ஆகியோரின் தலைமகனாகப் பிறந்தவர் நம் தனிநாயக அடிகளார். இவர் பிறந்த ஊர் கரம்பொன் ஆகும். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சேவியர் என்பதாகும். தந்தையின் பெயரை இணைத்துச் சேவியர் எசுதனிசுலாசு என அழைக்கப் பெறலானார். பின்னாளில் தம் மரபு வழி முன்னோரான தனிநாயகம் என்பாரின் பெயர் இணைத்துச் சேவியர் தனிநாயகம் எனப் பெற்றுத் தமிழர்கள் உள்ளத்தில் தனிநாயகமாக ஆட்சி செலுத்திவருகிறார்.
இளமைக் காலத்தில் ஆங்கில ஆர்வம் மிக்கிருந்த சேவியர் அடிகளார் 1931-34 வரை கொழும்பில் மெய்யியல் பயின்றார். குருத்துவக் கல்லூரியில் காரணம் குறிப்பிடாமல் வெளியேற்றப்பட்டார். 1934 இல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சார்ந்த பேராயர் இலங்கை சென்றபொழுது அடிகளாரின் நிலையுணர்ந்து அடிகளாரை உரோமையில் உள்ள உர்பன் பல்கலைக்கழகத்திற்குப் படிக்க அனுப்பி வைத்தார். ஆங்கிலம், இலத்தீனில் முன்பே புலமைபெற்றிருந்த அடிகளார் அங்கு இசுபானியம், போர்த்துக்கீசியம், பிரஞ்சு, செர்மன், கிரேக்கம், எபிரேயம் உள்ளிட்ட மொழிகளில் பயிற்சிபெற்றார். உர்பன் பல்கலைக்கழகத்தில் 43 நாடு சார்ந்த 250 மாணவர்கள் கல்வி பயின்றனர். ஐந்தாண்டுகள் அவர்களுடன் பயின்ற அடிகளார் உலகு தழுவிய சிந்தனையைப் பெற்றார்.
உரோமாபுரியில் பயின்றபொழுது தமிழார்வம் இவருக்குத் தழைக்கத் தொடங்கியது. "வீரமாமுனிவர் கழகம்" என்னும் அமைப்பை நிறுவித் தமிழ் பயிலத் தொடங்கினார். வாட்டிகன் வானொலியில் பலமுறை தமிழில் உரையாற்றும் பேறு பெற்றார். 1938 மார்ச்சு 19 இல் உரோமையில் கத்தோலிக்க குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1939 இல் திருவனந்தபுரம் சமயத் தொண்டிற்கு வந்தவர் அடுத்த ஆண்டு தூத்துக்குடியில் சமயப்பணிக்கு வந்தார். 1944 - 45 வரை வடக்கன்குளத்தில் புனித தெரசாள் பள்ளியில் துணைத்தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய அய்யர் என்பவரிடம் தமிழ் கற்றார். அந்த உந்துதலில் தமிழ் படித்துப் பட்டம்பெற விரும்பிய அடிகளாருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆதரவுக்கை நீட்டியது.
அரசர் முத்தையவேள் அவர்களின் பரிந்துரைப்படி விருந்தினர் விடுதியில் தங்கிப் படித்த பொழுது அவரின் உடன் வகுப்புத் தோழராக விளங்கியவர் வ. அய். சுப்பிரமணியன் அவர்கள் ஆவார்.
1945 இல் தம் முப்பத்தியிரண்டாம் அகவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்த அடிகளார் முதுகலை வகுப்பை 1947 இல் நிறைவு செய்தார். 1949 இல் "பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை" (Nature in Ancient Tamil Poetry) என்னும் பொருளில் ஆராய்ந்து மூதறிஞர் (எம்.லிட்) பட்டம் பெற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழறிவும் அடிகளாரின் பரந்துபட்ட பன்மொழியறிவும், உலகு தழுவிய சிந்தனையும் அவரை உலகத் தமிழராக உருமாற்றியது. அதன் பிறகு அடிகளார் ஈராண்டுகள் (1949-50) உலகெங்கும் தமிழ்ப்பயணம் மேற்கொண்டு தமிழின் சிறப்பு குறித்து உரையாற்றினார். அவ்வகையில் மலேசியா, சீனா, சப்பான், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொன்னாப்பிரிக்கா, இத்தாலி, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் குறிப்பிடத்தகுந்தது.
அந்த அந்த நாடுகளில் தமிழ்ச் சிறப்பு பற்றி பேசியதுடன் அமையாமல் அங்குத் தமிழுக்கு, தமிழர்களுக்குத் தொடர்புடைய செய்திகள் உள்ளனவா? என்பதையும் அடிமனத்தில் பதித்துக்கொண்டார்.
உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தமிழாய்வுகள் நடைபெறாமை அடிகளார்க்குப் பெருங்குறையாக இருந்தது. அவற்றை மாற்றும்
திட்டத்தை அடிமனத்தில் கொண்டவராக அடிகளார் உலகை வலம் வந்தார்.
தனிநாயக அடிகளார் சப்பான் நாட்டில் தங்கியிருந்தபொழுது சப்பான் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை எண்ணிப்பார்த்தார் தமிழ் ஒலிகள், பண்பாட்டுத் தொடர்புகள், பா அமைப்புகள் பற்றிய ஒற்றுமைகளை எண்ணி மகிழ்ந்தார்.
அவாய் தீவுகளில் உள்ள மக்கள் பழந்தமிழர்களைப் போல் மலருக்கு முதன்மை தருவதைக் கண்டு வியந்தார். தழையுடை உடுத்தி வந்தவர்களைக் கண்டு சங்கத்தமிழ் மாந்தர்களாக அவர்களை உள்ளூர எண்ணி உவந்தார். அந்த அந்த நாடுகளில் வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழ், தமிழர் பற்றி அடிகளார் உரையாற்றினார்.
1954 இல் தாய்லாந்து சென்ற அடிகளார் அங்கு மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். அப்பொழுது அங்குத் தமிழில் உள்ள திருவாசகப் பாடல்கள் (ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்...) 'தாய்' மொழியில் உள்ள எழுத்துகளில் எழுதி வைத்துக் கொண்டு, அப்பாடல்களைப் பாடியதைக் கண்ட அடிகளாருக்கு வியப்பு மேலிட்டது. தாய்லாந்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை முதன்முதல் வெளிப்படுத்தியவர் அடிகளாரே ஆவார்.
அடிகளார் உலக நாடுகளுக்குச் சென்று வந்த பட்டறிவாலும் மிகச் சிறந்த பட்டப் பேறுகளாலும் 1952 முதல் 1961 வரை(ஈராண்டு முனைவர் பட்ட ஆய்வுக்கு இலண்டன் சென்றமை தவிர) இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியேற்றுத் திறம்படப் பணிபுரிந்தார்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள் (Education Thought in Ancient Tamil Literature) என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.முனைவர் பட்டம்பெற்றுத் திரும்பிய பிறகு அடிகளார் இலங்கையில் பணிசெய்ய முடியாதபடி அவருக்கு அரசால் இடையூறுகள் உண்டாயின.
அடிகளார் இலங்கை அரசியல் பணிகளில் தலையிடுவதாக நினைத்த அரசு அவர்மேல் கண்காணிப்பைத் தொடங்கியது. அந்நாளில் இலங்கையில் பரவி வந்த சிங்களம் உயர்வு என்ற
சிந்தனையால் தமிழர்கள் தங்கள் தாய்மொழியாம் தமிழுக்கு உரிய முதன்மைக்குக் குரல் கொடுத்தனர். தமிழர்களுக்கு இலங்கையில் உரிய பங்களிப்பு கிடைக்கவேண்டும் என்பதில் அடிகளார் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதன்பொருட்டு நடந்த பல்வேறு அறப்போராட்டங்களில் பங்கு கொண்டும் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். இதனால் அடிகளார் அமைதியாகப் பணிபுரியும் சூழல் அமையாமல் போனது.
அந்த நாளில் மலேசியாவில் உள்ள மலேசியப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த இந்தியவியல் துறையில் அடிகளார் பணியில் இணையும் வாய்ப்பு அமைந்தது. தமிழர்களின் தலைவராக விளங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணியார் உள்ளிட்ட தமிழர்கள் அடிகளார் மலேசியாவில் பணிபுரியவேண்டும் என்ற விருப்பினர் ஆயினர். அவ்விருப்பத்தின்படி அடிகளார் 1961 முதல் 1969 வரை இந்தியவியல் துறையில் பணிபுரிந்து இந்தியவியல் துறையைத் தமிழியல் துறையாக மாற்றினார். அடிகளாருக்குப் பின்புலமாக இருந்து இந்தியவியல் துறை வளரக் காரணமாக சாரங்கபாணியார் விளங்கினர்.
இந்தியவியல் துறையில் வடமொழிக்கு முதன்மை தரவேண்டும் என்ற இந்திய அறிஞரின் பரிந்துரை சாரங்கபாணி அவர்களின் தலைமையில் செயலிழந்தது. அடிகளார் பின்புலமாக இருந்து தமிழுக்கு அங்கு முதன்மை கிடைக்க ஆவன செய்தார். மிகப்பெரிய நூலகம் உருவாக்கப்பட்டது. பிறதுறைப் பேராசிரியர்களைக் கொண்டு திருக்குறள் சீன மொழியிலும் மலாய் மொழியிலும் மொழிபெயர்க்க அடிகளார் காரணராக விளங்கினார். பிற துறை மாணவர்கள் தமிழ் மொழியைப் படிக்க அடிகளார் வழியேற்படுத்தினார்.
1964 இல் தில்லியில் நடந்த கீழைத் தேய அறிஞர்களின் உலக மாநாட்டிற்கு உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்கள் வந்திருந்தனர். நீண்ட நாட்களாகத் தமிழாராய்ச்சியை உலக அளவில் நடத்தவேண்டும் தமிழறிஞர்களைத், தமிழறிஞர்களின் பணிகளை ஒருமுகப்படுத்தவேண்டும் என எண்ணியிருந்த அடிகளார் இம்மாநாட்டை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தார். 07.01.1964 இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
தனிநாயகம் அடிகளார், வ.அய்.சுப்பிரமணியன் ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட அறிக்கைவழி அறிஞர்கள் ஒன்றிணைந்தனர். அம்மன்றம் தமிழாராய்ச்சிக்கு மாநாடு நடத்தும் கொள்கை கொண்டது. அதன் அடிப்படையில் தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியால் உலகத் தமிழ் மாநாடு மலேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் 1966 ஏப்பிரல்17 முதல் 23 வரை மிகச் சிறப்பாக நடந்தது. 132 பேராளர்கள், 40 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். 146
கட்டுரைகள் படிக்கப்பட்டன. அதன் பின்னர் 1968 இல் சென்னையிலும், 1970 இல் பிரான்சு தலைநகர் பாரிசிலும், நான்காம் மாநாடு இலங்கையில் 1974 (சனவரி3-9) ஆம் ஆண்டிலும் நடந்தன.
இலங்கை மாநாடு மிகப் பெரிய கலவரத்தில் முடிந்தது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் சிங்களர்களும் தமிழர்கள் சிலரும் இத் தீச்செயல்களில்
ஈடுபட்டனர்.
உலகெங்கும் சென்று தமிழ் பரப்பிய அடிகளாரின் இறுதிப் பத்தாண்டு வாழ்க்கை இலங்கையில் அமைந்தது. இலங்கையில் இருந்தாலும் அயல்நாடுகளுக்கு இடையில் சென்று தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வந்தார்.
அடிகளாரின் ஆய்வுரைகளின் தொகுப்பாகத் தமிழ்த்தூது நூலும், உலகப்பணங்களின் பட்டறிவு, தமிழ்ச்சிறப்பு விளக்கும் வகையில் "ஒன்றே உலகம்" நூலும் விளங்குகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய உரை திருவள்ளுவர் என்னும் பெயரில் நூலாகியுள்ளது.
அடிகளாரின் செயல்பாடுகள் ஆரவாரத்தன்மையுடையது எனவும் இவர் கூட்டிய மாநாடுகளால் தமிழுக்கு ஆக்கமில்லை எனவும் பாவாணர் குறிப்பிடுவது உண்டு.
உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களை ஒன்று திரட்டித் தமிழ்த் தொடர்பாக இதுவரை நடந்துள்ள ஆய்வுகளை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள பெரும்பங்காற்றியது உலகத் தமிழ் மாநாடுகள் எனில் மிகையன்று. தமிழாய்வுகள் உலகத் தரத்தை எட்ட இம்மாநாடுகள் வழிகோலின.
தமிழகத்துடன் அயல்நாட்டு அறிஞர்கள் தொடர்புகொள்ளவும் அயல்நாட்டு அறிஞர்களின் ஆய்வைத் தமிழர்கள் அறியவும் இம்மாநாடுகள் பெருந்துணைபுரிந்தன. இவ்வகையில் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளில் மதுரையில் நடந்த மாநாடு குறிப்பிடத்தகுந்தது. தமிழ்ப்பல்கைலக்கழகம் உருவாவதற்கு இம்மாநாடு வாய்ப்பாக அமைந்தது. தமிழக அந்நாள் முதல்வர் ம.கோ.இரா.அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை அறிவித்தது அம் மாநாட்டிலேயாகும். மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் இறுதிப் பேருரை அந்த மாநாட்டுடன் நிறைவுற்றதும் இங்கு எண்ணிப்பார்க்கவேண்டிய செய்தியேயாகும்.
