நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 28 நவம்பர், 2012

கல்வெட்டு அறிஞர் வில்லியனூர் ந. வேங்கடேசன்...





வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள்

புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு நான் படிக்க வந்தபொழுது(1992-93) புதுவையில் உள்ள முதன்மையான நூலகங்களுக்குச் சென்று வருவது வழக்கம். அப்பொழுது பிரெஞ்சு நிறுவன நூலகத்தில் அறிமுகமானவர் வில்லியனூர் ந. வேங்கடேசன் ஆவார். அன்று முதல் இன்றுவரை படிப்பதை ஒரு வாழ்க்கைமுறையாகக் கொண்டிருப்பவர் வில்லியனூர் ந. வேங்கடேசன்.  எப்பொழுது பிரெஞ்சு நிறுவன நூலகத்திற்குச் சென்றாலும் குனிந்த தலை நிமிராமல் தென்னிந்தியக் கல்வெட்டுகளின் தொகுப்புகளைப் பார்வையிட்டு ஏதேனும் குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பார். இடையூறு செய்யக்கூடாது என்று நான் ஒரு வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு வருவேன்.

கல்வெட்டுகள், அல்லது புதுவை பற்றிய பழைய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தால் அடுத்த நொடி ஐயாவை அழைத்து விளக்கம் பெறுவேன். பழகுதற்கு இனிய பண்பாளர். பி.எல். சாமி குறித்தும், திருமுடி சேதுராமன் செட்டியார் பற்றியும், குடந்தை ப. சுந்தரேசனார் பற்றியும், அரிக்கமேடு பற்றியும் பல செய்திகளை நான் உரையாடிப் பெற்ற பட்டறிவு உண்டு.

வில்லியனூர் ந. வேங்கடேசனார் எழுதியுள்ள நூல்களைப் பயன்படுத்தாமல் ஒருவர் புதுவை வரலாற்றை எழுதிமுடிக்க இயலாது. அந்த அளவுக்குச் சான்று காட்டும் தரத்தில் அரிய செய்திகளைக் கொண்டு வில்லியனூர் ந. வேங்கடேசன் நூல்கள் விளங்குகின்றன. பெருமைக்குரிய அறிஞரின் வாழ்க்கைக் குறிப்பையும் தமிழ்ப்பணிகளையும் இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

வில்லியனூர் ந. வேங்கடேசன்

கல்வெட்டுத்துறையில் தொடர்ந்து இயங்கிவரும் அறிஞர் வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் புதுவை மாநிலம் வில்லியனூரில் 30.10.1940 இல் பிறந்தவர். பெற்றோர் சீ. நடராசன், சுப்புலட்சுமி. ந. வேங்கடேசன் தொடக்கக் கல்வியைப் புதுவை வேதபுரீசுவரர்  வித்தியாநிலையத்தில் பயின்றவர். அங்குப் பணிபுரிந்த திரு. தாமோதரன் என்ற தமிழாசிரியர் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார். ந. வேங்கடேசன் எழுதிய கட்டுரையைப் படித்த ஆசிரியர் தனித்தமிழ் படித்தால் நன்றாக இருக்கும் என்று ஊக்கப்படுத்தி, புலவர் புகுமுக வகுப்பிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, 12 மாணவர்களை எழுதச் சொன்னார். அதில் ஒன்பது மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அந்த ஒன்பது மாணவர்களில் வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்களும் ஒருவர்.

1958 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐந்தாண்டுகள்  படித்தவர். பிறகு 1964 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓ.பி.ஆர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் வள்ளலார் குருகுலத்தில் தமிழாசிரியராக ஓராண்டு பணிபுரிந்தார். பிறகு  சென்னையில் அரசுப் பள்ளிகளில் பணியேற்று,  35 ஆண்டுகள் பணிபுரிந்தார். தமிழாசிரியர் பணியை வளவனூர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தவர்(1998).

கல்வெட்டுத் துறையில் தம்மையும் தம் ஒருசாலை மாணாக்கர் பாகூர் புலவர் குப்புசாமி அவர்களையும் வழி நடத்தியவர் அமரர் திருமுடி சேதுராமன் செட்டியார் என்று அடிக்கடி ந. வேங்கடேசன் குறிப்பிடுவார். அவர்தான், “தமிழ்படித்தவர்கள் கல்வெட்டுத் துறைக்கு வரவேண்டும்” என்று ஊக்கப்படுத்தி வில்லியனூர் ந. வேங்கடேசன் போன்றவர்களைக் கல்வெட்டுத்துறைக்கு ஆற்றுப்படுத்தினார்.

