நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 4 நவம்பர், 2012

தொல்பொருள் காப்பாளர் ந.கோபிராமன்
திரு ந. கோபிராமன் எங்கள் கல்லூரிக்கு இலக்கிய நண்பர்கள் அவ்வப்பொழுது வந்து என்னைச் சந்திப்பதும் உரையாடுவதும் வழக்கம். சிலர் அறிக்கைகள் தருவார்கள். சிலர் அழைப்பிதழ்கள் தருவார்கள். சிலர் சிற்றிதழ்களைக் கொண்டு வந்து தருவார்கள். மருத்துவர் அரிமாமகிழ்கோ போன்றவர்கள் பாவாணர்  மருத்துவக்கல்லூரி தொடங்குவது தொடர்பாக விளம்பர ஏடுகள் தருவார்கள்.

அந்த வகையில் இந்தக் கிழமை திருவாளர் ந. கோபிராமன் அவர்கள் வருகை தந்தார்கள். திரு. ந. கோபிராமன் அவர்களின் தமிழ்ப்பணிகளை முன்பே இலக்கிய ஆர்வலர் திரு. க. சுகுமார் அவர்கள் வழியாக அறிவேன். திரு. கோபிராமன் அவர்களுடன் அமைதியாக உரையாடும் வாய்ப்பு இப்பொழுதுதான் கிடைத்தது. தொல்புதையல் என்றபெயரில் தாம் நடத்தும் ஏட்டை எனக்கு வழங்கினார். உறுப்பினர் கட்டணம் எவ்வளவு என்று வினவி உரிய தொகையை வழங்கினேன். அவரின் தொல்புதையல் தரமான இதழாகப் புதுவையில் வெளிவருவது மகிழ்ச்சி தந்தது. அவரின் பணிநிலை கேட்டேன்.

புதுவைப் பொறியியல் கல்லூரியில் பயிற்றுநராக இருப்பதாகச் சொன்னார். ஆர்வம் காரணமாகப் பழைய நாணயங்கள், பணத்தாள்கள், தொல்பொருள்கள் சேமிப்பாளாராக இருப்பதையும் சொன்னார். பழைமையிலும், தொல்லியல் ஆய்வுகளிலும் எனக்கு ஆர்வம் உண்டு என்பதால் அவரின் முயற்சிகளை அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன செய்திகள் எனக்கு வியப்பாக இருந்ததால் உடன் அவர் இல்லம் எங்கு இருக்கின்றது என்று முகவரி பெற்றுக்கொண்டு புதுச்சேரி- முதலியார்பேட்டையில் உள்ள அவர் இல்லத்தை அரைமணி நேரத்தில் அடைந்தேன்.

தொண்டை மண்டல நாணயவியல் கழகம் என்ற பலகை அவர் இல்லத்தின் முகப்பில் இருந்தது. எனக்காகத் திரு. கோபிராமன் அவர்கள் காத்திருந்தார்கள். முதலில் அவரின் நூலகத்தைப் பார்வையிட்டேன். தொல்லியல், கல்வெட்டியல், நாணயம் சார்ந்த பல நூல்களைப் பாதுகாத்து வருவதைக் கண்டு மகிழ்ந்தேன்.

பின்னர் வீட்டில் நாணயக் கண்காட்சிக்காகச் செய்யப்பட்டிருந்த வகை வகையான பேழைகளைக் காட்டினார். இதற்கு இவ்வளவு செலவு செய்து பாதுகாக்கின்றாரே என்று வியந்தேன். அவரின் தொல்லியல் ஆர்வம் எனக்குப் புலப்பட்டது. அடுத்து, வீட்டிலிருந்து பழைய தொல்பொருள்களை ஒவ்வொன்றாக எனக்குக் கொண்டுவந்து காட்டினார். சங்க காலச் சேரர் நாணயம், சோழர் நாணயம், பாண்டியர் நாணயம், சங்கம் மருவிய காலத்து நாணயங்கள், கிரேக்க, உரோமானிய நாணயங்கள், அரிக்கமேட்டு அகழாய்வுப்பொருள்கள் அங்குக் கிடைத்த மணிகள், பளிங்குகற்கள், ஓடுகள் இவற்றைக் காட்டி மகிழ்ந்தார்.

பல்லவர் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வெளியிடப்பட்ட அரசர்களின் குறுநில மன்னர்களின் நாணயங்கள் அவர் வீட்டில் பாதுகாக்கப்படுவதைக் காட்டினார். உருப்பொருக்கி ஆடியின் வழியாக நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துகள், உருவங்கள், இலச்சனைகளை எனக்குத் தெளிவுப்படுத்தினார்.

