நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
# லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
# லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 நவம்பர், 2025

இலண்டன் சிவாப் பிள்ளை மறைவு!

  


இலண்டன் சிவாப் பிள்ளை (1942-2025)

 இலண்டனில் வாழ்ந்து வந்த சிவாப் பிள்ளை அவர்கள் கம்போடியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்குச் சென்றிருந்த நிலையில் மாரடைப்பால் அங்கு இயற்கை எய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவருக்கு வயது 83 ஆகும். கடந்த கால் நூற்றாண்டாக ஐயாவுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். என் தந்தையார் ஒத்த வயதுடைய ஐயா அவர்கள் என் வகுப்புத் தோழர் போல் பழகியவர். முதன் முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழாசிரியர் சங்கத்து மாநாட்டில் கண்டு பழகினேன். அதுமுதல் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, உரையாடியுள்ளோம். 

 சிவாப் பிள்ளை அவர்கள் 1942 மே 9 இல் இலங்கையில் பிறந்தவர். பெற்றோர் சிவ. கணபதி பிள்ளை, நாகம்மா ஆவர். இந்துக் கல்லூரியில் 19 அகவை வரை கல்வி பயின்றவர். பிறகு இலங்கையில் உள்ள மாணவ ஆசிரியர் பயிற்சியைக் (Teacher Training) கோப்பாய்க் கிறித்தவக் கல்லூரியில் பயின்றவர். பொறியியல் படிப்பைக் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேரமாகப் பயின்றவர். இலங்கையில் தமிழ் மாணவர்கள் படிப்பதில் இருந்த இடையூற்றின் காரணமாகவும் செல்வச் செழிப்பின் காரணமாகவும் இலண்டனுக்கு 1967 இல் படிக்கச் சென்றார். Diplomo in Mecanical Enginering பயின்றவர். பகுதிநேரமாகக் கணிப்பொறி, தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்தார். நாட்டிங்காம் பல்கலைக்கழகம் இவர்தம் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டது. பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கணிப்பொறி ஆய்வாளராகப் (1977-1980) பணி புரிந்தார்.  1980 இல் கோல்டுசுமித் பல்கலைக்கழகத்தில் பணியேற்றவர். தமிழ்க் குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பிப்பதைத் தம் பணியாகச் செய்து வந்தவர். 

 இறையீடுபாடு கொண்ட சிவாப் பிள்ளை அவர்கள் தமிழகம் வரும்பொழுதெல்லாம் அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஐயா அவர்களின் விருந்தினராகத் தங்கிச் செல்வது வழக்கம். அண்மையில் தமிழகம் வந்திருந்தபொழுது தருமபுர ஆதீனம்,  தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மணி விழாவில் கலந்துகொண்டு, ஆசிபெற்றவர். 

 கம்போடியா பயணத்தின்பொழுது சிவாப் பிள்ளையின் உயிர் பிரிந்தமையை நினைத்து வருந்துகின்றேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். 

 05.10.2008 இல் தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் சிவாப் பிள்ளை குறித்து நான் எழுதிய கட்டுரையை என் வலைப்பதிவிலும் பதிந்துள்ளேன். ஆர்வலர்கள் படிக்க வருகை தாருங்கள்.


வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்) புதிய விளைச்சல்!

 


ஆசிரியர் திருநாளில் அறிமுகம் செய்கின்றோம்.

தொல்காப்பியத் தொண்டர் ஒருவரின் மறைந்து கிடந்த வாழ்வியலை - தமிழ்ப்பணிகளை நூல்வடிவில் இத்தமிழுலகின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.

பக்கம்: 144

விலை: 200 உருவா

தொடர்புக்கு: muetamil@gmail.com

புலனம்: +91 9442029053

சனி, 30 ஆகஸ்ட், 2025

தொல்காப்பியச் செம்மல் தமிழண்ணல் அவர்களின் 97 ஆம் பிறந்தநாள் விழா!


 சிவகங்கை மாவட்டம், நெற்குப்பையில் அமைந்துள்ள தமிழ்நாட்டு அரசின் பொதுநூலகத் துறையால் அமைக்கப்பட்டுள்ள, “உலகம் சுற்றிய தமிழர் சோமலெ நினைவு - கிளை நூலகம்” சார்பில் 31.08.2025(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.29 மணிக்குத் தொல்காப்பியச் செம்மல் தமிழண்ணல் அவர்களின் 97 ஆம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது. 

 “படிப்போம் பகிர்வோம்” என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில் விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்துக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தமிழண்ணலின் இனிக்கும் இலக்கியம் குறித்து, கலந்துரையாட உள்ளனர். 

 முனைவர் மு. இளங்கோவன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, இணையத்தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவும், சோமலெ அறக்கட்டளை நிறுவுநர் சோமலெ சோமசுந்தரம் அவர்கள் தமிழண்ணல் குறித்த நெகிழ்வுரையாற்றவும் உள்ளனர். 

 தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.


திங்கள், 25 ஆகஸ்ட், 2025

தொல்காப்பியத் தொண்டர் சு. சிவச்சந்திரன்

 

சு. சிவச்சந்திரன் 

[சு. சிவச்சந்திரன் அவர்கள் இலங்கை வேலணையில் பிறந்து, இலண்டனில் வாழ்பவர். தொல்காப்பியப் பற்றாளர். தொல்காப்பியருக்குச் சிலை அமைத்தவர்; தொல்காப்பியத்தை முழுமையாகப் பதிப்பித்த சி. வை. தாமோதரம் பிள்ளைக்கும் சிலை அமைந்தவர். தொல்காப்பிய மறைமொழிக் கழகத்தை நிறுவியவர். தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட இவர் அடிப்படையில் ஒரு பொறியாளர்] 