 வில்லியனூர் ந. வேங்கடேசன் அன்றிலிருந்து பேசுவது, அல்லது எழுதுவது கல்வெட்டுத்துறையை மட்டும் என்று அமைகின்றது. திருமுடி சேதுராமன் செட்டியார் அவர்கள் வில்லியனூர் ந. வேங்கடேசனைப் புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று டாக்டர் பிலியோசா, டாக்டர் பிரான்சுவா குரோ, போன்ற பேராசிரியர்களிடம் அறிமுகப்படுத்தி,  பிரெஞ்சுப் பண்பாட்டுக் கழகத்துடன் தொடர்புகொள்ளச் செய்தார். திருமுடியாரின் நினைவாகத் தாம் நடத்தும் பதிப்பகத்திற்குத் திருமுடிப் பதிப்பகம் என்று பெயர்சூட்டித் தம் நன்றியறிதலைப் புலப்படுத்தி வருபவர்.

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்களுக்கு 1958 முதல் விடுமுறை நாள்களில் பிரெஞ்சு நிறுவன நூலகத்துடன் தொடர்பு உண்டு. அது இன்றுவரை நீடிக்கின்றது.

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் இதுவரை 26 நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளார். இதில் பெரும்பாலும் கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, வரலாற்றுச் சிறப்பு விளக்கும் நூல்களாக அமைந்துள்ளன.

வில்லியனூர் ந. வேங்கடேசன் நூல்கள்:

  1. பண்பும் பயனும் (மொழியியல் கட்டுரைகள்) 1979
  2. வரலாற்றில் வில்லியனூர்- 1979
  3. வரலாற்றுச் சின்னங்கள்
  4. வரலாற்றில் ஆரிய வைசியர்
  5. பல்லவன் கண்ட பனைமலைக்கோயில்
  6. புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் ஊர்ப்பெயர்கள்
  7. புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் நாடும் வளநாடும்
  8. புதுவை மாநிலச் செப்பேடுகள்
  9. கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதிகள்
  10. கல்வெட்டுகளும் சில வரலாறுகளும்
  11. வரலாற்றில் அரிக்கமேடு
  12. நீர்நிலைகளும் வரிகளும்
  13. கல்வெட்டுகளில் திருவாண்டார் கோயில்
  14. கல்வெட்டுகளில் திருபுவனை
  15. கல்வெட்டுகளில் மதகடிப்பட்டு
  16. கல்வெட்டுகளில் பாகூர்
  17. கல்வெட்டுகளில் அரியசெய்திகள்
  18. கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
  19. தேவாரத்தில் இசைக்கருவிகள்
  20. பொன்பரப்பின வாணகோவரையன்(இணையாசிரியர்)
  21. திருநள்ளாற்று தருபாரணேசுவரர் கோயில் ஒரு ஆய்வு
  22. கல்வெட்டுகளில் தொண்டைநாட்டுத் திருமுறைத் தலங்கள்
  23. பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள்(தொகுதி 1) தொகுப்பாசிரியர்
  24. பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுதி 2) தொகுப்பாசிரியர்
  25. நடுநாட்டில் சமணம்


வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் தமிழகக் கோயில் வரலாறுகள் பற்றி மக்கள் தொலைக்காட்சியில் 50 தொடர்கள்  தொடர்ந்து உரையாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியில் அரிக்கமேடு குறித்து உரையாட்டில் பங்காற்றியுள்ளார்.  புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகப் பணியேற்றுப் புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள் என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள் (பல்கலைக்கழக வெளியீடு).

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் எழுதிய “வரலாற்றில் மதகடிப்பட்டு” என்ற நூலுக்குப் புதுவை அரசு “தொல்காப்பியர் விருது” வழங்கியது. புதுவை அரசின் “கலைமாமணி” விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது(2008). “கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதி” என்னும் நூலுக்குக் காரைக்காலில் உள்ள திரு. கணபதி சுப்பிரமணியம் என்ற தணிக்கையாளர் தலைமையில் இயங்கும் பாரதியார் கழகம் “கல்வெட்டுக் கலைமணி” என்று பட்டமளித்துப் பாராட்டியுள்ளது.

தொல்புதையல், திருச்சிற்றம்பலம் ஆகிய ஏடுகளில் துணையாசிரியராகப் பணியாற்றுகின்றார். புதுவை வரலாற்றுச் சங்கத்தில் தொடக்க காலம் முதல் இணைந்து பணியாற்றி வருகின்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நடன. காசிநாதன் நிறுவிய தமிழகத் தொன்மையியல் ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இப்பொழுது தென்னார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயர்கள் குறித்து ஆய்வுசெய்து வருகின்றார். பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்ட சமணம், புத்தர் குறித்த ஒளிவட்டுகளில் பணிபுரிந்துள்ளார்.

.வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் பல இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதுடன் புதுவை வானொலியில்  வரலாற்றுச் செய்தி கள் குறித்த பல உரையும் ஆற்றியுள்ளார்.


வில்லியனூர் ந.வேங்கடேசன் அவர்களின் தொடர்புமுகவரி:

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள்,
40, கிழக்கு சந்நிதி வீதி,
வில்லியனூர்,
புதுவை மாநிலம்
605 110
செல்பேசி: 0091- 9442066599

(குறிப்பு: இக்கட்டுரையை - படத்தைப் பயன்படுத்துவோர் முன் இசைவு பெறுக)



கருத்துகள் இல்லை: