நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 19 ஏப்ரல், 2008

தமிழ், திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்


 தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும். இத் திருக்குறள் கி.பி.இரண்டாம்  நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது. ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளை, அதன் கருத்துகளை அறிஞர்கள் பலரும் காலந்தோறும் பலவகையில் பயன்படுத்தியுள்ளனர். சங்கநூல்களிலும், சிலம்பு, மேகலை, கம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலும் திருக்குறள் கருத்துகள் பரவலாக ஆளப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், பழந்தமிழ் நூல்களுக்கு உரைவரைந்த உரையாசிரியப் பெருமக்கள் திருக்குறளுக்கும் உரை கண்டு அந்நூலின் பயன்பாட்டுக்கு அரண்செய்தனர். இவ்வாறு உரை கண்டவர்கள் தம் சமயம் சார்ந்தும், கொள்கை, இலக்கிய, இலக்கண பயிற்சிகளுக்கு அமையவும் உரை வரைந்துள்ளனர். இவ்வாறு வரையப்பட்ட உரைகளுள் பரிமேலழகரின் உரை அனைவராலும் போற்றப்படுகிறது. சில உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் தூற்றப்படுகிறது.

  பரிமேலழகர் தம் அஃகி அகன்ற அறிவு முழுவதையும் பயன்படுத்தி உரை கண்டிருப்பினும் அவர்தம் வடமொழிச்சார்பு அவருக்குத் தமிழ் அறிஞர் உலகில் எதிர்ப்பைத் தேடித் தந்தது. சிவப்பிரகாசர் உள்ளிட்ட சமயவாணர்கள் பரிமேலழகரின் உரையைக் கண்டித்துள்ளனர். வடமொழிக் கருத்துகளை நீக்கிப் பார்க்கும்பொழுது குன்றின்மேல் இட்ட விளக்காக அவர்தம் உரை விளங்கும். ஒருவகையில் பரிமேலழகரின் உரை கற்றவர்களை மகிழ்ச்சி அடையச்செய்தது போலத் தமிழ்ப் பற்றாளர்களையும், தமிழகத்தில் தோற்றம் பெற்ற திராவிட இயக்க உணர்வாளர்களையும் தன் பக்கம் இழுத்தது. அவ்வுரைக்கு விளக்கமாகவும், மறுப்பாகவும் உரை வரையவும், திருக்குறளைத் தங்கள் அறிவுஅடையாளம் காட்டும் நூலாகவும் காட்டும் போக்கைத் தமிழகத்தில் உண்டாக்கியது. இதனால் திருக்குறள் தமிழ், திராவிட இயக்க உணர்வாளர்களால் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலும், பிற்பகுதியிலும் புதுப்புது கருத்துகளை உருவாக்கும் களமானது. அக்கருத்து விளக்க உரைகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

 பழந்தமிழ்ப் புலவர்களிடம் இருந்த திருக்குறளை எளிய மக்களும் படிக்கும் வகையில் தெளிவுரை வழங்கியவர் அறிஞர் மு.வரதராசனார் ஆவார். இவர்தம் திருக்குறள் தெளிவுரை கோடிக்கணக்கில் விற்பனை ஆனமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. திருக்குறளார் முனிசாமி அவர்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் திருக்குறளை நகைச்சுவையுடன் கொண்டு சேர்த்தவர்.உரை வரைந்தும் பெருமை சேர்த்துள்ளார். மு.வ அவர்களின் உரை வெளிவந்த காலகட்டத்தில் (1949) தமிழகத்தில் தமிழ், திராவிட இயக்க உணர்வு மேம்பட்டிருந்தது. தமிழர்கள் தங்களின் இலக்கியப் பரப்பையும், இலக்கணப் பெருமையையும் பேசும்பொழுது சங்க நூல்கள், திருக்குறளை அடையாளப்படுத்தினர். அதிலுலும் திருக்குறளைத் தம் மறையாக நிலைநாட்ட முயன்றனர். தேசிய இலக்கியமாகவும், உலக இலக்கியமாகவும்  அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. இக் காலகட்டத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் வழியாகத் திருக்குறள் அயல்நாட்டு அறிஞர்களால் அறியப்பட்டிருந்தது.

 இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தில் அரசியல்,சமூகம், மொழி, இலக்கிய வளர்ச்சிக்குத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களும் பெரும் பங்காற்றியுள்ளனர். தந்தை பெரியாரின் அரசியல், சமூகப் போராட்டங்களால் தமிழக மக்கள் கல்வி, அறிவுநிலைகளில் மேன்மையுறத் தொடங்கினர். சமூக விழிப்புணர்ச்சியுடன் இலக்கிய, கல்விச் சூழலும் பல நிலைகளில் வளரத் தொடங்கின. காலந்தோறும் உயர் சாதியினரின் கையில் இருந்த இலக்கிய இலக்கண நூல்கள் அனைத்தும் மக்களின் கைக்குக் கிடைத்தன. இதனால் அவரவரும் தத்தம் வாழ்க்கை, அறிவு, கொள்கை வழிப்பட்ட இலக்கியங்களை ஆராய்ந்தனர்.புதுவகை இலக்கண,இலக்கிய உத்திகளை வகுத்தனர். இதுநாள்வரை கேள்விக்கு உட்படுத்தப்படாமல் இருந்த நூல்கள், கருத்துகள், கொள்கைகள், விளக்கங்கள் அடித்தட்டு மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. கல்வியறிவு கிடைத்ததுடன் அரசியலில் விடுதலைபெற்று விடுதலையாகத் தங்கள் கருத்துகளை எழுதவும் பேசவும் சூழல் வாய்த்ததால் தங்கள் கருத்துகளை உலகிற்கு வெளிப்படுத்தினர்.

 அரசியல், சமூக மாற்றங்களால் மொழி சார்ந்த இயக்கங்களும், இனம்சார்ந்த இயக்கங்களும் கட்டமைக்கப்பட்டன. மறைமலையடிகளால் உருவாக்கம்பெற்ற தனித்தமிழ் இயக்கம் (1916 அளவில்) பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற அறிஞர்களைத் தனித்தமிழ்க் காப்பு முயற்சிக்குப் பாடுபடத் தூண்டியது. பாவாணர் தமிழே உலகின் முதன் மொழி எனவும், மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டமே எனவும், தமிழிலிருந்தே பிறமொழிகள் தோன்றின எனவும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே தம் ஆராய்ச்சி முடிவுகளை உறுதிப்படுத்தி வெளியிட்டார். ஆரியமொழியால் தமிழ் தமிழர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதை வெளியிட்ட பிறகு தமிழகத்தில் இதுநாள் வரை மண்டிக்கிடந்த ஆரிய அடிமை உணர்வு ஆட்டம் காணத் தொடங்கியது. தமிழைப் பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் தொடங்கியதால் தமிழ் பண்டைய வளம்பெறத் தொடங்கியது.

 வழக்கிலிருந்த பிற சொற்களைத் தமிழ் அறிஞர்கள் எடுத்துரைக்க அதனைத் திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மேடைப்பேச்சில், எழுத்துரைகளில் பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வகையில் தமிழ் இலக்கணநூல்களில் இலக்கியங்களில் ஆரியக் கருத்துகள் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டன. இதேபோல் அரசியல் சமூக நிலைகளில் பார்ப்பனர்களின் அதிகாரம், பதவிப்பெரும்பான்மை இருப்பதைக் கண்டு அரசியல் முனையில் விழிப்புணர்வு ஏற்பட்டது. மொழி அடிப்படையிலும்,அரசியல் அடிப்படையிலும் ஆரியத்தை, அதன் கொள்கைகளை,அடிப்படைக் கட்டமைப்பைக் குலைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

 தமிழகத் தலைவர்கள் உயர்சாதியினரின் ஆதிக்கம் அரசியல்துறையில் இல்லாமல் செய்தது போல் மொழித்துறையில் வல்ல தமிழறிஞர்களும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் தமிழ் இலக்கியம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டனர். கம்பராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களையும் நூல்களின் கருத்துகளையும் எதிர்த்தனர். மாற்றுக் கருத்துடைய நூல்களைக் கண்டித்த தந்தை பெரியார் திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைத் தொடக்கத்தில் எதிர்த்தார். பின்னர் அதில் உள்ள பிற்போக்கான சிலபகுதிகளை மட்டும் கண்டித்துவிட்டு ஏற்கத் தகுந்த கருத்துகளை ஏற்கலாம் எனக் கருத்துச் சொன்னார். திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.1948 இல் திருக்குறள் மாநாடு நடத்தி, ஐவர்குழு அமைத்து(நாவலர் பாரதியார், புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள்) பகுத்தறிவு நோக்கில் திருக்குறளுக்கு உரைவரைய வேண்டியதையும் இதன் அடிப்படையில் 25 நாள்களில் புலவர் குழந்தை உரை உருவானதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும்.

 தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருநூல் திருக்குறள் எனும் போக்கு தமிழகத்தில் உருவானதும் திருக்குறளை மூலமாகவும்,உரையாகவும் பலர் பதிப்பித்தனர். அடக்கவிலையிலும், இலவயமாகவும் திருக்குறள் மக்களுக்கு வழங்கப்பட்டன. உரைகள், உரைக்கொத்துகள், ஆராய்ச்சிக் குறிப்புகள், தெளிவுரை, விளக்கவுரை, பதவுரை, குறிப்புரை எனும் அமைப்பில் திருக்குறள் பல பதிப்புகளைக் கண்டது.ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஒலிவட்டுகளிலும், குறுந்தட்டுகளிலும் பதியப் பெற்றுப் பரவின. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணியில் முன்னிற்கின்றனர்.

 இவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் நூலாகத் திருக்குறள் மாறியதும் அறிஞர்களின் கடைசி விருப்பம் திருக்குறளுக்கு உரை வரைவது என்னும் கருத்தைத் தமிழகத்தில் உருவாக்கிவிட்டது. சமூகத்தில் தங்கள் பெயர் அனைவருக்கும் அறிமுகமானதும் அவர்கள் செய்யும் முதல் வேலையாகத் திருக்குறள் உரைவரையும் வேலை அமைந்துவிட்டது. திருக்குறளுக்கு எல்லாக் காலத்திலும் விற்பனை உள்ளதால் இதில் அனைவரும் தங்களின் தகுதிகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றனர்.பாவாணர், பெருஞ்சித்திரனார் தங்களின் அறிவைப் பயன்படுத்தி இனமீட்புக்கு, மொழி மீட்புக்கு உரைகண்ட நிலைமாறி திருக்குறள், திருவள்ளுவர் விருதுகளுக்கு இன்றைய உரைவரையும் போக்கையும் தமிழ்ச் சமூகத்தில் காணமுடிகின்றது.

 இன்று வெளிவரும் உரைகளைப் பார்க்கும்பொழுது பெரும்பாலான குறட்பாவிற்கு அனைவரும் ஒன்றுபட்ட உரையே கண்டுள்ளனர் (மு.வ. உரையின் மறுபதிப்பாகவே உள்ளன). சில குறட்பாக்களுக்கு மட்டும் உரை காண்பதில் வேறுபடுகின்றனர். தமிழ், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள அறிஞர்களின் உரைகளுக்கு இடையிலும் சில தனித்த போக்கினைக் காணமுடிகின்றது. தமிழ் இயக்க உணர்வாளர்கள் கண்டுள்ள உரைகளில் ஆரிய எதிர்ப்பு,மனுமுதலிய கொள்கைகள் எதிர்ப்பு, இவற்றைக் கைக்கொண்ட பரிமேலழகர் எதிர்ப்பு, தமிழ் மரபுகாட்டல் எனும் தன்மைகள் காணப்படுகின்றன.திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் கண்டுள்ள உரைகளில் கடவுள் மறுப்பு, பெண்ணடிமைக் குறிப்புகள், விதி(ஊழ்) மறுப்பு, பார்ப்பன அடையாளம் எதிர்ப்பு உள்ளிட்ட தன்மைகள் காணப்படுகின்றன.

 தமிழ், திராவிட இயக்க உணர்வுடைய அறிஞர்கள் வரைந்துள்ள உரையில் திருவள்ளுவரின் உள்ளம் காட்டும் முயற்சியில் அவர் குறிப்பிடும் இறைவன், ஊழ் பற்றிய சிந்தனைகளை ஏற்றும் உரை கண்டுள்ள தன்மையைப் பார்க்கமுடிகிறது.பொற்கோ அவர்களின் உரையில் வள்ளுவர் உள்ளத்தை மனத்தில்கொண்டு உரை காணப்பட்டுள்ளது. உரையில் இன்னும் உண்மைப்பொருள் விளங்காத இடங்களைப் பொற்கோ குறிப்பிட்டுச் செல்கின்றார். இது ஒருவகை உரை வரையும் போக்காக உள்ளது. கலைஞர் உரையில் பகுத்தறிவு கண்கொண்டும், கற்பனைநயம் மிளிரவும் உரை உள்ளது. சில இடங்களில் கலைஞர் திருவள்ளுவர் கருத்துக்கு உடன்பட்டே செல்வதைக் காணமுடிகின்றது. பாவேந்தர் வரைந்த உரை(குயில் இதழில் வள்ளுவர் உள்ளம் என்ற பெயரில் 08.12.1961 -07.02.1961 வரை உரை வரைந்துள்ளார். 83 குறட்பாக்களுக்கு இவர்தம் உரை உள்ளது.) திருக்குறளின் உண்மை வடிவை மாற்றும் வகையில் அவர்தம் தமிழ்ப்பற்று மிகுந்து விடுகின்றது.

திருக்குறளுக்கு உரைகாண வேண்டிய முறைகள்

 திருக்குறளின் குறட்பாக்கள் தவிர அதனை இயற்றிய திருவள்ளுவர் பற்றிய மெய்யான சான்றுகள் நமக்குக் குறைவாகவே கிடைக்கின்றன.எனவே நாம் வெளியிடும் கருத்துகளுக்குச் சான்றுகள் இல்லாததால் அறிஞர் உலகம் அவற்றை ஏற்கத் தயங்குகின்றது.எனவே நம் கொள்கை, நம் உணர்வு, நம் விருப்பம் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு திருவள்ளுவர் காலச் சமூகத்தையும், காலப் பழைமையையும் மனதில்கொண்டே உரை வரையவேண்டும்.விளக்கம் தரவேண்டும்.

 அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுவது போல் திருக்குறளுக்குத் திருக்குறளிலேயே பல இடங்களிலில் உரை உள்ளதை முதற்கண் மனத்தில் கொள்ளவேண்டும். அவர்காலத்தில் இல்லாத புராணச் செய்திகள் பிற்காலத்தில் எற்பட்டுள்ளன. பிற்காலச் செய்திகளின் அடிப்படையில் முற்கால வரலாற்றைத் திரிக்கக்கூடாது (ஐந்தவித்த இந்திரன் கதை). திருக்குறளில் ஆளப்பட்டுள்ள பல கருத்துகள், சொற்கள் இன்றைய நிலையில் வைத்துப் பொருள் காணப்படுவதால் பல குழப்பங்களுக்கு வழி வகுக்கின்றன. திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் திருவள்ளுவர் தவச்சாலை கண்டுள்ள இரா. இளங்குமரனாரின் வாழ்வியலுரையில் திருக்குறளுக்குப் பல இடங்களுக்குப் பொருத்தமான உரை கண்டுள்ளார்.

 திருக்குறளுக்கு உரை காணும் அறிஞர்கள் திருக்குறளுக்குப் புது விளக்கம் தருவதுடன் அதிகாரத் தலைப்பு மாற்றம் செய்துள்ளமையும் காண முடிகின்றது. அதிகாரத் தலைப்புகள் தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராததால் மாற்றிய முறையை (கலைஞர். பாவேந்தர்)க் காணும் அதே நிலையில் இளங்குமரனார் இறைவணக்கம் எனத் தலைப்பு இட்டுள்ளதற்குக் காரணம் காட்டுகிறார். திருக்குறளில் எந்த இடத்தும் கடவுள் என்னும் சொல்வரவில்லை எனவும் வாழ்த்து என்னும் சொல் எவ்விடத்தும் இல்லை எனவும் கூறி இறைவணக்கம் எனப் பெயரிடுகின்றார். அதுபோலவே புதல்வரைப் பெறுதல் (7) என்னும் அதிகாரத் தலைப்பை மாற்றும்பொழுது இத்தொடர் நூலின் எவ்விடத்தும் இல்லை எனவும் மக்கட்பேறு என உள்ளதையும் குறிப்பிட்டு மக்கட்பேறு எனத் தலைப்பிட்டதைக் குறிப்பிடுகிறார்.

 இரா.இளங்குமரனாரின் உரைக் குறிப்புகளில் அரிய விளக்கம் சில உள்ளன.திருக்குறள் குறட்பாவில் வரும் இறை என்னும் சொல் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் நோக்குடையது அன்று.மெய்யுணர்தல்,அவா அறுத்தல், பேரா இயற்கையாம் செம்பொருளைக் கண்டுகொள்ள வழி வகுப்பது அது என விளக்குகிறார் (தந்தை பெரியாரும் இதே கருத்தினர். காண்க : பெரியார் சிந்தனைகள், தொகுதி.2,பக்கம்1260-65)

 கடவுள் வணக்கத்திலும் உருவ வணக்கம் இல்லை எனவும்,1330 குறட்பாக்களில் ஓர் இடத்தில்கூட கடவுள் என்ற சொல் இல்லை எனவும், கடவுள் பெயரில் நடைபெற்ற உயிர்க் கொலையைத் திருவள்ளுவர் கண்டிக்கிறார் எனவும் பெரியார் குறிப்பிடுகின்றார் (மேலது). மேலும் அந்தக் காலத்தில் இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் எனவும் இன்றைய நிலையில் திராவிடர்க்கு ஒழுக்க நூல் குறள்தான் எனவும் பெரியார் குறிப்பிட்டுள்ளார்(மேலது).

 இரா.இளங்குமரனார் திருக்குறளில் பொருள் காண அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தும் சிக்கலான  சில இடங்களுக்குத் தெளிந்த பொருள் கிடைக்கச் செய்துள்ளார். அவ்வகையில் பின்வரும் கருத்தினை இளங்குமரனார் முன்வைத்துள்ளார்:

புத்தேளிர் : தமிழகத்திற்குப் புதியதாக வந்தவர்கள்(58)
இந்திரன் : ஐம்புல அடக்கத்திற்குச் சான்றானவன்(25)

 காமன், வேள்வி, தவம், நோன்பு, அந்தணர், பார்ப்பான், மறுமை, எழுமை, இருபிறப்பாளர், வீடு, நிரயம், பேய்,அலகை,ஊழ்,மறை எனும் சொற்கள் யாவும் தமிழ்மரபு சார்ந்து ஆளப்பட்டவை என்கிறார். திருக்குறளின் துணைகொண்டே இவற்றை விளக்குகின்றார்.

 தாமரையினாள்,செய்யாள்,திரு என்பன செல்வம்,நன்மை ஆகியவற்றின் உருவகம் என்கிறார்.முகடி(617),தவ்வை(937) என்பனவும் தொன்மக்கதை வழி பார்க்கும் பெயர்களன்று என்கிறார்.

பாவாணர் உரை

 பாவாணர் திருக்குறளை ஆழமாக நேசித்தவர். குறடபாக்களைத் தம் ஆய்வுகளில் ஆங்காங்கு தக்க வகையில் பயன்படுத்தியுள்ளார். குறளில் இருந்த பயிற்சி போலவே பரிமேலழகரின் உரையில் நல்ல விருப்பம் கொண்டவர்.பாவாணரின் உயிர்க்கொள்கை தமிழ்,தமிழர். இவற்றிற்கு எதிரான கருத்துகள், ஆரியச் சார்பாக்கித் திருக்குறளைக் காட்டியவற்றைப் பாவாணரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழ் மரபுரை செய்ய வைத்தது.தமிழ் மரபுகாட்டி இவர் செய்துள்ள உரை பரிமேலழகரையும் அவர் தம் ஆரியச் சார்பையும் தக்காங்கு மறுத்துள்ளது.பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களை உரை வரையத் தூண்டியது பாவாணர் உரை.பாவாணரின் உரை பெரும்பாலும் பரிமேலழகரின் வள்ளுவத்துக்கு மாறான கருத்துகளை மறுக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களைப் பாவாணர் திறம்பட எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார். பரிமேலழகரின் உரை பற்றிப் பாவாணர் கருத்து :

 'பரிமேலழகருரையே தலைசிறந்ததெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனை யுரைகளெல்லாவற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும் உண்மையே. ஆயின் பெறுதற்கரிய அறுசுவை யரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ளதொப்ப, உண்மைக்கு மாறானதும், தமிழுக்கும், தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய நஞ்சுக் கருத்துகளை, முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு புகுத்தியிருப்பது, இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது. இனி சில குறள்கட்கு முழுத் தவறாகவும், சில குறள்கட்கு அரைத் தவறாகவும் பொருள் காட்டியுள்ளார். சில சொற்களை வடசொல்லாகக் காட்டியிருப்பதுடன் சில சொற்கட்குத் தவறான இலக்கண வழுவமைதியுங் கூறியுள்ளார்'.(திருக்குறள் தமிழ் மரபுரை தொகு.1. பக்.18).

 பாவாணர் திருக்குறளின்மேல் கொண்ட பற்றின் காரணமாக உரைகண்டார் என்பதை விடப் பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களை எடுத்துரைத்து அடையாளங் காட்டுவதும், பொருத்தமான தமிழ்மரபுகளை முன்வைப்பதும் நோக்கமாகத் தெரிகிறது. பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களாகப் பாவாணர் குறிப்பிடும் இடங்கள்:

1.ஆரியவழி காட்டல்(குறள் 27,களவியல் முன்னுரை)
2.பொருளிலக்கணத்திரிப்பு( '...வடநூலுட் போசராசனும்...களவியல்.)
3.ஆரியவழிப்பொருள் கூறல்(குறள் 43 பிதிரராவர் -படைப்புக்காலத்து அயனாற்           படைக்கப் பட்டதோர் கடவுட்சாதி இஃது வேதக்கருத்து)
4.ஆரியக் கருத்தைப் புகுத்தல்(560 குறளுக்குப் 'பசுக்கள் பால் குன்றியவழி    அவியின்மையானும்,அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பமென்பன    ஓதாமையானும்,வேள்வி நடவாதாம்' என்பது காண்க)
5.தென்சொல்லை வடசொல் மொழிபெயர்ப்பு எனல்
உழையிருந்தான் எனப்பெயர் கொடுத்தார்,அமாத்தியர் என்னும் வடமொழிப்பெயர்க்கும்  பொருண்மை அதுவாகலின்( )
6.தென்சொற்கு வடமொழிப்பொருள் கூறல்
 அங்கணம் = முற்றம்
7.சொற்பகுப்புத் தவறு
பெற்றத்தால்- பெற்ற வென்பதனுள் அகரமும்,அதனானென்பதனுள் அன்சாரியையும்   தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன(524,உரை)
8.சொல் வரலாற்றுத் தவறு
அழுக்காறென்னும் சொல்குறித்த விளக்கம்.
9.சொற்பொருள் தவறு
இனிது =எளிது(103)
10.அதிகாரப்பெயர் மாற்று
மக்கட்பேறு = புதல்வரைப்பெறுதல்
11.சுட்டு மரபறியாமை
அஃதும் = ஏனைத்துறவறமோ வெனின்(குறள். 49)
12.இரு குறளைச் செயற்கையாக இணைத்தல்
குறட்பாக்கள் 631,632

பாவாணரின் உரைச்சிறப்பு

 பாவாணர் உரை பரிமேலழகர் வழுவிய இடங்களை எடுத்துக் காட்டியுள்ளதுடன் தமிழ்மரபுக்கு உகந்த வகையிலும் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை நினைவுகூரும் வகையிலும் பல இடங்களில் உள்ளன.வேர்ச்சொற்கள் பல விளக்கப்பட்டுள்ளன.புதுச்சொற்கள் பல படைக்கப்பட்டுள்ளன. ஊர்வனவற்றை ஊரி எனவும்,ஞானியார் என்பதை ஓதியார் எனவும்ஆடம்பரம் என்பதை ஒட்டோலக்கம் எனவும் யோகம் என்பதை ஓகம் எனவும், பிரமசரியம் என்பதை மாணிகம் எனவும்,வாதி என்பதை உறழி எனவும்,உபாயம் என்பதை ஆம்புடை எனவும்,பாவனை என்பதை உன்னம் எனவும் பாவாணர் ஆண்டுள்ளார். தமிழ்ச் சொற்களைத் தருவதுடன் 'பரிந்தோம்' என்பதில் வரும் வேள்வி ஆரிய வழியிலான கொலை வேள்வி எனப்பரி. பல இடங்களில் விளக்கம் காணப், பாவாணரோ வேள்வி என்னும் தூய தென்சொல் விரும்பு என்னும் பொருளில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் உள்ளதை எடுத்துக்காட்டுவார் (88).

 எழு பிறப்பு என்பதற்கு உரையாசிரியர்கள் ஒவ்வொரு விளக்கம் தரப் பாவாணர் ஏழு என்பது ஒரு நிறைவெண்; ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது என்கிறார்(62).

 பொருத்தமான இடங்களில் பொருத்தமான தமிழ் இலக்கியச் செய்திகளையும் வரலாற்றையும் பாவாணர் உரையில் குறிப்பிட்டுச் செல்கின்றார். ஒளவையார் தூது சென்றமை (அதி.69), வடநாட்டிற்குச் சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்றபொழுது முப்பத்தி யிரண்டு மாதம் நீங்கியிருந்தும் நாட்டில் குழப்பமின்மைக்குக் காரணம் அவனது அனைத்திந்தியத் தலைமையைச் சுட்டுவது (குறள் 741),ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தன் செங்கோல் தவறியதால் உயிர் நீத்தமை(969), குமணவள்ளல் தன் உயிர் தர அணியமாய் இருந்தமை (குறள்.72) உள்ளிட்ட செய்திகள் இடம்பெற்றுள்ளமை பிற உரையாசிரியர்களிடம் காணப்படாத தன்மையாக உள்ளது.

 'கேட்ட தாய்' என்னும் தொடருக்கு உரைவரையும்பொழுது பரிமேலழகரின் கருத்தை எடுத்துக்காட்டி,சங்க காலத்தில் வாழ்ந்த 'ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், ...வெறிபாடிய காமக்கண்ணியார் முதலிய பண்டைப் புலத்தியரை அவரும் அறிந்திருந்தமையால், அவர் கூற்று நெஞ்சார்ந்த பொய்யுமாம்' (குறள் 69 உரை) என்று எழுதும்பொழுது பாவாணர் பண்டைக்காலத்துப் பெண்பாற்புலவர்களை நினைவுகூர்வார்.

 பாவாணர் தம் உரையில் தமிழ் 65,மலையாளம் 1,ஆங்கிலம் 4 என எழுபது பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளமையை ஆ.முத்துராமலிங்கம் குறிப்பிடுவர்(2003,ஆ.கோ.3). பாவாணர் உரை வரைந்த பகுதிகளுள் மருந்து என்னும் அதிகாரத்திற்கு வரையும் உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் என்றும் போற்றப்படும் ஒன்றாக உள்ளது.நோய் வகை, நோய்நீக்கும் வகை,மருந்து வகை,மருந்து அதிகாரம் பெயர்பெற்றமை முதலியவற்றை விளக்கும் பாவாணர் எந்த எந்த உணவுப்பொருள் எந்த எந்த நோயைக் குணப்படுத்தும் என்பதைக் (குறள்.942இல்) குறிப்பிட்டுள்ளார்.திருக்குறளுக்கு உரை வரைந்துள்ள உரையாசிரியர்கள் பலராலும் காட்டமுடியாதபடியான இலக்கண,இலக்கியவழக்கு,மரபு,பிறமொழி சார்ந்த செய்திகள் பாவாணரின் உரையில் மிகுந்து காணப்படுகின்றன.

பாவேந்தர் உரை

'மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவதாகுமோ? ஆய்தல் வேண்டும்'

என்பார் பாவேந்தர். எனவே மதக் கருத்துகள் நீக்கித் திருக்குறளுக்கு உரைவரையப் பாவேந்தர் திட்டமிட்டுக் குயில் ஏட்டில் உரைவரைந்தார்(08.12.1959-07.02.1961 குயில்,வள்ளுவர் உள்ளம் என்னும் தலைப்பில்).இப்பணி தொடராமல் இடையில் நின்றுவிட்டது. பாவேந்தர் உரையை நோக்கும்பொழுது பரிமேலழகர் வழியை மாதிரியாகக் கொண்டு தமிழ் நெறி என்னும் அடையாளத்துடன் தம் உரையை வரைய முயற்சி செய்துள்ளார்.திருவாரூர் கபிலரால் நூலாக்கம் செய்யப்பெற்ற எண்ணூல் அடிப்படையில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியதாகப் பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

 பாவேந்தர் அதிகாரத்தலைப்பு மாற்றம் செய்துள்ளமை,புதுப்பொருள் காண முயன்றமை,கடவுள் மறுப்பு,பெண்ணுரிமை பற்றிய தம் கொள்கைகளைத் தம் உரையில் பெய்து பார்த்துள்ளார்.கடவுள் வாழ்த்தை இறைவணக்கம் எனப் பிறர் எழுதப் பாவேந்தர் 'உலகின் தோற்றம்' என்று அதிகாரப்பெயர் மாற்றம் செய்கின்றார். பிற தமிழறிஞர்களைப் பின்பற்றிப் புதல்வரைப்பெறுதல் என்பதை மக்கட்பேறு என்கின்றார். எழு பிறப்பு என்பதை ஏழுதலைமுறை என்கிறார்.