தொல்காப்பியமும் சைவமும் தமதிரு கண்கள் என்று குறிப்பிடும் சு. சிவச்சந்திரன் ஐயாவின் பணிகளையும் ஈடுபாட்டையும் நினைக்கும்பொழுது எப்பொழுதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு.  “உலகத் தொல்காப்பிய மன்றம்” என்ற அமைப்பை நாங்கள் உருவாக்கித் தொல்காப்பியத் தொண்டில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைந்த இப்பெருமகனாரின் மூன்று பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கப் பணிகளாகும். 1. இலங்கையின் வவுனியாவில் 2023 ஆம் ஆண்டில் தொல்காப்பியருக்குச் சிலை நிறுவியமை, 2. முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் என்னும் ஊரில் தொல்காப்பியத்தை முழுமையாகப் பதிப்பித்த சி. வை. தாமோதரம் பிள்ளைக்குச் சிலை நிறுவியமை(2025). 3. தொல்காப்பிய மறைமொழிக் கழகம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவித் தொடர்ந்து தொல்காப்பியத்தை இலங்கையிலும் இலண்டனிலும் பரப்பி வருகின்றமை. 

சி.வை.தாமோதரம் பிள்ளைக்குச் சிலை நிறுவியமை

சு. சிவச்சிந்தரன் அவர்கள் அடிப்படையில் பொறியியல் கற்றவர். இலண்டனில் வாழ்ந்துவரும் இவர்தம் இல்லத்தில் தொல்காப்பியம் சார்ந்த நூல்களும், பிற நூல்களும் பாதுகாக்கப்படுவதை நேரில் கண்டு வியப்புற்றுள்ளேன். இலண்டன் நாகபூசணி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் தம்மை ஓர் உறுப்பினராக இணைத்துக்கொண்டு, சமயத்தொண்டு ஆற்றுபவர். வாய்ப்பு நேரும் இடங்களிலெல்லாம் தொல்காப்பியச் சிறப்பைப் பேசுவதும் எழுதுவதும் இவருக்கு விருப்பமான செயல்களாகும். இவர்தம் வாழ்க்கைக் குறிப்பை முன்பொருமுறை தெரிந்துகொள்ள முயன்றபொழுது, “மற்றொன்று விரித்தல்” என்று எங்கள் உரையாடல் நீண்டதே தவிர, தேவைப்படும் விவரங்கள் கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் உரையாடி, அவர்தம் வாழ்க்கைக் குறிப்பினை அறிந்தேன். 

சு. சிவச்சந்திரன் இளமை வாழ்வு 

தொல்காப்பியத் தொண்டர் சு. சிவச்சந்திரன் அவர்கள் இலங்கை, வேலணையில் 04.08.1948 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சாந்தலிங்கம் சுந்தரம்பிள்ளை, பாக்கியலட்சுமி சின்னர் என்பனவாகும். சிவச்சந்திரன் அவர்கள் வேலணை தொடக்கப்பள்ளி, மண்டைத்தீவுப் பள்ளி, துரைச்சாமி மகா வித்யாலயம், யாழ்ப்பாணக் கல்லூரிகளில் பயின்றவர்(1965-68). 

1972 இல் சரவணை நாகேசுவரி வித்தியாலயாவில் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். 1976 இல் இலண்டனுக்கு உயர்கல்வி பயில்வதற்குச் சென்றவர். அவ்வகையில் இளம் அறிவியல் - மின்னனுவியல் பொறியியல் படித்தவர் (B.SC; MIET; D.T.L;).  1980 இல் இலண்டனில் இயங்கும் அமெரிக்கத் தொழிலகம் ஒன்றில் பணியில் இணைந்தவர். அங்கு 1980 முதல் 1992 வரை பணிபுரிந்தவர். சு. சிவச்சந்திரன் அவர்கள் 1992 முதல் 2000 வரை இலண்டனில் உள்ள பிரிட்டிசு கல்லூரி ஒன்றில் மின்னணுவியல், கணக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணியாற்றியவர். 

இல்வாழ்க்கை 

சு. சிவச்சந்திரன் அவர்களுக்கு 1983 இல் திருமணம் நடைபெற்றது. இவர்தம் துணைவியார் பெயர் புவனேசுவரி என்பதாகும். இவர்களின் இல்லறப் பயனாய் உமா சிவச்சந்திரன் என்ற மகளும் லிங்கம் சிவச்சந்திரன் என்ற மகனும் வாய்த்தனர். 

சு. சிவச்சந்திரன் அவர்கள் தம் நண்பர்களுடன் இணைந்து, 1988 இல் இலண்டன் ஆங்கிலோ – தமிழ்க் கழகம் London Anglo – Tamil Association என்னும் அமைப்பை நிறுவிச் செயற்பட்டவர். இலண்டனில் தமிழ்ப்பள்ளி ஒன்று உருவாகவும், தமிழிசை, நாடகம், முதலிய கலைகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்ற நோக்கில் இவ்வமைப்பைத் தொடங்கி, மிகச் சிறப்பாக நடத்தினர். 

தொல்காப்பியத்தைக் கற்ற நன்மாணவர் திருவள்ளுவர் என்று கருதும் சிவச்சந்திரனார் தொல்காப்பிய நூற்பாக்களும், திருக்குறள் பாடலடிகளும் பொருந்திப் போவதை எளிமையாக எடுத்துரைத்து மகிழ்பவர். “அகர முதல் னகர இறுவாய்” என்ன்னும் தொல்காப்பிய அடிகள் திருக்குறளில் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று விரிவதையும், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்பது, “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்” என்னும் குறளாக வளர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டு உவப்பவர். 

“மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்” 

எனத் தொடங்கும் நூற்பாவை எடுத்துக்காட்டி அந்நாளில் திருமால் வழிபாடும், முருக வழிபாடும் தமிழ்நிலமாம் முல்லை(காடு), குறிஞ்சி(மலை) நிலங்களில் இருந்தமையை எடுத்துரைத்து இறைப்பெருமை பேசுபவர். 

