மருத்துவர் பத்மா சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன்
வேலூர் என்றவுடன் வரலாற்று ஆர்வலர்களுக்கு அங்குள்ள கோட்டை நினைவுக்கு வரும். அரசியல்காரர்களுக்கு அங்குள்ள சிறை நினைவுக்கு வரும். திராவிட இயக்க உணர்வாளர்களுக்குத் தந்தை பெரியார் மறைந்தமை நினைவுக்கு வரும். இலக்கிய ஆர்வலர்களுக்குத் தமிழறிஞர் மு.வ நினைவுக்கு வருவார். அதுபோல் தமிழ்ப் பற்றாளர்களுக்கு வேலூர் என்ற உடன் நினைவுக்கு வரும்பெயர் வழக்கறிஞர் தெ.சமரசம் என்பதாகும்.
திராவிட இயக்கப் பின்புலத்தில்
வளர்ந்த வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு அமைதியாக உதவி
வருபவர். முல்லைச்சரம், கண்ணியம், மூவேந்தர் முழக்கம் உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து
எழுதி வருகின்றார். இவர் இயற்றியப் பயண இலக்கிய நூல்கள் பற்றி முன்பே ஓர்
ஆய்வரங்கில் கட்டுரை படித்துள்ளேன். இருபதாம் நூற்றாண்டில் பயண இலக்கிய
நூல்களுக்குத் தனிச் சிறப்பை ஏற்படுத்தித் தந்தவர். இவர் இலங்கை, மலேசியா,
நியூசிலாந்து, அந்தமான் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் செய்தமையைப்
படிப்பவர் உள்ளம் மகிழ்ச்சியடையத்தக்க வகையில் தனித்தனி நூல்களாக எழுதியுள்ளமை
பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.
வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்கள்
கடந்த காரிக்கிழமை(24.11.2012) புதுச்சேரிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். உடன்
அவரைப் பார்ப்பதற்குத் திட்டமிட்டேன். பெரும்பாலும் எனக்குக் காரி,
ஞாயிறுகளில்தான் அதிக வேலை இருக்கும். ஆய்வுப் பணிகளில் ஈடுபடவும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் விடுமுறை நாள் உதவியாக இருக்கும். ஐயாவின் வருகை எனக்குத் தேனாக இனித்தது.
அம்மாவும் உடன் வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். காலை 11 மணிக்கு வழக்கறிஞர்
தெ.சமரசம் ஐயா தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு
சந்திப்பு.
பலவாண்டுகளுக்கு முன் வேலூர்
சென்று ஐயாவையும் மருத்துவர் அம்மாவையும் அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன்.
அம்மாவுக்குத் தமிழ் இணையம் பயிற்றுவித்தேன். அவர்கள் தமிழில் தட்டச்சிடவும்,
செய்திகளைத் தேடிப் படிக்கவும் நான் வழங்கிய குறிப்புகள் உதவியதாக அம்மா
மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள். எவ்வளவு எடுத்துரைத்தும் ஐயாவுக்கு இணையம்
தொடர்புஇல்லாமல் உள்ளதை ஒப்புக்கொண்டார்.
எங்கள் பேச்சு பயண இலக்கிய
நூல்கள் பற்றி நகர்ந்தது. அடுத்து மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், அரசியல்
தலைவருமான டத்தோ சுப்பிரமணியன் அவர்களைப் பற்றியும் அவர்களின் அருமைத்துணைவியார்
டத்தின் தாமரைச்செல்வி அவர்களைப் பற்றியும் உரையாடினோம். இருவரும் கண் அறுவை
மருத்துவத்திற்காகத் தமிழகம் வந்துள்ளதாக அறிந்தேன். அடுத்த கிழமை அவர்களைச்
சந்திக்கவும் முன்னேற்பாடு செய்தோம்.
வேலூரில் நடைபெறும் பல்வேறு
தமிழ்ப்பணிகளைப் பற்றியும், குடியாத்தம் புலவர் வே. பதுமனார் பற்றியும் வி.ஐ.டி.
பல்கலையில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவது பற்றியும் உரையாடினோம்.
அடுத்து எங்கள் பேச்சு தெ.சமரசம்
ஐயா அவர்களின் திருமகனார் மருத்துவர் ச. இனியன் அவர்களைப் பற்றி அமைந்தது.
மருத்துவர் இனியன் தமிழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து உயர் படிப்பை
ஆத்திரேலியாவில் பயின்றவர். முன்பே நூல்கள் வழியாக மருத்துவர் ச. இனியன் பற்றி
அறிவேன். இன்று புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு உரையாற்ற
வந்துள்ளதாக அறிந்தேன்.
மருத்துவர் ச.இனியன் அவர்கள் சிறப்புரை
முடித்து இரண்டு மணியளவில் அறைக்குத் திரும்பினார். மருத்துவர் இனியன் அவர்கள்
இப்பொழுது வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி) மருத்துவராகப்
பணிபுரிகின்றார். அவர் குடல் (முன்குடல்) மருத்துவத்தில் மிகச்சிறந்த புலமை
பெற்றவர். அவர் கற்ற கல்விக்குப் பல்லாயிரம் டாலர் ஊதியம் பெறலாம். ஆனால் தாயக
மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் தமிழகம் வந்துள்ளார் என்று அறிந்து வியந்துபோனேன்.
வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன்
மருத்துவர் ச.இனியன் அவர்கள் ஏழை
எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும் மருத்துவம் பார்க்கும்
இயல்பறிந்து வியந்துபோனேன். மருத்துவர் ச. இனியனின் இயல்பறிந்தபோது நான் இதுவரை
பார்த்த ஒவ்வொரு மருத்துவரும் என் நினைவில் நிழலாடினர். மருத்துவர் ச.இனியனுடன்
சிறிது நேரம் உரையாடினேன். அவர்கள் அனைவரும் வேலூரில் ஆறுமணிக்கு இருக்க வேண்டும்
என்று புறப்பட்டனர்.
நான் அடுத்த நிகழ்வுக்கு -
மணற்கேணி அமைப்பின் தொல்லியல் குறித்த ஆய்வுக் கருத்தரங்கிற்குச் செல்லப்
புறப்பட்டேன். வழியில் உணவை முடித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு, மிசன்வீதி
கடந்து, செட்டித் தெருவில் உள்ள ரெட்டியார் உணவகத்தை நோக்கிச் சென்றேன். இடையில் ஒரு
இனிய காட்சி: கடலாய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் ஒரு மரத்தடியில் சிறிய மாநாடு நடத்திக்கொண்டிருப்பதைப்
பார்த்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக