நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 18 ஆகஸ்ட், 2012

மாமண்டூர் குகைக்கல்வெட்டுகள்...


மாமண்டூர் குகை


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள "உக்கல்" என்ற ஊரில் வாழும் இளைஞர்கள் நேரு இளைஞர் நற்பணி மன்றம் என்ற பெயரில் அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் விழா நடத்தி வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு முன் இந்த ஊரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். நானும் இசைவு தந்தேன். அறிக்கைகள், விளம்பரங்கள் ஆயத்தமாயின. விழாவுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக எனக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டு அசைய வழியில்லாமல் படுக்கையில் இருந்தேன். என் நிலையை விழா ஏற்பாட்டாளர்களுக்கு என்னை அறிமுகம் செய்த நல்லாசிரியர் கோ.சு.மோகனவேல் அவர்களிடமும் அண்ணன் உதயகுமார் அவர்களிடமும் தெரிவித்தேன். பெரும்பாடுபட்டு விழாவை ஒழுங்குசெய்த அவர்களுக்கு உள்ளுக்குள் வருத்தம் இருந்திருக்கும். ஆண்டுகள் சில ஓடின.

மீண்டும் உக்கல் இளைஞர்கள் இந்த ஆண்டு என்னை அழைத்தனர். முன்புபோல் ஏதேனும் நடந்து, மீண்டும் விழாவுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டால் சிக்கலாகிவிடும் என்று பல்வேறு பணிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஆகத்து மாதம் பதினைந்தாம் நாளுக்குக் காத்திருந்தேன். ஆகத்து மாதம் பதினைந்தாம் நாள் காலையில் ஒன்பது மணிக்குப் புதுச்சேரியில் பேருந்தேறினேன். ஆறுநாள் புதுவையில் தொடர்ந்து விடுமுறை என்பதால் மக்கள்கூட்டம் எம்பெருமான் ஏழுமலையானை வழிபடத் திருவேங்கடம் புறப்பட்டது. பேருந்தில் கால் வைக்க இடமில்லை. வேறு வழியில்லாமல் நின்றகோலத்தில் பேருந்துச் செலவு அமைந்தது. இடையிடையில் என் வருகையை அண்ணன் உதயகுமார் அவர்களுக்குத் தெரிவித்தபடி சென்றேன்.

திரு உதயகுமார் சமூகச் சீர்திருத்த உணர்வுடையவர். கூழமந்தல் என்ற ஊரில் பிறந்தவர். சென்னையில் தொலைத் தொடர்புத்துறையில் பணிபுரிகின்றார். இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆக்கப்பணிகளுக்கு வழிகாட்டுபவர். பத்தாண்டுகளுக்கு முன் நான் கலவையில் பணிபுரிந்தபொழுது கூழமந்தல் என்ற தம் பிறந்த ஊரில் என்னைப் பேச அழைத்தவர். அன்று ஏற்பட்ட நட்பு இன்று வரை வளர்பிறைபோல் வளர்ந்து வருகின்றது.

நான் உக்கலில் பேசவேண்டும் என்பதில் திரு. உதயகுமார் அவர்கள் பேரார்வம் கொண்டவர். என்னை வரவேற்கப் பேருந்து நிலையத்தில் காத்திருப்பார் என்று ஆர்வமாகச் சென்றேன். அவரைக் காணவில்லை. இருப்பினும் அந்த ஊருக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே நான் சென்றுள்ள பட்டறிவு இருப்பதால் இறங்கி உதயகுமார் அவர்களின் இல்லத்திற்குச் சென்று யாரையும் கேட்காமல் திண்ணையில் அமர்ந்தேன். அங்கிருந்த தினத்தந்தி நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். மீண்டும் தொலைபேசியில் பேசினேன். இன்னும் பத்து மணித்துளியில் வருவதாகச் சொன்னார். வேறு வேலையில் இருக்கின்றார் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அதற்குள் அண்ணன் உதயகுமார் ஏற்பாட்டில் வேறொரு தம்பி வந்து என்னை வரவேற்றார். குளிர்ந்த நீர் கொணர்ந்தார். அருகில் உள்ள சிவன்கோயில் வரை சென்று வருவோம் என்றார். முன்பே அந்தக் கோயிலைப் பார்த்திருந்தேன் எனினும் படம் பிடித்தேனில்லை. எனவே புகைப்படக் கருவியுடன் கோயிலுக்குச் சென்றோம் அக்கோயில் எங்கள் ஊரான கங்கைகொண்டசோழபுரத்துடன் தொடர்புடையது. சோழமண்டலம் என்பதை ஒலிக்கத்தெரியாத வெள்ளைக்காரன் அந்த ஊரைக் கூழமந்தல் (CHOLAMANDAL) என்றாக்க நம் மக்களும் கூழமந்தலாக்கிக் குழப்பிவருகின்றனர்.

