நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

அலெக்சாண்டர் மிகையுலுவிச் துபியான்சுகி


அறிஞர் அலெக்சாண்டர் துபியான்சுகி

  சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு முன் யான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நிறுவனத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் அந்நாளைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அடுக்குமொழியில் அழகிய தமிழில் பேசினார்கள். தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களும் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். இவ்விருவர் பேச்சசையும் அறிஞர்கள் கேட்டு மகிழ்ந்தனர். நிறைவில் சிவப்பு நிறத் தோற்றமுடைய ஒரு மேல்நாட்டு அறிஞர் சிறப்புரையாகப் பேச எழுந்தார். இவர் ஆங்கிலத்தில் பேசுவாரா? இவருக்குத் தமிழ் தெரியுமா? என அவையினர் ஆர்வமுடன் அவர் எப்படிப் பேசுவார் என உற்று நோக்கிய வண்ணம் இருந்தனர்.

தூயதமிழில் உரையாற்ற நினைத்த அந்த மேல்நாட்டு அறிஞர் கலைஞர் அவர்கள் பேசிய தமிழ்ப் பேச்சிலும் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் பேசிய தமிழ்ப் பேச்சிலும் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளதை எடுத்துச் சொல்லித் தூய தமிழில் பேசும்படி அனைவரையும் வேண்டியதும் கலைஞர் உள்ளிட்ட அனைவரும் ஆர்ப்பரித்துக் கைதட்டி மகிழ்ந்தனர்.

பிறமொழிச்சொற்கள் கலவாமல் தூயதமிழில் உரையாற்றிய அந்த அறிஞர் அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்கள் ஆவார். உருசியநாட்டைச் சார்ந்தவர். மாசுகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆப்பிரிக்கவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ் இலக்கியங்கள் பல உருசியமொழியில் மொழிபெயர்ப்பாவதற்குக் காரணமாக இருந்தவர். உருசிய மாணவர்கள் பலருக்குத் தமிழ்மொழியையும் இலக்கியங்களையும் கற்பித்தவர். அதுபோல் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆங்கிலத்திலும் உருசிய மொழியிலும் பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். தமிழைப் பேசவும் எழுதவும் படிக்கவும் நன்கு அறிந்த அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்களைப் பற்றி இங்கு எண்ணிப் பார்ப்போம்.

உருசிய நாட்டின் மாசுகோவில் 1941 இல் பிறந்தவர் துபியான்சுகி அவர்கள். இவரின் பெற்றோர் பெயர் மிகையல், கெலன் ஆவர். துபியான்சுகி 1965 இல் மாசுகோ பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குச் சேர்ந்தார். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்தார்.

1950 முதல் 1990 வரை இந்தியாவிற்கும் உருசியாவிற்கும் இடையில் மிகச் சிறந்த உறவு இருந்தது. உருசியாவில் தமிழ்நூல்கள் பல பதிப்பிக்கப்பட்டன. தமிழ் வானொலி செயல்பட்டது. தமிழர்கள் பலர் தமிழ் நூல்கள் பதிப்பித்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு உருசியா சென்றனர். அவர்கள் உருசியர் பலருக்குத் தமிழ் சொல்லித் தந்தனர். உருசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் மேல்படிப்புக்கு இந்தியாவிற்கு (தமிழகத்திற்கு) வந்தனர். உருசியத் தமிழ் வானொலியில் மணிவர்மன், பூர்ணம் சோமசுந்தரம் ஆகியோர் தமிழ் அறிவிப்பாளர்களாகப் பணிபுரிந்தனர்.

உருசியா நாட்டுச் செய்திகளைத் தமிழில் அறிவிப்புச் செய்வது இவர்களின் பணி. இவர்கள் வழியாகவும் துபியான்சுகி தமிழ் கற்றார். பல்கலைக் கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ் படித்தார்.