 'மலர்மிசை ஏகினான்' என்பதை விளக்குமிடத்து மலர் என்பதற்கு உலகம் என்னும் பொருள் உள்ளதை எண்ணூல் கருத்தின் துணையுடன் உலகம் என்றே குறிப்பிடுகிறார். (சமணச்சார்பில் எழுந்த உரையான சிறீ சந்திரனாரின் உரையில் 'மலரின்மேல் நடந்த அருகப்பெருமான்' என்று குறிப்பார்.பரிமேலழகர் இப்பகுதிக்கு எழுதும்பொழுது' இதனைப்பூமேல் நடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்' என்பது பிறிதோர் கடவுள் இங்குச் சமண சமயக்கடவுளாகும்.சிவன் பூமேல் நடந்தவன் என அப்பர் பாடிய ஒருபாடலும்(தேவாரம்- தாளிடைச்செங்கமல...) அவரின் முன்னைய சமணச்சமய சார்பிலானது என்பர் மயிலை.சீனிவேங்கடசாமி(மேற்கோள்) திருக்குறள், வர்த்தமானன் வெளியீடு).

 பாவேந்தர் திருக்குறளுக்கு உரைவரைவதன் முன்பு உரைப்பாயிரம் வரைந்துள்ளார்.அவ்வுரைப் பாயிரப்பகுதி வருமாறு: ' இனி அகம் புறம் எனும் இரு பொருளும் பற்றிச் செய்யுள் செய்தார் ஆயின் அவற்றால் எய்தும் பயன்கள் எவை எனின் அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கு என்க.இவ்வாறு நூற்பயன் நான்காகக்கொள்வது வடவர்முறை அன்றோ எனின்,அன்று.....'என்று தம் உரைப் பாயிரத்தைத் தொடங்கி எழுதுகின்றார்.முதற்குறட்பாவுக்கு உரை வரையும்பொழுது,' உலகும்,உயிர்களும் மற்றுமுள் ளவைகளும் ஆதி என்பதின்று தோன்றியவை.ஆயினும் உலகமக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே....

 ஆதி வடசொல் அன்று.தூய தமிழ்ச்சொல்லே.அஃது ஆதல் எனப்பொருள்படும் தொழிற்பெயர்.
பகவன் வடசொல் அன்று. பகல் எனப் பொருள்படும். பகவு ஆண்பால் இறுதிநிலை பெற்றது.பகல்-அறிவு' என்பது பாவேந்தரின் உரை.

 பாவேந்தர் உரையை நோக்கும் பொழுது அவர்தம் காலத்தில் அவருக்கு இருந்த கொள்கையீடுபாட்டுடன் அவர் உரை வரைய முனைந்துள்ளமை புலனாகின்றது.அவர் தம் உரை குறித்து எவரேனும் ஐயம் எழுப்பினால் அவர்களுக்கு விடைதரும் வகையில் வினாக்களை அவரே எழுப்பிக்கொண்டு ஆத்திகர் நாத்திகர் உரையாட்டாக அமைத்துத் தம் விளக்கத்தையும் பாவேந்தர் தந்துள்ளார்.'ஆய்விடுமானால் ஆய்விடட்டும்.அதனால் உமக்கென்ன முழுகிப்போகும்? 'என்று உணர்ச்சிவயப்பட்டு எழுதும் பாவேந்தரைப் பல இடங்களில் காணமுடிகின்றது.

பெருஞ்சித்திரனார் உரைச்சிறப்பு

 பரிமேலழகர் அவர் காலத்திற்கு முந்தைய உரைகளைக் கற்று உரை வரைந்துள்ளார். 133 இடங்களில் பிறர் உரை சுட்டுவதையும்,48 இடங்களில் பாட வேறுபாடு காட்டுவதையும்,230 மேற்கோள்கள் ஆளப்பட்டுள்ளதையும் 286 இடங்களில் அரும்பொருள் விளக்கம் தந்துள்ளதையும், வடமொழி நூல்களில் நல்ல தோய்விருந்ததையும் கற்ற பேராசிரியர் அருளி வியப்படைவர் (திருக்குறள் மெய்ப்பொருளுரை, தொகு.1,பக்.19). இவ்வாறு பரிமேலழகர் மிகப்பெரும் திட்டமிடலுடன் உரை வரைந்தது போலப் பெருஞ்சித்திரனாரும் மிகப்பெரும் திட்டமிடலுடன் திருக்குறளுக்கு ஏறத்தாழ எட்டாயிரம் பக்கங்களில் உரை வரையத்திட்டமிட்டும் தமிழர்களின் போகூழ் குறைந்த அளவிலான குறட்பாக்களுக்கே உரை நமக்குக் கிடைக்கலாயிற்று. அவ்வாறு 240 குறட்பாக்களுக்கு நான்கு தொகுதிகளாக உரைநூல் வெளிவந்துள்ளன. முன்னுரைப் பகுதியே மிகப் பெரிய அறிவு ஆராய்ச்சிக் களமாகத் தெரிகின்றது. அதனை அடுத்து அவர் வரைந்துள்ள பகுதிகள் தமிழ் உரை வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெறத்தக்கன.

 பெருஞ்சித்திரனார் மெய்ப்பொருள் உணர்வுடையவர். ஓரிறைக் கொள்கை உடையவர். இவர்தம் மெய்ப்பொருள் உணர்வும், இறைநெறி சார்ந்த கருத்துகளும் உரிய இடங்களில் பதிவாகியுள்ளன. இவர்தம் சொல்லாராய்ச்சியும், ஆழமான உலகியல் அறிவும், யாப்பு ஆற்றலும், பன்னூல் பயிற்சியும், பல துறை அறிவும் கண்டு வியப்பே மேலிடுகின்றது. பெருஞ்சித்திரனார் தாம் உணர்ந்த மெய்ப்பொருள் உணர்வுகளைத் தம் உரையில் பொருத்தி எழுதியுள்ளார்.

 பாவேந்தர் குயில் இதழில் உரை எழுதியபொழுது பரிமேலழகரின் ஆரியக் கருத்துகளை மட்டும் நீக்கி விட்டால் அவ்வுரையே போதும் எனவும், பாவாணர் மரபுரை தந்த பிறகு வேறு எவரும் திருக்குறளுக்கு உரை வரைய வேண்டியதில்லை எனவும் கருதிய பெருஞ்சித்திரனார் பின்னர் காலத் தேவையறிந்து தாமே மிகப்பெரிய அளவில் உரை வரைய எண்ணினார். இவர் சிறையில் இருந்தபொழுது இவ்வுரைத் தொகுதிகள் எழுதப்பெற்றன.

திருக்குறளும் உரைகளும் குறிப்பிடும் பொருளின் துல்லியத்தை உரைப்பதே மெய்ப்பொருளுரையின் நோக்கமாகும் (ப.45).

 திருக்குறளுக்கு உரைவரையும்பொழுது தொல்காப்பியம், நன்னூல்,கழகநூல்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள்,சமயப் பாடல்கள்,சாத்திர நூல்கள், தோத்திர நூல்கள் எனப் பல வகைப்பட்ட நூல்களையும், பிறமொழி நூல்களையும் பயன்படுத்துவதுடன் அறிஞர்களின் கருத்துகளைப் பொருத்தமான இடங்களில் போற்றுவதும் குறைபாடுடைய இடங்களில் சுட்டிச்செல்வதும் இவர்தம் இயல்புகளாக உள்ளன. மூலநூல்ஆசிரியரையும் தேவையான இடங்களில் அடையாளப்படுத்துவதும் இவர்தம் இயல்பாக உள்ளன.பிறமொழி, பிறமதம், பிற பண்பாட்டுச் செய்திகளையும் பெருஞ்சித்திரனார் விளக்கிச் செல்கிறார்.

 முன்னுரை,பால்விளக்கம்,பாயிர விளக்கம்,அதிகாரவிளக்கம்,குறள் விளக்கம் என வகுத்து இவர் உரை வரைந்துள்ளார்.மேலும் குறள்,பொருள்கோள் முறை,பொழிப்புரை,சில விளக்கக்குறிப்புகள் என்னும் அமைப்பில் உரைநூல் அமைப்பு உள்ளது.

 பெருஞ்சித்திரனார் திருக்குறள் ஆரியக்கருத்துகளுக்கு எதிராக எழுதப்பட்ட நூல் எனப் பல சான்றுகளுடன் நிறுவுகிறார்.குறிப்பாக மனுநூலில் குறிப்பிடும் கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கி,இவற்றை எதிர்க்கவே வள்ளுவர் தம் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.குறிப்பாக உழவுத்தொழிலை இழிவான தொழிலாகக் குறிப்பிடும் மனுதரும கருத்துகளை எடுத்துக்காட்டி இவற்றுடன் வள்ளுவரின் கருத்துகள் எந்த அளவு உயர்வுடையனவாக விளங்குகின்றன என்பதை முறைப்படக் காட்டியுள்ளார். உயிர்க்கொலை பற்றி மனுவின் கருத்தும் வள்ளுவரின் கருத்தும் முரண்பட்டு நிற்கும் இடங்களையும் பெருஞ்சித்திரனார் விளக்கியுள்ளார்.மேலும் திருவள்ளுவரின் தமிழியல் பார்வையும் ஆரியவியல் எதிர்ப்பும் தவிர்ப்பும் என்னும் பகுதி(முதல்தொகுதி,பக்.123) பெருஞ்சித்திரனாரின் பன்னூல் பயிற்சிக்குக் கட்டியம் கூறி நிற்பன.(இவற்றின் சிறப்பை மூல நூலில் கண்டு மகிழ்க).

 விளக்கக் குறிப்புகளில் சொற்பொருள் வரைந்தும் சொல்நயம் சுட்டியும், பல பொருத்தமுடைய மேற்கோள்களை எடுத்துரைத்தும் இதுவரை யாரும் இதுபோல் உரை வரையவில்லை என முடிவுசெய்யும் பொறுப்பை நமக்கே வழங்கி விடுகின்றார்.

 தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் உரைவரையும் பொழுது பெரிதும் மாறுபட்டு நிற்கும் இடங்களில் பெருஞ்சித்திரனார் பொருத்தமான விளக்கம் தர முயன்று இவரும் கருத்து வேறுபாடுகளுக்கு இடந் தந்து நிற்கிறார்.ஒலி, எழுத்து, சொல், தொடர்களில் எல்லாம் மெய்ப்பொருள் உணமைகள் பொதிந்துள்ளதை நுட்பமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.

 'அகர எழுத்தே கூட,வரிவடிவில்,தொடக்கத்தில் இருந்த நிலைக்கும் இன்றுள்ள நிலைக்கும் எத்தனையோ மாறுதல்கள் அடைந்துள்ளன. ஆனால், ஒலிவடிவம் ஒன்றுதான்.அதுபோல் இறையுணர்வு தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஒன்றுதான். வடிவங்கள் மாறுதல் அடைந்து வந்துள்ளன.(தொகு.2,பக்.61).

 'பிறப்பு' - எனும் சொல்லில் ப்+இ -பி -மெய்களோடு உயிர் சேர்ந்திருப்பதையும், 'இறப்பு' என்பதில் 'இ' - மெய்நீங்கிய உயிர்மட்டும் இருப்பதையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளதையும் (பக்.62) நோக்கும் பொழுது பெருஞ்சித்திரனாரின் இறையுணர்வு வெளிப்பட்டு நிற்கிறது.


 பெருஞ்சித்திரனார் திருக்குறள் மெய்ப்பொருளுரையில் பல சொற்களுக்கு விளக்கம் வரைந்துள்ளார் அவற்றுள் இறைவன்(மூலமாய்,முதலாய் நிற்கும் முதற்பொருள்), கடவுள் (அம் மூலப்பொருள் உயிர்களுடன் கலந்துநிற்கும் நிலை), தெய்வம் (உயிர்களுள் மேம்பாடுற்றுச் சிறந்த மீமிசை மாந்த உயிர்கள், உலகத்து வாழ்ந்து மறைந்து, மீண்டும் உடற்பிறவியற்று உயிரொளியாய் இயங்கும் நிலை) இவற்றிற்கு வரையும் உரை இவர்தம் உரையால் உண்மைபோல் காட்டப்படுகின்றது (2,பக்.25).

 இறை,மதம் சமயம்,அகமனம்,புறமனம், ஓகம், ஊழ்கம் என இவர் தரும் விளக்கம் சமயவாதிகளை விட இத்துறையில் இவருக்கு இருக்கும் பேரறிவைக்காட்டி நிற்கின்றன.இவையெல்லாம் திருவள்ளுவர் சொல்ல நினைத்த கருத்துகளா என நடுநிலையுடன் நின்று நோக்குவர் கேட்கத்தோன்றும். தம் அறிவையும் தம் கொள்கையும் திருவள்ளுவருக்கு அல்லது திருக்குறளைச் சார்பாக்கிப் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிஞருலகம் விளங்கிக்கொள்ளும். இவ்வவாறு பல மெய்ம்மவியல் கருத்துகளைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர்தம் சொற்பொருள் விளக்கம் பிறரால் தரமுடியாத ஒன்றாகும்.

 பெருஞ்சித்திரனாரும் அதிகாரப்பெயர் மாற்றம், குறளை வகையுளி இல்லாமல் எழுத சிறு மாற்றங்களைக் குறித்துக் காட்டியுள்ளார்(குறள். 4).

 திருக்குறளின் முதல் அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்து எனப் பொதுப்பட குறிப்பிடுவதை உரையாசிரியர்கள் இறைநலம் (சி.இலக்குவனார்), இறைவாழ்த்து (அப்பாத்துரை), உலகின் தோற்றம் (பாவேந்தர்) முதற்பகவன் வழுத்து (பாவாணர்), வழிபாடு (கலைஞர்), இறை வணக்கம் (இரா.இளங்குமரனார்) எனக் குறிப்பிடுகின்றனர். அதைப் போலப் பெருஞ்சித்திரனார் 'அறமுதல் உணர்தல்' என்று குறிப்பிட்டு உரை வரைந்துள்ளார்.

 அறமுதல் உணர்தல் அதிகாரத்தில் உள்ள பத்துக்குறட்பாக்களுக்கும் மெய்ப்பொருள் நோக்கில் உரை வரையப்பட்டிருப்பினும் சில சொற்களுக்கு விளக்கம் வரையும்பொழுது தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் போல் வரைந்துள்ளது அவர்தம் பழுத்த பேரறிவுக்குச் சான்றாகும்.' வேண்டுதல்',வேண்டாமை' எனும் இரு சொற்களுக்கு விளக்கம் தரும்பொழுது பற்றாலும் ஆசையாலும் பாசத்தாலும் ஒன்றை விரும்புதல் வேண்டுதல்(விரும்புதல்) எனவும்,வெறுப்பாலும்,பொருந்தாமையாலும் பகையாலும் ஒன்றை விரும்பாமை வேண்டாமை எனவும் விளக்கம் தருகின்றமை பொருத்தமாக உள்ளது.

 இருவினை என்பதற்கு மறவினை(அறத்திற்கு எதிரானது),தீவினை(நன்மைக்கு எதிரானது) எனும் விளக்கம் நாம் அறியாத ஒன்றாக இருக்கின்றது.

 அமிழ்தம் என்னும் சொல்லுக்குப் பாற்கடல் அளவில் நம் அறிஞர்கள் விளக்கம் தர,'அம்''அம்' என்பது குழந்தை தாய்முலையில் பாலருந்தும் ஓர் ஒலிக்குறிப்பு.அம்மம் - தாய்முலை.அம்மு - முலைப்பால் - அமுது -அமுதம் - அமிழ்தம் எனக்காட்டி அமிழ்தம் முதலில் தாய்ப்பாலைக்குறித்துப் பின் பிற அருந்தும் பாலைக்குறித்தது என்கிறார் பெருஞ்சித்திரனார்(தொகு.1,பக்.86,87).

 'துப்பு' என்பது நுகர்வுப்பொருள் அனைத்தையும் குறிக்கும்.ஆனால் உணவை மட்டும் குறிப்பதாகப் பரிமேலழகர் முதல்,பாவாணர் வரை குறித்திருப்பதைப் பெருஞ்சித்திரனார் குறையுரை என்கிறார்

 'விரிநீர்' என்னும் சொற்கு உணவு ஆக்கத்திற்குக் கடல் நீர் நேரிடையாகப் பயன்படாமை பற்றி உயர்வு நவிற்சியாகக் கூறியது(தொகு.2,பக். 90).

 'தம்பொருள்' எனத்தொடங்கும் குறளுக்கு இதுவரை வந்துள்ள உரைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பெருஞ்சித்திரனாரின் உரை மயக்கமற்று, மிகத்தெளிவாக, முழுமையான பொருளைக்காட்டி நிற்கின்றது.
 '(இவ்வுலகில்) தம்முடைய பொருள் என்று உரிமை கொண்டாடுவதற்கு உரியவர்கள் தாம் பெற்று உருவாக்கிய தம் மக்களே. மற்று, அவரவரும் (உடைமை நிலையில்)தம்தம் பொருள் என்று கூறிக்கொள்வன, அவரவர் உழைப்பால் ஈட்டி வருவனவே -என்று (உரிமையையும்,உடைமையையும் பிரித்து)உணர்ந்தவர் கூறுவர். ....இது தாய் தந்தை இருவருக்குமே பொது என்பதால் 'தம்' என்றார்.(இது பற்றிய பிற சுவைப்பகுதிகளை மூல நூலில் காண்க.தொகு.2,231).

 இனியவை கூறல் அதிகாரத்தில் உரைவரையும்பொழுது கூறுதல் ,சொல்லுதல் பலவகைப்படும் என்பதைத் திருவள்ளுவர் வழியில் நின்று ,அன்பாகச் சொல்லுதல் முதல் வெல்லும்படி சொல்லுதல் வரையில் 109 தொடர்களைக் காட்டித் திருவள்ளுவத்தில்  கூறும் முறைகளைப் பெருஞ்சித்திரனார் காட்டியுள்ள பாங்கினை நோக்கும்பொழுது அவர்தம் திருக்குறள் புலம் நமக்குப் புலப்படுகிறது.

அனிச்சமலர் பற்றி விளக்கும் பொழுது சங்கநூல்களில் கலித்தொகையில் மட்டும் ஒரிடத்தில் இம்மலர் பற்றி வருகிறது எனவும், திருக்குறளில்  வரும் இடங்களில் மென்மைபேசுவது என்று குறித்துள்ளது இவர்தம் துல்லியம் நாடும் போக்கைக்குறிப்பிடுவது.(குறள் 90 விளக்கம்).பெருஞ்சித்திரனாரின் மெய்ப்பொருள் உரையில் சில இடங்கள் மிகைபடக்கூறலாகத் தெரிந்தாலும் அவற்றுள்ளும் பல உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளதால் அதுவும் குற்றமில்லை என்க.
பொற்கோ உரை

 திருக்குறளுக்குப் பொற்கோ வரைந்துள்ள உரை நான்கு தொகுதிகளாக வந்துள்ளன.இவ்வுரை நூலில் பால் விளக்கம், பாயிர விளக்கம், அதிகார விளக்கம், குறள், உரைத்தொடர், உரைத்தொடர் விளக்கம், பொருள் விளக்கமும் குறிப்பும் என்னும் அமைப்பில் செய்திகள் உள்ளன. பொற்கோ பகுத்தறிவுக் கருத்து கொண்டவர் எனினும் திருக்குறள் ஆசிரியர் கருத்தைத் தழுவி உரை வரைய நினைத்துள்ளார்.

 கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பிலேயே கடவுள் கொள்கையை மறுக்காமல் எழுதியுள்ளது அவர்தம் பற்றற்ற, உண்மைகாணும் உள்ளத்தைக் காட்டி நிற்கின்றது.தமக்கு உரை வரையத் தெளிவு கிடைக்காத இடங்களில்' இது இப்போது விளங்கவில்லை' எனவும் 'இக்குறளுக்குப் பொருத்தமான உரை கிடைத்தால் வரவேற்கலாம்' எனவும்(1:8),  குறிப்பிடுகிறார். பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடும்பொழுது பிறர் உரை பொருந்தாத் தன்மையைக் காட்டுகிறார் (1:6) பரிமேலழகரின் விளக்கம் சிறப்பாக உள்ள இடங்களைப் பாராட்டுகிறார்(1:11). திருக்குறளுக்குத் தன் அனுபவ நிலையிலிருந்து பொற்கோ உரை வரைந்துள்ளாரேயன்றிப் பிற நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும் வழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. அதுபோல் இலக்கணக் குறிப்பு வைத்தல், நயம்பாராட்டல் என்று இல்லாமல் முன்னுரையில் குறித்தாங்கு திருக்குறளை அனைவருக்கும் படிக்கும்படியான நூலாக வழங்கத் தம் உரையைப் பயன்படுத்தியுள்ளார்.

கலைஞர் உரை

 பகுத்தறிவுக் கொள்கையும், கலையுள்ளமும் கொண்ட கலைஞர் குறளோவியம் கண்டவர். திருக்குறளுக்கு உரையும் வரைந்துள்ளார். திருவள்ளுவரின் கருத்துகளுக்கு ஒட்டியும் உறழ்ந்தும் கலைஞரின் உரை உள்ளது. அதிகாரத் தலைப்பு மாற்றம் கலைஞர் உரையில் உள்ளது. அதுபோல் வழக்கமான திராவிட இயக்க உணர்வாளர்கள் மாறுபடும் சில இடங்களில் புதிய முறையில் உரைகாண முயன்றுள்ளார். கடவுள் வாழ்த்தை 'வழிபாடு' எனத் தலைப்பாக்குகிறார்.

 வாலறிவன் என்பதற்கு அறிவில் மூத்த பெருந்தகையாளன் எனவும் 'மலர்மிசை ஏகினான்' மலர்போன்ற மனத்தில் நிறைந்தவன் இறைவன் எனவும்,அந்தணர் என்பதற்குச் 'சான்றோர்' எனவும்,தென்புலத்தார் என்பதற்கு வாழ்ந்துமறைந்தோர் எனவும்,புத்தேளிர் என்பதற்கு புதிய உலகம் எனவும்,எழுபிறப்பு என்பதற்கு ஏழேழு தலைமுறை எனவும் குறிப்பிடுகின்றார். கலைஞர் உரை வரையும்பொழுது எமன், தெய்வம் குறித்த நம்பிக்கைகளை மனத்தில்கொண்டே உரைவரைந்துள்ளார்.

 'அறத்தாறு...' எனத்தொடங்கும் திருக்குறளுக்கு உரைவரையும்பொழுது 'அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீயவழிக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதிகொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள் என்கிறார். காமத்துப்பாலுக்கு உரை வரையும்பொழுது கற்பனை ததும்பும் பல இடங்களைக் காணமுடிகின்றது.


நிறைவுரை

 திருக்குறள் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருந்தாலும் ஒவ்வொருவரும் அதற்குத் தரும் விளக்கங்கள், பொருள்கொள்ளும் முறைகள் சில இடங்களில் வேறுபாடு கொண்டு விளங்குகின்றன. சமயம் சார்ந்து தரும் விளக்கங்களும், சமய மறுப்பாளர்கள் தரும் விளக்கங்களும் வேறாக உள்ளன. அவ்வாறு வரையப்பட்ட உரைகளில் அவ்வக்காலச் சமூகச்செல்வாக்கு தெரிகின்றது. தமிழ், திராவிட இயக்க உணர்வாளர்களின் விளக்கங்களை (உரைகளை) உற்றுநோக்கும் பொழுது திருக்குறளின் உண்மைப்பொருள் காணும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை புலனாகின்றது. மேலும் கருத்து அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் சில இடங்களில் மட்டும் மாறுபாடுகொண்டு எழுதும் இவர்கள் பெரும்பான்மையான இடங்களில் ஒன்றிச் செல்கின்றனர். திருக்குறள் ஆராய்ச்சிக்கும், திருக்குறள் பரவலுக்கும் இவர்களின் உரைகள் பெரிதும் துணைசெய்கின்றன.



   பின்னிணைப்பு - 1

தமிழ்,திராவிட இயக்க திருக்குறள் உரை நூல்களுள் சில:
1.புலவர் குழந்தை  (1949)
2..கா.அப்பாத்துரை  (1950-54)
3.பாவேந்தர்   (1956)
4.சி.இலக்குவனார்  (1959)
5.சுந்தரசண்முகனார்  (1959)
6.பாவாணர்   (1969)
7.கு.ச.ஆனந்தன்   (1986)
8.இரா.இளங்குமரனார்  (1990)
9.வி.பொ.பழனிவேலனார் (1990)
10.வ.சுப.மாணிக்கம்  (1991)
11.இரா.நெடுஞ்செழியன்  (1991)
12.அரிமதி தென்னகன்  (1995)
13.கலைஞர் மு.கருணாநிதி (1996)
14.பெருஞ்சித்திரனார்  (1997)
15.தமிழண்ணல்   (1999)
16.கல்லாடன்   (2000)
17.ஆ.வே.இராமசாமி  (2001)
18.ச.வே.சு   (2001)
19.பொற்கோ   (2004)
20.பா.வளன்அரசு  (2005)
21.மா.அர்த்தநாரி  (2005)
22.அருளி(இன்பத்துப்பால் மட்டும்) (2006)
23.தமிழமல்லன்   (2006)
24.கடவூர் மணிமாறன்  (2006)
25.க.ப.அறவாணன்  (2007)

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 28.03.2008 இல் பன்முக நோக்கில் திருக்குறள் என்னும் தேசியக் கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் படிக்கப்பெற்ற ஆய்வுரை.

வெள்ளி, 11 ஏப்ரல், 2008

சங்க காலத்து நவிரமலைப் படங்கள்


நவிரமலை உச்சியில் போகர் சிலை


அம்மையின் சிலை


மலைச்செலவில் ஈடுப்பட்ட குழுவினர்(மலையுச்சி)


காரியுண்டிக் கடவுள்


ஆபத்தான பாதையில் ஏறிவரும் என் மாணவர் கா.இரமேசு
(குறவரும் மருளும் குன்றம்)


நவிரமலையைக் கண்ட மகிழ்ச்சியில் நான்(மு.இ.)(மலையுச்சி)


கோயில் முகப்பு


மலைப்பாதை


மலையின் நடுவிடத்தில் ஓய்வெடுக்கும் மண்டபம்.

நவிரமலை (NAVIRAMALAI ) என்று சங்க காலத்திலும் (மலைபடுகடாம்) பர்வதமலை என இன்றும் அழைக்கப்படும் மலையின் மேல்பகுதியை விளக்கும் படங்கள். காரியுண்டிக்கடவுள் என்னும் சிவன்கோயில் மலைமீது உள்ளது. அம்மையின் சிலை, சிவலிங்கம், போகர்சிலை உள்ளன.

  இம்மலைக்கு முழுநிலா நாளில் மக்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். கருங்கல்லில் உள்ள கோயில், கோட்டை அமைப்புகள் நம்மை வியப்படையச் செய்கின்றன. இப்பகுதியில் நடுகல் பல இருந்ததமையை மலைபடுகடாம் குறிப்பிடும். ஆனால் இன்று நம் காட்சிக்கு அவை கிடைக்கவில்லை. குறவரும் மருளும் குன்றக்காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

வியாழன், 10 ஏப்ரல், 2008

வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலை


வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலையின் தூரக்காட்சி


மலைப்பாதை(இந்த வழியில்தான் நடக்கவேண்டும்)


மலைப்பகுதிகளை இணைக்கத் தண்டவாளங்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளன


நன்னனின் பழைய கோட்டை அமைப்பு

அறிஞர் மா.இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நவிரமலையில் ஏறித் தம் ஆராய்ச்சியை முழுமையடையச் செய்ய விரும்பியதை எழுதியுள்ளார். அன்னாரால் ஏறமுடியாதபடி அன்றைய நாளில் (1967 அளவில்) பாதை ஏந்துகளின்றிப், பாதுகாப்புக் குறைவுடன் இருந்தது.

இன்று மக்கள் போகவும் வரவும் ஆள் நடமாட்டத்துடன் பர்வதமலை என்ற பெயரில் திருவண்ணாமலை அருகில் நவிரமலை விளங்குகிறது. இம்மலையில் 15.08.2005 இல் என் மாணவர்கள் திரு.காசி.இரமேசு, திரு.செல்வம், திரு.விவேகானந்தன், பிற நண்பர்கள் அடங்கிய குழுவினருடன் ஏறி நன்னனின் கோட்டையையும் பழைய கோயிலையும் கண்டேன்.