தொல்காப்பியச் சிந்தனையில் நாளும் வாழ்ந்துவரும் சு. சிவச்சந்திரப் பெருமகனார் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைபெற்றுப் புகழுடன் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன்.

சி.வை.தா. சிலையைத் திறந்துவைத்தல்








புதன், 4 ஜூன், 2025

மலேசியாவில் முத்தமிழ்ப் படிப்பகம் …

 

முத்தமிழ்ப் படிப்பகம் வாயில்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வாழ்ந்த நெல்லை இரா. சண்முகம் அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஆழமாகச் சிந்தித்தவர்; தம் எண்ணங்களை எழுத்துகளாக்கி, இதழ்களில் வெளியிட்டவர்.  1951 - 52 ஆம் ஆண்டுகளில் தொல்காப்பியம் குறித்த பல ஆழமான கட்டுரைகளை வரைந்து, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழில் வெளியிட்டவர். இவ்வுண்மைகள் தெரியத் தொடங்கிய நாளிலிருந்து மலேசியாவில் வாழ்ந்துவரும் ஆசான் மன்னர் மன்னன் மருதை, இசைத்தென்றல் நா. மாரியப்பனார், எழுத்தாளர் செ. குணாளன் முதலானவர்களைத் தொடர்புகொண்டு இரா. சண்முகனார் குறித்த மேலதிக விவரங்களைப் பெற்று வருகின்றேன். இரா. சண்முகனாரின் நூல்கள், கட்டுரைகளைத் தொகுப்பதும், அவரின் வாழ்வியலைத் தெரிந்துகொள்வதும் என் முதன்மை நோக்கமாக இப்பொழுது உள்ளது. 

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்ந்துவரும் மூத்த அறிஞர்கள் பலரிடம் இரா. சண்முகம் குறித்து வினவிப் பார்த்தேன். எனினும் நான் எதிர்பார்த்த அளவுக்குச் செய்திகள் அவர்களிடமிருந்து கிடைத்தில. அடுத்து, மலேசியாவில் உள்ள நூலகங்களில் இரா. சண்முகனாரின் நூல்களும் அவரைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள நூலகங்களைப் பற்றித் தேடத் தொடங்கினேன். அப்பொழுதுதான் கோலாலம்பூரின் செந்தூல் பகுதியில் முத்தமிழ்ப் படிப்பகம் என்னும் பெயரில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருவதை அறிந்தேன். முத்தமிழ்ப் படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்று, இரா. சண்முகனாரின் நூல்கள் தங்கள் படிப்பகத்தில் உள்ளனவா? எனவும் அவர் குறித்த மேலதிக விவரம் கிடைக்குமா? எனவும் கேட்டேன். நூலகப் பொறுப்பாளரைக் கேட்டு மறுமொழி தருவதாகத் திருவாளர் பெ. இராமன் அவர்கள் தெரிவித்தார்கள். எளிமையாகத் தொடர்புகொண்டு, உதவிபெறும் வகையில் பெ. இராமன் அவர்களின் நட்பு கிடைத்தமை மகிழ்ச்சியளித்தது. 

முத்தமிழ்ப் படிப்பகம் அறுபத்தேழு ஆண்டுகளுக்கு(1958) முன்னர்த் தொடங்கப்பட்ட படிப்பகம் எனவும், இங்கு அரிய நூல்கள் பல பாதுகாக்கப்படுகின்றன எனவும் நண்பர்கள் வழியாக அறிந்தேன். எனவே இந்த நூலகத்தைப் பார்வையிட வேண்டும்  என்ற எண்ணம் நெஞ்சில் மேலெழுந்தவண்ணம் இருந்தது. அதற்குரிய நாளுக்காகக் காத்திருந்தேன்.

அண்மையில் முத்தமிழ்ப் படிப்பகத்தைப் பார்க்கும் சூழல் கனிந்தது. படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் ஐயாவுக்கு என் வருகையைத் தெரிவித்தேன். நூலகப் பார்வைக்காக மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிட்டேன். கோலாலம்பூர் அருகில் உள்ள பெட்டாலிங்கு செயாவில் அமைந்துள்ள அருக்காணி மையத்தில் இரவில் தங்குவதற்குரிய உதவியை மருத்துவர் செல்வம் செல்லப்பன் செய்திருந்தார். அதன்படி இரவு சென்று அருக்காணி மையத்தில் ஓய்வெடுத்தேன்.  ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும் நானும் திட்டமிட்டபடி மறுநாள் காலைப்பொழுதில் சந்தித்தோம். காலையில் பசியாறிவிட்டு, மகிழுந்தில் செந்தூல் பகுதியை அடைந்து, நூலக வாயிலில் காத்திருந்தோம். சில நொடிப்பொழுதில் பெ. இராமன் அவர்கள் வந்து, எங்களை வரவேற்றுப் படிப்பகத்துக்கு அழைத்துச் சென்றார். அழகிய மாடிக்கட்டடத்தில் முத்தமிழ்ப் படிப்பகம் இயங்குவதை அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன். பேழைகளில் தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படுவதும் ஆர்வலர்கள் வருகைபுரிந்து, நூல்கள், செய்தி ஏடுகளைப் படிப்பதும் வழக்கமாக உள்ளதை அறிந்தேன். நூல்களின் பட்டியல் கணினி வடிவப்படுத்தும் முயற்சி நடந்து வருவது பாராட்டத்தக்கது.

பெ. இராமன் அவர்களைச் சிறப்பிக்கும் மு.இளங்கோவன். 
அருகில் மன்னர் மன்னன். 

