நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 5 மார்ச், 2008

பதிற்றுப்பத்து அறிமுகமும் பாடிய புலவர்களும்

சேர அரசர்கள் பதின்மரைப் பற்றி அறிவதற்குப் பெரிதும் துணைசெய்யும் நூல் பதிற்றுப்பத்து ஆகும்.ஒவ்வொரு அரசரைப் பற்றியும் பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் கொண்டு இந்நூல் விளங்கிப் பதிற்றுப்பத்து என்னும் பெயரினைப் பெற்றது.எனினும் முதற் பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.இப்பொழு எட்டுப் பத்துகளில் அமைந்த எண்பது பாடல்களே கிடைக்கின்றன.இந்நூலைத் தொகுத்தவர்,தொகுப்பித்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு பாடலிலும் வரும் சிறப்புமிக்க தொடரை அப்பாடலின் தலைப்பாக்கி வழங்கியுள்ளார். புண்ணுமிழ் குருதி,ஏறா ஏணி, சுடர்வீ வேங்கை, புலாம்பாசறை,கமழ்குரல் துழாய் என்னும் தலைப்புகள் எண்ணி இன்புறத்தக்கன.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அப்பாடல் அமைந்த துறை,அதன் இசைத்தன்மை குறிப்பிடும் வண்ணம்,தூக்கு,தலைப்பு ஆகியன தரப்பட்டுள்ளன.ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் அமைப்பு உள்ளது.அப்பதிகத்தில் பாடப்பெற்றுள்ள அரசன்,பாடியபுலவர்,அப் பத்துப் பாடல்களின் தலைப்புகள்,பாடியமைக்காகப் புலவர் பெற்ற பரிசில்,அரசனின் காலம் முதலிய குறிப்புகள் காணப்படுகின்றன.பாடல்கள் யாவும் செறிவும் திட்பமும்,நுட்பமும் கொண்டவை.சேரநாட்டு வரலாற்றை அறிவதற்கு இந்நூல் பெரிதும் உதவுகின்றது.

(பட்டியலின் விவரம் முறையே,பத்து,புலவர்,அரசன், பரிசு,ஆண்டு)
2ஆம்பத்து, குமட்டூர்கண்ணனார், இமயவரம்பன்நெடுஞ்சரலாதன், 500 ஊர்கள்,58ஆண்டு

3ஆம்பத்து, பாலைக்கௌதமனார், பல்யானைச்செல்கெழுகுட்டுவன்,பத்துவேள்வி,25ஆண்டு

4ஆம்பத்து,காப்பியாற்றுக்காப்பியனார்,களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல்,நாற்பத்து
நூறாயிரம்பொன்,25ஆண்டு

5ஆம்பத்து, பரணர், நெடுஞ்சேரலாதன்மகன் செங்குட்டுவன் உம்பற்காட்டுவருவாய்,தன்மகன் 55ஆண்டு

6ஆம்பத்து, காக்கைப்பாடினியார், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், நூறாயிரம்காணம் பொற்காசு, 88ஆண்டு

7ஆம்பத்து,கபிலர், செல்வக்கடுங்கோவாழியாதன்,நூறாயிரம்காணம்பொன்,நன்றா என்னும் குன்றேறி நின்று காணும் ஊர்கள்,22ஆண்டு

8ஆம்பத்து,அரிசில்கிழார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, ஒன்பது நூறாயிரம்பொன்,அரசு. 17ஆண்டு

9ஆம்பத்து,பெருங்குன்றூர் கிழார், இளஞ்சேரல் இரும்பொறை, முப்பத்தோராயிரம்பொன்,ஊர், 16ஆண்டு


புண்ணுமிழ் குருதி என்னும் தலைப்பில் அமைந்த பாடல்

பாடப்பட்டோ ன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த போரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண்கொன்று
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்(று)எறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரா஢ நறவின் ஆர மார்பின்
போர்அடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே
கவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவரி
பரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய போரிசை இமயம்
தென்னம் குமரியொ(டு) ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. 25

பெயர் - புண்ணுமிழ் குருதி (அடி 8)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்

பாடலின் பொருள்

அலைகள் மலைபோல் எழுந்து,வெண்மையான சிறுதுளிகளாக உடையும்படி காற்று வீசுகிறது.இத்தகு நிறைந்த நீரையுடைய கரிய கடல்பரப்பினுள் சென்று,அவுணர்கள் கூடிக்காவல் செய்யும் சூரபத்மனின் மாமரத்தை வெட்டிய முருகபெருமான் பிணிமுகம் என்னும் யானைமீது ஏறி வந்தான்.