பிற்காலச்சோழர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், பாண்டியர்கள், சேரர்களின் நாணயங்களையும் காட்டினார். விசயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்திலும், நாயக்கர்கள், மராட்டியர்கள், இசுலாமியர்கள் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பெற்ற வகை வகையான நாணயங்கள் யாவும் திரு. கோபிராமன் இல்லத்தில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் ஆங்கிலேயர்கள். பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் வெளியிட்ட பல்வேறு நாணயங்களும், பல நாடுகளில் வெளியிடப்படும் பணத்தாள்களும், அஞ்சல்முத்திரைகளும், மடல்களும் கண்டு மகிழ்ந்தேன்.

ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் வெளியிட்ட பணத்தாள்களில் பல்வேறு வரலாற்று உண்மைகள் இருப்பதைக் கோபிராமன் அவர்கள் சலிக்காமல் எடுத்துரைத்தார் இவரிடம் 150 நாடுகளைச் சேர்ந்த பணத்தாள்கள் உள்ளன. 500 கோடி மதிப்புள்ள தினார் இவரிடம் உள்ளது. இது யுகோசுலேவியா நாட்டின் பணத்தாள் ஆகும்(1993 இல் வெளியிட்ட அந்தப் பணத்தை அந்த நாடே திரும்பப்பெற்றுக்கொண்டது தனிக்கதை).

வீட்டின் நிலைப்பேழையில் இருந்து சில செப்புப் பட்டயங்களைக் கொண்டுவந்தார். சில எழுத்துகள் புரிந்தன. சில கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருந்தன. பின்னர் ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்தார். அவை இராமாயண ஓலைச்சுவடிகளாக இருந்தன. மேலும் சில ஓலைச்சுவடிகளைக் காட்டினார். அதனைப் படிக்கும் பயிற்சி இல்லாததால் மருண்டேன். கால் சிலம்புகள், மிகச்சிறிய திருக்குறள், மிகச்சிறிய குரான், பைபிள் இவற்றையும் பாதுகாக்கின்றார். முசுலிம் மன்னர்கள் பயன்படுத்திய போர்வாள், 1850 இல் பயன்படுத்தப்பட்ட குளம்பிக்(காபி)கொட்டை அரைக்கும் எந்திரம், பழங்கால உண்டியல், பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லாக மாறிய முட்டை எனப் பலவற்றைப் பாதுகாத்து வருகின்றார்.

இதுவரை உருசியாவில்தான் அகலமான பணத்தாள் அச்சிடப்பட்டுள்ளது. சீனாதான் மிகச்சிறிய பணத்தாளை வெளியிட்டுள்ளது. இசுலாமிய நாடான இந்தோனேசியாவில் விநாயகர் படம் பொறித்த பணத்தாள் 1998 இல் வெளியிடப்பட்டுள்ளது என்று அவற்றைக் காட்டினார். 11111, 22222, 33333 வரிசை கொண்ட பணத்தாள்களை இவரிடம் பார்க்கலாம்.

முகமது அலி சின்னா, கோசிமின், நிக்சன், சதாம் உசேன் என உலகத் தலைவர்களின் படம் பதித்த பணத்தாள்களையும் இவரிடம் பார்க்கலாம். இன்றையத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அவர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபொழுத கையொப்பமிட்ட எல்லா பணத்தாள்களும் இவரிடம் உள்ளன. தப்பாக அச்சிடப்பட்ட பணத்தாள்கள், உடுக்குறி(நட்சத்திரக்குறி) இட்ட பணத்தாள்களும் இவரிடம் உண்டு. 1947 முதல் 2012 ஆம் ஆண்டு வரை அச்சான இந்திய நாணயங்கள் யாவும் இவரிடம் உண்டு. சிறப்பு நாணயங்களையும் இவர் பாதுகாக்கத் தவறவில்லை.


பல்வேறு தோடுகளைக் காட்டினார். காலையில்தான் “கோழி எறிந்த கொடுங்கால் கணங்குழை” பற்றிப் பட்டினப்பாலையில் படித்தேன். அப்பொழுது விளங்காத தோட்டின் எடை இந்தத் தோடுகளைப் பார்த்ததும் விளங்கியது. செப்புத்தோடுகள் என்பதால் எடை மிகுதியாக இருந்தது. இத்தகு செப்புத்தோடு நிகர்த்த பொன்தோடுகள் எடை நிறைந்து இருந்திருக்கவேண்டும். அத் தோடுகளைத்தான் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

திரு.கோபிராமன் அவர்கள் வீட்டில் இருக்கும்பொருள்கள் முழுமையாகப் பார்வையிட வேண்டும் என்றால் ஒருநாள் ஆகும் என்று நினைக்கின்றேன். மணியைப் பார்த்த பொழுது இரவு ஒன்பது மணியை மணிப்பொறி காட்டியது. நான்கு மணிநேரம் திரு.கோபிராமன் அவர்களின் தொல்புதையல்களைக் கண்டு மகிழ்ந்தமை வாழ்க்கையில் மறக்க இயலாத ஒரு நினைவாகும்.

திருவாளர் ந. கோபிராமன் வாழ்க்கைக்குறிப்பு:

ந. கோபிராமன் அவர்கள் புதுவை மாநிலம் பாகூரில் 23.03.1959 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் நவநீதராமன், இராதாபாய் ஆவர். ந. கோபிராமன் அவர்கள் புகுமுக வகுப்புக் கல்விக்குப் பிறகு தொழில்நுட்பக்கல்வி பயின்றவர். இப்பொழுது புதுவைப் பொறியியல் கல்லூரியில் பயிற்றுநராக உள்ளார். 2006 ஆம் ஆண்டில் தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தை உருவாக்கினார். இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் (பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆய்வு மாநாடுகள்) கண்காட்சி நடத்தியுள்ளார். 1987 இல் திருமதி. கௌரி அவர்களை மணந்துகொண்டார். இல்வாழ்க்கையின் பயனாக அமலா, ஆனந்த் என்னும் பிள்ளைச் செல்வங்கள் இவர்களுக்கு வாய்த்தனர். இவர்கள் இருவரும் பொறியியல் பயின்றவர்கள்.

தஞ்சாவூர் சோழமண்டல நாணயவியல் கழகத்தைச் சேர்ந்த திரு.துரைராஜ் அவர்கள் கோபிராமன் அவர்களின் நாணயவியல் ஆர்வத்துக்கு ஊக்கம் நல்கியவர்.

இவர், “வரலாற்றில் தமிழ்எழுத்து நாணயங்கள்”, “பிரஞ்சு இந்திய நாணயங்கள்” என்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

புதுச்சேரி வரலாற்றுச் சங்கம் "நாணயவியல் செம்மல்" என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கியது(2011).

திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் "சிறந்த களப்பணியாளருக்கான மாமனிதர் விருது"(2009) வழங்கியது.

குன்னூரில் இவர் "அன்னை தெரேசா விருது" பெற்றுள்ளார்(2012).

தொடர்ந்து தொல்பொருள்களைப் பாதுகாப்பதில் ஆய்வாளர் ந.கோபிராமன் ஈடுபட்டு வருகின்றார். வாழ்த்துகள்.

திரு.கோபிராமன் அவர்களைத் தொடர்புகொள்ள:
செல்பேசி: 9788768204
புதுச்சேரியின் பழைய பணத்தாள்(பாருங்கள் தமிழர்களே! தமிழ்ப் பயன்பாட்டை)(1945)

பழைய பணத்தாள்(1945)
பழைய பணத்தாள்

மைதொட்டு எழுதும் தூவல்(பேனா)
அச்சு முத்திரை
ஓலைச்சுவடிகள்

மலாக்கா மடல்(மலேசியா)

மண் மணிகள் போலும்(!)
பல்வேறு மணிகள்வண்ண வண்ணத் தோடுகள்

வண்ண வண்ணத் தோடுதான் வகைய வகையா தோடுதான்..


அரிக்கமேடு- மணிகள்

தொல்புதையல்

குறிப்பு: கட்டுரையையும் படத்தையும் எடுத்து ஆள்வதற்கு முன் இசைவு பெறுக. எடுத்த இடம் சுட்டுக.

4 கருத்துகள்:

Kalairajan Krishnan சொன்னது…

வணக்கம் ஐயா,
திரு.ந்.கோபிராமன் போன்ற சிலரால் பல்வேறு காலகட்டங்களில் தமிழரின் பண்பாட்டை நாம் ஒரே இடத்தில அறிந்து கொள்ள முடிகிறது. தாங்கள் சென்று அறிந்து கொண்டதுபோல், தங்களது மாணவரும், மற்றம் புதுவைப் பள்ளி மாணவரும் அவரது இல்லம் சென்று நமது தொன்மையை அறிந்து கொண்டால் அவரது பணி இன்னும் சிறப்படையும்.
அருமையான படங்களுடன் தங்களின் விளக்கமும் அருமை.
அன்பன்
கி.காளைராசன்

வேந்தன் அரசு சொன்னது…

அருமையான கட்டுரை. கோபிராமன அவர்களுக்கு பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பகிர்வு... நன்றி...

திரு ந. கோபிராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Syed Anees சொன்னது…

he had more talent and he was a silent and good person .Excellent article. dad hats off to them. dad do it continsouly .very proud of you and lots of wishes for you.