நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 15 டிசம்பர், 2008

தாமசு லேமான்(செர்மனி)


முனைவர் தாமசு லேமான்

தமிழ்மொழி வளர்ச்சியில் செர்மனி நாட்டிற்கும் பங்கு உண்டு. செர்மனியில் கலோன் பல்கலைக்கழகம், கைடல்பெர்க்குப் பல்கலைக்கழகம் என்னும் இரண்டு பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சிப் பிரிவு சிறப்புடன் இயங்குகின்றது (ஏறத்தாழ 12 பல்கலைக்கழகங்களில் சமற்கிருத ஆய்விருக்கைகள் உள்ளதையும் கவனத்திற்கொள்க).

கைடல்பெர்க்குப் பல்கலைக்கழகத்தில் முனைவர் அ.தாமோதரன் அவர்கள் (காட்டு மன்னார் கோயில் அருகில் உள்ள திருமூலத்தானம் ஊரினர்) தமிழ்ப் பேராசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை அந்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவித்த பெருமைக்கு உரியவர்.அவரிடம் பயின்றவர்களில் ஒருவர் தாமசு லேமான் அவர்கள் ஆவார்.

தாமசு லேமான் அவர்கள் தமிழில் எழுத, பேச, படிக்க நன்கு அறிந்தவர். முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் ஆய்வுகளில் ஈடுபட்டு அரிய நூல்களை வழங்கியுள்ளார். இவர் நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அமைந்துள்ளன. ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தை ஆய்வு நோக்கில் பதிப்பிக்கும் பெருந்திட்டத்தில் செயல்பட்டு வருகிறார். இவர்தம் தமிழ் வாழ்வை இங்கு எண்ணிப் பார்ப்போம்.

தாமசு லேமான்(Thomas Lehmann) அவர்கள் செர்மனியில் உள்ள கைசசுலவ்டன் (Kaiserslautern) என்னும் ஊரில் பிறந்தவர் (27.06.1954). முதுகலையில் ஆங்கில மொழி, மொழியியல், ஆங்கில இலக்கியத்தைப் பாடமாகப் பயின்றவர் (1975-80). பிறகு கைடல்பர்க்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தென்னாசிய நிறுவனத்தில் புதிய இந்திய மொழிகள் என்ற அடிப்படையில் தமிழ் இலக்கியம், மொழி பற்றி பயின்றார். இந்தியச் செவ்வியல் மொழி என்ற அடிப்படையில் சமற்கிருதம் பயின்றவர்.

புதுச்சேரியில் அமைந்திருந்த பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத்தில் (தலைமையகம் திருவனந்தபுரத்தில் இருப்பது) 1983 இல் முறையாகத் தமிழ் படிக்கவும் ஆராயவும் வருகை தந்தார். திராவிட மொழியியற் கழகம் இவர் கல்விக்கு நிதி நல்கியது. பேராசிரியர் சண்முகம் பிள்ளை அவர்கள் இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். அவரிடம் தமிழ் பயின்ற பெருமைக்கு உரியவர். தாமசு லேமான் அவர்கள் தற்காலத் தமிழ் இலக்கணம் குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.

இக்கால இலக்கியமாக கருதப்படும் புதினம், உரைநடை, சிறுகதை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தமிழ்மொழியின் அமைப்பு இருபதாம் நூற்றாண்டில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆங்கிலத்தில் எழுதி வெளிப்படுத்தினார். செயகாந்தன், கி.இராசநாராயணன், கு.அழகிரிசாமி தி.சானகிராமன் உள்ளிட்ட முன்னணிப் படைப்பாளிகளின் படைப்புகளை ஆராய்ந்து தமிழ் மொழிப் பயன்பாட்டை வெளியுலகிற்கு வெளிப்படுத்தினார். இந்த ஆய்வு கட்டுரைகளாகவும் தனி நூலாகவும் வெளிவந்துள்ளன. இக்காலகட்டத்தில் இவர் ஆய்வு செய்த நிறுவனம் புதுவை மொழியியல் ஆராய்ச்சி நிறுவனமாக மலர்ந்தது.


தற்காலத் தமிழ் இலக்கணம்

இதனிடையே 1982 இல் தாமசு லேமான் அவர்கள் சீலாராணி என்னும் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தமிழக உறவினரானார். இவர்களுக்கு இரண்டு மழலைச் செல்வங்கள் .இசுடீபன் செல்வன், பிரான்சிசு ஆனந்து என்னும் அக்குழந்தைகள் வளர்ந்து இப்பொழுது செர்மனி நாட்டில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

தாமசு லேமான் அவர்கள் கைடல் பர்க்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தென்னாசிய நிறுவனத்தில் பழந்தமிழ் இலக்கணம் (A Grammar of Old Tamil) என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் 1992 இல் பெற்றார். அந்த ஆண்டிலேயே தென்னாசிய நிறுவனத்தின் இந்தியச் செம்மொழி நிறுவனத்தில் (சமற்கிருதம்) துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தார்.

2000 ஆண்டில் பேராசிரியர் அ.தாமோதரன் அவர்கள் பணி ஓய்வு பெற்றதும் அத்துறையில் தமிழ் விரிவுரையாளராக இணைந்தார். 2008 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரஞ்சு நிறுவனத்தில் (EFEO) ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

தமிழ்மொழி,இலக்கியம் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை வரைந்துள்ள தாமசு லேமான் அவர்கள் தற்காலத் தமிழிலும் சங்க இலக்கியத்திலும் ஆழங்கால்பட்ட புலமையுடையவர். இவர் தாமசு மால்டன் அவர்களுடன் இணைந்து உருவாக்கிய சங்க இலக்கியச் சொல்லடைவு((A Word Index of Old Tamil Cankam Literature) என்னும் நூல் தமிழ் ஆய்வாளர்களுக்குக் குறிப்பாகச் சங்க இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கைவிளக்காகும். இந்த நூலின் முதற்பதிப்பு செர்மனி நாட்டில் வெளிவந்தது. அது தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாதபடி விலை சற்று மிகுதியாக இருந்தது. அதன் இந்தியப் பதிப்பு வெளிவந்தால் அனைவருக்கும்பயன்படும் என நினைத்து இந்தியாவிலும் அந்நூல் பதிப்பிக்கப்பட்டது.


சங்க இலக்கியச் சொல்லடைவு(நூல் முகப்பு)

1993 இல் ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த இந்த அரிய சொல்லடைவில் ஏறத்தாழ சங்க இலக்கியத்தில் உள்ள இரண்டு இலக்கம் சொற்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஏறத்தாழ இருபதாயிரம் சொற்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. செர்மனியில் கணிப்பொறி வழியாகச் சங்க இலக்கியச் சொற்கள் உள்ளிடப்பெற்று உருவாக்கப் பெற்ற இச்சங்க இலக்கியச் சொல்லடைவு இன்னும் காலத்திற்கேற்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்புடன் வெளிவரவேண்டும்.

இந்தச் சொல்லடைவு இன்னும் பல சொல்லடைவு நூல்கள் வெளிவர முன்னோடிச் சொல்லடைவு நூலாக உள்ளது. இது போன்ற அகராதிகள் தேவை என்பதை லேமான் அவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்.அதனை முன்மாதிரியாக கொண்டு வேறுபல சொல்லடைவுகள் சங்க இலக்கியத்திற்கு வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயத்தேவையாகும். சங்க இலக்கிங்கள் அனைத்துக்குமாக முழுமையாக வெளிவந்த இந்த சொல்லடைவு பழந்தமிழ் இலக்கணத்தை வரைய பெரும் பயன்தருவதாகும்.

அயல்நாட்டு அறிஞர்கள் பலரும் சங்க இலக்கியத்திற்குப் பாடவேறுபாடகளுன் அமைந்த செம்பதிப்புகளை வெளியிடுவதில் அண்மைக் காலமாக கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் ஈவா வில்டன் என்னும் பிரஞ்சு நாட்டு அறிஞர் நற்றிணையை அண்மையில் பதிப்பித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தாமசு லேமான் ஐங்குறுநூற்று ஆய்வுப் பதிப்பினை வெளிக்கொணரக் கடுமையாக உழைத்துவருகிறார். சிலவாண்டுகள் ஒரே தலைப்பில் தோய்ந்து ஆய்ந்து வெளிப்படுத்துவதால் இவர்களின் ஆய்வுகள் உலகத் தரத்தினவாக உள்ளன.

தாமசு லேமான் ஐங்குறுநூற்றை ஆய்வுப்பதிப்பாக வெளியிட இதுவரை வெளிவந்துள்ள அனைத்துப் பதிப்புகளையும் பார்வையிடுகிறார். அவ்வகையில் 1903 இல் வெளிவந்த உ.வே.சாவின் முதல் பதிப்பு முதல் இதுவரை வெளி வந்த எட்டுப் பதிப்புகளையும் ஒப்புநோக்கிப் பார்வையிட்டுப் பாட வேறுபாடுகளை அறிகிறார். கூற்று விளக்கப் பொருத்தப் பாட்டை ஆராய்கிறார். மேலும் தாளில் எழுதி வைத்துள்ள நான்கு மூலப் படிகளையும் இரண்டு பனை ஓலைப் படிகளையும் பார்வையிடுகிறார். இதற்கென இவர் பல பல்கலைக்கழக, கல்லூரி, திருமட நூலகங்களைப் பார்வையிட்டுத் தம் ஆய்வைச் செப்பப்படுத்துகிறார். தாமசு லேமான் அவர்களின் ஐங்குறுநூற்றுப் பதிப்பு வெளிவந்தால் சங்க நூல் ஒன்றிற்கு முழுமையான ஆய்வுப் பதிப்பு வந்துவிட்டது என்ற மன நிறைவைப் பெறலாம்.

புத்திலக்கிய மொழிநடையிலும் சங்க இலக்கிய மொழிநடையிலும் இலக்கணத்திலும் பெரும் புலமை பெற்றுள்ள தாமசு லேமான் அவர்கள் தமிழ் இலக்கியம் இலக்கணம் ஆகியவறைத் தரமாகப் பதிப்பிப்பது போல் தமிழ் நூல்களைச் செர்மன், ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகப் பரவலுக்குத் துணைநிற்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.


தாமசு லேமானின் நூல்

நனி நன்றி:

தமிழ் ஓசை- களஞ்சியம், சென்னை, அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 12,
14.12.2008.
முனைவர் அ. தாமோதரன்(திருமூலத்தானம்)
முனைவர் பொற்கோ
பிரஞ்சு நிறுவன நூலகம்(IFP), புதுச்சேரி
பிரஞ்சு ஆய்வு நிறுவனம்(EFEO), புதுச்சேரி

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம் அய்யா,
தமிழ்நாட்டிலே கூட இத்தகைய ஆய்வுகள் குறைந்து வருகின்ற போது, அயலகத்தவர்களின் பணி பிரமிக்க வைக்கின்றது. இவர்களின் பெயர்கள், நிறுவனம் அல்லது பல்கலையின் பெயர்களை ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் இட்டால் நலம் பயக்கும். கூடுதலாக இணையதள இணைப்புக்களையும் அளித்தல் சிறப்பு. பரிசீலிக்கவும். நன்றி

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

தாமசு லோமான் குறித்த தங்களின் இடுகை சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்! வாழ்த்துகள்!
அன்புடன்
தேவமைந்தன்