1973 இல் மாசுகோ பல்கலைக்கழகத்தில் துபியான்சுகி பேராசிரியர் பணியில் இணைந்தார். துபியான்சுகி அவர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட உருசியர்கள் தமிழ் கற்றுள்ளனர். முதுகலைத் தரத்தில் உள்ள மாணவர்கள் தமிழ் கற்க இவரிடம் வருவர். தமிழ் கற்ற பிறகு இவர்கள் வானொலியின் தமிழ்ப்பிரிவில் பணிபுரிவர். உருசியர்கள் தமிழை எழுதுவார்கள். படிப்பார்கள். பேசத் தயங்குவார்கள். எனவே இவர் பேசக் கற்றுத் தருவதில்லை.

தமிழ் படித்த உருசியர்கள் பலர் தங்கள் பெயரைத் தமிழ்ப்படுத்தி அழைத்ததும் உண்டு. அவ்வகையில் குளோசப் என்பவர் கண்ணன் எனவும், பெத்திகோசுகி என்பவர் ஐங்குன்றன் எனவும் ருதின் என்பவர் செம்பியன் எனவும் துபியான்சுகி அலெக்சந்திரன் எனவும் விக்டர் மினின் என்பவர் மீனவன் எனவும் பெயர் மாற்றிக்கொண்டவர்கள். திருமதி கத்தியானா என்பவர் வானொலி அறிவிப்பாளராக இருந்து தமிழை நன்கு பேசுவார்.

உருசிய வானொலி என்பது அயல்நாட்டு மக்களுக்கான ஒலிபரப்பாகத் திகழ்ந்தது. உருசியாவில் கேட்பதில் தொழில் நுட்பச் சிக்கல் இருந்தது. ஆனால் இந்தியாவில் கேட்க முடியும். உள்நாட்டுச் செய்திகள், சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகியுள்ளன. தமிழ் வானொலிப் பிரிவு வெள்ளிவிழா கண்ட சிறப்பிற்கு உரியது. இந்தி, உருது, வங்காளி மொழிகளில் உருசியாவில் இன்றும் ஒலிபரப்பு உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகள் முன்பு ஒலிபரப்பில் பயன்படுத்தப்பட்டன. உருசிய நாடு சிதைந்த பிறகு இம்மொழி ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டன. தமிழில் ஒலிபரப்புத் தடைப்பட்டதற்குக் காரணம் நிதி இல்லை என்கின்றனர். முன்பு உருசியாவுக்குச் சென்று படிக்க நிதியுதவி கிடைத்தது. இன்று பணம் கட்டிதான் நாம் படிக்கமுடியும்.

துபியான்சுகி அவர்கள் மிகச்சிறந்த தமிழறிவு, ஆங்கில அறிவு, உருசிய மொழியறிவு பெற்றிருந்தாலும் பொருளாதாரச் சூழலில் அவர் பல இடங்களில் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளார். அந்த அளவு பணம் அங்குப் பெரிய தேவையாக உள்ளது. உருசியாவைப் பொறுத்தவரை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குச் சம்பளம் மிகக் குறைவாகும். துபியான்சுகி அவர்கள் நன்கு இசையறிந்தவர். சில காலம் இராணுவத்தில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

அசெல்சாண்டர் துபியான்சுகி அவர்களின் மனைவி பெயர் நத்தாலியா என்பதாகும். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. அவர் பெயர் தான்யா. இவர்களைச் சந்திக்கவே எனக்கு நேரம் கிடைக்காது. அனைவரும் வேறு வேறு நேரங்களில் வெளியே செல்வதும் வீட்டுக்கு வருவதுமாக இருப்போம். ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசும் வாய்ப்பு வாரக் கணக்கில்தான் அமையும். அப்படி இருக்க  இவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முடிவில்லை என்பார்.