முத்தமிழ்ப் படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் அவர்களின் முன்னோர் ஊர் காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ஆகும். இவர் மலேசியாவின் பெட்டாலிங்கு செயாவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை மலேசியாவில் முடித்து, கல்லூரிப் படிப்பைத் தமிழகத்தில் நிறைவுசெய்தவர். நீண்ட காலமாக மலேசியாவில் வாழ்ந்து வரும் இவர் தணிக்கைத் துறையில் மிகுதியான பட்டறிவுகொண்டவர். முத்தமிழ்ப் படிப்பகத்தில் தணிக்கைப் பணிகளில் ஈடுபட்டு, உழைத்தவர். பின்னாளில் முத்தமிழ்ப் படிப்பகத்தைத் தலைமை தாங்கி, மிகச் சிறப்பாக வழிநடத்தும் பெரும்பணியைச் செய்து வருகின்றார். முத்தமிழ்ப் படிப்பக வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு பெருந்துணையாக உள்ளது. படிப்பகத்துக்குப் புதுப்புது வசதிகளை ஏற்படுத்தித் தருவது, புதுப்புது நூல்களை வாங்கிச் சேர்ப்பது, அறிஞர்களை வரவேற்று, நூலகச் சிறப்புகளை எடுத்துரைத்து விருந்தோம்பி, வழியனுப்புவது, இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது, மாணவ, மாணவியர்கள் நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில்  அவர்களுக்கு உரிய வழிகளைக் காண்பது என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். 

முத்தமிழ்ப் படிப்பகம் 14.04.1958 ஆம் ஆண்டு, இரயில்வே பட்டறையில் பணியாற்றிய 19 தமிழார்வலர்களால் கீற்றுக் கொட்டகையில் தொடங்கப்பட்டது என்று அறிந்தேன். மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவராக விளங்கிய திருவாளர் மா. சொக்கலிங்கம் அவர்கள்தான் “முத்தமிழ்ப் படிப்பகம்” என்ற பெயரைச் சூட்டினார் என்றும் அறிந்தேன். 

முத்தமிழ்ப் படிப்பகத்தின் நோக்கங்கள்: 

1.   மலைநாட்டில்  தமிழ் மொழியின் நிலையை உயர்த்துவதற்கு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்தல்

2.   அரசியல் கலப்பில்லாத தமிழ்ச் சங்கங்களுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து பணிசெய்தல்

3.   மலைநாட்டுத் தமிழ் மக்களிடையே தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குப் பரப்புரை செய்தல்

4.   நன்கொடையாக நிதியையும் நூல்களையும் வழங்கும்படி உறுப்பினர்களையும் நலன் விரும்பிகளையும் ஊக்குவித்தல்

5.   படிப்பகத்தில் நூல்களைப் படிப்பதற்கும் இரவல் பெற்றுச் சென்று வாசிப்பதற்கும் உறுப்பினர்களையும் நலன் விரும்பிகளையும் ஊக்குவித்தல்

6.   கூட்டங்கள், கொண்டாட்டங்கள், போட்டிகள், சொல்லாடல்கள், விழாக்கள், காட்சிகள், நாடகங்கள் முதலியவற்றை நடத்துதல்

7.   மேற்கண்ட நோக்கங்களைச் செயலாக்க, நடைமுறையில் உள்ள அரசாங்க விதிகளுக்கேற்ப மாத, வார, தினசரி அச்சுத் தாள்களைத் தயாரித்து வெளியிடுவதுடன், துண்டுப் பிரசுரங்களையும் உறுப்பினர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகித்தல்

 


முத்தமிழ்ப் படிப்பகம் என்ற பெயரில் 20.03.1959 இல் இப்படிப்பகம் பதிவுசெய்யப்பட்டது. 1960 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி, தைப்பூசம் போன்ற நாட்களில் உண்டியல் ஏந்தி காசு, திரட்டிப் படிப்பகத்தைப் படிப்படியாகத் தமிழார்வலர்கள் வளர்த்தெடுத்தனர். இசைக்கச்சேரிகள், இலக்கிய நிகழ்வுகள் நடத்தியும், திரைப்படங்களை வெளியிட்டும் காசு திரட்டினர். தன்னலம் கருதாமல் தமிழ்நலம் கருதி உழைத்த, அப்பெருமக்கள் யாவரும் நம் நன்றிக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். 27.06.1971 இல் முத்தமிழ்ப் படிப்பகம் 65, ஜாலான் செந்தூல் என்ற முகவரிக்கு இடம் மாறியது. இந்தக் கட்டடத்தின் உரிமையாளரான சீனர் ஒருவர் இந்தக் கட்டடத்தை 48, 250 ம.ரி. விற்க முன்வந்தார். இதனைப் பயன்படுத்திப் படிப்பகத்தின் அறங்காவலர்களும் பொறுப்பாளர்களும் பல வழிகளில் முயன்று படிப்பகத்திற்காக இக்கட்டடத்தை வாங்கியுதவினர். ஒவ்வொரு ஆண்டும் படிப்பகத்தின் பொறுப்பாளர்கள் கூடி, பொதுக்குழுவைக் கூட்டுவதையும், புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதையும் வழக்கமாகச் செய்து, படிப்பகத்தை நல்ல நிலையில் நிர்வாகம் செய்துவருகின்றனர். படிப்பகத்தின் சார்பில் மாமாங்க மலர், வெள்ளி விழா மலர், மணிவிழா மலர் முதலியன வெளியிடப்பட்டுள்ளன. முத்தமிழ் என்னும் பெயரில் செய்தி மலரும் வெளியிடப்பட்டுள்ளது. முத்தமிழ்க் கதிர் என்னும் பெயரில்  காலாண்டுச் செய்தி இதழ் ஒன்றும் வெளிவருகின்றது.