நண்பர் அருணகிரிமங்கலம் திரு.சி.பாலாசி க.மு.,அவர்கள் எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கி மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, காட்சிகளைக் காட்டிப் பாதுகாப்பாக அடிவாரத்திற்கு அழைத்து வந்தார்கள். சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை பற்றித் தினமணியில் எழுதியுள்ளேன் (18.12.2005). என் தளத்திலும் முன்பு வெளியிட்டுள்ளேன். மலைச்செலவு பற்றிப் பின்னர் விரிவாக எழுதுவேன்.சில படக்காட்சிகளைச் சங்க இலக்கிய ஆர்வலர்களுக்கு வழங்குகிறேன்.

புதன், 9 ஏப்ரல், 2008

சங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்...


புதுப்பித்தலுக்கு முன் எடுக்கப்பெற்ற படம்


புதுப்பித்தலுக்குப் பிறகு எடுக்கப்பெற்ற படம்(11.02.2006)

சங்கப்புலவர் கபிலர் தம் அருமை நண்பர் வள்ளல் பாரியின் மறைவிற்குப் பிறகு அவனின் மக்கள் அங்கவை,சங்கவை இருவரையும் மலையமான் வழியினருக்கு மணம் முடித்து,திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் மேலே உள்ள படத்தில் உள்ளது.கபிலக்கல் என இவ்வூர்க் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

தினமணி ஏட்டில்26.02.2006 இல் விரிவான என் கட்டுரை இடம்பெற்றது.இணையத்திலும் கட்டுரை உள்ளது

திங்கள், 7 ஏப்ரல், 2008

வாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...

தன்மானத் தமிழ் மறவராக விளங்கிய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மகனாரும் தமிழ்ப்பணியில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டவருமான பேராசிரியர் முனைவர் இ. மறைமலை அவர்கள் தமிழ்ப்பணியில் முன்னின்று உழைப்பவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக வாழ்த்து என்னும் இணையப்பக்கத்தை உருவாக்கியுள்ளார். அதில் என்னை ஊக்கப்படுத்தும் வண்ணம் என் வாழ்க்கைக் குறிப்பைப் படத்துடன் வெளியிட்டுள்ளார்.நீங்களும் கண்டு மகிழலாம்.

பேராசிரியர் அவர்களுக்கு என் நன்றி.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2008

மடல்கள் தமிழில் இருந்தால்தான் பல்கலைக்கழகம் விடையளிக்கும்! -துணைவேந்தர் பொன்னவைக்கோ


முனைவர் மு.பொன்னவைக்கோ(கோப்புப்படம்)

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து அலுவலக முறையில் மடல்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தால் தமிழில்தான் வரவேண்டும். ஆங்கிலத்தில் வந்தால் பல்கலைக்கழகம் விடையளிக்காது எனப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் நேதாசி சுபாசு சந்திரபோசு கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பட்டமளிப்புவிழா உரையாற்றிய பொழுது துணைவேந்தர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆங்கிலமொழிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழக மக்களுக்குத் துணைவேந்தரின் உரை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தட்டும்.

தமிழை ஆட்சிமொழியாக்கும் அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் பொன்னவைக்கோ அவர்களுக்கு உலகெங்கும் உள்ள தமிழ்ப்பற்றாளர்களின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு முன்னோடியாக விளங்கிப் பாவேந்தர் அவர்கள் விரும்பிய புதியதோர் உலகம் படைக்கட்டும்!

சனி, 29 மார்ச், 2008

என்னை வளர்த்த கண்ணியம் ஆசிரியர் பற்றி...


தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் ஆ.கோ.குலோத்துங்கன்(உள்கோட்டை)

கண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க
கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகில் உள்ள ஆயுதக்களம் என்னும் ஊரில் பிறந்தவர்.
இவர்தம் தமையனார் ஆ.கோ.இராகவன் அவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவர்.
அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர்.ஏறத்தாழ முப்பதாண்டுகளாகக் கண்ணியம் என்னும்
திங்களிதழை நடத்திவருபவர்.அரசியல் சமூக இதழாகத் தொடக்கதில் வெளிவந்தது.
இன்று இலக்கியத் திங்களிதழாக வெளிவருகின்றது.

சென்னை சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்த திரு.குலோத்துங்கன் அவர்கள் அதன் தொழிற்சங்கத்தில் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தவர்.நிறுவனத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் ஆசைக்கு இணங்காமல் பணிவாய்ப்பை இழந்தவர்.நிறைவில் நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றவர்.

பல எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.மாணவ நிலையில்
என்னை அடையாளம் கண்டு என் எழுத்துகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர்.என் நண்பர்கள்
பலரை எழுதச்செய்து வளர்த்தவர்.என் ஒளிப்படத்தைக் கண்ணியம் இதழின் அட்டைப்படமாக
வெளியிட்டு உதவியர். எங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கும் தூய நெஞ்சினர்.எங்களுக்குக் குழந்த பிறந்த செய்தி அவராகக் கேள்வியுற்று
வேலூர் கிறித்தவ மருதுவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வாழ்த்துச் சொல்லிக் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்.

பல நாள் பழகினும் தலைநாள் பழகியது போன்ற அன்பு நெஞ்சினர்.தந்தையாக இருந்து என்னை வளர்த்த அப்பெருமகனார்க்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுரைக்கக் கடமைப்பட்டவன்.திரைப்படப் பாடலாசிரியர் பா.விசய் அவர்களுக்கு இளமைக்காலத்தில் எழுத்தாற்றலை வளப்படுத்தியவர் நம் குலோத்துங்கன் அவர்களே ஆவார்.பா.விசய் அவர்கள் எங்கள் ஊர்க்காரர்.அவர் சிற்றப்பா மாசிலாமணி என் பள்ளிக்கூடத்துத்தோழன்.பா.விசய் அவர்கள் மேல்நிலைக்கல்வி பயின்றபொழுது நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தேன்.அவர் பிஞ்சுவிரலால் அன்று எனக்கு எழுதிய மடலை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

எங்களின் வளர்ச்சியில் எங்கள் பகுதியின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்ட ஐயா ஆ.கோ.குலோத்துங்கனார்க்கு வாழ்த்துகள் சொல்லி மகிழ்கிறேன்.

அவர்களுடன் தொடர்புகொள்ள விரும்புவோர் பின்வரும் முகவரி பயன்படுத்தலாம் :

திரு.ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள்,
17/93, மூன்றாவது முதன்மைச் சாலை
இராம் நகர்
சென்னை - 600082
இந்தியா

செல்பேசி : 91 9940078307

வியாழன், 27 மார்ச், 2008

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பன்முக நோக்கில் திருக்குறள் கருத்தரங்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை 'பன்முக நோக்கில் திருக்குறள்' என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கு ஒன்றினை மார்ச்சு 26, 27, 28 - 2008 இல் நடத்துகிறது. 

26.03.2008 காலை நடைபெற்ற தொடக்க விழாவில் முனைவர் பெ.மாதையன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு அவர்கள் தலைமையுரையாற்றினார்.


பேராசிரியர் முனைவர் தி.முருகரத்தினம் அவர்கள் தொடக்கவிழா சிறப்புரையாற்றினார்.



28.03.2008 இல் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்ற, பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வ.கிருட்டிணகுமார் வாழ்த்துரை வழங்க உள்ளார். தமிழகப் பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்களின் 22 அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.


28.03.2008 காலை 10 மணிக்கு முனைவர் பழ முத்துவீரப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள அரங்கில் நான் தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்(உரை) என்னும் தலைப்பில் கட்டுரை படிக்கின்றேன். இக்கட்டுரையில் திருக்குறளும் பரிமேலழகர் உரையும் தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்களை எவ்வாறு உரைகாண வைத்துள்ளன என்பதைப் பாவாணர், பெருஞ்சித்திரனார், இரா.இளங்குமரனார், பொற்கோ, கலைஞர், குழந்தை, பாவேந்தர் உரைகளின் துணையுடன் விளக்க உள்ளேன். நாளை கட்டுரை வழங்கிய பிறகு என் பக்கத்தில் அதனை வெளியிடுவேன்.

செவ்வாய், 25 மார்ச், 2008

அண்ணா பரிமளம் நினைவுகள்...


அண்ணா பரிமளம்

கண்ணியம் இதழில் அண்ணா பரிமளம் அவர்கள் எழுதிய குறிப்புகள், படைப்புகளைப் பல ஆண்டுகளாகப் படித்துள்ளேன்.கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் வழியாக அண்ணா பரிமளம் அவர்கள் பற்றி அறிந்து வைத்திருந்தேன்.

திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவராக, தந்தை பெரியாரின் தொண்டராக, தமிழகத்தின் அறிவுசான்ற முதல்வராக விளங்கிப் பல இலக்கம் தம்பிமார்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர் அறிஞர் அண்ணா. இவரின் வளர்ப்புச் செல்வமே அண்ணா பரிமளம்.

தந்தையார் அவர்கள்மேல்அவருக்கு இருந்த பற்று அளவிடற்கரிது. தந்தையாரின் படைப்புகளை, படங்களை, ஆவணங்களைத் தொகுத்து அவர்தம் பெயரில் இணையதளம் நிறுவிப் பராமரித்து வந்தார்கள்.

தற்செயலாக அத்தளத்தைப் பார்வையிட்டபொழுது பயனுடைய பல தகவல்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் பக்கத்தில் ஓர் இணைப்பு வழங்கிவிட்டு என் மகிழ்ச்சியை அவர்களுக்குத் தெரிவித்து ஒரு மின்மடலிட்டேன். அவர்கள் எனக்குத் தொலைபேசியில் பேசி வாழ்த்துச் சொன்னார்கள். அண்ணாவின் நூற்றாண்டு ஒட்டி ஒரு பரப்புரை அறிக்கை என் முகவரிக்கு நூற்றுக்கணக்கில் தனித்தூதில் அனுப்பிவைத்தார்கள். எனக்கு மடலும் எழுதியிருந்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற புதுவைச்சிவம் நூற்றாண்டு அரசு விழாவில் பேச வந்தபொழுது என் பெயர் சொல்லி விழாக் குழுவினரை வினவியுள்ளார்கள். என்னைப் பார்க்கும் ஆவலை அனைவரிடமும் வெளிப்படுத்தி, என் தொலைப்பேசி எண்ணைப் பலரிடம் கேட்ட பொழுது தற்செயலாக நான் அங்குச் சென்றேன். அப்பொழுது திரு. தமிழ்மணி உள்ளிட்ட அன்பர்கள் அண்ணா பரிமளம் ஐயா என்னைத் தேடியதாகச் சொன்னார்கள்.

நானும் அவர்களைப் படத்தில்தான் பார்த்திருந்தேன். நண்பர்களின் துணையுடன் அவரைக் கண்டு வணங்கிப் பொன்னி ஆசிரியவுரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை என்னும் இரு நூல்களைக் கொடுத்து மகிழ்ந்தேன். சென்னை வந்து காண்பதாகச் சொல்லி விடைபெற்று வந்தேன்.

அத்தன்பின் ஓரிரு மின்னஞ்சல் விடுத்தேன். அவரைக் காண ஆவலாக இருந்ததேன். இன்று கல்லூரிப்பணி முடிந்து இல்லம் திரும்பியபொழுது சுவரில் காணப்பட்ட செய்தித்தாளில் அண்ணாமகன் மறைவு என்ற செய்தி கண்டு கலங்கினேன்.

பண்புள்ள பெருமகனார் திடுமென நீர்பாய்ந்து மறைவுற்றது வருத்தமளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் கூறிக் கையற்று நிற்கிறேன்.

திங்கள், 24 மார்ச், 2008

புதுவைப் பல்கலைக்கழகக் கருத்தரங்க வாயிலிலிருந்து...

 புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, புதுவை இலக்கியப்பொழில் அமைப்பு நடத்திய கருத்தரங்கிற்குச் சென்று வந்தேன். பல்கலைக்கழகக் கணக்குத் துறையில் உள்ள கருத்தரங்க அறையில் காலை 10.30மணிக்குக் கருத்தரங்கம் தொடங்கியது. புலவர் பூங்கொடி பராங்குசம் வரவேற்புரை. முனைவர் அ.அறிவுநம்பி கருத்தரங்க நோக்க உரையாற்றினார்.

 முனைவர் இரா.திருமுருகனார் தமிழிசைப் பாடல் துறைக்குப் புதுவைச் சிவம் ஆற்றியுள்ள பணிகளை நினைவு கூர்ந்தார். நைவளம் நட்டபாடையாகி, இன்று கம்பீர நாட்டை எனப்பெயர் பெறுவதை விளக்கினார். காரைக்கால் அம்மையார் பாடல் (கொங்கை...), சம்பந்தர் தேவாரம், திரைப்படப் பாடல்கள் (இது ஒரு பொன்மாலைப் பொழுது. என்னவளே...) என்பன நட்டபாடையே என்று விளக்கினார். பாவேந்தர் பல திரைப்பட மெட்டில் அமைந்த பாடல்களைப் பாடியுள்ளதை எடுத்துக்காட்டினார்.

 அரசு இசைக்கல்லூரிகளில் தமிழிசை அறிஞர்களின் பெயர்களை வைக்காமல் தியாகராசர், சியாமா சாத்திரி, தீட்சிதர் எனப் பெயர் வைத்துள்ளதைக் கண்டித்தார். இசை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு என நினைக்கும் போக்கு உள்ளது. கர்நாடக இசை என்பது தமிழர்களுடையது என்றார். பகுத்தறிவாளருக்கு இசையில் ஈடுபாடு இல்லாமல் உள்ளதைக் குறிப்பாகத் தந்தை பெரியாரின் இசைகுறித்த கருத்தை நினைவூட்டினார். அண்ணாவுக்குத் தமிழிசையில் இருந்த ஆர்வத்தைப் பாராட்டினார். புதுவைச் சிவம் தமிழர்களுக்குத் தேவையான கருத்துகளை இசையில் தாளம் தட்டாத பாடல்கள் வழி எழுதியதை விளக்கினார்.

 திராவிட இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட தோப்பூர் திருவேங்கடம் புதுவைச் சிவத்தின் படத்தைத் திறந்துவைத்து உரையாற்றினார். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் திராவிட இயக்க வரலாற்றை நினைவு கூர்ந்தார். திராவிட இயக்கத்தினரின் கோட்பாடுகளாக மூன்றைக் குறிப்பிட்டார். 1.தமிழ்மொழி, இனம் பற்றிய கோட்பாடு 2. சமூகநீதிக் கோட்பாடு 3. பகுத்தறிவுக் கோட்பாடு என்பன அவை. இக்கோட்பாடுகளை வலியுறுத்திக் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் எனத் திராவிட இயக்கத்தினர் பல வடிவங்களில் படைப்புகளைச் செய்தனர். இவ் வடிவங்களைப் புதுவைச்சிவம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.