என் மனைவிக்கு இசை தெரியும். பல்கலைக்கழகத்தில் மகள் இந்தி படித்தாள். இந்தி மட்டும் படிக்கப் பல்கலைக்கழகத்தில் வசதி இருப்பதால் இந்தி படித்தாள் என்றார். தமிழகத்திற்கு முதன்முதல் 1979 இல் வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இலக்கியம் படித்தவர். பேராசிரியர் சஞ்சீவி அவர்களிடத்தில் தொடக்கத்தில் தமிழ் கற்றவர். புறநானூறு அவரிடம் படித்தவர். தத்துவம், அரசியல் பற்றியெல்லாம் அவரிடம் தெரிந்து கொண்டவர்.

இவரின் மாணவி ஒருவர் முக்கூடற்பள்ளு பற்றி அவரிடம் திட்டப்பணி மேற்கொண்டிருந்தார். முக்கூடற்பள்ளு உருசியமொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் நிதி வாய்ப்பு இல்லாததால் வெளிவரவில்லை. பின்னர் முனைவர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களைத் துபியான்சுகி கற்றவர். (அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முனைவர் பொற்கோ அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழக ஆளவை தனி ஆணை வழங்கியது).

துபியான்சுகி அவர்கள் தமிழிலுள்ள அகத்துறைப் பாடல்களைப் பற்றி ஆய்வு செய்தவர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளார். சில பயணங்களின்பொழுது தன் மாணவிகளையும் தமிழகத்திற்கு அழைத்துவந்து தமிழ் மொழி, இனம் பற்றி அறிய வைத்தார்.

தமிழ் இலக்கியம் ஒரு பார்வை, பனை ஓலையில் பாடல்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் சடங்குகளும் தொல்புனைகதைகளும் (Ritual and Mythological Sources of the Early Tamil Poetry) முதலிய நூல்களை இவர் உருசிய மொழியில் வெளியிட்டுள்ளார். பத்துப்பாட்டு, தமிழின் அகப்பொருள் பாடல்களின் அமைப்பு, பத்தினி வழிபாடு, சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம், உலக இலக்கியங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம், பாரதியின் தேசபக்திப் பாடல்கள் என்னும் தலைப்புகளில் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார். சிலப்பதிகாரக் கதையும் அமைப்பும், குறிஞ்சிப்பாட்டு, சங்க நெய்தல் பாடல்கள், பழந்தமிழில் காஞ்சி, செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் நொச்சி, உழிஞைச் செய்திகள் முதலியவை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை தீட்டியுள்ளதாக மலையமான் எழுதியுள்ளார்.

உலகின் பழைமையான மொழிகளுள் தமிழ் முதன்மையானது என்னும் நம்பிக்கையுடையவர். எட்டாவது உலகத் தமிழ்மாநாடு, கந்த முருகன் மாநாடு, சமணசமயக் கருத்தரங்கு (வேலூர் அடுத்துள்ள திருமலையில் நடந்தது), ஆசியவியல் நிறுவனத்தில் நடந்த செம்மொழிக் கருத்தரங்கு, புதுவை பிரஞ்சு ஆய்வு நிறுவனம் நடத்திய குளிர்கால ஆய்வரங்கு (சீவக சிந்தாமணி பற்றி உரையாற்றியவர்) உள்ளிட்ட பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர். பல நாடுகளுக்குச் சென்ற பெருமைக்குரியவர்.

திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி இரண்டையும் மொழிபெயர்த்துள்ளார். சுவடிப் பாடல்கள் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புநானூறு பாடல்கள் பகுதி பகுதியாக உருசியமொழியில் வெளிவந்துள்ளன. மாசுகோ நூலகத்தில் இவை உள்ளன. இவரும் ஒரு கவிஞரும் இணைந்து இந்தப் பணியைச் செய்துள்ளனர். குளாசப் என்பவர் திருக்குறள், சிலப்பதிகாரத்தை உருசிய மொழியில் மொழிபெயர்த்துள்ளதமையும் துபியான்சுகி அவர்களின் மாணவி ஒருவர் சிலப்பதிகாரத்தின் கதை, மக்கள் கதையாகக் கண்ணகி நாடகம் என்ற பெயரில் உலவுவதை ஆராய்ந்துள்ளமையும் கூடுதல் தகவல்களாகும்.

