சிங்கப்பூரில் தமிழ்ப் பற்றுடனும், படைப்பாற்றலுடனும் வாழ்ந்து, கவிமாலை என்னும் இலக்கிய அமைப்பின் வழியாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்களை ஒன்று திரட்டித் தமிழ்ப்பணியாற்றி வந்த அண்ணன் கவிமாலை மா. அன்பழகனார் அவர்கள் இன்று (22.04.2026) இயற்கை எய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கடந்த பல நாட்களாக அண்ணன் மா. அன்ழகனார் அவர்கள் உடல்நலம் குன்றி, மருத்துவம் பார்த்து வந்த செய்தியை அன்பர்கள் வழியாக அறிந்து வருந்திக்கொண்டிருந்தேன். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம் கையற்றுக் கலங்குமாறு அண்ணனின் மறைவு அமைந்துவிட்டது. அண்ணாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மா. அன்பழகனார் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர்; அரங்கு வழிநடத்துநர்; கவிஞர்: புதின ஆசிரியர்: தன்முனைப்பு நூல்களின் ஆசிரியர்; சிறுகதை ஆசிரியர்; சிறுவர் நூல்கள் படைத்தவர்; திரைத்துறை ஈடுபாட்டினர்; உயர்ந்த பண்புகள் பலவற்றைக் கொண்ட பெருந்தகையாளர் ஆவார்.
அன்பழகன் என்னும் இவரின் பெயர் காரணப் பெயர் என்பேன். அன்பும் இவரிடம் உண்டு; அழகும் இவரிடம் அடைக்கலம். இவர் ஓர் இலக்கிய ஆலமரம். இத் தமிழாலமரத்தின் அடியில் தங்கி, இலக்கியம் கற்றவர்களும் உரையாடியவர்களும் கணக்கிலர். கவிதைச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு இலக்கியவான் பரப்பில் இட வலமாகச் சுற்றிப் பறப்பவர்கள் பலரை அறிவேன். இளம் பாவலர்களை ஊக்குவிக்க எண்ணற்ற வழிகளைக் கண்டவர். இவர் நடத்தும் இலக்கிய அரங்குகள் நேரம் தவறாமல் தொடங்கப்பட்டு, எதிர்பார்த்தவாறு நிறைவுறும். ஓர் இராணுவத் தளபதிக்கு உரிய திட்டமிடலும், ஒரு தாயைப் போலும் அரவணைத்துச் செல்லும் கருணை உள்ளமும் கொண்டவர். எம் போலும் புதியவர்களுக்கும் நிழல் தந்து, இளைப்பாறிச் செல்ல இடம் தந்தவர்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தைச் சிங்கப்பூரில் திரையிடுவதற்கு அண்ணன் செய்த உதவியையும், ஈழத்து அறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தைத் திரையிடுவதற்கு அண்ணன் செய்த உதவியையும் யானும் என் குடிவழினரும் என்றும் நினைவுகூர்வோம். அதுபோல் என் நூல்களை வெளியிட்டு, சிங்கப்பூர் இலக்கியவாணர்களுக்கு என்னை மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்த அந்தப் பெரும்பண்பை நினைக்கும்பொழுது கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. அருகில் அமர்த்தி, உணவருந்தச் செய்து, வானூர்தி நிலையத்துக்கு என்னை வண்டியில் ஏற்றிக்கொண்டு, வலவனாக வந்து வழியனுப்பிய அந்த “அன்புக்கு” யாது கைம்மாறு ஆற்றுவேன்.
சிங்கப்பூருக்கு நான் செல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் எங்களின் இளைஞர் பட்டாளத்துக்கு ஈடுகொடுத்து, நடுவண் அமர்ந்து இனிய உரையாடலை வழிநடத்தும் அந்தப் பொழுதுகள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து மோதுகின்றன.
சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்புலகம் இன்று தன் தலைமகனை இழந்து நிற்கின்றது. சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் தங்களின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரை இழந்து பெருந்துயர் சுமந்து நிற்கின்றனர். இலக்கிய வானில் ஒரு விடிவெள்ளியாய் மா. அன்பழகனாரின் புகழ் நிலைபெற்றிருக்கும்.
புதுமைத்தேனீ மா. அன்பழகனாரின் வாழ்வியலை இந்நேரத்தில் நினைவுகூர்கின்றேன்.
மா. அன்பழகன் அவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர்கள் மாசிலாமணி, செல்லம்மாள் ஆகியோரின் பதின்பிள்ளைகளுள் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர். பிறந்த ஊரில் பள்ளிப்படிப்பும், அதிராம்பட்டினம், கும்பகோணம், சென்னையில் மருத்துவக்கல்லூரியில் படித்திருந்தாலும் இவர்தம் பட்டப்படிப்பு முற்றுப்பெறாமல் போனது.
1971 ஆம் ஆண்டு மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டவர். இவரின் இல்லறத் துணைவியார் திருவாட்டி திலகவதியார் ஆவார். இவர்களின் இல்லறப் பயனாகச் செல்வம், இராமையா என்னும் ஆண்மக்களைப் பெற்றனர். இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களிடம் பதினைந்து படங்களுக்கு மேல் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர். பாத பூஜை, புது செருப்பு கடிக்கும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.