 வாணியம்பாடியில் பெரியார் 1939 இல் நாடகத் தலைமையேற்றுக் குசேலன் நாடகம் இரணியன் நாடகம் பற்றி தெரிவித்த கருதுகளை நினைவுகூர்ந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு புத்தர் பிறந்த நாளில் வைத்ததற்குக் காரணம் ஆங்கிலேயர் கேக் வெட்டுவது போல் நாங்கள் பிள்ளையார் உடைக்கிறோம் என்றதை நினைவுகூர்ந்தார். இனிக் கோயில்களில் நுழையும் உரிமைப் போராட்டத்தை விட்டுவிட்டு கோயிலுக்குத் தொடர்பு இல்லாதவர்களை வெளியேற்றும் போராட்டம் தேவை என்றார். மக்களை அறிவாளிகளாக மாற்றும் இடங்களை, வாய்ப்புகளைப் பெரியார் விரும்பினார். மூடர்களாக்கும் எவற்றையும் கண்டித்தார்.

 ஒருகாலத்தில் குழந்தைத் திருமணம் நடந்தது. ஒரு காலத்தில் நாற்பது வயதுவரை திருமணம் ஆகாத பெண்கள் சமூகத்தில் இருந்தனர். அலங்கா நல்லூர் சல்லிக்கட்டுக்குத் தடை என்றதும் கொதித்தெழுந்த தமிழக இளைஞர்கள் சேதுக்கால்வாய்த் தடைக்குக் கொதித்து எழாதது ஏன் என்று வினவினார். புதுவைச் சிவம் பெரியார் கொள்கைகளைத் தாங்கி எழுதியுள்ள படைப்புகளுள் சிலவற்றை எடுத்துரைத்தார்.

 பிற்பகல் அமர்வில் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தலைமையில் மூவர் கட்டுரை படித்தனர். வே.ஆனைமுத்து அவர்கள் தம் தலைமையுரையில் தம் பெரியார் இயக்க இணைவு பற்றிய வரலாற்றை நினைவுகூர்ந்தார். ஈழத்துச் சிவானந்த அடிகளின் திராவிடநாடு இதழ் வெளியீட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டினைக் குறிப்பிட்டார். இந்தி எதிர்ப்புப் போரில் 'இந்தி ஒழிக' என முதல் குரல் கொடுத்தவர் அவர் என்றார்.

 கர்ப்ப ஆட்சி என்ற தலைப்பில் பெரியார் இயற்றிய நூல் பற்றியும் அதற்கு எழுந்த எதிர்ப்பு, வரவேற்புப் பற்றியும் எடுத்துரைத்தார். புதுவைச் சிவத்தின் கோகிலராணி நாடகத்தில் உள்ள புராண எதிர்ப்புக் கருத்துகளை எடுத்துரைத்து அவர்தம் படைப்புகளின் சிறப்பினை நினைவுகூர்ந்தார். தமிழுக்கு, தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை, செயல்களை, ஊடங்களைத் தடை செய்யும் ஆட்சி அதிகாரம் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் மனுநீதி, சுக்கிரநீதி உள்ளிட்ட ஐந்து நூல்களின் வழி வடிவமைக்கப்பட்டுள்ளதை அரங்கிற்கு விளக்கினார்.

 நிறைவுரையாகப் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள் அண்ணா
முதலானவர்கள் நாடகம் எழுதுவதற்கு முன்பே புதுவைச் சிவம் நாடகம் படைத்துள்ளார். அக்காலச் சூழலைத் திறனாய்வாளர்கள் மனத்தில் கொண்டு திறனாய வேண்டும். கவிதை, சிறுகதை, நாடகத்துறையில் அவரின் பங்களிப்பு தமிழகத்திற்குச் சரியாக அறிமுகம் ஆகாமல் உள்ளது. அவற்றை அறிமுகம் செய்யவேண்டும் என்றார். பல்வேறு செய்திகளை மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் எடுத்துரைத்துப் புதிய திறனாய்வுச் சிந்தனைகளை அரங்கில் எடுத்துரைத்தார். உருசிய நாட்டுக் கவிஞர் மாயாகாவ்சுகி போல் இவர் தென்னாட்டு மாயாகாவ்சுகி என்று சிவத்தைப் புகழ்ந்தார். புதுவைச் சிவத்தின் படைப்புகள் மாணவர்களுக்கு அறிமுகமான ஒரு நல்ல கருத்தரங்காக இது அமைந்திருந்தது.

 வே.ஆனைமுத்து அவர்களின் பேச்சில் நான் வெளியிட்டுள்ள பொன்னி தொர்பான நூல்கள், பாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வினை நினைவு கூர்ந்தார். அவருக்கு என் நன்றி.என் முனைவர் பட்ட ஆய்வில் புதுவைச்சிவம் பற்றி விரிவாக 1996 இல் எழுதியுள்ளதும் 16.08.1995 இல் புதுவைச் சிவம் வாழ்வும் படைப்புகளும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை படித்துள்ளதும் 02.11.2007 இல் திண்ணை இணையதள இதழில் மறுமலர்ச்சிக் கவிஞர் புதுவைச்சிவம் என எழுதியுள்ளதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்கு

புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும் புதுவை இலக்கியப் பொழில் இலக்கிய மன்றமும் இணைந்து கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்கைப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இன்று 24.03.2008 முற்பகல் 10 மணிக்கு நடத்துகின்றன.

முனைவர் அ.அறிவுநம்பி வரவேற்க, முனைவர் இரா. திருமுருகனார் தலைமை தாங்குகிறார். தோப்பூர் திருவேங்கடம் தொடக்கவுரையும், முனைவர் சுப. வீரபாண்டியன் சிறப்புரையும் ஆற்ற உள்ளனர். தோழர் வே.ஆனைமுத்து திரு. ச. லோகநாதன், முனைவர் சி.இ.மறைமலை (நிறைவுரை) உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.ஆய்வாளர்கள் ஆய்வுரை வழங்குகின்றனர்.

கவிஞர் புதுவைச்சிவம் பற்றி அறிய திண்ணையில் வெளிவந்த என் கட்டுரையைக் காணலாம்.

ஞாயிறு, 23 மார்ச், 2008

புதுச்சேரியில் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. 5

 புதுச்சேரித் தனித்தமிழ் இலக்கியக்கழகமும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவை நடத்தின. 23.03.2008 காலை 10.30 மணிக்குப் புதுச்சேரி அன்னை மீட்பர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சீனு.அரிமாப்பாண்டியன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

 புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் 'பாவாணர் ஆய்வில் சொல்வளச் சுரங்கம்' என்னும் தலைப்பில் அரியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார். பாவாணரின் சொலாய்வுச் சிறப்புகளை இரண்டு மணி நேரம் எடுத்துரைத்தார். அவையோர் மகிழ்ந்தனர். தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரியில் வாழும் அறிஞர் பெருமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வெள்ளி, 21 மார்ச், 2008

புதுச்சேரியில் அயல்நாட்டு அறிஞர்களின் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரி உளவியல் சங்கத்தின் சார்பில் புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் 21.03.2008 மாலைஆறு மணிக்கு அயல்நாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்ற, முனைவர் பாஞ்.இராமலிங்கம் கலந்துரையாடலின் நோக்கம் பற்றி எடுத்துரைக்க உள்ளார். முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி அரசின் மேனாள் கல்வி அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

செர்மணி செம்ணிட்சு தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பீட்டர் செடில்மேயர், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

முனைவர் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

அனைவரையும் புதுச்சேரி உளவியல் சங்கம் அழைக்கிறது.

ஞாயிறு, 9 மார்ச், 2008

புலவர் இ.திருநாவலன் வருகை...

புலவர் இ.திருநாவலனார் அவர்கள் புதுச்சேரியில் புகழ்பெற்ற புலவர். கடற்கரை ஊரான புதுக்குப்பத்தில் பிறந்தவர் (28.06.1940). பல்வேறு அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணி புரிபவர். புதுச்சேரியில் தமிழாசிரியர்களுக்கு மதிப்புக் கூடுவதற்குப் பல்வேறு ஆக்கப் பணிகள் செய்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்றவர்கள்.

தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் பல பள்ளிகளில் தமிழாசிரியராக இருந்து நன் மாணாக்கர் பலரை உருவாக்கிய பெருமகனார். புதுவைப்பல்கலைக்கழகத்தில் யான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது என் அச்சக ஆற்றுப்படை என்னும் நூல் வெளியிட அழைக்கப்பெற்று, ஆசிரியர் போராட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாநோன்பிருந்ததால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. அவர் வரவில்லை என்றாலும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்னும் அன்பர் வழியாக எனக்குச் சிறப்புச் செய்து அழகு பார்த்தவர். வாழ்த்துப்பா எழுதி அனுப்பியவர்.

1992 இல் ஏற்பட்ட தொடர்பு வளர்பிறை போல் வளர்ந்தது. புதுச்சேரியில் அரசுப்பணிக்கு வந்தநாள் முதல் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் அவர்கள் இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து எங்களை மகிழ்வித்தார்கள். அவர்களின் வருகை எங்கள் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தருகிறது. புலவர் பெருமானைப் போற்றி இடப்படும் பதிவு இஃது.

செயங்கொண்டம் பேருந்துநிலையத்தில் கண்ட அதிசயம்...

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் பேரூராட்சியாக உள்ள ஊர். பள்ளிகள், கல்லூரி, நீதிமன்றம், மருத்துவமனை, வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எனப் பல அரசு அலுவலகங்கள் உள்ள ஊர். செயங்கொண்டத்தில் நிலக்கரி நிறுவனம் ஏற்பட உள்ளது. பின்தங்கிய பகுதியான இங்கு அரசு கல்லூரிகள், தொழில்நுட்பப் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் என எதுவும் இல்லை. இங்குள்ள மக்கள் 100 கல் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி, 40 கல் தொலைவில் உள்ள குடந்தை, சிதம்பரம் சென்று கல்வி கற்கும் அவலநிலை. உடையார்பாளையம் வேலாயுதம், செகதாம்பாள் வேலாயுதம், தமிழ்மறவர் பொன்னம்பலனார், சுண்ணாம்புக்குழி கோ.தியாகராசன், ஆ.கோ.இராகவன், க.சொ.கணேசன், முதலான திராவிட இயக்க முன்னோடிகள் தோன்றிய பகுதி இதுவாகும். முனைவர் பொற்கோ, முனைவர் சோ. ந. கந்தசாமி, செ. வை. சண்முகம், மருதூர் இளங்கண்ணன் போன்ற சான்றோர்கள் தோன்றிய பகுதி.

அனைத்து நிலையிலும் கண்டுகொள்ளப்படாத, புறக்கணிக்கப்பட்டுள்ள இவ்வூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாதபடி பேருந்துநிலையம் உள்ளது. கழிவறைக்குச் செல்ல விரும்புவோர் நீண்ட தூரம் நடக்கவேண்டும். இரவுநேரத்தில் பெண்கள் செல்ல அஞ்சுகின்றனர். வயதுமுதிர்ந்தவர்கள், தொலைதூரம் பயணம் செய்தவர்கள் ஓய்வெடுக்க வசதி இல்லை.

பேருந்து நிலையம் பயணிகளுக்கு என்று இல்லாமல் கடைக்காரர்கள் கடை வைக்கும் இடமாக உள்ளமை வேதனை தரும் ஒன்றாகும். அனைத்து இடங்களையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளமையால் பயணிகள் பாடு திண்டாட்டம். மழைக்காலம் என்றால் பயணிகள் நனைந்துகொண்டுதான் நிற்கவேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் பலர் இருந்தாலும் இந்த அவலநிலையை யார் மாற்றுவது?. பேருந்து நிலையங்களில் புத்தகக்கடை வைக்கப்படும் என்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் இப்பேருந்து நிலையத்தை மக்களுக்கு உரியதாக மாற்றுவாரா?.

புதன், 5 மார்ச், 2008

பதிற்றுப்பத்து அறிமுகமும் பாடிய புலவர்களும்

சேர அரசர்கள் பதின்மரைப் பற்றி அறிவதற்குப் பெரிதும் துணைசெய்யும் நூல் பதிற்றுப்பத்து ஆகும்.ஒவ்வொரு அரசரைப் பற்றியும் பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் கொண்டு இந்நூல் விளங்கிப் பதிற்றுப்பத்து என்னும் பெயரினைப் பெற்றது.எனினும் முதற் பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.இப்பொழு எட்டுப் பத்துகளில் அமைந்த எண்பது பாடல்களே கிடைக்கின்றன.இந்நூலைத் தொகுத்தவர்,தொகுப்பித்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு பாடலிலும் வரும் சிறப்புமிக்க தொடரை அப்பாடலின் தலைப்பாக்கி வழங்கியுள்ளார். புண்ணுமிழ் குருதி,ஏறா ஏணி, சுடர்வீ வேங்கை, புலாம்பாசறை,கமழ்குரல் துழாய் என்னும் தலைப்புகள் எண்ணி இன்புறத்தக்கன.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அப்பாடல் அமைந்த துறை,அதன் இசைத்தன்மை குறிப்பிடும் வண்ணம்,தூக்கு,தலைப்பு ஆகியன தரப்பட்டுள்ளன.ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் அமைப்பு உள்ளது.அப்பதிகத்தில் பாடப்பெற்றுள்ள அரசன்,பாடியபுலவர்,அப் பத்துப் பாடல்களின் தலைப்புகள்,பாடியமைக்காகப் புலவர் பெற்ற பரிசில்,அரசனின் காலம் முதலிய குறிப்புகள் காணப்படுகின்றன.பாடல்கள் யாவும் செறிவும் திட்பமும்,நுட்பமும் கொண்டவை.சேரநாட்டு வரலாற்றை அறிவதற்கு இந்நூல் பெரிதும் உதவுகின்றது.

