வீ.மா.பெரியசாமி, சிவாப் பிள்ளை, மு.இளங்கோவன்
தமிழ்த்தட்டச்சு(99 விசைப்பலகை) பற்றி விளக்குதல்
சென்னையில் (13,14-12.2008) நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் இரண்டு நாள்களும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
முதல்நாள்(13.12.08) காலை புறப்பட்டு ஒன்பது மணிக்குச் சென்னை இராயல் மெரிடியன் உணவகத்திற்குச் சென்றேன். திரு.சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் முதலில் கண்ணில் தெரிந்தார். நண்பர் திரு.கோவலன் அவர்களும் உடன் இருந்தார். இருவரும் அளவளாவினோம். பாதுகாப்புக் காரணமாக அனைவரும் ஆய்வுக்குப் பிறகே உணவகத்தின் உள்ளே சென்றோம். பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் மலேசியாவிலிருந்து வந்திருந்தார். சிங்கப்பூர், மலேசியாவைச் சார்ந்த பேராளர்கள் பலரும் வந்திருந்தனர். திரு.இராசிக்கண்ணு, முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், பேராசிரியர் இராசேந்திரன், திரு.சோதிநாதன், திரு. கிருட்டிணன்,திரு.சாமிக்கண்ணு,திரு.சகாதேவன் உள்ளிட்ட அயல்நாட்டுப் பேராளர்களுடன் உரையாடி மகிழ்ந்தேன்.
திட்டமிட்டபடி காலை 10.35 மணிக்குக் காலை நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்புவிருந்தினர்களாக வர இசைவு தெரிவித்திருந்த அமைச்சர் பெருமக்கள் இருவரும் பெரு வெள்ளப்பாழினைப் பார்வையிடும் பணி காரணமாக வர இயலவில்லை. பேராசிரியர் இரா.இளவரசு, பெருங்கவிக்கோ உள்ளிட்ட அறிஞர்கள் உரையாற்றினர்.
பிற்பகல் முதல் அமர்வுகள் தொடர்ந்து நடந்தன. நான் ஒரிசாவிலிருந்து புதுச்சேரி வந்திருந்த திரு. பாலசுப்பிரமணியன் அவர்களைக் காணவேண்டிய காரணத்தால் பிற்பகல் 3. 30 மணிக்குப் புதுச்சேரிக்குப் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வந்தேன்.
இரவு 8.30 மணி முதல் திரு. பாலசுப்பிரமணியன், அ.சுகுமாரன் உள்ளிட்ட இருவருடன் தமிழக வரலாற்றுக்கு உரிய ஆய்வுத் தரவுகள் இந்தியா முழுவதும் உள்ளமை பற்றி நெடுநாழிகை உரையாடினோம். இரவு அவர்களிடம் விடைபெற்று 11 மணியளவில் வீட்டுக்கு வந்து இணையப் பணிகளை முடித்துப் படுக்கும்பொழுது நடு இரவு கடந்தது.
14.12.08 வைகறை எழுந்து மீண்டும் சென்னைச் செலவு...
காலை பத்து மணியளவில் மாநாட்டு அரங்கை அடைந்தேன். காலை பதினொரு மணியளவில் எங்கள் அமர்வு தொடங்கியது.பேராசிரியர் திரு.சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். திருவாட்டி இராச.முத்துலட்சுமி அவர்கள் (சிங்கப்பூர்) முதலில் கட்டுரை படித்தார். அடுத்து என் முறை.
11.35 மணியளவில் தொடங்கி 12.35 மணியளவில் என் ஆய்வுரை காட்சிவிளக்கமாக அமைந்தது. "ஆசிரியர்கள், மாணவர்கள் அறியவேண்டிய மின்னஞ்சல், வலைப்பதிவுகள்" என்னும் தலைப்பில் என் பேச்சை அமைத்துக்கொண்டேன். தமிழ் இணையத்தின் சிறப்பு, தமிழர்கள் இணையம் பற்றி அறியாமல் உள்ள நிலை, தமிழகம் முழுவதும் பயிலரங்கம் நடத்தும் என் முயற்சி பற்றி முன்னுரையாகப் பேசினேன்.
மடிக்கணிப்பொறி என்னிடம் இருந்தது. இயங்கு மோடம் இருந்தது. அதனைப் பயன்படுத்தி இணைய இணைப்பைப் பெற்றேன்.(அகண்ட அலைவரிசை இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்). மேலும் "பவர் பாயிண்ட்" வழியாகவும் செய்திகள் விளக்குவதற்கு வசதியாக ஆயத்தமாக இருந்தேன்.