 

நூல் பேழைகளின் அருகில் மு.இளங்கோவன்


மு.இளங்கோவனை வரவேற்கும் தலைவர் பெ. இராமன், 
அருகில் ஆசான் மன்னர் மன்னன்


முத்தமிழ்ப் படிப்பகம் நூலகமாகச் செயல்படுவதுடன் மாணவர்களுக்குக் கல்விக்கூடமாகவும் செயல்படுகின்றது. மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்குக் கணினிக் கல்வியை இலவசமாக வழங்குவதற்கு உரிய வசதிகளும் இப்படிப்பகத்தில் உள்ளது. 

முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு மலேசியாவுக்கான இந்தியத் தூதர்களும், இலங்கைத் தூதர்களும் வருகைபுரிந்துள்ளனர். அவர்களால் இயன்ற பங்களிப்புகளை இந்தப் படிப்பக வளர்ச்சிக்கு வழங்கியுள்ளனர் என்பதை அறிந்தபொழுது மகிழ்ச்சி ஏற்பட்டது. அதுபோல் மலேசியாவின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், தமிழறிஞர்கள் வருகைபுரிந்து, முத்தமிழ்ப் படிப்பகத்துக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து செல்லும் தமிழறிஞர்கள் பலரும் முத்தமிழ்ப் படிப்பகத்தின் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டியுள்ளனர். அவ்வகையில் சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம், உவமைக்கவிஞர் சுரதா, பாவலரேறு பெருஞ்சித்திரனார்(09.05.1974), முனைவர் தமிழண்ணல், முனைவர் மு. தமிழ்க்குடிமகன், முனைவர் கு. ஞானசம்பந்தன், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், இரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், தீபம் பார்த்தசாரதி, மருத்துவர் இரா. கலைக்கோவன், எம்.எஸ். உதயமூர்த்தி, முதலானவர்கள் வருகைபுரிந்த பெருமை இம் முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு உண்டு.

 பாவலரேறு பெருஞ்சித்திரனார் கையொப்பம்


உவமைக் கவிஞர் சுரதா கையொப்பம்

முத்தமிழ்ப் படிப்பகத்தில் சற்றொப்ப இருபத்தைந்தாயிரம் நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றுள் தமிழ் நூல்கள் 22519 எனவும், 2013 நூல்கள் ஆங்கில நூல்கள் எனவும், 1055 மலாய் நூல்கள் எனவும் புள்ளிவிவரங்கள் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அச்சான நூல்களுடன் தமிழகத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் வெளியிட்ட நூல்களும் இங்கு உள்ளன. நான் எழுதிய சில நூல்களையும் அன்பளிப்பாக நூலகத்துக்கு வழங்கினேன்.  இரா. சண்முகம் குறித்த அரிய நூல்கள், விளக்கங்கள் சிலவற்றை இப் படிப்பகத்தில் படித்துப் பயன்கொண்டேன். தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டேன். இந்த நூலகத்தின் நினைவுகளைச் சுமந்துகொண்டு பெட்டாலிங்கு செயாவில் மாலையில் நடைபெறும் அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமானேன்….

 

வியாழன், 27 பிப்ரவரி, 2025

முனைவர் சி. இலட்சுமணன்

 

முனைவர் சி. இலட்சுமணன் 

[ முனைவர் சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை முதலியவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். களப்பணியில் பல ஓலைச்சுவடிகளைத் தொகுத்து, தமிழ்ப் பல்கைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியவர். நூலாசிரியர்; கட்டுரையாசிரியர்; தமிழ் ஆய்வறிஞர். தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழினை நடத்திவருபவர். பதிப்புப் பணிகளில் ஆழங்கால்பட்ட அறிவுடையவர்.] 

    புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாகப் பயின்றபொழுது(1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்யும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது ஆய்வுக்குரிய நூல்களைப் பார்வையிடவும் அறிஞர்களைச் சந்தித்து, தரவுகளைத் தொகுக்கவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வது வழக்கம். இளையோர்களாகிய எங்களுடன்  அந்நாளில் உரையாடி, எங்களுக்கு வேண்டிய உதவிகளை மகிழ்ச்சியாகச் செய்தவர் சி. இலட்சுமணன் ஆவார். ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் அவர்கள் பணியாற்றிய காலத்தில் பலமுறை சந்தித்து உரையாடிய நினைவுகள் மேலிடுகின்றன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரை படிக்கச் செல்லும்பொழுதெல்லாம் அவரைக் கட்டாயம் கண்டு, உரையாடுவது வழக்கம். பலவாண்டுகளுக்கு முன்னர் இவர் ஆய்வுத்துறையில் உழைத்தமை போன்று இன்றும் தொடர்ந்து உழைத்து வருவதை அறிந்து மகிழ்கின்றேன். நாகர்கோவிலில் வாழ்ந்த அறிஞர் சி. சுப்பிரமணியம் ஐயா அவர்களைப் பற்றி அறிவதற்குத் தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தொடர்புகொண்டு, உரையாடிய சுற்றில் மீண்டும் பலவாண்டுகளுக்குப் பிறகு சி. இலட்சுமணன் அவர்களுடன் உரையாடி, அரிய செய்திகளை அடிக்கடிப் பெற்று வருகின்றேன். அவர்தம் தமிழ் வாழ்வினைத் தமிழுலகின் பார்வைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ன்றேன். 

சி. இலட்சுமணன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

முனைவர் சி. இலட்சுமணன் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள மதுசூதனபுரம் என்னும் ஊரில் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் தி. சின்ன நாடார், இல. சுப்பம்மை ஆகும். இவருடன் பிறந்தவர்கள் நால்வர் ஆவர். 

சி. இலட்சுமணன் குளத்துவிளை என்னும் ஊரில் முதல் ஐந்து வகுப்புகள் வரை பயின்றவர். ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை புத்தளம் என்னும் ஊரில் அமைந்துள்ள இலண்டன் மிசனரிகளால் தோற்றுவிக்கப்பட்ட(LMPCH) உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். புகுமுக வகுப்பினை நாகர்கோவில்  இந்துக் கல்லூரியில் (1970-71) பயின்றவர். இளங்கலைப் பட்ட வகுப்பினைப் பொருளாதாரப் பாடத்தினை முதன்மைப் பாடமாக எடுத்து, ஆங்கில வழியில் பயின்றவர். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை இந்துக் கல்லூரியில் பயிலும்பொழுது பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்கள் இவருக்குத் தொல்காப்பியம் கற்பித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக அஞ்சல் வழியில் இளங்கலைக் கல்வியியல் பயின்றவர். 

