நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 23 டிசம்பர், 2008

எங்கள் ஊர் திரைப்பா ஆசிரியர் கு.ம.கிருட்டினன்...


கு.ம.கிருட்டினன்

எங்கள் ஊருக்குச் செல்லும்பொழுது குருவாலப்பர்கோயிலில் இறங்கி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எங்கள் வீட்டுவரியைக் கட்டிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் என்னுடன் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை(1977-82) ஒன்றாகப் பயின்ற நண்பர் கமலக்கண்ணன் நின்றார்.அவரிடம் நம் ஊரில் கு.ம.கிருட்டினன் என்பவர் இருந்தார்.அவர் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியுமா? என வினவினேன்.

கமலக்கண்ணன் அவர்கள், அவர் என் சிற்றப்பாதான் என உரைத்ததுடன் இப்பொழுது சென்னையிலிருந்து வந்து இங்குதான் உள்ளார் என்றார்.அவரைப் பார்க்க வேண்டுமே எனச் சொன்னவுடன் அருகில் இருந்த கவிஞரின் இலத்திற்கு அழைத்துச் சென்றார். முப்பதாண்டு களுக்கு முன் முகிழ்த்த எங்கள் நட்பை அசைபோட்டபடி கவிஞர் வீட்டுக்குச் சென்றோம்.

மிகவும் குறுகலான சந்தில் அமைந்துள்ள வீட்டில் ஒரமாகச் சிறு தாழ்வாரத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கவிஞர்.சவுக்குக் குச்சிகள்அடுப்புக்கு அருகில் ஒடித்து வைக்கப்படிருந்தன.அடுப்புக்கு அருகில் ஒரு நாற்காலி கொண்டு வந்துபோட்டு அமர்ந்தார். எனக்கும் ஒரு இருக்கை கிடைத்தது.நண்பர் கமலக்கண்ணன் என்னை அறிமுகம் செய்து வைத்துவிட்டு கீழே அமர்ந்துகொண்டார்.அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் கவிஞரைத் தேடி ஆள் வந்துள்ளதை மகிழ்ச்சியோடு பார்த்துப் பேசியபடி சென்றனர்.


கவிஞரின் குடும்பப் பின்புலம் காட்டும் வீடு

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்துள்ளதைக் கூறினேன்.கவிஞருக்கும் என்னைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. இப்பொழுது என் வருகையின் நோக்கம் பற்றி சொன்னதும் தன் வாழ்வை மெதுவாக அசைபோட்டார்.சென்னையில் ஆண்டின் பெரும்பகுதி தங்கித் திரைத்தொழிலைக் கவனிக்கும் கவிஞர் சில மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வதை அறியமுடிந்தது.இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படும் நம் கவிஞர் அவர்கள் பாடல்,நடிப்பு,இயக்கம்,உரையாடல்,கதை எனப் பல துறைகளிலும் வல்லவர்.முறையாக நடிப்புப் பயிற்சி பெற்றவர்.இப்பொழுதும் சிறிய திரைகளில் பணிபுரிகிறார்.

கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குருவாலப்பர் கோயிலில் மருதமுத்து, செல்லம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்து இப்பொழுது எழுபது அகவையை நெருங்கும் கவிஞர் சற்று மெலிந்த தோற்றமுடையவர். கங்கைகொண்ட சோழபுரம் பள்ளியில் தொடக்கக் கல்வியும் செயங்கொண்டம் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரையும் பயின்றவர்.

கவிதைத்துறையில் உங்களுக்கு நாட்டம் எப்படி ஏற்பட்டது? என்றேன்.

உயர்நிலைப்பள்ளியில் படித்தது முதல் தமிழில் ஆர்வமுடன் படித்தேன்.6,7 ஆம் வகுப்புகளிலேயே கவிதை எழுதும் ஆர்வம்தொடங்கிவிட்டது. பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் நல்ல பயிற்சி இருந்ததால் இயல்பாகப் பாட்டுத்துறையில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது.

செயங்கொண்டம் பள்ளியில் அந்நாளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிந்த நமச்சிவாயம், ப.அரங்கநாதன்,நடேச முதலியார்,பூவராகசாமி உள்ளிட்ட தமிழாசிரியர் பெருமக்களின் நெறிப்படுத்தலில் தமிழ்ப் பாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டேன். ஆசிரியர் நமச்சிவாயம் அவர்களிடம் நான் எழுதிய கவிதைகளைக் காட்டித் திருத்திக்கொள்வேன்.சிற்றூரில் படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னைத் தமிழாசிரியர்கள் அனைவரும் முறையாகத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து படிக்க வலியுறுத்தினர்.