அதனைப்போலும்(சேரமன்னன்) பகைவரின் மார்பைப்பிளந்து,அக்குருதி பெருக்கெடுத்து ஓடி,நீர்நிலையில் உள்ள நீலநிறம் குங்குமநிறமாக மாறியது.பகைவர்களின் அரண்களை அழித்தாய்.பகைவர்களின் கடப்பமரத்தை வெட்டி அழிக்கும்படி வீரரை ஏவியவன்.அம்மரத்தில் முரசம் செய்தாய்.இவ்வாறு போர்செய்யும் ஆற்றலும்,மாலை அணிந்த மார்பும் அறப்போர் செய்யும் படையையும் உடைய சேரலாதனே!

முருக்கமரங்கள் நிறைந்த மலையில் இரவில் உறங்கும் கவரிமான்கள் பகலில் தாம் மேய்ந்த நரந்தம் புல்லையும் அவை வளர்ந்துள்ள பரந்துவிளங்கும் அருவிகளையும் கனவிலே கண்டு மகிழ்கின்றன.இவ்வியல்பு கொண்ட ஆரியர்கள் நெருங்கி வாழும் புகழ்கொண்ட வடபுலத்து இமயமலை,தெற்கில் குமரி எனும் எல்லைக்கு உட்பட்ட நாட்டில் மன்னர்கள் செருக்குற்றுத் தம்மை உயர்த்திக்கூறிக்கொண்டால் அவர்களின் வீரம் அழியும்படி போரிட்டு வென்றாய்.

மார்பில் பசியமாலை அணிந்து பொன்னரி மாலை அணிந்த யானையின் பிடரியில் ஏறியிருக்கும் நின் புகழைக்கண்டு வியந்தோம்!நீ வாழ்க.

இப்பாட்டில் சேரலாதன் போரில் பகைவர்களின் மார்பைப் பிளந்தபோது அப்புண்களிலிருந்து சிவந்த குருதி வெள்ளமாகப் பெருகியது.அதனால் நீர்க்கழியில் நீல நிறம் மாறுபட்டு குங்கமக் கலவையானது.புண்ணிலிருந்து குருதி மிகுதியாக வெளிப்பட்டதைச் சிறப்பித்து இப்பாடல் பாடுவதால் புண்ணுமிழ் குருதி என்னும் பெயர் பொருந்துகிறது.

மேற்கண்ட பாடலில்வரும் சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான்.இவன் இமயம் முதல் குமரி வரை அரசாண்டவன்.இவனுக்கு இரு மனைவியர்.சோழர்குடியில் வந்த நற்சோணை ஒருத்தி.செங்குட்டுவன்,இளங்கோவடிகளை ஈன்றவள்.மற்றொருத்தி வேளிர்குடியில் வேளாவிக்கோமான் பதுமன் என்பவளின் மகள்.இவள் வழியாக களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல்,ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் என்னும் இரு ஆண்மக்கள் தோன்றினர்(காண்க : பதி.4,6ஆம் பத்து)

இமயவரம்பன் தன்காலத்தில் கடம்பர்கள் என்னும் பிரிவினர் தம் கடல் எல்லையில் கலங்களை மடக்கிக் கடல்கொள்ளையில் ஈடுபட்டபொழுது அவர்களை அடக்கி,அழித்து அவர்களின் காவல்மரத்தை வெட்டுவித்து அதில் முரசு செய்து முழக்கினான்(அகம்.127,347)

இமயவரம்பன் தன்னைப்புகழ்ந்து பாடிய குமட்டூர்க்கண்ணனார்க்குத் தமக்குரிமையான உம்பர்காட்டில் உள்ள வளம்மிக்க ஐந்நூறு ஊர்களையும் வரிநீக்கி வழங்கி,தென்னாட்டு வருவாயில் பாகம்பெறும் உரிமையை முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளான் என்பதை அறியும்பொழுது அவனின் கொடையுள்ளமும் செல்வ வளமும் புலனாகின்றது.

3 கருத்துகள்:

K R A Narasiah சொன்னது…

இன்றுதான் பார்க்கநேர்ந்தது. மிக நன்றாக் இருந்தது. பதிற்றுப்பத்தினின்று, எனது கடல் வழி வணிகத்தில் மேற்கோள் காட்டியுள்ளேன் “தண்டகரண்யத்து கோட்படை” என வரும் பாடலென் நினைக்கின்றேன்
உங்கள் உழைப்பு போற்றத்தக்கது
நரசய்யா

Tamil Virtual Forum சொன்னது…

பகுப்பும் தொகுப்புமாக அமைந்து ஆற்றொழுக்காகச் செல்லும் எளிய இனிய உரை. இது வளரட்டும். மலரட்டும்.

Tamil Virtual Forum சொன்னது…

பகுப்பும் தொகுப்புமாக அமைந்து ஆற்றொழுக்காகச் செல்லும் எளிய இனிய உரை. இது வளரட்டும். மலரட்டும்.