சி. இலட்சுமணன் தம் முதுகலைக் கல்வியை முடித்தவுடன் மதுரையில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றினார். இக்கல்லூரியின் சார்பில் இயங்கிய அச்சகத்தில் பதிப்புப் பணிகளைக் கவனித்து வந்தவர். 1983 இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்கள் பணியாற்றியபொழுது, சி. இலட்சுமணன் தொகுப்பூதியத்தில் அங்குப் பணியில் இணைந்தவர். 1994 முதல் தொழில் நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்தவர். 

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது, திரு புட்பம் கல்லூரியில் இணைந்து பகுதி நேரமாக ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினைப் “பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி” என்னும் தலைப்பில் செய்து, ஆய்வறிஞரும் பேராசிரியருமான மு. சண்முகம் பிள்ளையின் பன்முகத் தமிழ்ப்பணியினை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். 

தஞ்சையில் வாழ்ந்த இலக்கண அறிஞரும் கரந்தைக் கல்லூரிப் பேராசிரியருமான ச.பாலசுந்தரம் அவர்களின்  உரைச்சிறப்பினை ஆராயும் முகமாகத் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பும் உரைகளும் (பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை) என்னும் தலைப்பில் தம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்து பட்டம் பெற்றவர். இவ்வாய்வில் தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளிலிருந்து பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை வேறுபடும் திறத்தினை மதிப்பிடுவது ஆய்வாளரின் நோக்கமாக இருந்தது. 

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது ஓலைச்சுவடித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் வழியாக ஆய்வுப்புலத்தில் நல்ல பயிற்சிபெற்றார். ஓலைச்சுவடிகளைத் தொகுத்தல், பாதுகாத்தல், பதிப்பித்தல் முதலிய பணிகளில் ஆர்வமுடன் செயல்பட்டவர். எட்டாண்டுகள் இப்பணியில் இருந்து, பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து, அரிய ஓலைச்சுவடிகள் பலவற்றைத் தொகுத்து, பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியுள்ளார். 

மு. சண்முகம் பிள்ளை, அடிகளாசிரியர், த.கோ.பரமசிவம் உள்ளிட்ட அறிஞர்களுடன் சி. இலட்சுமணன் பணியாற்றி, ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்ட பெருமைக்குரியவர். அவ்வகையில் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்புக்குச் சொல்லடைவு தயாரித்தமை, கலியுகப் பெருங்காவியம் என்னும் மூவாயிரம் பாடல்கள் கொண்ட நூலுக்குப் பாடவேறுபாடுகளைக் கண்டுணர்ந்து எழுதியவர். சித்த மருத்துவ வாகட நிகண்டு பணியினையும் செய்துமுடித்தவர். அறிஞர் த.கோ.பரமசிவம் அவர்களின் பணிக்காலத்தில் உருவான சுவடி விளக்க அட்டவணை ஐந்தாம் தொகுதியையும் எழுதி, முடித்தவர். 

தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய பல்வேறு சான்றிதழ் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தியும் தமிழகத்தின் பல ஊர்களில், பல பொருண்மைகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியும் தம் தமிழ்ப்பணியினைச் செய்தவர். 

சி. இலட்சுமணன் இல்லற வாழ்க்கை 

சி. இலட்சுமணன் அவர்கள் 11.12.1981 ஆம் ஆண்டில் சரசுவதி அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அமுத சுவாமிநாதன், அபிரேகா ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். சி. இலட்சுமணன் அவர்கள் தம் பிறந்த ஊரில் தமிழியல் ஆய்வுகள் பதிவு மையம் என்னும் பெயரில் ஆய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். தமிழ் ஆய்வுலகுக்குப் பெரும் பங்களிப்பு நல்கிய அறிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் வெளியிடுவதை இந்த மையம் சிறப்பாகச் செய்து வருகின்றது. தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து, அந்த இதழினைச் சிறப்பாகவும் நடத்திவருகின்றார். 

முனைவர் சி. இலட்சுமணன் தமிழ்நூல் கொடை: 

1.   சுவடி விளக்க அட்டவணை, ஐந்தாம் தொகுதி(தொகுப்பாசிரியர்),1989

2.   வாழ்வியல் சிந்தனை,1995

3.   பேரா.மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி, 2003

4.   தமிழக வரலாற்றறிஞர்கள், 1993

5.   காகிதச்சுவடி ஆய்வுகள், 2000

6.   பதிப்பு நிறுவனங்கள், 2002

7.   சுவடிப் பதிப்பாசிரியர்கள், 2003

8.       பதிப்பியல் நெறிமுறைகள், 2003

9.       ஆய்வுலகு போற்றும் தமிழறிஞர்கள்

10.   வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை

 

 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன்

 

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் 

[துரை. முத்துக்கிருட்டினன் கரந்தைக் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பெரும்புலமையுடையவர். பன்னூலாசிரியர். குடந்தையில் பிறந்த இவர் சிங்கப்பூரிலும் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.] 