கூழமந்தல் கோயிலின் பல பகுதிகளைப் பார்வையிட்டோம். அங்குள்ள கல்வெட்டுகள் சிதைந்து உள்ளன. முன்பே படி எடுக்கப்பட்டுள்ளதாகச் சொன்ன பிறகு பெருமூச்சுவிட்டேன். அங்குள்ள தென்முகக்கடவுள், சிவலிங்கம், அழகிய நந்தி யாவும் அங்குமிங்குமாகப் பராமரிப்பின்றி அண்மைக்காலம் வரை இருந்துள்ளன. கோயிலும் குழந்தைகள் விளையாடும் ஆடுகளமாக மாறியிருந்தது. நல்ல உள்ளம் வாய்த்த அன்பர்களின் முயற்சியால் கோயில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.


கூழமந்தல் கோயிலின் அழகிய பகுதி


கூழமந்தல் கல்வெட்டு


கூழமந்தல் கல்வெட்டுகூழமந்தல் சிவன்கோயில்


சிதிலமடைந்த முன்மண்டபம்

கூழமந்தல் சிவன்கோயிலையும் கல்வெட்டுகளையும் பார்வையிட்டுக்கொண்டிருந்தபொழுது அண்ணன் உதயகுமார் அவர்கள் வந்து என்னை வரவேற்றுப் பல விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். கோயில் பார்வையிடல் முடிந்து வீடு வந்தோம். திண்ணையில் அமர்ந்து பயணம் பற்றி உரையாடினோம். அதுவரையில் அண்ணன் உதயகுமார் அவர்கள் வந்துசேரக் காலம் தாழ்ந்தமைக்குரிய காரணத்தைச் சொல்லாமல் இருந்தார்.

காரணத்தைச் சொன்னவுடன் உள்ளம் குமைந்தேன். மிகவும் வருந்தினேன். அண்ணன் உதயகுமார் அவர்களின் தங்கையின் கணவர் ஓரிரு நாளுக்கு முன்பாக மாரடைப்பால் இறந்த செய்தியைச் சொல்லி, தங்கைக்கு ஆறுதலாக அவர்கள் வீட்டில் இருப்பதாகவும் சொன்னார். சில சடங்குகளின்பொருட்டு அனைவரும் தங்கையின் வீட்டில் இருப்பதைச் சொன்ன பிறகு அனைவரும் பேச்சற்று அமைதியானோம். அருமைத் தங்கையினுக்கு ஆதரவாக இருக்க வேண்டியவர் எங்களுடன் இருகின்றாரே என்று உடன் புறப்படும்படி வேண்டிக்கொண்டோம். ஆனால் எங்களுக்குப் பகலுவுக்கு வழி செய்துவிட்டு என்னை மாமண்டூர் குகைக் கல்வெட்டுகளைப் பார்வையிட நண்பர் மோகனவேலுவிடம் ஒப்படைத்துவிட்டு அண்ணன் உதயகுமார் விடைபெற்றுக்கொண்டார். பகல் ஒரு மணியளவில் மாமண்டூர் நோக்கி எங்கள் உந்துவண்டி பாய்ந்தோடியது.

மாமண்டூர்

மாமண்டூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். இது காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து 10 கல் தொலைவில் தென்திசையில் உள்ளது. நரசமங்கலம் என்ற ஊரில் இறங்கி மேற்காக இரண்டு கல் தொலைவு நடந்தால் மாமண்டூர் மலையை அடையலாம். சதாசிவ பண்டாராத்தார், முனைவர் மா.இராசமாணிக்கனார் நூல்கள் வழியாக மாமண்டூர் பற்றி ஆர்வமுடன் கற்ற மாணவப்பொழுதுகள் இப்பொழுது நினைவுக்கு வந்தன. எங்கள் உந்துவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுக் குகைக்குச் செல்ல நினைத்தோம்.

இந்திய அரசின் தொல்லியல்துறையின் சார்பில் மாமண்டூர் மலையைச் சுற்றிலும் சுற்றுவேலி அமைக்கும் பணி நடந்துவருகின்றது. தொல்பொருள் ஆய்வகம் சார்பில் ஓர் அலுவலகமும் கட்டப்பட்டு வருகின்றது. மகேந்திரவர்மன் காலத்திலும் அதனை அடுத்துப் பராந்தக சோழன் காலத்திலும் புகழ்பெற்ற ஏரியாக மாமண்டூர் ஏரி இருந்துள்ளது.

