நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 நவம்பர், 2012

மணற்கேணியின் ஆய்வரங்கு...



மணற்கேணி ஆசிரியர் இரவிக்குமார், முனைவர் விசயவேணுகோபால், அறிஞர் நடன.காசிநாதன், முனைவர் இராசன், முனைவர் செல்வக்குமார்

 தோழர் இரவிக்குமார் அவர்களின் மணற்கேணி அமைப்பு இன்றையச் சூழலில் தொல் தமிழ் ஆய்வுகள் குறித்த பல ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றமை பாராட்டிற்குரிய ஒன்றாகும். கிரந்த எழுத்துத் திணிப்பை எதிர்த்துத் தோழர் இரவிக்குமார் காட்டிய ஆர்வம் போற்றற்குரிய ஒன்றாகும். கிரந்தம் குறித்த அமைதிப்போர் பற்றிப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்களோ, தமிழ்நாட்டின் தமிழாசிரியர்களோ இன்னும் அறியாமல் இருப்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நிலையில் தோழர் இரவிக்குமார் அவர்கள் தமிழறிஞர்களையும், வரலாற்றுப் பேரறிஞர்களையும் நண்பர்களின் ஒத்துழைப்புடன் அழைத்து இளைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுகூரச் செய்வதை நான் பாராட்டுகின்றேன். அந்த வகையில் நடைபெற்றத் தொல்லியல் குறித்த ஆய்வுக் கருத்தரங்கிற்குப்(24.11.2012) பிற்பகல் அமர்வில் பேராசிரியர் இராசன், பேராசிரியர் செல்வக்குமார் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) முனைவர் விசய வேணுகோபால் ஆகியோரின் உரை அமைவதை அறிந்து அந்த அமர்வுக்குச் சென்றிருந்தேன்.

புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராசன் அவர்களின் ஆய்வுகள்தான் தமிழர்களின் தொல் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தும் என்பதை உணர்ந்தவன் ஆதலின் அவர் உரை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அரங்கில் அமர்ந்தேன். அங்குத் தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன், கனடா பேராசிரியர் செல்வக்குமார், இராம. கி ஐயா, நாக. இளங்கோவன், விழுப்புரம் தமிழநம்பி, ஒரிசா பாலு, தாமரைக்கோ உள்ளிட்ட அன்பர்களைக் கண்டு உரையாடினேன்.

பேராசிரியர் இராசன் அவர்கள் கொடுமணல் அகழாய்வுகள் குறித்துச் சிறப்பாகக் காட்சி விளக்கத்துடன் விளக்கினார்கள்.

ஓர் ஊரை முழுமையாக ஆய்வு செய்ய ஐம்பதாண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டு இதற்குப் பலரின் ஒத்துழைப்பும் உதவியும் தேவை என்று குறிப்பிட்டார். தம் ஆய்வுக்குத் தம் மாணவர்கள்தான் அடிப்படையாக இருந்து உதவி வருவதை நன்றிப் பெருக்குடன் குறிப்பிட்டார். அதுபோல் தம் ஆய்வுக்கு உதவும் அன்பர்களையும் மேடையில் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

கொடுமணல் அகழாய்வில் கிடைத்துள்ள எஃகு உருக்காலை, பதுக்கைகள், மணிகள் பற்றிய பல புதிய செய்திகளைகளை அரங்கிற்கு எடுத்துரைத்தார். “வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்” என்னும் பட்டினப் பாலை வரிகளில் குறிப்பிடப்படும் மணிகள் விந்திய சாத்பூரா மலைகளில் கிடைக்கின்றன எனவும் அதனை இங்குக் கொண்டுவந்து அழகுப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

கொடுமணலில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக நெய்யப்பட்ட துணிகள் கிடைப்பதைக் குறிப்பிட்டு அந்தத் துணிகளைக் காட்சிப்படுத்தினார். கொடுமணல் அகழாய்வுகளைக் கொண்டு அந்தப் பொருட்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்று காலக்கணிப்பையும் குறிப்பிட்டார். கொடுமணலில் கிடைத்த புலிச்சின்னம், தங்கம், வெள்ளிப்பொருள்கள் குறித்தும் உரையாற்றினார். அதுபோல் அழகன்குளம் அகழாய்வுகள் குறித்தும் பேசினார். நிகம வணிகக்கழுக்கள் பற்றியும் பல செய்திகளை எடுத்துரைத்தார். தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் தலைமையில் இந்த அமர்வு அமைந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வக்குமார் அவர்களின் ஆய்வுரையும் மிகச்சிறப்பாக இருந்தது. அத்திரப்பாக்கம், குடியம்-குகை, கருப்பலவாடி, ஆய்வுகள் குறித்து விளக்கினார். நுண்கற்காலம் சார்ந்த மாங்குடி, பரிக்குளம், தேரிருவேலி(இராமநாதபுரம் மாவட்டம்) ஊர்களில் நடைபெற்ற ஆய்வுகள் குறித்து நினைவூட்டினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பிள்ளையார் பட்டி ஆய்வு குறித்து விளக்கிப் பழங்கற்கால மாந்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இனக்குழு இங்கு வாழ்ந்துள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் சான்றுகளுடன் விளக்கினார்.