சிங்கப்பூரில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சிலவாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வாய்த்தது. அப்பொழுது அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றித் தம் நிறைபுலமையால் அவையினரை "மகுடிக்கு அடங்கும் பாம்புபோல்" அடக்கினார். அவர் உரையைத் தொடர்ந்து யான் உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது. சிலப்பதிகாரத்தில் ஈடுபாடுகொண்ட மாணவனாகிய எனக்கு இக்காலத்தில் இதுபோலும் சிலம்பினைக் குறித்து உரையாற்றும் பெருமக்கள் உள்ளனரே என்று வியப்புற்றேன். என் மகிழ்வை அவையில் வெளிப்படுத்திப் பேசினேன். நிகழ்ச்சியின் நிறைவில் துரை. முத்துக்கிருட்டினனாரின் உரைக்குப் பாராட்டுத் தெரிவித்து, விடைபெற்றுத் தமிழகம் திரும்பினேன். அதன் பின்னர் ஆண்டுகள் பல கடந்தன. 

தொல்காப்பிய மன்றத்தைச் சிங்கப்பூரில் கட்டியெழுப்புவதற்கு அருமை நண்பர் திரு. காமராசனாரின் பெருந்துணையுடன் ஓர் இலக்கியச் சந்திப்பைச் சிலவாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினோம். சிங்கப்பூர் அறிஞர் பெருமக்கள் பலரும் எங்கள் முயற்சிக்குப் பேருவகையுடன் ஆதரவு நல்கினர். அப்பொழுது மீண்டும் துரை. முத்துக்கிருட்டினனாரைச் சந்திக்கும் வாய்ப்பு கனிந்தது. அதுபொழுது அவர் கையுறையாக வழங்கிய அரும்பெரும் இலக்கண ஆய்வு நூலாகிய “ஒருதலைக் காமம்” (கைக்கிளை – தொல்காப்பியம்) என்னும் நூலின் படியைப் பெற்றுக், கொண்டுவந்தேன். வந்தவுடன் அந்த நூலின் ஆய்வுப்போக்கையும், நோக்கையும் படித்து மகிழ்ச்சியுற்றேன். 

தொல்காப்பியரின் கைக்கிளை குறித்த கருத்தினைப் பிற்கால உரையாசிரியர்கள் எவ்வாறு பிழைபட உணர்ந்து, பொருளுரைத்துள்ளனர் என்பதையும் அந்தப் பிழைப்பட்ட பொருளைப் பிற்காலத்து அறிஞர்கள் தலைமுறைதோறும் தொடர்ந்து கடத்திவந்துள்ளனர் என்பதையும் அறிஞர் துரை. முத்துக்கிருட்டினனார் அந்த நூலில் சிறப்பாக விளக்கியிருப்பார்கள். இந்த நூல் இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுக்குரிய இடுநூலாகும். அறுநூற்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைக் காட்டி, மிகச் சிறந்த ஆய்வு நூலாக இதனைப் படைத்திருப்பார். இந்த ஆய்வினை நெறிப்படுத்திய அறிஞர் பெருந்தகை பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் ஆவார்கள். 

ஒருதலைக் காமம் (கைக்கிளை – தொல்காப்பியம்) நூலின் அமைப்பு 1. நுழைவாயில், 2. மண்ணின் மணமும் பெண்ணின் குணமும், 3. கைக்கிளை இலக்கணம் உரைத்தவரும்- உரைத்தவறும், 4. கைக்கிளை ஒழிபும் பிழிவும், 5. மகளிர் மனத்தின் உறுதியும் மணத்தில் உறுதியும் 6. முடிவுரை என்றவாறு இயல் பிரிப்பினைக்கொண்டு, அமைந்துள்ளது. கைக்கிளை குறித்து, இலக்கண ஆசிரியர்களும், உரையாசிரியர்களும், பிற்காலத் தொல்காப்பிய ஆய்வாளர்களும் கொண்டிருந்த கருத்துகளைத் தொகுத்தும் வகுத்தும், தாம் கண்ட ஆய்வு உண்மைகளை நிறுவ இவர் எடுத்துள்ள முயற்சியும் சான்றுகளும் ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன. ஆய்வின் இயல் பிரிப்பினை மேலோட்டமாகப் பார்ப்பவர்க்குக் கூட, இந்த ஆய்வின் பெருமை தெற்றென விளங்கும். நூலினைப்  படித்த கையோடு, முத்துக்கிருட்டினரின்  நினைவு என் நெஞ்சில் நிலைத்துப் படிந்தது. 

தொடர்ந்த என் தொல்காப்பியத் தேடலில் முத்துக்கிருட்டினர் அவர்களை மீண்டும் நினைவுகூரும் வாய்ப்பு கனடாவில் நடைபெற்ற கனடா தொல்காப்பிய மன்றத்தின் ஆராய்ச்சி மாநாட்டின்பொழுது மீண்டும் துளிர்விட்டது. தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சிக்கு அவரின் படத்தை மீண்டும் தேடத் தொடங்கியபொழுது,  இப்பெருமகனாரின் வாழ்வியலும் பணிகளும் தமிழுலகின் கவனத்திற்கு வரவில்லையே என்று கவலைகொண்டிருந்தேன். அண்மையில் என் நண்பர் முனைவர் இரா. அருள்ராசு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது  துரை. முத்துக்கிருட்டினனாரின்  பெருமையை இருவரும் அசைபோட்டோம். இவர்தம் ஆற்றலையும் பெரும்புலமையையும்  தமிழுலகுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் எதிர்காலத்திற்கு ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் என்றும் கருதி,  எழுதி, அறிமுகப்படுத்துவதில் மகிழ்கின்றேன். 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொருக்கை என்னும் ஊரில் வாழ்ந்த உழவர் குடியைச் சார்ந்த துரைசாமி பிள்ளை, இலக்குமி அம்மாள் ஆகியோரின் மகனாக 01.06.1947 இல் துரை. முத்துக்கிருட்டினன் பிறந்தவர். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரில் பயின்றவர்.  ஆறு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை கும்பகோணத்தில் அமைந்துள்ள சிறிய மலர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். தம் கல்லூரிப் படிப்பைத் தஞ்சை- கரந்தையில் அமைந்துள்ள புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்றவர் (1966-1970). கண்டிப்புக்கும் புலமைக்கும் பெயர்பெற்ற பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் அப்பொழுது கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். 