(பட்டியலின் விவரம் முறையே,பத்து,புலவர்,அரசன், பரிசு,ஆண்டு)
2ஆம்பத்து, குமட்டூர்கண்ணனார், இமயவரம்பன்நெடுஞ்சரலாதன், 500 ஊர்கள்,58ஆண்டு

3ஆம்பத்து, பாலைக்கௌதமனார், பல்யானைச்செல்கெழுகுட்டுவன்,பத்துவேள்வி,25ஆண்டு

4ஆம்பத்து,காப்பியாற்றுக்காப்பியனார்,களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல்,நாற்பத்து
நூறாயிரம்பொன்,25ஆண்டு

5ஆம்பத்து, பரணர், நெடுஞ்சேரலாதன்மகன் செங்குட்டுவன் உம்பற்காட்டுவருவாய்,தன்மகன் 55ஆண்டு

6ஆம்பத்து, காக்கைப்பாடினியார், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், நூறாயிரம்காணம் பொற்காசு, 88ஆண்டு

7ஆம்பத்து,கபிலர், செல்வக்கடுங்கோவாழியாதன்,நூறாயிரம்காணம்பொன்,நன்றா என்னும் குன்றேறி நின்று காணும் ஊர்கள்,22ஆண்டு

8ஆம்பத்து,அரிசில்கிழார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, ஒன்பது நூறாயிரம்பொன்,அரசு. 17ஆண்டு

9ஆம்பத்து,பெருங்குன்றூர் கிழார், இளஞ்சேரல் இரும்பொறை, முப்பத்தோராயிரம்பொன்,ஊர், 16ஆண்டு


புண்ணுமிழ் குருதி என்னும் தலைப்பில் அமைந்த பாடல்

பாடப்பட்டோ ன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த போரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண்கொன்று
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்(று)எறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரா஢ நறவின் ஆர மார்பின்
போர்அடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே
கவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவரி
பரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய போரிசை இமயம்
தென்னம் குமரியொ(டு) ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. 25

பெயர் - புண்ணுமிழ் குருதி (அடி 8)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்

பாடலின் பொருள்

அலைகள் மலைபோல் எழுந்து,வெண்மையான சிறுதுளிகளாக உடையும்படி காற்று வீசுகிறது.இத்தகு நிறைந்த நீரையுடைய கரிய கடல்பரப்பினுள் சென்று,அவுணர்கள் கூடிக்காவல் செய்யும் சூரபத்மனின் மாமரத்தை வெட்டிய முருகபெருமான் பிணிமுகம் என்னும் யானைமீது ஏறி வந்தான்.

அதனைப்போலும்(சேரமன்னன்) பகைவரின் மார்பைப்பிளந்து,அக்குருதி பெருக்கெடுத்து ஓடி,நீர்நிலையில் உள்ள நீலநிறம் குங்குமநிறமாக மாறியது.பகைவர்களின் அரண்களை அழித்தாய்.பகைவர்களின் கடப்பமரத்தை வெட்டி அழிக்கும்படி வீரரை ஏவியவன்.அம்மரத்தில் முரசம் செய்தாய்.இவ்வாறு போர்செய்யும் ஆற்றலும்,மாலை அணிந்த மார்பும் அறப்போர் செய்யும் படையையும் உடைய சேரலாதனே!

முருக்கமரங்கள் நிறைந்த மலையில் இரவில் உறங்கும் கவரிமான்கள் பகலில் தாம் மேய்ந்த நரந்தம் புல்லையும் அவை வளர்ந்துள்ள பரந்துவிளங்கும் அருவிகளையும் கனவிலே கண்டு மகிழ்கின்றன.இவ்வியல்பு கொண்ட ஆரியர்கள் நெருங்கி வாழும் புகழ்கொண்ட வடபுலத்து இமயமலை,தெற்கில் குமரி எனும் எல்லைக்கு உட்பட்ட நாட்டில் மன்னர்கள் செருக்குற்றுத் தம்மை உயர்த்திக்கூறிக்கொண்டால் அவர்களின் வீரம் அழியும்படி போரிட்டு வென்றாய்.

மார்பில் பசியமாலை அணிந்து பொன்னரி மாலை அணிந்த யானையின் பிடரியில் ஏறியிருக்கும் நின் புகழைக்கண்டு வியந்தோம்!நீ வாழ்க.

இப்பாட்டில் சேரலாதன் போரில் பகைவர்களின் மார்பைப் பிளந்தபோது அப்புண்களிலிருந்து சிவந்த குருதி வெள்ளமாகப் பெருகியது.அதனால் நீர்க்கழியில் நீல நிறம் மாறுபட்டு குங்கமக் கலவையானது.புண்ணிலிருந்து குருதி மிகுதியாக வெளிப்பட்டதைச் சிறப்பித்து இப்பாடல் பாடுவதால் புண்ணுமிழ் குருதி என்னும் பெயர் பொருந்துகிறது.

மேற்கண்ட பாடலில்வரும் சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான்.இவன் இமயம் முதல் குமரி வரை அரசாண்டவன்.இவனுக்கு இரு மனைவியர்.சோழர்குடியில் வந்த நற்சோணை ஒருத்தி.செங்குட்டுவன்,இளங்கோவடிகளை ஈன்றவள்.மற்றொருத்தி வேளிர்குடியில் வேளாவிக்கோமான் பதுமன் என்பவளின் மகள்.இவள் வழியாக களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல்,ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் என்னும் இரு ஆண்மக்கள் தோன்றினர்(காண்க : பதி.4,6ஆம் பத்து)

இமயவரம்பன் தன்காலத்தில் கடம்பர்கள் என்னும் பிரிவினர் தம் கடல் எல்லையில் கலங்களை மடக்கிக் கடல்கொள்ளையில் ஈடுபட்டபொழுது அவர்களை அடக்கி,அழித்து அவர்களின் காவல்மரத்தை வெட்டுவித்து அதில் முரசு செய்து முழக்கினான்(அகம்.127,347)

இமயவரம்பன் தன்னைப்புகழ்ந்து பாடிய குமட்டூர்க்கண்ணனார்க்குத் தமக்குரிமையான உம்பர்காட்டில் உள்ள வளம்மிக்க ஐந்நூறு ஊர்களையும் வரிநீக்கி வழங்கி,தென்னாட்டு வருவாயில் பாகம்பெறும் உரிமையை முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளான் என்பதை அறியும்பொழுது அவனின் கொடையுள்ளமும் செல்வ வளமும் புலனாகின்றது.

சனி, 1 மார்ச், 2008

அகநானூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்

சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பற்றிய செய்திகளை விரிவாகத் தரும் நூல் அகநானூறு ஆகும்.அகம்+நானூறு என இதனைப் பிரித்துப் பார்க்கலாம். அகப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது என்ற அடிப்படையில் இந்நூல் நானூறு பாடல்கலைக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது. இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நெடுந்தொகை எனவும் இந்நூலை அழைப்பர். இந்நூல் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் என்னும் புலவர் பெருமானால் தொகுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொகுக்கச் செய்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்னும் பேரரசன் ஆவான்.

இந்நூல் முப்பிரிவாகப்பகுக்கப்பட்டுள்ளது.

1.களிற்றியானை நிரை (1-120 பாடல்கள்)
2.மணிமிடைப்பவளம் (121-300 பாடல்கள்)
3.நித்திலக்கோவை (301-400 பாடல்கள்)

அகநானூற்றைத் தொகுத்த புலவர் சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி தொகுத்துள்ளார்.

1,3,5,7,9,11 போன்ற ஒற்றைப்படையில் அமையும் பாடல்கள் பாலைத்திணையில் அமைந்த பாடல்களாகவும் (மொத்தம் 200பாடல்கள்),2,8,12,18 என 2,8 எனவரும் பாடல்கள் குறிஞ்சித்திணையில் அமைந்த பாடல்களாகவும் (மொத்தம் 80 பாடல்கள்),6,16,26,36 என ஆறாம் எண்ணுடைய பாடல்கள் மருதத் திணைப்பாடல்களாகவும் (மொத்தம் 40 பாடல்கள்),4,14,24 என நான்காம் எண்ணுடைய பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்களாகவும்(மொத்தம் 40பாடல்கள்), 10,20,30 எனவரும் பத்தாம் எண்ணுடைய பாடல்கள் நெய்தல் திணைப்பாடல்களாகவும் (மொத்தம் 40 பாடல்கள்) உள்ளன.

அகநானூறு நூலை முதன்முதல் 1920 இல் பதிப்பித்தவர் கம்பர் விலாசம் வே.இராசகோபால் ஐயங்கார் ஆவார். இந்நூலுக்கு நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் உரை வரைந்து வெளியிட்டுள்ளனர். பிற்காலத்தில் பலர் உரை வரைந்துள்ளனர்.

தமிழர்தம் பண்டைய திருமண முறை இந்நூலில் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது (86,136). குடவோலை முறையில் நடந்த தேர்தல் பற்றிய குறிப்பையும் (77) இந்நூல் தருகின்றது. இலக்கியச் சுவையை மிகுதியாகக் கொண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் உள்ளுறை, இறைச்சி போன்ற குறிப்புப் பொருளுடைய பாடல்களை மிகுதியாகக் கொண்டுள்ளது.

அகப்பொருள் பற்றிய செய்திகளை இந்நூல் தருவதுடன் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தருகின்றது. வடநாட்டை ஆண்ட மோரியர் (69,251,281), நந்தர்(251,265), வடுகர் (107,213,253, 281,295,375,381) பற்றிய செய்திகளும் தமிழ்நாட்டை ஆண்ட சேரர் (55,127,149,209,347), சோழர் (60,93,96,123,137,201,213 ,336,356,369,375,385), பாண்டியர் (27,201) பற்றிய குறிப்புகளும் அத்தி(44,376,396), கங்கன்(44), கடலன்(81), கட்டி(44,226), காரி (35,209), கோசர்(15,90,113,196, 205,216,251,262), தித்தன்(152,226), நன்னன் (15,44,142,152,173,199,208, 258,349,356,392,396), பாரி(78,303), பண்ணன்(54,177),பிட்டன் (77,143), புல்லி(61,83,209, 295,311,359,393) போன்ற குறுநில மன்னர்களைப் பற்றிய குறிப்புகளையும் வரலாற்றையும் அகநானூறு அறிவிக்கின்றது.

பண்டைத் திருமணம் பற்றிய பாடல்கள் :

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடி,
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. (86,அகம்.)

கூற்று :வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்.

புலவர் - நல்லாவூர் கிழார்

(பொருள்)

இருள் நீங்கிய விடியல்பொழுழுதில் திங்களை உரோகிணி விண்மீன் சேரும் நல்ல நேரத்தில் உளுத்தம் பருப்பிட்டுச் செய்யப்பெற்ற உணவினை(களி) உறவினர்களுக்கு வழங்கினர். இதனால் ஆரவாரம் இடைவிடாமல் கேட்டது.தி ருமண வீட்டில் புதுமணல் பரப்பி இருந்தனர். விளக்கேற்றி வைத்து மாலைகளைத் தொங்க விட்டிருந்தனர்.தலையில் குடம் ஏந்தியவரும், அகன்ற வாயுடைய மண்பாண்டங்கள் கொண்டவரும், திருமணத்தை நடத்திவைக்கும் முதிய மகளிரும் முன், பின்னாகத் தரவேண்டியவற்றை எடுத்து வழங்கித் திருமணச் சடங்குகளைச் செய்தனர்.

மகனைப் பெற்ற குடும்பம் சார்ந்த மகளிர் ஒன்று கூடி'கற்பினின்று வழுவாமல் நல்ல உதவிகளைச் செய்து நின்னை மனைவியாகப் பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவள் ஆவாய்' என வாழ்த்தினர். மங்கல நீருடன் கலந்த பூக்கள், நெல் அவளின் கூந்தலில் பொருந்தும்படி வாழ்த்தினர். சுற்றத்தார் தலைவியை நோக்கி, 'நீ பெரிய மனை வாழ்க்கைக்கு உரியவளாகுக என வாழ்த்தினர். அவளை என்னிடம் கூட்டி வைத்தனர்.

தனி அறையில் புணர்ச்சிக்காகக் கூடிய அவள் நாணத்தால் தலை குணிந்து புடவைக்குள் ஒடுங்கிக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்புடன் அவள் முகத்தை மூடியிருந்த புடவையைச் சிறிது நீக்கினேன். அவளின் பெண்மை உணர்வு மேலிட பெருமூச்செறிந்தாள். அவளிடம் உன் உள்ளத்தில் உள்ளவற்றை மறைக்காமல் சொல்வாயாக என வினவினேன். பல்வேறு அழகுகளும் பொருந்திய அவள் மகிழ்ந்தவளாகி, முகத்தைத் தாழ்த்தி வெட்கத்தால் தலைகுனிந்தாள். (பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பிய தலைவனைத் தோழி வாயில் மறுத்தாள். அதுபொழுது தலைவன், திருமண முதல்நாள் இரவில் இவ்வாறு தலைவி நடந்துகொண்டாள் என்றான்).


மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.(136, அகம்.)

கூற்று : உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

திணை : மருதம்
புலவர் : விற்றூற்று மூதெயினனார்

(பொருள்)தலைவி ஊடல்கொண்டிருந்தபொழுது தான் குற்றமற்றவன் என்பதைக் கூறித் தலைவன் தலைவியின் ஊடலைப் போக்க நினைத்தான்.தலைவி ஊடல் நீங்கவில்லை. தலைவி கேட்கும்படி தன் நெஞ்சுக்குச் சொல்லியது. 'என் நெஞ்சமே! நெய் மிக்க உணவை உறவினர் உண்ணுமாறு செய்து,பறவைகளின் நிமித்தம் நன்றாக அமைய,வானம் நல்ல ஒளியுடன் விளங்க, திங்கள் உரோகினியுடன் சேரும் நாளில் திருமண இல்லத்தை அழகுப்படுத்தியிருந்தனர். இறையை வழிபட்டனர். மணமுழவுடன் மங்கல முரசுகள் ஒலித்தன.தலைவிக்கு மகளிர் மணநீர் ஆட்டினர்.தலைவியின் அழகை இமைமூடாமல் பார்த்து மகிழ்ந்தனர்.

அறுகம்புல்லின் கிழங்குடன் அமைந்த அரும்புகளுடன் சேரக்கட்டிய வெண்மையான காப்பு நூலை அணிவித்தனர். தூய திருமணப் புடைவையால் அழகுப்படுத்தினர். மழைபெய்தது போல் விளங்கும் தூய பந்தரில் இவளுக்கு உண்டான வியர்வையை நீக்கினர்.

இவளை நன்கொடையாக வழங்கிய முதல்நாள் இரவில் என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுவதும் போர்த்தியதால் வியர்வைத் துளிகள் உடலில் தென்பட்டன. அவ்வியர்வைத் துளிகளை நீக்க காற்று வருவதற்கு வாய்ப்பாக ஆடையைத் திறவாய் எனச் சொல்லி அவள் முகத்தைப் பார்க்கும் ஆவலுடன் ஆடையைப் பற்றி இழுத்ததால் உறையிலிருந்து உருவப்பட்ட வாளைப் போன்று அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையிலிருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். நாணமுற்றாள்.

