[புனிதா ஏகாம்பரம் அவர்கள் தமிழகத்து அரசு கல்லூரிகளில்
தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த பேச்சாளர். பன்னூலாசிரியர். தமிழகப்
பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கல்விக்குழுக்களில் இணைந்து பணியாற்றியவர்]
புனிதா ஏகாம்பரம் அவர்கள் மயிலாடுதுறையில்
30. 09. 1950 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சேதுபதி – விசாலாட்சியம்மாள் என்பனவாகும்.
பள்ளிக் கல்வியை மயிலாடுதுறையில் உள்ள கொரநாடு
உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். .சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைத்.
தமிழ் இலக்கியமும் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியமும் பயின்றவர்.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். மதுரை, திண்டுக்கல் முதலிய ஊர்களின் அரசு கல்லூரிகளில்
பணியாற்றிய பிறகு கோவை அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். காந்திய சிந்தனை, மொழியியல், இதழியல், பெண்ணியம் முதலிய
துறைகளில் சான்றிதழ்ப் படிப்புகளைப் படித்துத் தம் பல்துறைப் புலமையை வளர்த்துக்கொண்டவர்.
புனிதா அவர்கள் மின்துறையில் பொறியாளராகப்
பணியாற்றிய திருவாளர் ஏகாம்பரம் அவர்களை
15. 09. 1978 இல் திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு ஒரு மகள் மக்கள் செல்வமாக வாய்த்தவர்.
இவர் உயர்கல்வி பெற்று, அயல்நாட்டில் பணியாற்றி வருகின்றார்.
புனிதா ஏகாம்பரம் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களின்
கல்விப்புலங்களில் பாடநூல் உருவாக்கக் குழு, தேர்வுக்குழு முதலிய குழுக்களில் பணியாற்றியவர்.
அவ்வகையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்விக் குழு உறுப்பினர், நிலைக்குழு உறுப்பினர், காந்தி கிராமம் மற்றும் பாரதியார்
பல்கலைக்கழகத் தேர்வுக் குழு உறுப்பினர், பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழு
உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுக் குழு உறுப்பினர், பெரியார், சென்னை
மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுக் குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியவர்.
திருக்குறள் தமிழ்ச்சங்கச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கழக இணைச் செயலாளர், கோவைக் கிளையில்
பல்வேறு அமைப்புப் பொறுப்புகள், கோவை சக்தி மகளிர் குழுவின் ஆலோசகர், பல்வேறு தமிழ்
இலக்கிய மற்றும் கல்வி அமைப்புகளில் செயற்குழு உறுப்பினர் மற்றும் துணைத்தலைவராகத்
தொண்டாற்றியவர்.
எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வரங்குகளில்
கலந்துகொண்டவர். 182 ஆய்வுக் கட்டுரைகள் வரைந்தவர். நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட
ஆய்வரங்கத் தலைமைப் பொறுப்புகளை ஏற்றவர்.
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள் திருவாசகத்தின்
சிறப்பிலக்கியம், நகையும், நலமும், பெண்மை வாழ்க! தமிழ்மொழி - இலக்கிய வரலாறு, இதழியல்
முதலிய நூல்களை எழுதியவர்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சிறப்பு விருந்தினராக 2011 இல் பங்கேற்று அனைவரின் உள்ளமும் கவரும் வகையில் சிறப்புரையாற்றிய பெருமைக்குரியவர்.
இலங்கை (மாத்தளை), சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டவர். புனிதா ஏகாம்பரம் அவர்கள் உடல்நலக் குறைவால் 21.11.2026 இல் சென்னையில் இயற்கை எய்தினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக