நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 9 டிசம்பர், 2008

அகராதியியல் அறிஞர் முனைவர் வ.செயதேவன் அவர்கள்


அறிஞர் வ.செயதேவன் அவர்கள்

மொழிப்பயன்பாட்டில் அகராதிகளுக்குத் தனியிடம் உண்டு.அகராதிகளை உருவாக்குபவர்களும் பயன்படுத்துபவர்களும் சமூகத்தில் உயரறிவு பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.அகராதி என்பது சொல்லுக்குரிய பொருளை வரையறுத்துக் கூறுவது ஆகும்.சொல்லுக்கு உரிய பொருளை வரையறுப்பவர்கள் மொழியின் இருவகை வழக்கு, இலக்கண, இலக்கியவறிவு, மொழியின் போக்கு,வளர்ச்சி,பயன்பாடு என அனைத்துக் கூறுகளையும் அறிந்தவர்களாக இருக்கவேண்டும்.அவர்களால்தான்அகராதித் துறையில் நின்று சுடர்விட்டு அறிவு ஒளி பரப்பமுடியும்.

நிகண்டுகள் என்ற பெயரில் தமிழர்கள் அகராதி பற்றிய அறிவைப் பண்டு பெற்றிருந்தனர். ஆங்கிலேயர்களின் வருகைக்குக்குப் பிறகு இன்றைய அகராதித்துறை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.இவ்வகராதித் துறையில் அறிஞர் வையாபுரியார்,மொழிஞாயிறு பாவாணர் உள்ளிட்டவர்கள் தங்கள் வாய்ப்புகளுக்கு ஏற்பச் சிறந்த பணிகளைச் செய்துள்ளனர். தொடர்ந்து வளர்முக நோக்கில் இருக்கும் தமிழ் அகராதியியல் துறையில் பேரறிவு பெற்றவராக விளங்குபவர் அறிஞர் வ.செயதேவன் அவர்கள் ஆவார்.அவர்தம் தமிழ் வாழ்வை இங்கு நோக்குவோம்.

முனைவர் வ.செயதேவன் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியபுரத்தில் திருவாளர்கள் வரதாரசன்,சரோசா ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தவர்(10.05.1947).
இவர் தொடக்கப் பள்ளிக்கல்வியை மாராடி என்ற சிற்றூரில் பயின்றவர்.பின்னர் உயர்நிலைக் கல்வியைத் திருச்சிராப்பள்ளி இடையாற்றுமங்கலம் அரங்கசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியில்(ERI)பயின்றவர்.

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பைப் பயின்ற செயதேவனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் - தாவரவியல்(B.Sc.Botany) பயின்றவர்(1969).தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பெற்றவர்(1971).மொழியியல் துறையில் பயின்று சான்றிதழ் பெற்றவர்
(1970).அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ் பயிலும்பொழுது அறிஞர்கள் இராமசாமியார்,வ.சுப.மாணிக்கம்,க.வெள்ளைவாரணனார்,சுவாமி ஐயா,க.திருநாவுக்கரசு உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள் தமிழ்ப் பேராசிரியர்களாக விளங்கினர்.

1979 இல் முனைவர் சஞ்சீவி அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிந்து முனைவர்சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் நெறிப்படுத்தலில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்.

சென்னை விவேகானந்தர் கல்லூரியில் 1971 இல் உரையாளராகத் தமிழ்ப்பணியைத் தொடங்கிய வ.செயதேவனார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் (1973-89) தமிழ்
விரிவுரையாளராகப் பணியில் இணைந்தவர்.இணைப்பேராசிரியராகப் பணி உயர்வு(1984-89)பெற்றார்.தமிழ்ப் பேராசிரியராக 1990 இல் பணியுயர்வுபெற்ற செயதேவன் அவர்கள் 1997 முதல் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் தகைசால் பேராசிரியராகவும் தமிழ்ப்பேரகராதியின் மறுபதிப்பு முதன்மைப் பதிப்பாசிரியராகவும் தற்பொழுது பணிபுரிகிறார்.

அறிஞர் செயதேவனார் அவர்கள் சென்னைப்பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை இயக்குரநராகப் பணிபுரிந்தபொழுது(1988-99) பதிப்புத்துறையை மக்களிடம் கொண்டு சேர்த்துத் தரமான பல்கலைக்கழக வெளியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார்.

செயதேவன் அவர்கள் தமிழ்ப்பேராசிரியர்கள் பலருக்கும் முன்னோடியாகப் பண்பு நலன்களா லும், பழகும் பாங்காலும்,அறிவுநலன்களாலும் மேம்பட்டு விளங்குபவர்.கடுமையான உழைப்பும்,துறைசார் அறிவும் நிறைந்தவர்.பல துறைப் புலமையாளர். அகராதி, இலக்கணம், பாட்டியல்,நாட்டுப்புறவியல்,புதினம்,பாடல்,மொழியியல் சார்ந்தபலதுறை வல்ல மாணவர்கள் இவரின் மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.இவ்வகையில் இதுவரை முப்பதுக்கும் அதிகமான மாணவர்கள் இவரிடம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

பேராசிரியர்கள் கேசவன்,சற்குணம்,சத்தியசீலன், கொழந்தைசாமி, கோதில்மொழியன், வேல்.கார்த்திகேயன்,ஞானகுரு,திரைப்பா ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் இவர்களின் குறிப்பிடத்தக்க மாணவர்களுள் சிலராவர்.எண்பதுக்கும் மேற்பட்ட இளம் முனைவர் பட்டஆய்வு மாணவர்களுக்கும் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியுள்ளார்.