சிலப்பதிகாரம் சிறந்த நூல் என்று குறிப்பிடும் துபியான்சுகி நன்கு இதனைக் கற்றுள்ளார். தமிழ் இலக்கியத்தில் முதல் கதைநூல் இது. தமிழ்ப் பண்பாட்டின் வடமொழிப் பண்பாட்டின் கலப்பு இதில் காணப்படுகிறது. சமற்கிருத இலக்கியத்தின் தாக்கம் இதில் காணப்படுகிறது. சிலப்பதிகாரம் பற்றி இன்னும் நல்ல ஆய்வுகள் வெளிவரவில்லை. சிலப்பதிகாரத்தை நான் உருசிய மொழியில் மொழிபெயர்க்க உள்ளேன் என்றார். இதில் உள்ள கலைச் சொற்களைப் பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை. என்றாலும் முயற்சி செய்து மொழிபெயர்ப்பேன்.

கதையமைப்பு, கதையோட்டம் இவற்றில் கவனம் செலுத்தி மொழிபெயர்ப்பைச் சிறப்பாக்குவேன். தமிழ் யாப்பை அப்படியே கொண்டு செல்ல முடியாது. வசனத்தில் கொண்டுபோனால் அழகு போய்விடும். தமிழின் அதே வடிவத்தில் கொண்டு செல்வது என் இலக்கு. அதற்கு நேரம் இல்லை என்கிறார். இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகின் அறிவுபெற்றவர்கள் மொழிபெயர்த்தால் சிறப்பாக இருக்கும் என்பது அவர் கருத்து.

பாரதியார் பாடல்களைப் பூர்ணிகா என்பவர் மொழி பெயர்த்தார். நவீன இலக்கியத்தில் அக்கறைகொண்டு பல மொழிபெயர்ப்புகளைச் செய்தார். பாரதியார். பாரதிதாசன். செயகாந்தன் உள்ளிட்டவர்களின் படைப்புகள் உருசியமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாவேந்தரின் சில படைப்புகளைப் படித்துள்ளேன். அழகின் சிரிப்பு சிறந்த நூல். அதனை மொழிபெயர்க்க வேண்டுமெனில் ஒரு கவிஞராக இருந்தால்தான் மொழிபெயர்க்கமுடியும். நான் கவிஞன் இல்லை என்கிறார். தற்காலப் புதினங்களை மொழிபெயர்க்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. புளியமரத்தின் கதை (சுந்தர ராமசாமி) புதினத்தை மொழிபெயர்க்க நினைத்துள்ளேன் என்கிறார்.

தமிழில் பல நூல்களை இவர் படித்தாலும் தமிழில் எனக்குப் பிடித்தமான நூல் நளவெண்பாவாகும் என்கிறார். இதனை மொழிபெயர்க்க நினைத்துள்ளார். வெண்பா வடிவம் இவருக்குப் பிடித்தமான ஒரு வடிவம். கம்பராமாயணம் பகுதி பகுதியாகப் படித்துள்ளேன். மாசுகோவில் நூல் இல்லை. சென்றமுறை வந்தபொழுது வாங்கிச் சென்றேன். மூலம் மட்டும் உள்ளது. உரையுடன் இருந்தால் நல்லது என்று தன் இலக்கிய ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழக உணவுவகைகள் தனக்குப் பிடிக்கும். அதுபோல் தமிழர்களின் கலைகள் ஆடல் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். உருசியாவிலும் இதுபோன்ற நாட்டுப்புறக் கலைகள் உண்டு. பாடல்கள் உண்டு. தனியே இதற்கென விரிவான ஆய்வுகள் நடந்துள்ளன என்றார். தமிழகத்துடன் தொடர்பில் இருந்த உருசிய அறிஞர்கள் யார் யார்? என்று வினவியபொழுது, உருதின் என்ற அறிஞரை இவர் குறிப்பிடுகிறார்.