ஆசிரியர்களின் தூண்டுதல் எனக்குத் தமிழ்க்கல்வி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.அருகில் இருந்த தமிழ்க்கலூரிக்குக் கவிதையில் விண்ணப்பம் போட்டேன். கல்லூரி முதல்வர் தமிழுக்கு முதன்மையளிப்பவர்.உடன் அழைத்துக் கல்லூரியில் இடம்கொடுத்தார்.கல்லூரியில் சேர்ந்த எனக்குக் கல்லூரியில் நிலவிய கடவுள் பற்று,சமயச்சடங்குள்,கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை.அதன் காரணமாகக் கல்லூரியிலிருந்து சிலநாளில் வெளியேறி விட்டேன்.என் உள்ளத்தில் இருந்த திராவிட இயக்கக் கருத்துகளும் தன்மான உணர்வும் இவ்வாறு செய்யத் தூண்டின. பெரியார் கருத்துகள்,அண்ணாவின் கொள்கை,பாவேந்தரின் பாடல்களில் தோய்ந்த நான் கல்லூரியிலிருந்து வெளியேறியதில் வியப்பொன்றும் இல்லை.

கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் ஆர்வத்தின் காரணமாக யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம்,நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை நானே படித்துப் புலமையை வளர்த்துக்கொண்டேன்.அதனால்தான் இலக்கணமரபு வழுவாமல் பாடல் எழுதுவதில் இன்றும் வெற்றிபெறுகிறேன் என்றார்.


கு.ம.கிருட்டினன்


அடிக்கடி பனிக்காலச் சாரல் காரணமாக கவிஞர் இடையிடையே இருமலுடன் போராட வேண்டியிருந்தது.

புதுக்கவிதைக்காரர்களின் போராட்டம் ஓய்ந்துபோனாலும் அவர்களைப் பற்றி நினைவூட்டினேன்.

புதுக்கவிதைக்காரர்களைக் கடுமையாகச் சாடும் கு.ம.கிருட்டிணன் அவர்கள் "எழுத்தடுக்கிச் சேர்ப்பதெல்லாம் கவிதை யானால் எழுதுகின்ற மடயனெல்லாம் கவிஞன் ஆவான்" என்று எழுதியுள்ளேன் என்றார்.வாரியார் சுவாமிகளிடத்து எனக்கு அளவற்ற அன்பு உண்டு. கண்ணதாசன், பிறைசூடன், சகசரநாமம், உள்ளிட்டவர்களுடன் நன்கு பழகியுள்ளேன். திரைத்துறையில் கடும் போட்டி நிலவியதால் எனக்கு அளவுக்கு அதிகமான திறமை இருந்தும் அங்குள்ள சவால்களைச் சமாளிக்கத் தெரியவில்லை.என் சிற்றூர்ப்புறத்து வாழ்க்கையும் இதற்கு ஒரு காரணம்.

திராவிட இயக்க உணர்வு சுடர்விட்டு எரிந்த காலகட்டம் என் கலை உணர்வு அரும்பியதால் சமூகச்சீர்திருத்த நாடகங்கள் தயாரித்தேன். கல்லக்குடி போராட்டத்திற்குச் சென்ற நான் அங்குத் தங்கி நாடகம் போட்டேன்.ஊர்ப்பக்கம் வராமல் நாடகத்தில் கவனம் செலுத்தினேன். நான் இயக்கும் நாடகத்தைப் பார்க்க என் அம்மா ஆசைப்பட்டார். அம்மாவின் ஆசையை நிறைவு செய்ய அவர்கள் வாழும் ஊருக்கு அருகில் உள்ள செயங்கொண்டம் கடலைக் கமிட்டி அருகில் இருந்த கணேசு தியேட்டரில் சிறைக்கூடம் நாடகத்தை நடத்தினேன். அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்ட அவருக்கு அம்மா நினைவு வந்ததும் கண்ணீர் பனித்தது.

பாட்டுத்துறையில் இருந்த உங்களுக்கு நாடகம் பற்றிய ஆர்வம் எப்படி வந்தது?முறையாக நாடகப் பயிற்சி பெற்றதுண்டா?என்றேன்.

நாடகத்தில் நாட்டம் மிகுந்ததால் முறையாகப் பயிற்சி பெற்றுள்ளேன்.1957 இல் சேவா சுடேச் நாடகக் குழுவில் இணைந்து நாடகப் பயிற்சி பெற்றேன்.எங்களுடைய நிலத்தை அடகுவைத்து சென்னை சென்று நாடகக் கல்லூரியில் பயிற்சி பெற்றேன். கடைசிவரை அந்த நிலத்தை என்னால் மீட்க முடியவில்லை.சி.சுப்பிரமணியம் கல்வியமைச்சராக இருந்த பொழுது அவர் கையால் நாடகப் பயிற்சிக்குப் பட்டயம் பெற்றதை நினைக்கும்பொழுது பல மடங்கு நிலம் வாங்கிய மனநிறைவைப் பெற்றேன்.என்னுடன் பயின்றவர்கள் பலரும் நாடகம் திரைப்படங் களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளனர். நாடக மேடை என்ற கையெழுத்து ஏட்டில் தொடக்கத்தில் கவிதை எழுதினேன்

திரைப்படத்துறையில் எப்பொழுது நுழைந்தீர்கள்?