மதுரை மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து அறிஞர்கள் வந்து குழுமியவண்ணம் இருந்தனர். தங்கள் ஆய்வுரைகள் வழியாகப் புதிய தமிழ் எழுச்சிக்கு வித்திட வந்தவர்களுக்கு முதல் நிகழ்வாக அமைந்தது தனிநாயக அடிகளாருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வாகும். உலகத் தமிழ் மாநாட்டுக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார் இல்லாமல் அம்மாநாடு நடைபெறுவதாக அமைந்துவிட்டது. ஆம். தமிழை உலகம் முழுவதும் பரவச் செய்த தனிநாயகம் அடிகளார் தமிழன்னையின் திருவடிகளில் மீளாத்துயில்கொண்டது 01.09.1981.
தனிநாயகம் அடிகளார் நினைவாகத் திருச்சிராப்பள்ளியில் அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர்கள் இதழியில் கல்லூரி ஒன்று நடத்தி வருகின்றமையும் அவர்தம் புகழை நிலைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
நனி நன்றி :
தமிழ் ஓசை நாளேடு, களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள்,10, 30.11.2008.
தவத்திரு அமுதன் அடிகள், தனிநாயகம் அடிகளார், உ.த.நி.வெளியீடு
முனைவர் பொற்கோ அவர்கள்
பிரஞ்சு நிறுவன நூலகம்(IFP),புதுச்சேரி
2 கருத்துகள்:
இளங்கோவன்,
இதை முன்னமே சொல்ல நினைத்து மறந்தேன். தாமதமாகப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்க.
கட்டுரை அருமை. மிகப் பயனுள்ளது. எனக்குப் பல இனிய நினைவுகளைத் தூண்டுவது.
நான் தனிநாயகம் அடிகளாரின் மாணவன். 1968இல் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நான் இளங்கலைப் பட்டம் வாங்கியது அவரிடமே. எனக்கு external examiner ஆக பேராசிரியர் மு.வ.இருந்ததும் நான் பெருமையோடு எண்ணிப் பார்க்கும் ஒன்று. இந்த இரண்டு பேரும் என் விடைத்தாள்களைப் பரிசீலித்து எனக்கு முதல் வகுப்புப் பட்டம் கொடுத்தார்கள். அடிகளாரின் துறைத் தலைமைத்துவம் முழுவதிலும் அவர் கொடுத்த ஒரே முதல் வகுப்புப் பட்டம் எனக்குத்தான். பெருமைக்காகச் சொல்லவில்லை. அருமைக்காகச் சொன்னேன்.
முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்கும்போது நான் அங்கே மாணவன். மாநாட்டுக் கட்டுரைகள் பெரும்பாலானவற்றுக்குச் சுருக்கம் எழுதி அவற்றை மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க நான் காரணமாக இருந்தேன். அடிகளாரின் பாராட்டையும் பெற்றேன்.
அடிகளார் பல ஆண்டுகள் இந்திய இயல் துறைக்கு மட்டுமல்லாது கலை, சமூகவியல் பிரிவுக்கு டீனாக இருந்தும் வழி நடத்தினார். அப்பழுக்கில்லாத ஆங்கிலம் பேசுவார். நெடிய தோற்றம். எப்போதும் கோட்டுடனும் பாதிரியாருக்கான வட்டக் காலருடனும் இருப்பார். கம்பீரமான நடை. எங்கள் பல்கலைக் கழகத்தின் அலுவலர் (பல இனத்தினர்) அனைவரும் அவரை மிகவும் மதித்தார்கள்.
அடிகளாரின் சமகாலத்தவராக கணிதப் பேராசிரியர் எலீசர் (தமிழர்; தமிழாராய்ச்சி மாநாட்டில் "சுழியம்" பற்றி ஒரு கட்டுரை படைத்தார்) மற்றும் வரலாற்றுப் பேராசிரியர் அரசரத்தினம் ஆகியோர் இருந்தனர். அரசரத்தினம் தமிழ்நாட்டு வரலாற்று வல்லுநர். பின்னர் ஆஸ்த்திரேலியாவில் (ANU) பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அடிகளாரின் சமகாலத்தவரான இன்னொரு வரலாற்றுப் பேராசிரியர் வாங் கங் வூ (சீனர்). இவர் பின்னாளில் ஹோங் கோங் சீனப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார் என்று கேள்வி.
மிக உன்னதமான அறிஞர்கள் கோலோச்சிய காலம் அது.
மறக்க முடியாது.
ரெ.கா.
அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்கு
வணக்கம்.
கட்டுரை பற்றி கருத்துரைத்தமைக்கும்,
பழைய வரலாற்றை நினைவுகூர்ந்தமைக்கும் நன்றியன்.
தொடர்ந்து கருத்துரை வழங்கி என்
முயற்சியை ஊக்கப்படுத்துங்கள்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
கருத்துரையிடுக