நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
ஊரன் அடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊரன் அடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 பிப்ரவரி, 2017

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு! ஊரன் அடிகளார் சிறப்புரை!


 தவத்திரு ஊரன் அடிகளார் உரை
புதுச்சேரியில் அமைந்துள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு வரிசையில் இன்று(16.02.2017) வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் ஊரன் அடிகள் சிறப்புரையாற்றினார். தொல்காப்பியமும் வள்ளலாரும் என்ற தலைப்பில் இவர் உரை அமைந்திருந்தது. சிறப்புரையில் தொல்காப்பியத்தின் சிறப்பினையும், தொல்காப்பிய நூற்பாக்களுக்கு வள்ளலார் வழங்கியிருந்த விளக்கத்தினையும் ஊரன் அடிகள் எடுத்துரைத்து, தமிழ் இலக்கியத்தில் தவறாகப் பதிவுபெற்றிருந்த முக்கியமான செய்தியை விளக்கித் தெளிவுப்படுத்தினார். ஐந்திரம் என்பதற்கு உரிய சொல் விளக்கமும், தொல்காப்பிய ஆய்வுகளைக் குறித்தும் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள பொருளதிகாரப் பகுதி எந்த மொழியிலும் இல்லாத வகையில் வாழ்வியல் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றது. எழுத்ததிகாரத்தில் ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்களுக்கு உரிய புணர்ச்சியைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடும் இடங்களில் உள்ள பொருத்தமின்மையை வள்ளலார் வழியில் ஊரன் அடிகள் இந்த உரையில் விளக்கினார். பாவாணர், மு. வரதராசனார் கருத்துகளையும், உரையாசிரியர்களின் கருத்துகளையும் துணையாகக் கொண்டு ஊரன் அடிகளார் உரையாற்றினார்.

தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார்; , மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்; பேராசிரியர் தெ. முருகசாமி தலைமையுரை வழங்கினார். இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். பிரான்சிலிருந்து வருகை தந்த பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சிறப்பிக்கப்பட்டார். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கணப் புலவர்களும் தமிழார்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழாகரர் தெ. முருகசாமி தலைமையுரை
முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரை
மு.இளங்கோவன் அறிமுகவுரை
 அறிஞர் பெருமக்கள்

முனைவர் இரா.கோவலன் நன்றியுரை

 அறிஞர் பெருமக்கள்
அடிகளாரிடம் வாழ்த்தினைப் பெறுவோர்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள் சிறப்பிக்கப்படுதல்( முனைவர் இரா. நிர்மலா, ஈகியர் அப்துல் மஜீத்)
அடியார்கள் வாழ்த்தினைப் பெறுதல்

அடிகளாரின் உரையைக் கேட்க இங்கே அழுத்தவும்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

தொல்காப்பியமும் வள்ளலாரும் – தொடர்பொழிவு 8



அன்புடையீர்! வணக்கம்.

தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. உலகத் தொல்காப்பிய   மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் அறிஞர்களின் பங்கேற்பில் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய உரையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 16. 02. 2017, வியாழக் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119,  நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்
 அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

தலைமை: தமிழாகரர் தெ. முருகசாமி அவர்கள்

சிறப்புரை: முனைவர் அருள்திரு ஊரன் அடிகளார் அவர்கள்
      
தலைப்பு: தொல்காப்பியமும் வள்ளலாரும்

நன்றியுரை: முனைவர் இரா. கோவலன் அவர்கள்


அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

புதன், 7 மே, 2014

தமிழைத் துறவாத துறவி ஊரன் அடிகளார்…

தவத்திரு ஊரன் அடிகளார்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரைப் பற்றி அறிந்தவர்களை அண்மைக் காலமாகத் தேடிச் சந்தித்து செய்திகளைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது ப. சு. அவர்களை அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஐயா அவர்களிடத்து ஆற்றுப்படுத்தியவர் தவத்திரு ஊரன் அடிகளார் என்று நினைவூட்டினர். என் பிறந்த ஊருக்குச் செல்லும்பொழுது வடலூரில் இறங்கி அடுத்த பேருந்து மாறுவது வழக்கம். வடலூரில் வாழும் ஊரன் அடிகளாரை இதுநாள்வரை அவர்தம் இல்லம் சென்று கண்டதில்லை. ஆனால் தவத்திரு ஊரன் அடிகளாரை முன்பே ஆர்க்காட்டில் ஒருமுறை கண்டு வணங்கியுள்ளேன். வேறு சில நிகழ்வுகளில் அவர்களின் இனிய உரையைச் செவிமடுத்துள்ளேன்.