கர்ணன் கதையை மையமிட்டு தேரோட்டி மகன் என்ற நாடகத்தைச் சகசரநாமம் தயாரித்தார். பி.எசு.இராமையா கதை வசன ஆசிரியர். இராசாமணி என்பவர் இயக்கம்.கர்ணனாகச் சகசரநாமம் நடித்தார்.புகழ்பெற்ற கவிஞர்கள் அப்படத்திற்குப் பாடல் எழுத ஒப்பந்தம் ஆனாலும் அவர்கள் சரியாக இயக்குநர் விரும்பியவாறு எழுதமுடியவில்லை.எனக்கு எழுத வாய்ப்பு தந்தனர்

"ஆதி மூலமாக எங்கும் ஜோதியான தேவனே
ஆதி அந்தம் ஏதும் இல்லா நீதியான நாதனே"

இதில் இடம்பெறும் அமுத உள்ளம் தந்திடு என்று நான் எழுதிய வரி எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது. அனைவரும் பாராட்டினார்.உலகம் முழுவதும் கவிஞராக அறிமுகமானேன்.

எல்லாம் உனக்காக எனும் படத்தில்(சிவாசி-சாவித்திரி நடித்த படம்) முதன்முதல் பாடல் எழுதத் தொடங்கினேன்.

இதுவரை எத்தனைப் படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளீர்கள்?

பங்காளிகள்,நாகமலை அழகி,தேன்நிலவு,வள்ளி தெய்வானை,அன்புக்கரங்கள்உள்ளிட்ட 40 மேற்பட்ட படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளேன்.சிவாசி,இரவிச்சந்திரன்,செயசங்கர்,செமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளேன். காவல்தெய்வம் படத்திற்கு உரையாடல்(வசனம்) எழுதியுள்ளேன்.60 படங்களுக்குமேல் பணிபுரிந்துள்ளேன். மருதகாசி,முத்துராமன்,சுப்பையா,ஏ.பி.நாகராசன்,மேசர் சுந்தரராசன்,உள்ளிட்ட கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். பீஷ்மர் என்னும் நாடகத்திற்கு உரையாடல் எழுதியுள்ளேன்.கவரிமான்,தங்கக்குமரி என்னும் பெயரில் நாடகக்குழு வைத்திருந்தேன்.

கவியரசு கண்ணதாசனைப் பற்றி...

கவிஞர் கண்ணதாசன் மிகச்சிறந்த கவிஞர்.நல்ல பண்பாளர்.உடன் பழகும் கவிஞர்களை மதிப்புடன் நடத்தியவர்.அனைவரிடத்தும் அன்பொழுகப் பேசுவார்.

நூல்கள் எழுதியுள்ளீர்களா?

எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். நான் எழுதிய பீஷ்மர் நாடக நூல் தமிழ் வளர்ச்சித் துறை பரிசுபெற்றது.அண்மையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் நலிந்த திரைக்கலைஞர்களுக்குத் தாம் திரைப்பட உரையாடல் எழுதிப் பெற்றத் தொகையைப் பகிர்ந்தளிந்தார்.என்னையும் தேர்ந்தெடுத்து வழங்கினார்.கலைஞர் கையால் கலைஞனாகிய நான் சிறப்பிக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று.

திரைப்படம்,நாடகம்,நூல்கள் எனப் பல நிலைகளில் பணிபுரிந்திருந்தாலும் கவிஞர் இன்னும் வறுமை நிலையில் இருப்பது கவலை அளிப்பதாக இருந்தது.தமக்கு உரிய இடம் அமையாமல் போனமையைக் கவிஞர் உரையாடலில் தெரித்து விழுந்த சொற்கள் காட்டின.

நனி நன்றி:

தமிழ் ஓசை களஞ்சியம்(நாளிதழ்)21.12.2008
திரு.முல்லைநாதன்,ஊராட்சி மன்றத் தலைவர்,குருகாவலப்பர்கோயில்
திரு.கமலக்கண்ணன்

2 கருத்துகள்:

Venkatesh சொன்னது…

தங்களின் கல்லூரிப் பணியழுத்ததையும் மீறி சிறந்த பதிவுகளை நாளைய தலைமுறைக்கு எடுத்துவைக்கும் தங்களின் பணியை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை!!!

நன்றிகளுடன்
வெங்கடேஷ்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் ஊக்க உரைகளுக்கு நன்றியன்
மு.இளங்கோவன்