த.ச.தமிழன்
இலக்கண நூல் ஆசிரியரும் தனித்தமிழ் அறிஞருமான தா.சரவணத்தமிழன் அவர்கள் இன்று (26.08.2012) இரவு 8 மணி அளவில் சென்னைப் போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரது உடல் மருத்துவமனை வளாகத்திலேயே இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
அவர் உடலை மருத்துவ ஆய்வுக்குக் கொடையாக வழங்கிருப்பதால், நாளை மாலை 4 மணி அளவில் அவரது உடல் அதே மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட உள்ளது.
திருவாரூரில் இயற்றமிழ்ப் பயிற்றகம் என்ற அமைப்பினைத் தொடங்கிப் பல்வேறு புலவர்களையும், படைப்பாளிகளையும், உருவாக்கியவர் சரவணத்தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது.
த.ச.தமிழன் அவர்கள் தமிழறிஞர் திரு.விக. அவர்களுக்குத் திருவாரூரில் சிலை நிறுவியவர். தமிழன் பதிப்பகம், இயற்றமிழ்ப் பயிற்றகம் நிறுவிப் பல நூல்களை வெளியிட்டவர். இவரின் தமிணூல், தனித்தமிழ் நாவலரின் கனித்தமிழ்க் கட்டுரைகள், இருநூல் பிழிவு, பழமையிலே பூத்த புதுமை மலர், யாப்பு நூல் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.
அடியார்க்குமங்களம் அவரது ஊர்.
த.சரவணத்தமிழன் அவர்களின் மனைவி பெயர் சுசிலா தமிழச்சி. சில ஆண்டுகளுக்கு முன்பு இதய நோயால் இறந்துபோனார். இவர்களுக்கு இல்லற வாழ்வில் மொத்தம் பிறந்தது எட்டுக் குழந்தைகள். நான்கு குழந்தைகளே பிழைத்தனர்.
மூத்த மகன் பெயர் குறளேந்தி. இவருக்கு ஐந்து மகள்கள். தற்போது காந்தாவனம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.
தமிழறிஞரின் மூன்று மகள்களில் இரண்டு மகள்கள் விதவையாக வாழ்கின்றனர்.
மூத்தமகள் தமிழரசியின் கணவர் ராமையன். சென்னையில் குளிர்சாதன பெட்டி பழுது நீக்குபவராக தொழில் செய்து வாழ்ந்தவர், சரியான நேரத்துக்கு உண்ணாமல் வயிற்றுப்புண் வந்து திருமணமான ஏழு ஆண்டில் இறந்துபோனார்.
அதன் பிறகு மகளுக்கு துணையாகச் சென்னைத் தாம்பரம் அருகில் உள்ள கரிசங்கால் கிராமத்தில் பக்கவாதம் பாதித்த நிலையில் வாழ்ந்துவந்தார்.
அடுத்த சில ஆண்டுகளில் அவரது இரண்டாவது மகள் மெய்யறிவின் கணவர் இறந்துபோனார். இருச்சக்கர பழுது நீக்குபவராக தொழில் செய்து வந்தவர், தன்னிடம் இருந்த நுரையீரல் பிரச்சினைக்குச் சரியாக சிகிச்சை எடுக்காததால் அவரும் மறைந்தார். பலவகை இழப்புகளுக்கு நடுவிலும் கொண்டகொள்கையில் மாறாமல் தனித்தமிழ் ஈடுபாட்டுடன் வாழ்ந்தவர்.
நன்றி:
யாணன்
தமிழம்.நெட்
5 கருத்துகள்:
தகவலுக்கு நன்றி.என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பது என் கடமை.ஐந்திலக்கணமும் புதுமையாகப் படைக்கவிரும்பினார்.புதுப்பா,திரைப்பா ஆகியவற்றிற்கும் யாப்புநூல் கண்டார்.திருவாரூரில் திரு.வி.க.வுக்குச் சிலை நிறுவினார்.அடியார்க்குமங்களம் அவரது ஊர்.
அய்யாவின் இறப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். அவர்தம் குடும்பத்தினரின் துன்பங்கள் நீக்கப்படல் வேண்டும்.
திரு.வி.க வின் பேரன்பரான, நற்றமிழ் அறிஞர், சரவணத் தமிழன் ஐயாவின் பொன்னுடலுக்கும், புகழுக்கும் கரங் கூப்பிய வணக்கங்கள்!
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!!
குறளேந்தியுடன் - பள்ளியில் படித்தபோது ... பட்டிமன்றத்தில் பங்கு பெற்றேன்.. அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முனைந்தபோது தமிழறிஞர் - தமிழென வாழ்ந்த அவர் தந்தையின் இறப்பும் அவர்களது குடும்ப சூழலையும் தெரிந்து கொள்ள முடிந்தது.. இயற்றமிழ் வாழும் நாளும் அவர் பெயர் பேசும்...சையித் அஹ்மத்
குறளேந்தியுடன் - பள்ளியில் படித்தபோது ... பட்டிமன்றத்தில் பங்கு பெற்றேன்.. அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முனைந்தபோது தமிழறிஞர் - தமிழென வாழ்ந்த அவர் தந்தையின் இறப்பும் அவர்களது குடும்ப சூழலையும் தெரிந்து கொள்ள முடிந்தது.. இயற்றமிழ் வாழும் நாளும் அவர் பெயர் பேசும்...சையித் அஹ்மத்
கருத்துரையிடுக