நண்பர் திரு.கோவலன் அவர்கள் என் கட்டுரை படைப்புக்கு உதவியாகக் கணிப்பொறியை இயக்கி மேடையில் காட்சிகள் விரிய உதவினார். சிவப்பிள்ளை ஐயாவும் இடையில் உதவினார்.
மின்னஞ்சல் தேவை, சிறப்பு பற்றி முதலில் எடுத்துரைத்தேன். மின்னஞ்சல் கணக்கு தொடங்குவதற்குரிய படிவம் நிரப்புதல், கமுக்கக்குறியீடு பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். கூகுள் நிறுவனத்தில் கணக்குத் தொடங்கும் செயல்விளக்கம் காட்டினோம். நேரச்சுருக்கம் கருதி
என் பக்கத்தை விரித்து, மின்னஞ்சல் அனுப்புவது, உரையாடுவது, படம் இணைத்தல், கோப்பு இணைத்தல் பற்றியெல்லாம் பேசினேன்.
கூகுள் முகவரியைப் பயன்படுத்தி வலைப்பூ உருவாக்கம், வலைப்பூவின் சிறப்பு, மாணவர்கள், ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்தித் தங்கள் படைப்புகளை உலகிற்கு
செலவின்றி வெளிப்படுத்தும் முறை பற்றி எடுத்துரைத்தேன்.
தமிழில் ஒருங்குகுறி கண்டுபிடித்த முகுந்து அவர்களின் எ.கலப்பை, ஒருங்குகுறி பற்றி எடுத்துரைத்தேன்.
தமிழ் மரபு அறக்கட்டளை அதன் நிறுவுநர் கண்ணன்(கொரியா) பற்றியும் அவைக்கு நினைவூட்டினேன்.
உலகில் ஒவ்வொருவரும் எழுதும் வலைப்பதிவுகளைத் திரட்டும் திரட்டியான தமிழ்மணம், அதனை உருவாக்கிய காசி ஆறுமுகம் பற்றியும் அதனை இன்று பாதுகாத்து வளர்த்துவரும் தமிழ்மணம் குழுவினர் பற்றியும்(திருவாளர்கள் நா.கணேசன், தமிழ்சசி, சங்கரபாண்டி, சௌந்தர் உள்ளிட்ட தோழர்கள்) விரிவாகக் காட்சி விளக்கத்துடன் பேசினேன். தமிழ்மணம் 4020 பதிவர்களின் தகவல்களைத் திரட்டிக் காட்டுவதை இணையம்வழி எடுத்துக்காட்டியதும் அரங்கில் இருந்தவர்கள் மகிழ்ந்தனர்.
தமிழில் தட்டச்சிடும் முறை பற்றியும் எடுத்துரைத்துக் காட்சியுடன் விளக்கினேன்.
மாநாட்டின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக என் உரையும் செயல்விளக்கமும் இருந்ததைத் தமிழகம் முழுவதிலுருந்தும் வந்திருந்த ஆசிரியர்கள் என்னிடம் நெருங்கிப் பேசியதிலிருந்து உணர்ந்துகொண்டேன். அனைவருக்கும் பயன்படும்படி என் முகவரி, மின்னஞ்சல் தொலைபேசி எண் திரையில் காட்டப்பட்டதும் அனைவரும் குறித்துக்கொண்டனர்.
மேலும் மாநாட்டு மலரிலும் என்னைத் தொடர்புகொள்ளும் விவரம் அளிக்கப்பட்டுள்ளதால் பலர் என்னைத் தொடர்புகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிய வாய்ப்பு உள்ளது. அனைவரிடமும் விடைபெற்று இரவு புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.
3 கருத்துகள்:
நேரில் கண்ட உணர்வை உணர்த்தியுள்ளீர்கள் அய்யா!.
தங்கள் தமிழ்ப் பணி மேலும் சிறக்கட்டும்
அன்பின் இளங்கோவன் தங்கள் பணி மிகவும் நன்று. தமிழ் உலகம் முழுமைக்கும் இணையத்தமிழ் பயன்பாடு சேரவேண்டும்
வளர்க உங்கள் பணி.
வணக்கம் அய்யா!
தங்களின் பார்வைக்கு இந்த முகவரியை வைக்கிறேன்....
இது என் கண்களுக்கு எதேர்ச்சையாக பட்டது.....
இதில் உள்ள கருத்துரையை படிக்கவும்...
http://thatstamil.oneindia.in/news/2008/12/13/tn-world-tamil-teachers-conference-in-chennai.html
கருத்துரையிடுக