தன் இருண்ட கூந்தலையே போர்வையாகக் கொண்டு மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து விரைவாக நாணங்கொண்டாள். வணங்கினாள். (முன் நிகழ்ந்தது இது). அத்தகையவள் நாம் பலமுறை எடுத்துச்சொல்லியும் ஊடல் நீங்காதவளாய் ஊடல் கொள்கின்றாளே! இனி இவள் நமக்கு என்ன உறவினள் எனத் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகின்றது.

பண்டைத்தமிழரின் திருமணமுறைகளை விளக்கும் அரிய பாடல்கள் இவை.

(அகநானூற்றுப் புலவர்களின் பட்டியலைப் பின்பு இணைப்பேன்)

ஐங்குறுநூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்

ஐங்குறுநூறு என்னும் நூல் சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. மூன்று அடி சிற்றெல்லையும் ஆறடி பேரெல்லையும் கொண்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலத்தில் அமையும் ஐந்து ஒழுக்கங்களைப் பற்றிய பாடல்களைக் கொண்டது.

ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் என்ற வகையில் பாடல்களின் எண்ணிக்கை ஐந்நூறாகும். ஒவ்வொரு நூறு பாடலும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பட்டு, அப் பத்துப்பாடலும் கருத்தாழம் மிக்க ஒரு தொடரால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது. இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார். எனவே கடவுள் வாழ்த்துடன் 501 பாடல்களைக் கொண்டுள்ளது. எனினும் 129,130 ஆம் பாடல்கள் கிடைக்கவில்லை (ஒளவை.பதி.).

மருதத் திணையை ஓரம்போகியாரும் நெய்தல் திணையை அம்மூவனாரும் குறிஞ்சித் திணையைக் கபிலரும் பாலைத்திணையை ஓதலாந்தையாரும் முல்லைத் திணையைப் பேயனாரும் பாடியுள்ளனர். இதனை,

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருது குறிஞ்சி கபிலர் -கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு

என்னும் பழம்பாடல் குறிப்பிடுகின்றது.

ஐங்குறுநூற்றிணைத் தொகுப்பித்தவன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனாவான். தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தி இந்நூலுள் உள்ளது. உ.வே.சாமிநாதர் 1903 இல் ஐங்குறுநூற்றை முதன் முதல் தமிழுலகிற்குப் பதிப்பித்து வழங்கினார். பின்னர் ஒளவை துரைசாமியார் ஐங்குறுநூற்றிற்கு அரிய உரை வரைந்து பதிப்பித்துள்ளார் (1957,58). இவ்வுரை அறிஞர்களால் போற்றப்படுவது. பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரும் ஐங்குறு நூற்றுக்கு உரைவரைந்துள்ளார். ஈழத்திலும் இந்நூல் உரை வரைந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது.

என் உள்ளங் கவர்ந்த ஐங்குறுநூற்றுப் பாடல்:

'அன்னாய் வாழிவேண் டன்னை நம்படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்(டு)
உவலைக் கூவற் கீழ்
மானுண் டெஞ்சிய கலிழி நீரே' (ஐங்குறுநூறு, 203)

(விளக்கம்) தலைவனுடன் உடன்போக்கு நிகழ்த்தி மீண்ட தலைவியிடம் தோழி, தலைவன் நாட்டின் வளம் பற்றி கேட்டபொழுது,'அன்னையே யான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக! நம் தலைவரது நாட்டிலுள்ள தழை மூடிய கிணற்றிலுள்ள மான்குடித்து எஞ்சிய கலங்கல் நீர் நம் படப்பையில் (தோட்டம்) உள்ள தேன் கலக்கப்பட்ட பாலின் இனிமையை விட இனிது' என்றாள்.

புறநானூற்று உண்மைகள்

தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்குப் பெருந்துணை செய்யும் நூல் புறநானூறு ஆகும்.புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக்கொண்ட நூல் இஃது.எனினும் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை(267,268).பதினான்கு பாடல்களை இயற்றியுள்ள புலவர்களின் பெயர் தெரியவில்லை(244,256,257,263,297,307,323,327,328,333,339,340,355,361)(2+14+=16).சில பாடல்கள் சிதைந்துகாணப்படுகின்றன.ஏறத்தாழ 18o புலவர்களின் பெயர் இந்நூலின்வழி அறியமுடிகிறது(கழகம்).ஒளவை துரைசாமியார் 155 புலவர்களின் வரலாற்றுக்குறிப்புகளை விளக்கியுள்ளார்.

புறநானூற்றில் அமைந்துள்ள பாடல்கள் சில ஒழுங்குமுறையில் உள்ளன.

முதல்பாடல் கடவுள் வாழ்த்து.
2-86 மூவேந்தர்கள் பற்றியன.
87-165 வள்ளல்கள் பற்றியன.
166-181 படைத்தலைவர்கள் பற்றியன.
182-195அறிவுரைப்பாடல்கள்;
196-256 துன்பியல் செய்திகள் இடம்பெறுவன.
257-400 வரையுள்ள பாடல்கள் புறத்திணைகளானஅமைந்துள்ளன.

வெட்சி(257-270),
வஞ்சி,
உழிஞை(271-272),
தும்பை(273-310),
வாகை(311-335),
காஞ்சி(336-366),
பாடாண்(367-400)

எனும் திணை சார்ந்து பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.(நன்றி:சங்க கால மன்னர்களின் காலநிலை,உ.த.நி.)

புறநானூற்றில் புலவர்களின் பெயர் 'அர்' ஈற்றிலும்,அரசர்களின் பெயர் 'அன்' ஈற்றிலும் குறிக்கப்பட்டுள்ளன.
புறநானூற்றில் பண்டைத்தமிழரின் போர்,அறம்,கொடை,மானம்,வீரம் முதலிய இயல்புகள் பதிவாகியுள்ளன.பழந்தமிழ்நூல்களின் வழி அரசன்,புலவர் பற்றிய தெளிந்த வரலாற்றைத் துல்லியமாகக் கணிக்க இயலாமல் இடர்ப்படும் தன்மையை இந்நூலிலும் காண்கிறோம். புறநானூற்றுப் புலவர்களின் பெயர்ப்பட்டியல் அடுத்த பதிவுகளில் உள்ளிடுவேன்.

வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

பத்துப்பாட்டு பாடியவர்கள் பட்டியல்

பத்துப்பாட்டு

தமிழர்களின் பண்டைய வரலாற்றையும்,வாழ்க்கை முறைகளையும், கலைகள், விருந்தோம்பல், ஆட்சிச் சிறப்பினையும் அறிவிக்கும் ஆவணமாக இருப்பன பத்துப்பாட்டு நூல்களாகும். பண்டைத் தமிழகத்தின் பல பகுதிகளைப் பற்றி அறிவதற்கு இந்நூல்கள் பேருதவி புரிகின்றன.இசை,கூத்து பற்றிய அரிய வரலாறு இந்நூல்களில் இடம்பெற்றுள்ளன.தமிழர்களின் அறிவுக்கருவூலமான இந்நூல்களை வழங்கிய புலவர் பெருமக்களைப் பற்றிய பட்டியலை வழங்குகிறேன்.இவர்களின் விரிந்த வரலாறு பின்னர் வெளியிட உள்ளேன்.

பாடியவர்கள் பட்டியல்

1.திருமுருகாற்றுப்படை - நக்கீரனார்
2.பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்
3.சிறுபாணாற்றுப்படை - இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்ததனார்
4.பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5.முல்லைப்பாட்டு - காவிரிப்பூம்பட்டினத்துப்
பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
6.மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
7.நெடுநல்வாடை - மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்
8.குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
9.பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
10.மலைபடுகடாம் - இரணியமுட்டத்துப்
பெருங்குன்றூர்பெருங்கௌசிகனார்

வியாழன், 28 பிப்ரவரி, 2008

கணினியும் இணையப் பயன்பாடும் ஒருநாள் கருத்தரங்கு

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர்கல்லூரியும், சென்னைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் இணைந்து 28.02.2008 காலை 10.30 மணியளவில் கணினியும் இணையப்பயன்பாடும் என்னும் பொருளில் ஒருநாள் பயிலரங்கை மாணவிகள் பயன்பெறும் வண்ணம் நடத்தின.

பயிலரங்கிற்கு வந்திருந்தவர்களைத் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் இராமேசுவரி அவர்கள் வரவேற்றார். தமிழ் இணையப்பல்கலைக்கழக இயக்குநர் திரு.ப.அர.நக்கீரன், பேராசிரியர் சுதந்திரமுத்து, திரு.சானகிராமன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகளை விவரித்தனர். மாணவர்களுக்குக் காட்சி விளக்கமும் தரப்பெற்றன.

பிற்பகல் நடைபெற்ற அமர்வில் முனைவர் மு.இளங்கோவன், திருவாட்டி.மிக்சிமோள் திரு.கண்ணதாசன், திரு.சாகுல் அமீது ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், பிற துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நற்றிணை பாடிய புலவர்கள்

எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிறப்புடையது.இந்நூல் 400 பாடல்களைக்கொண்டது.எனவே நற்றிணை நானூறு எனவும் அழைக்கப்பெறும். ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளைக்கொண்ட பாடலடிகளைக் கொண்டது.அகப்பொருள் செய்திகளை இந்நூல் கொண்டிருந்தாலும் கிள்ளி,குட்டுவன், செழியன்,சென்னி முதலான பெருவேந்தர்களையும் ஆஅய்,ஓரி,காரி போன்ற கொடை வள்ளல்களையும் பற்றிய பல செய்திகளைத் தாங்கியுள்ளது.

அன்னி,மிஞிலி,குழிசி,புல்லி,பழையன்,தித்தன்,நன்னன் போன்ற குறுநிலமன்னர்களையும் தழும்பன்,திருமாவுண்ணி,விராஅன்,வீரை போன்ற மறவர்களைப் பற்றியும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது.நற்றிணையின் 234 ஆம் பாடல் முழுவதும் கிடைக்கவில்லை(?).385 ஆம் பாடலின் பிற்பகுதி கிடைக்கப்பெறவில்லை.இந்நூலின் 56 பாடல்களின் ஆசிரியர்பெயர் காணப்பெறவில்லை.ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 192 என்பர்.நற்றிணைக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வரைந்த உரை அறிஞர்களால் போற்றப்படுகிறது.பெருமழைப்புலவரின் உரைக்குறிப்பு பல விளக்கம் தருவன.இந் நூலில் இடம்பெற்றுள்ள புலவர்கள் பற்றிப் பட்டியலிட்டு விரிவாக எழுதி வைத்துள்ளேன்.பின்னர் வழங்குவேன்.

புதன், 27 பிப்ரவரி, 2008

குறுந்தொகை பாடிய புலவர்கள்

சங்க இலக்கிய நூல்களில் குறுந்தொகைக்கு உயரிய இடம் உண்டு. ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல் நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையும் கொண்டது.இந்நூலில் 401 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கடவுள் வாழ்த்தாக ஒரு பாடலும் உள்ளது.இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவன் பெயர் தெரியவில்லை. இந்நூலின் 307,391 ஆம் பாடல்கள் ஒன்பதடி உள்ளதாகக் குறிக்கும் உ.வே.சா அவர்கள் 391 ஆம் பாடல் சில படிகளில் எட்டடியாக உள்ளது என்கிறார் (ப.5) .ஆனால் 307 ஆம் பாடல் ஒன்பது அடியாகவே எல்லாப்படிகளிலும் உள்ளது. இந்த ஒரு பாடலை நீக்கிவிட்டால் மற்ற நூல்களைப் போலவே 400 பாடலாகக் குறுந்தொகை அமையும் என்கிறார் உ.வே.சா.

இந்நூல் பாடல்களைப் பாடிய புலவர்கள் 205 புலவர்கள் ஆவர். பத்துச் செய்யுட்களைப் பாடிய புலவர்களின் பெயர் தெரியவில்லை. கடவுள் வாழ்த்து பாடிய பெருந்தேவனாரையும் சேர்த்தால் 206 புலவர்கள் குறுந்தொகையைப் பாடியுள்ளமை புலனாகும். இவ்வெண்ணிக்கயில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. (இவை பற்றி விரிவாகப் பின்பு எழுதுவேன்)

திங்கள், 18 பிப்ரவரி, 2008

புதுச்சேரியிலிருந்து தமிழ்க்காவல் இணைய இதழ்...

புதுச்சேரியிலிருந்து அச்சு வடிவிலும் இணையவடிவிலும் பல இதழ்கள் வெளிவருகின்றன.அவ்விதழ்கள் இலக்கியம்,அரசியல்,சமூகம் எனப் பல போக்குடையன.

தெளிதமிழ் என்னும் பெயரில் முனைவர் இரா.திருமுருகனாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் தமிழ்,மொழி,இன,நாட்டு உணர்வுடன் அனைவராலும் விரும்பும் வண்ணம் வெளிவருகிறது.இவ்விதழ் இணைய வடிவிலும் கிடைக்கின்றது. இத்தெளிதமிழ் மாத இதழ் நடத்தியவர்கள் தமிழ்வளர்ச்சிக்கு நாளிதழ் ஒன்று வெளியிட நினைத்தனர்.அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்துவரும் வேளையில் உலகத்தமிழர்களுக்குப் பயன்படும் வண்ணம் தமிழ்க்காவல் என்னும்பெயரில் புதிய இணைய இதழ் ஒன்று தொடங்க உள்ளனர்.

தெளிதமிழின் நாளிதழ் முயற்சிக்கு இணையாகத் தமிழ்க்காவல் இணையவிதழ் வெளிவருகின்றது.வரும் மார்ச்சுத்திங்களில் இதழ் வெளிவர உள்ளது.பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஆசிரியராக இருப்பார்.ஆசிரியர் குழுவில் பேராசிரியர் தேவமைந்தன், திரு.நந்திவர்மன்,முனைவர் மு.இளங்கோவன் உள்ளனர்.

புதுச்சேரியிலும்,தமிழகத்திலும்,உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் தமிழ் மொழி, இலக்கியம்,இனம்,பண்பாடு,வரலாறு சார்ந்த செய்திகளும் கட்டுரைகளும் இடம்பெற உள்ளன.தமிழுக்கு ஆக்கம் தரும் படைப்புகள்,செய்திகள் இடம்பெறும்.ஒலி-ஒளிக் காட்சிகள், ஒளிப்படங்கள் இடம்பெறும்.உலகத்தமிழர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பிவைக்கலாம். விரிவான விளக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பிற்கு :

முனைவர் இரா.திருமுருகனார்,
62,மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி -605001,இந்தியா
கைப்பேசி : + 9362664390
மின்னஞ்சல் :irathirumurugan@yahoo.co.in