கரந்தைக் கல்லூரியில் அப்பொழுது ஒவ்வொரு வகுப்பிலும் நூறு மாணவர்கள் படிப்பது வழக்கம். நான்கு ஆண்டு புலவர் படிப்பில் மொத்தம் நானூறு மாணவர்கள் தமிழ் படித்தனர். இணை வகுப்புகள் அமையும்பொழுது இருநூறு மாணவர்களை அமரச்செய்து ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவது வழக்கமாம். பேராசிரியர்கள் கு.சிவமணி, ச.பாலசுந்தரம் அடிகளாசிரியர், சி.கோவிந்தராசனார், சிவப்பிரகாச சேதுவராயர் முதலான பெரும்புலமைச் சான்றோரிடம் தமிழ் கற்ற துரை. முத்துக்கிருட்டினன் படிப்பிலும் விளையாட்டிலும் பெருந்திறன் பெற்றவராக விளங்கியவர். 

துரை. முத்துக்கிருட்டினன் கரந்தையில் கல்வி பயிலும்பொழுது கடவூர் மணிமாறன்(முத்துசாமி), பிரபஞ்சன்(வைத்தியலிங்கம்) உள்ளிட்டவர்கள் உடன் பயின்றவர்கள். சைதாப்பேட்டை அசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபொழுது இவருடன் செந்தலைப் புலவர் கௌதமன் அவர்கள் உடன் பயின்றவர். 

துரை. முத்துக்கிருட்டினன் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு பாபநாசத்தில் இருந்த பாவேந்தர் தமிழ்க் கல்லூரியில் 1970 முதல் 1972 வரை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அப்பொழுது(1972 இல்) அங்கு வந்திருந்த தந்தை பெரியாரைக் கண்டு உரையாடியவர். அவரிடம், தஞ்சையில் முன்பொருபொழுது உரையாற்றிய தந்தை பெரியார் “தமிழைக்  காட்டுமிராண்டி மொழி” என்றமைக்காகத் தம் மறுப்பைத் தெரிவித்து உரையாடினார். தந்தை பெரியார் அவ்வாறு சொன்னமைக்கான காரணத்தை முத்துக்கிருட்டினனுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கியமையை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்பவர். 

காலத் தேவையறிந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் ஆகியோர் அவரவர் காலத்தில் நூல் இயற்றியமை போல் இக்காலத்தில் காலத் தேவையறிந்து மக்களுக்கு உதவும் நூல்களைத் தமிழ்ப் புலவர்கள் எழுதாமையால் தாம் அவ்வாறு கூற நேர்ந்தமையைத் தந்தை பெரியார் விளக்கியபொழுது நம் துரை. முத்துக்கிருட்டினன் அமைதியடைந்தார். 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் 1972 முதல் 1980 வரை அரசியல் ஆர்வம்கொண்டு, பணிக்குச் செல்லாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு முயன்றும் அப்பணி தடைப்பட்டுக்கொண்டே இருந்தது. 1982 இல் சென்னை முத்தியாலுபேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு வரை அப்பள்ளியில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். 

பள்ளியில் பணியாற்றியபடியே தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள பி. லிட்., முதுகலை(M.A) கல்வியியல் இளையர் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முதலிய  பட்டங்களைப் படித்துப் பெற்றவர். தம் ஆய்வியல் நிறைஞர் படிப்புக்காகக்  “கைக்கிளை – தொல்காப்பியம்” என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி அப்பட்டத்தைப் பெற்றவர். 

துரை. முத்துக்கிருட்டினன் இல்லற வாழ்க்கை: 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களுக்கு 1970 இல் வசந்தகுமாரி அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சிதம்பர பாரதி, சர்மிளா என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். சிதம்பர பாரதி தொழில்நுட்பம் பயின்று, தற்பொழுது சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றார். 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு தமிழாராய்ச்சியில் ஈடுபட்டு, அரிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அரசியல் செல்வாக்கோ, அறிவைப் போற்றும் ஆளுமைகளோ இவருக்கு அமையாததால் இவர் பணிகள் குடத்துக்குள் ஏற்றிய விளக்காக உள்ளன. 

துரை. முத்துக்கிருட்டினன் தமிழ்க்கொடைகள்: 

1. ஒருதலைக் காமம் (கைக்கிளை -- தொல்காப்பியம்)     ஆய்வு நூல்

2. திருக்குறள் உரை

3. தமிழ் இலக்கணம்

4. மதுரையைக் கண்ணகி    எரிக்கவில்லை  (சிலப்பதிகார ஆய்வேடு)

5. நந்திக் கலம்பகம்   (நாடகம்)

6. அகல் விளக்கு    (கவிதை)

7. இரட்டை நவமணி மாலை   (கட்டுரைகள்) 




வெளியீடு காண இருப்பவை: 

8.  குறளறனும் மனுமுரணும்

 (1. "திருக்குறள் -- மனுதர்மத்திற்கு  எதிரானது;   2. பரிமேலழகர், தம் உரை          மூலம் வருணாச்சிரமத்    தர்மக் கோட்பாடுகளைத் திணிக்கிறர்;  3. பரிமேலழகரின் உரை      முரண்பாடுகள்;  என்பன பற்றிய விளக்கமும்  மற்றும்   4. திருக்குறட்குப் -- புத்துரையும்         அடங்கியது.)

9. சிலம்பிய சிலம்பும்     புலம்பிய சதங்கையும்

      (சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக்    கட்டுரைகள் -- விரைவில்) 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழாய்வு முயற்சிகளையும், எழுத்துப்பணிகளையும் போற்றி இவருக்கு உரிய சிறப்புகளையும் பெருமைகளையும் அளிப்பது தமிழர் கடமையாகும்.