மாண்புமிகு தமிழக முதல்வராக விளங்கிய ஜெ. ஜெயலலிதா அவர்கள் திரைத்துறையில் புகழுடன் விளங்கிய சூழலில் அவரை நாயகியாக வைத்துக் குறும்புக்காரி எனும் படத்தைத் தயாரித்து, பாதியிலேயே படத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை அக்காலத்தில் ஏற்பட்டுவிட்டது. எனினும் புரட்சித் தலைவி அவர்கள் தம் நூறாவது பட விழாவின்போது, படமெடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற முறையில் நினைவுப் பரிசு வழங்கி இவரைப் பாராட்டியுள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தங்கி வணிகம் செய்யத் தொடங்கினார். பின்னாளில் முழுநேர இலக்கியப்பணியாற்றியவர்.
கவிமாலை என்னும் இலக்கிய அமைப்பின் வழியாகச் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க்கலைக்கும் தொண்டாற்றியவர்.
மா.அன்பழகன் அவ்வர்களின் கவிதை ஈடுபாட்டை அறிந்த உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் இவருக்கு 1990 இல் கிருட்டினகிரியில் நடைபெற்ற உலகக் கவிஞர் மன்றத்தின் சார்பில் இவருக்குக் "கவிமாமணி" பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.
மா.அன்பழகன் அவர்களின் நூல்கள் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவர்தம் படைப்புகளை ஆய்ந்து பலர் பட்டம்பெற்றுள்ளனர்.
இவர் எதனையும் புதுமையாகவும் மக்கள் ஏற்கும் வண்ணமும் செய்வதால் இவருடைய 60 ஆம் ஆண்டின் நிறைவு விழாவின்போது "புதுமைத்தேனீ" என அன்போடு அழைக்கப்பட்டார். அதுவே அவருடைய செயற்பாட்டால் இன்றும் நிலைத்து நிற்கிறது. வாழ்வில் நேர்மையையும் சிந்தனையில் புதுமையையும், செயலில் உண்மையான உழைப்பையும், கொண்டவர். மக்களுக்குப் பயன்படும் பொதுநலச் சேவையும், அன்பான மனித நேயப் பண்புகளும் இவருடைய இனிய குணங்கள்.
மா. அன்பழகன் அவர்களின் தமிழ்க்கொடை:
1.
சமுதாயச்
சந்தையிலே.... .....கட்டுரை - 1985
2.
அலைதரும்
காற்று..............கவிதை
3.
ஜூனியர்
பொன்னி.............புதினம்
4.
மடிமீது
விளையாடி..............புதினம்
5.
இதில்
என்ன தப்பு...............திரைக்கதை வடிவம்
6.
அந்தப்
பார்வையில்...............புதினம் - 1987
7.
பழமும்
பிஞ்சும்.....................சிறுவர் இலக்கியம்
8.
ஒன்றில்
ஒன்று.....................கவிதை(ஆங்கில மொழிமாற்றத்துடன்
) 2003
9.
இப்படிக்கு
நான் ...................படச்சுவடி
10.
விடியல்
விளக்குகள்............. சிறுகதைகள் 2005
11.
உடன்படுசொல்
....................மேடைப்
பேச்சு 2006
12.
இன்னும்
கேட்கிற சத்தம் பதிவு(உரை வீச்சு) 2007
13.
ஆயபுலம்
............................புதினம்
2009
14.
என்பா
நூறு
.......................வெண்பா
15. BUBBLES OF
FEELINGs...சிறுகதைகள்
16.
திரையலையில்
ஓர் இலை .......கட்டுரை
17.
என்
வானம் நான் மேகம் ........சிறுகதைகள்
2010
18.
BEYOND THE REALM..........சிறுகதைகள் 2011
19.
கவித்தொகை
........................கவிதை
– 2012
20. எர்கு திரைப்படத்திற்கான கதை
21. ERHU – Story Translation
22. பாதிப்பில் பிறந்த பாடல்கள்
23. புதுமைத்தேனீ சிறுகதைகள்
24. வாய்க்கால் வழியோடி – மேடைப்பேச்சுகள்
25. ஆயிழையில் தாலாட்டு அளித்த அணிந்துரைகள்
26. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்
–தொகுதி 1
27.
கூவி
அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்
- தொகுதி 2
28. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்
- தொகுதி
3
29. காதல் இசைபட வாழ்தல் – புதினம்
30. அடுத்த வீட்டு ஆலங்காற்று - கவிதை
31. அன்புக்கு அழகு 75 பவளவிழா மலர்
32. சிங்கப்பூர் சொல்வெட்டு 555 வரலாற்று விருத்தப்பா
33. டுரியானுள் பலாச்சுளை - சிறுகதைகள்
34. கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம்
–தொகுதி 4
35. மேகம் மேயும் வீதிகள் – கவிதைகள்
36. ஐம்பதிலும் வாழ்க்கை வரும் – தன்முனைப்புக்
கட்டுரைகள்
37. செம்பியன் திருமேனி - சரித்திரப் புனைவுப் புதினம்