     ப. சு. நூற்றாண்டு விழாவில் அடிகளாரை அழைத்துச் சிறப்பிக்க நினைத்தேன். அவர்களின் செல்பேசி எண் பெற்று உரையாடினேன். வரும் 25 ஆம் பக்கல் திருவருட்பா அகவலுக்கு அவர் வரைந்துள்ள உரைநூல் வெளிவர உள்ளதாகவும் அதுவரை எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இயலாது எனவும் முடிவெடுத்துள்ளதைத் தெரிவித்தார்கள். ப. சு. நூற்றாண்டு என்றதும் அந்தத் தூய துறவு உள்ளம் இளகியது. பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து ப. சு. வுக்கும் தமக்குமான நினைவுகளை அடிகளார் அசைபோட்டார்கள். விழாவுக்கு வருவதாக இசைவு தந்தார்கள். அழைப்பிதழை அணியப்படுத்தி அடிகளாருக்கு நேரில் வழங்க அமையம் பார்த்தேன்.

ஞாயிறு (04.05.2014) காலை 11. 30 மணிக்கு வடலூரில் இறங்கி அடிகளாரின் தவமனைக்குச் சென்றேன். அன்பொழுக வரவேற்றார்கள். என்னை அறிமுகம் செய்துகொண்டு உரையாடலைத் தொடங்கினேன். தவத்திரு ஊரன் அடிகளாரின் சைவ ஆதீனங்கள் உள்ளிட்ட நூல்களை நான் முன்பே படித்துள்ளதைச் சொன்னேன். அதுபோல் அவர்களின் வரிசை நூல்களையும் படித்துள்ளதை நினைவூட்டினேன். தம் நூல்கள் வெளிவந்தமைக்கான காரணத்தை அடிகளார் அவர்கள் சொன்னபொழுது அவர்களின் தமிழ்ப்பற்று விளங்கியது. அவர்களின் சமய ஈடுபாடு மதிக்கும்படியாக இருந்தது. தமிழகத்துத் திருமடங்களைப் பற்றியும் அவைகள் செய்துவரும் சமயப்பணிகள் பற்றியும் நெடுநாழிகை உரையாடினோம்.

ப. சு. நினைவுகளைத் தவத்திரு அடிகளார் தொடங்கும் முன் தாம் எழுதிய 10 பக்கத்தில் அமைந்த கட்டுரை ஒன்றை எனக்குப் படிக்கத் தந்தார்கள். படிக்கத் தொடங்கியது முதல் அடிகளார் மேல் எனக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டவண்ணம் இருந்தது. அடிகளாருக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த புலமை எனக்குப் பளிச்செனத் தெரிந்தது. தம் துறவு வாழ்க்கைக்கு அடிப்படையே சிலப்பதிகாரமும் அதன் ஆசிரியர் இளங்கோவடிகளுமே என்று குறிப்பிட்டார்கள். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அல்லவா?

தவத்திரு அடிகளாரிடம் மெதுவாகப் பேசத்தொடங்கினேன். ப. சு. பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அருட்செல்வரிடத்து நேரம் பார்த்து அறிமுகம் செய்த நிகழ்வுகளையும் பூம்புகாரில் ப.சு. அவர்களைச் சந்தித்ததையும், ப. சு. அவர்களின் சைவ நெறி ஈடுபாட்டையும் ஆர்வமுடன் எடுத்துரைத்தார்கள். அனைத்தையும் என் கையிலிருந்த காணொளிக் கருவியில் படம் பிடித்துக்கொண்டேன். சில புகைப்படங்களையும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்


தவத்திரு ஊரன் அடிகளார் அவர்கள் தம் மனையின் முதல்மாடியில் நூலகத்தின் நடுவில் வாழ்ந்துவருகின்றார். அரிய, பெரிய நூல்கள் அவர்தம் நூலகத்தில் அணிசெய்கின்றன. முறைப்படுத்தி நூல்களை அடிகளார் அவர்கள் பாதுகாக்கின்றார்கள். அவர்கள் நூலகத்தில் உள்ள திருவருட்பா குறித்த பல பழைய பதிப்புகளை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். சமய நூல்கள், ஆய்வு நூல்கள் பல உள்ளன. தமிழாராய்ச்சியையே தம் வாழ்க்கையாகக் கொண்டுள்ள அடிகளாரிடம் விடைபெறும்பொழுது நெஞ்சார வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

 தவத்திரு ஊரன் அடிகளார் நூலகத்தில்

தவத்திரு ஊரன் அடிகள் நூலகத்தின் ஒரு பகுதி