மூன்றாவது உரையாளராகப் பேராசிரியர் விசய வேணுகோபால் அவர்கள் புதுவையில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆசியவியல் பள்ளி தமிழாய்வுகளுக்கு எந்த எந்த வகையில் தொண்டாற்றி வருகின்றது என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை குறித்த ஆய்வுகளுக்கு இந்த ஆய்வுநிறுவனம் செய்துள்ள பல்வேறு பணிகளைப் பட்டியலிட்டுக் காட்டினார். சுப்பிரமணியர் வழிபாடு(1978) பற்றி 246 புகைப்படங்களுடன் நூல் வெளிவந்துள்ளது என்றார். பைரவர் வழிபாடு(2005) குறித்தும் இந்த நிறுவனம் ஆய்வுநூல் வெளியிட்டுள்ளது என்றார். தாராசுரம்கோயில், பல்லவர் காலச் சைவ சமயச் சிற்பங்கள், திருப்புடைமருதூர் ஓவியங்கள், தமிழகம் ஆந்திரம், கேரளக் குகைகள் குறித்த ஆய்வுநூல்கள் சிறப்புடன் வெளிவந்தமையைக் குறிப்பிட்டார்.

தமிழகக் கோட்டைகள் குறித்து இதுவரை 4 நூல்கள் வெளிவந்துள்ளன எனவும், தேவாரம் மூன்று தொகுதிகள் தி.வே. கோபாலையரால் வெளியிடப்பட்டுள்ளன எனவும், பரிபாடல் பிரெஞ்சு நாட்டு அறிஞர் பிரான்சுவா குரோ அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (1968) எனவும், கணினித் தேவாரம்(2008) வெளிவந்துள்ளது எனவும் கர்ணமோட்சம் (நாட்டுப்புறவியல்) ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் சங்க இலக்கியம் செம்பதிப்பாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிட்டார்.

அறிஞர் செவ்வியாரின் தொல்காப்பியம் - சேனாவரையம் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு, ஈவா வில்டனின் நற்றிணை, குறுந்தொகைப் பதிப்புகள் பற்றியும், யாப்பருங்கலக்காரிகை(1993), மாறனகப்பொருள் - கோபாலையர் பதிப்பு, உத்திரமேரூர் கல்வெட்டுகள் (1970), பற்றியும்  திருவண்ணாமலைக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது எனவும், 1970 முதல்  கல்வெட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.

புதுவை மாநிலக் கல்வெட்டுகள் 435 இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளன எனவும், கன்னடத்தில் 1500, ஆந்திராவில் 6000, கேரளாவில் 6000  தமிழ்க்கல்வெட்டுகள் இருப்பதையும் குறிப்பிட்டார். இந்தக் கல்வெட்டுகளில் கன்னடநாட்டில் கிடைக்கும் கல்வெட்டுகள் இராசேந்திர சோழன் காலத்திய கல்வெட்டுகள் என்றும் குறிப்பிட்டார்.

கல்வெட்டில் இடம்பெறும் “ஜாதிநாசம் செய்தல்” என்ற தொடரை விளக்கினார். தற்பொழுது தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி உருவாகி வருவதையும் எடுத்துரைத்தார்.

மொத்தத்தில் மணற்கேணியின் பங்களிப்பால் தமிழுக்கு வற்றாமல் ஆய்வுத் தரவுகள் சுரந்துகொண்டே உள்ளன. 



கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மணிகள்(பட்டினப்பாலை குறிக்கும் மணிகள்)

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த சங்குகள்



கொடுமணல் அகழாய்வுகள்




நாக.இளங்கோவன், தாமரைக்கோ, தமிழநம்பி, செல்வா(கனடா), இராம.கி. 

 

1 கருத்து:

வேந்தன் அரசு சொன்னது…

நன்றி இளங்கோவன். நல்ல அறிக்கை.