உருதின் தமிழை நன்கு எழுதவும், பேசவும் படிக்கவுமானவராக விளங்கியவர் என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் நல்ல தொடர்பில் இருந்தவர். செம்பியன் என்று தமிழ்ப்பெயர் தாங்கியவர் இளம் அகவையில் இறந்துவிட்டார். இலெனின் கிராடில் வசித்துவந்தார். நான் சங்க இலக்கியம் படிக்க விரும்பியபொழுது உதவினார். இலெனின் கிராடில் தங்கி, அவர் வீட்டுக்கு வாரம் மூன்றுநாள் சென்று நற்றிணை, குறுந்தொகை படித்தேன். வங்காளம், இந்தி மொழிகளை உருதின் முதலில் படித்தவர். பின்னர் தமிழ் படித்தார். அதன் பின்னர் மலையாளம் படித்தார், 1968 இல் சென்னை வந்தவர். மு.வ. அவர்களிடம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்தவர் என்று மூத்த தமிழறிஞர் உருதினை நினைவுகூர்ந்தார்.

தமிழில் பிறமொழிச்சொற்கள் கலந்துள்ளது பற்றி வினவியபொழுது, பேச்சுத் தமிழில் பிறமொழிச்சொற்கள் கலந்துள்ளன. தமிழ் உயிருள்ள மொழி. உயிருள்ள மொழியில் பிற மொழிச்சொற்கள் கலப்பது இயல்பு. தனித்தமிழ் இயக்கம்போல் உருசிய மொழியிலும் பிறமொழி கலவாமல் பேசவேண்டும் என்ற இயக்கம் உள்ளது. ஆனால் மக்களிடம் வெற்றிபெற முடியவில்லை என்றார்.

அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்கள் உருதினுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லத் தக்க தமிழறிஞராக உருசியாவில் விளங்குகிறார். அமைதியும் அடக்கமும் நிறைந்தவர். கொடுத்த பணிகளையும் எடுத்த பணிகளையும் திறம்பட முடித்துக் காட்டுபவர். தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம் பற்றி நுட்பமாக அறிந்தவர். தொடர்ந்து தமிழாய்வுகளில் ஈடுபட்டு வருபவர். இவர்களின் தமிழ்ப்பணியைத் தமிழக, இந்திய அரசுகள் இயன்ற வகைககளில் ஊக்குவிக்கவேண்டும். தமிழைச் செம்மொழித் தமிழாக உலகம் உணர இவர் பணி உதவும்.


துபியான்சுகி தமிழக மாணவர்களுடன்


துபியான்சுகி,ஆசிரியர் கி.வீரமணியுடன்


தமிழ் ஓசை - களஞ்சியம்(28.12.08)


துபியான்சுகி நூல்

நனி நன்றி :

தமிழ் ஓசை: களஞ்சியம், அயலகத் தமிழறிஞர் தொடர் 14, சென்னை, 28.12.2008
முனைவர் பொற்கோ
The Hindu
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

(பத்தாண்டுகளுக்கு முன் என்னால் எடுக்கப்பட்ட நேர்காணல் அடிப்படையில் சில செய்திகள் பதிவாகியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட செய்திகளாக அவை அமையும்பொழுது சிறப்புறும்).

3 கருத்துகள்:

megat சொன்னது…

  I think your blog is really interesting ... especially this post :)

A N A N T H E N சொன்னது…

நல்ல செய்தி!

Moulee சொன்னது…

I was looking information about Mr. Dubianski, found your blog. Thanks for sharing interesting information about him. :D