முனைவர் செயதேவன் அவர்கள் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கு பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும்,கல்விக்குழு உறுப்பினராகவும் விளங்கி வருகிறார்.இந்திய அரசு,
தமிழக அரசு அமைத்துள்ள பல கல்வி சார்ந்த குழுக்களில் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து திறம்படப் பணிபுரிந்துள்ளார்.அவ்வகையில் இந்திய அரசின் நடுவண் தேர்வாணையம்(UPSC),பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு(UGC),தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NCRT)தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம்(TNPSC)ஆகியவற்றில் இவர் உறுப்பினராகவும்
தலைவராகவும் இருந்து பலமுறை சிறப்பாகப் பணிபுரிந்துள்ளார்.தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்வளர்ச்சிப் பிரிவு ஆகியவற்றில் உறுப்பினராக
இருந்து பணிபுரிந்துள்ளார்.


அறிஞர் வ.செயதேவன் அவர்கள்

இந்திய அளவிலும் உலக அளவிலும் அகராதியியல் சார்ந்த அமைப்புகள்,இதழ்களுக்கு அறிவுரைஞராகவும் பணிபுரிகின்றார்.அதுபோல் அகராதியியல் துறைசார்ந்த பல பயிலரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வறிஞராக உரையாற்றி மீண்டவர்.தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதவும்,பேசவுமான தமிழக அறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் கல்விக்குழு சார்பில் மொரீசியசு,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.மலேசியாவிற்கும்
கல்விப் பயணமாகச் சென்றுவந்தவர்.தமிழக அரசின் சிறந்த நூல்கள் பரிசுக்குழு, பிர்லா அறநிலை,சாகித்ய அகாதெமி உள்ளிட்டவற்றில் உறுப்பினராக விளங்குபவர்.தமிழக,
இந்திய,உலக அளவிலான பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வு, முதுமுனைவர் பட்ட ஆய்வுகளை மதிப்பிடும் அறிஞர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

தமிழ் தொடர்பான செய்திகளைக் கொண்டிருக்கும் கலைக்களஞ்சியங்கள் பலவற்றிற்குக் கட்டுரை எழுதித் தமிழிலும் ஆங்கிலத்திலுமான ஆக்கங்களை வழங்கியவர்.பல்வேறு பயிலரங்குகளில் கலந்துகொண்டு மொழியியல்,இலக்கணம்,அகராதியியல் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெற்றுள்ளார்.

அறிஞர் செயதேவன் அவர்களின் ஆய்வுப் புலமாக அகராதியியல்,தமிழ் பயிற்றுவித்தல், மொழியியல்,பதிப்புத்துறை,இலக்கியத் திறனாய்வு உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம்.
உலக அளவில்,தேசிய அளவில் நடைபெற்ற மாநாடுகள்,கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைகள் படித்தவர்.

இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு "தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு" நூலாக வெளிவந்துள்ளது. தொல்காப்பிய அகராதி, சித்திரக்கவி களஞ்சியம்உள்ளிட்ட இவர் பதிப்பித்த தமிழ்நூல்கள் என்றும் பேராசிரியரின் பெருமையை நின்று பேசும்.தமிழாய்வு, தமிழ்ச்சோலை, நோக்கு உள்ளிட்ட ஆய்வு இதழ்களின் ஆசிரியர் குழுவில் பலநிலைகளில் பணிபுரிபவர்.

அறிஞர் வையாபுரியார் தலைமையில் உருவான தமிழ்ப்பேரகராதியின் மறுபதிப்புப்பணியில் முதன்மைப் பதிப்பாசிரியராக இப்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் இதற்கெனப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிலிருந்து 23.51 இலட்சம் நிதியும்,தமிழக அரசிடமிருந்து பத்து இலட்சம் நிதியும்பெற்று மறுபதிப்புப் பணியில் தன்னைக் கரைத்துக்கொண்டுள்ளார்.

வளர்ந்து வரும் கணிப்பொறி,இணையத்தைப் பயன்படுத்தித் தமிழாய்வுகளிலும்,தமிழ்ப் பயிற்றுவித்தலிலும் புதுமை செய்ய நினைக்கும் பேராசிரியரின் ஆய்வுகள்,பணிகள் தமிழர்களுக்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தேவையானவையாகும்.

இவரின் இல்ல முகவரி:

முனைவர் வ.செயதேவன் அவர்கள்
"அன்பகம்",1,15 ஆம் குறுக்குத் தெரு,
குறிஞ்சிநகர்,பெருங்குடி,
சென்னை-600096

பேசி: (இல்லம்) 044-24963232
செல்பேசி : 91- 9444932320

மின்னஞ்சல்: vjdevan@rediffmail.com

2 கருத்துகள்:

Info-farmer சொன்னது…

எனக்கு அகரமுதலி பணியில்
ஈடுபட ஆர்வமுண்டு. நான் அதனை முறையாக வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். ஏதேனும் பயிற்சி வகுப்புகள் உள்ளனவா? அருள்கூர்ந்து வழிகாட்டுங்கள்.

Info-farmer சொன்னது…

எனக்கு அகரமுதலி பணியில்
ஈடுபட ஆர்வமுண்டு. நான் அதனை முறையாக வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். ஏதேனும் பயிற்சி வகுப்புகள் உள்ளனவா? அருள்கூர்ந்து வழிகாட்டுங்கள்.