புதுச்சேரியில் வாழும் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க
பெருமைக்குரிய பாவலராகத் தமிழியக்கன் அவர்கள் விளங்குகின்றார். இவர்தம் பாட்டு நூல்கள்
யாவும் தனித்தமிழில் விளங்கும் சிறப்புடையன. அதுபோல் மரபுநெறி நின்று தமிழ்ச்செழுமைக்குக்
களம் அமைப்பனவாகவும் விளங்குகின்றன.
தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கனின் பாட்டுநூல்களை
இளம் அகவைமுதல் கற்று மகிழ்ந்துள்ளேன். சேவலின் கூவல் என்னும் பெயரில் இவர் எழுதிய
அரிய நூலைக் கற்று மகிழும் வாய்ப்பு எனக்கு அண்மையில் அமைந்தது. கலிப்பா வகையுள் அரிதான கலிநிலைத்துறை வகையில் 66 பாடல்களைக்
கொண்டு "ஒரு சேவலின் விடியல் கூவல்" அமைந்துள்ளது.
சேவலின் கூவல் நூல் மாணவர்களுக்கு நல்லறம் புகட்டும்
வாழ்த்துப் பாடலாகத் தொடங்கிய முயற்சியால் விளைந்துள்ளது. தனிமரம் தோப்பானது போல் தனிப்பாடல்
தொகுப்பாகியுள்ளது. தமிழ்நெறிநின்று மரபுப்பாடல் இயற்றுவார் அருகிவரும் இற்றைவேளையில்
கலிநிலைத்துறையின் பல வடிவங்களில் தமிழுக்கு அணிசேர்க்கும், அறநெறியுரைக்கும் இந்தப்
பாட்டுநூலை வழங்கிய பாவலரைப் போற்ற வேண்டும்.
சீர்மரபுக் கலிமண்டலம்(12), சீரமரபுக் கலிநிலைத்துறை(05),
சீர்மரபுக் கலித்துறை(1), கலவைச் சந்தமரபுக் கலிநிலைத்துறை(09), சந்த மரபுக் கலித்துறை(13),
சந்த மரபு கலிமண்டலம்(26) என்னும் பாவைகையில் பாடல்களைப் பொருத்தமுற யாத்துள்ளார்.
சேவலின்கூவல் என்னும் இந்த நூலுக்குத் தனித்த சிறப்பு
என்னவெனில் நூலாசிரியரே உரையாசிரியராகவும் மலர்ந்துள்ளமை பாராட்டிற்குரிய ஒன்றாகும்.
எம் போலும் இளையர்கள் மருளும் இடங்களுக்கு நுட்பமும் நயமும் தோன்ற உரையாசிரியரின் உயர்குணம்
விளங்க உரைகண்டுள்ளமையால் அறிஞர்களால் இந்நூல் போற்றப்படும். உரையாசிரியரின் உரையால்
பாடல்களைக் கற்கும்பொழுது பொருள் மயக்கம்கொள்ளவோ, ஐயுறவு கொள்ளவோ தேவையில்லாமல் போனது.
மொழி, இனம், நாடு, மக்கள், அரசியல், பகுத்தறிவு,
வேலைவாய்ப்பு, மாணவர் குமூகம், இயற்கை, தாய்மொழிவழிக்கல்வி, தேர்தல், அரசியல் உள்ளிட்டப்
பொருண்மைகளில் இந்த நூலின் பாடல்கள் உள்ளன.
பகுத்தறிவுசார்ந்த குமூகமாகத் தமிழ்க்குமூகம் உருவாகும்பொழுதுதான்
முறையான வளர்ச்சி ஏற்படும் என்பது பாவலரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. திராவிட இயக்கம்,
தனித்தமிழ் இயக்க நெறிகளைத் தம் வாழ்வில் வரித்துக்கொண்டவர் பாவலர் ஆதலின் இவ்வியக்க
நோக்குகள் பாடல்களில் மின்னி மிளிர்கின்றன.
இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் எழுச்சியுற்ற
திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் தமிழர்களை எழுச்சிகொள்ளச்செய்ததுபோல் இவ்வியக்கத்தினரின்
படைப்புகளும் தமிழகத்தை எழுச்சிகொள்ளச்செய்தது. அந்த வகையில் தமிழியக்கனின் படைப்புகள்
தமிழ்நெறிகாட்டும் தரத்தினைக் கொண்டனவாகும்.
சில பாடல்கள் எளிய நடையில் அமைந்து தெளிந்த நீரோடை
போலும் பொருள் தந்து நிற்கின்றன.
அண்டி வாழ
வந்த வர்க்கு மன்பினால்
உண்டி யோடு
யாவும் ஈந்த உண்மையால்
பண்டி ருந்த
பண்பு மேன்மை, பாடெலாம்
மண்டி யிட்டு
வன்ம வாழ்வில் மாய்ந்ததே!(46)
இப்பாடலில் வந்தேறிகளுக்கு வளம் நல்கிய தமிழினம்
இன்று அடிமைப்பட்டுக் கிடக்கும் வரலாற்றை அமைதியாகப் பதிந்து வைத்துள்ளமையைப் பார்க்கின்றோம்.
தாய்மொழிவழிக் கல்விச் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும்
பாடலொன்றில் அழகிய உவமைகாட்டி இளம் நெஞ்சில் நம்பிக்கை கொளுத்துகின்றார்.
தம்பீ! உன்னால்
தான்மொழி ஓங்கும்! தடைவெல்வாய்!
நம்பிக்
கற்பாய்! செம்மொழி தாங்கி நலம்கொள்வாய்!
தும்பிக்
கென்றார் தோள்தர வந்தார்? துவளாமே,
எம்பிக்
காற்றாய்த் தொண்டுசெய்! பாரே, எழுமுன்னே! (50)
இந்தப் பாடலில் தும்பிக்கு(வண்டு) உயரே பறக்க யார்
கற்றுத்தந்தது? அதன் முயற்சியால் பறப்பதுபோல் நீயும் உன்முயற்சியால் தாய்மொழி காக்கும்
செயலில் பிறர் துணையின்றிச் செயல்படுக என்கின்றார்.
பகுத்தறிவின் மேன்மையைப் பாவலர் பல இடங்களில் முன்மொழிந்துள்ளார்.
மூவிரண்டு அறிவு எனவும், பகுத்தறிவு எனவும், வீங்கிய
அறிவு எனவும் வேறு வேறு பெயர்களில் இந்தப் பகுத்தறிவுப் பரப்புரை நிகழ்ந்துள்ளது.
அகத்தின்
உணர்வைத் தெளிவாய்! அறிவால் நெறிகாண்!
மிகுத்த
துயரோ உலகில் பிளவாம்! மிகுசீர்,
பகுத்தறிவுகொள்!
பழகின் பலவாம் பயனாம்!
தொகுத்த
முறைசேர் நிறைசெம் மொழியாம் தமிழ்பேண்! (44)
தமிழுக்கு வளம்சேர்க்கும் படைப்பை நல்கிய பாவலரைப்
போற்றி வாழ்த்துகின்றேன்.
(தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின் ஒரு சேவலின் விடியல் கூவல்
நூலுக்கான அணிந்துரை)
3 கருத்துகள்:
படிக்க படிக்க இன்னும் படிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது...
நன்றி ஐயா...
அழ வள்ளியப்பா சாயல். அவருடைய உன்மை பெயர் சொல்லமுடியுமா?
Jayakumar22384@gmail.com
அழ வள்ளியப்பா சாயல். அவருடைய உன்மை பெயர் சொல்லமுடியுமா
கருத்துரையிடுக