4500 ஏக்கர் பரப்பளவுகொண்டிருந்த ஏரியால் சுற்றியுள்ள 18 சிற்றூர் சார்ந்த நிலங்கள் பாசனவசதி பெற்றன. இன்று ஏரியை நிலமாக்கி மக்கள் உழுதுவருகின்றனர். ஏரி சுருங்கி இப்பொழுது குட்டையாகக் காட்சியளித்து வருகின்றது. ஏரியில் பழங்கால மதகு ஒன்றும் உள்ளது. ஏரியின் கீழ்ப்பகுதி மலையால் அமைந்துள்ளது. ஏரிக்குக் கரையாக இந்த மலைப்பகுதி அமைந்துள்ளது. மலையில் பழங்காலத்தில் சமண முனிவர்கள் தங்கியிருக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் அவை யாவும் போதிய பராமரிப்பின்றி வௌவால் மூத்திரத்தால் அர்ச்சிக்கப்பட்டுச் சிதைந்து காணப்படுகின்றன. குடிமகன்களுக்கு ஏற்ற இடமாக இன்று குகைக்கோயில் மாறியுள்ளது.

மாமண்டூர் பற்றி ஆராயப் புகுவோர் குகைகள், கல்வெட்டுகளுடன் தங்கள் ஆராய்ச்சியை முடித்துக்கொள்வார்கள். ஆனால் இங்குத் தமிழிக் கல்வெட்டுகளும், கற்பதுக்கைகளும், கற்படை வட்டங்களும் உள்ளன என்பதைத் தமிழக வரலாற்றில் ஆர்வமுடைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களைப் போன்ற அறிவார்ந்த ஆய்வாளர்களை நம் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். போற்றி மதிக்கமாட்டார்கள்.
இவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆய்வுத்துறையில் ஈடுபடும் தமிழார்வலர்களின் முயற்சிகள்தான் எதிர்காலத்தில் பேசப்படும். அந்த வகையில் மாமண்டூர் குகைக் கல்வெட்டுகளும், கற்பதுக்கைகளும், கற்படைகளும் பலநாள் தங்கி ஆராய்வதற்கு ஆராய்ச்சியாளர்களுக்குக் களமாக உள்ளது என்பதை மட்டும் ஒருவரியில் குறிக்கலாம். இதுவும் நிற்க.

மாமண்டூரில் நான்கு குடைவரைகள் உள்ளன. ஒன்று முற்றுப்பெறாமல் உள்ளது. எஞ்சியவை அழகிய தூண்களைக் கொண்டும். சிலைகளை நிறுவுவதற்குரிய அகழ்வுப்பகுதிகளைக் கொண்டும் விளங்குகின்றன. சில குகைகளில் பூவேலைப்பாடுகளுடன் உள்ள தூண்களைக் காணமுடிகின்றது. சுவரில் கல்வெட்டுகள் சிதைந்து காணப்படுகின்றன. கிரந்த எழுத்துகளால் அமைந்த கல்வெட்டுகளைப் படிக்கும் புலமையுடைவர்கள்தான் இதனைப் படிக்க இயலும்.

வடக்குப் பகுதிக் குகையில் தென்சுவரில் மகேந்திரவர்மன் "மத்தவிலாச பிரகசனம்" எழுதிய குறிப்பு உள்ளது. மேலும் அவனுக்குச் "சத்ருமல்லன்", "நித்திய விநீதன்", "சத்தியசாந்தன்" எனும்பெயர்கள் உண்டு என்பதையும் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. மற்றொரு கோயிலில் மூன்று கருவறை உள்ளது. பராந்தகன் காலத்துக் கல்வெட்டில் "வாலீச்வரம்" எனவும், முதல் இராசராசன் காலத்தில் இந்த ஊர் "உருத்திர வாலீச்சரம்" எனவும் வழங்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பெரிய பாசன வசதியுடைய இந்த ஏரி பராந்தகன் காலத்தில்
"சித்திர மேக தடாகம்" எனப்பட்டுள்ளது.

மழைபொழியும் பொழுது தண்ணீர் குகைக்குள் நுழையாதபடி தண்ணீர் வழிந்தோடும் சிறு பாதைகள் மலைக்கல்லில் மேல்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. குகைப்பகுதியில் வாழ்ந்தோர் மாழைகளை(உலோகங்களை) உருக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதற்குரிய தடயங்கள் உள்ளன. அருகில் கற்படை வட்டங்கள்(பழந்தமிழரின் வானியல் ஆய்வுக்கூடம்) காணப்படுவதையும் ஆய்வாளர்கள் கண்டுகாட்டியுள்ளனர்.

மாமண்டூர் குகையின் தென்புறத்தில் இருந்த முற்றுப்பெறாத குகையை முதலில் பார்வையிட்டோம். பின்னர் வடபகுதியிலிருந்த அடுத்த குகையைப் பார்வையிட்டோம். அதனை அடுத்து மேலும் வடக்குப் பகுதியில் இருந்த குகைகளைப் பார்வையிட்டோம். இப்பொழுது வெயிலின் கடுமை எங்களை வாட்டி எடுத்தது. கையில் கொண்டு சென்ற தண்ணீரை எவ்வளவு குடித்தாலும் தாகம் அடங்கிய பாடில்லை. குகைகளைப் பார்வையிட்டும் படமாக்கியும், கல்வெட்டுகள், தூண்கள் யாவற்றையும் பார்த்தும் எங்கள் விருப்பத்தை நிறைவேற்றினோம்.

கீழே உள்ள பகுதிகளைப் பார்த்த நாங்கள் மலைமீதிருந்த கோயிலை அடையும் பாதையை அருகில் மாடுமேய்த்த சிறுவனிடம் கேட்டுக்கொண்டு, மலையேறினோம். குறைந்த தூரம் மலையேறுவதாக இருந்தாலும் வெயிலின் கொடுமையில் தலைச்சுற்றுவதுபோல் இருந்தது. மெல்ல ஏறி நின்று மாமண்டூர் ஏரியின் அழகிய காட்சியைப் பார்த்து மகிழ்ந்தோம். ஆனால் ஏரி இப்பொழுது நஞ்சைப்பயிர்களும் புஞ்சைப் பயிர்களும் விளையும் இடமாக மாறியுள்ளது. ஏரி குட்டையாகக் காட்சி தருகின்றது. மலைப்பகுதிகளில் இருந்த சில நீர்வழியும் பாதைகளைப் பார்த்தபடி கீழிறங்கினோம்.

அடுத்துப் பழைய மதகுகள் இருப்பதை நண்பர் மோகனவேல் நினைவூட்டினார். அங்கு முள்வேலி அமைக்கும் பணியிலிருந்த பெண்களிடம் வழிகேட்டபடி மலைப்பாதை கடந்து ஏரிக்கரையில் எங்கள் உந்துவண்டியை ஏற்ற முனைந்தோம். இதுவரை எங்களைச் சுமந்துவந்த வண்டியை இப்பொழுது நாங்கள் சுமக்க வேண்டியிருந்தது. தண்ணீர் பிடிக்கும் இரண்டு பெண்கள் எங்கள் வண்டியைக் கரையேற்ற உதவினார்கள். ஏரியின் உள்பகுதியில் இறங்கி மதகு இருக்கும் பகுதிக்குச் சென்றோம். பாதை முட்டி நின்றது. வந்த வழியே திரும்பிவந்து வேறுவழியாக ஏரியில் இறங்கினோம். வெயிலில் அலைந்த அலைச்சல் மதகும் வேண்டாம், ஆராய்ச்சியும் வேண்டாம். நல்ல நிலையில் வீடுபோய்ச் சேர்ந்தால் போதும் என்று இருந்தது.

நண்பர் மோகனவேல் விடாப்பிடியாக என்னை மதகு காட்ட அழைத்துச் சென்றார். அழகிய வேலைப்பாடுடன் பல நூறு ஆண்டுகளாக அந்த மதகு பழந்தமிழரின் பெருமையைப் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றேன். இதுபோல்தான் சோழகங்கம் என்ற பொன்னேரியில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மதகு ஒன்று எங்கள் ஊரில் இருந்தது. அந்த மதகடியில்தான் கல்லூரிக் காலங்களில் நான் தேர்வுக்குப் படித்ததுண்டு. மாமண்டூர் ஏரி மதகுகளைப் பார்த்ததும் எனக்கு அந்த நினைவு வந்தது.

மாமண்டூர் ஏரி மதகுகளைப் படம்பிடித்துக்கொண்டோம். மீண்டும் ஒரு சுற்று அந்த ஏரியைச் சுற்றியபடி நரசமங்கலம் தார்ச்சாலையைப் பிடித்தோம். இப்பொழுது சிறிதளவு தூறல் பெய்தது. இன்னும் சற்று நேரத்தில் நான் உக்கல் என்ற ஊரில் பேச வேண்டும். மணி ஆறானது. வழியில் வேகமாக நாங்கள் வந்தபொழுது தமிழன்பர் தமிழ்.முகிலன் எதிர்ப்பட்டார். அவரிடம் உரையாடிச் சில படங்களைப் பெற்றுகொண்டோம் விழாவுக்கு அவரையும் அழைத்தோம். சிறிது காலம் தாழ்ந்து வருவாதக உரைத்தார். நாங்கள் மட்டும் உக்கல்நோக்கி மழையில் நனைந்தபடி வந்துசேர்ந்தோம்.


முதல் குகைக்குச்செல்லும் வழி


பீடம் புதைக்கத்தக்க அளவில் அமைந்த குகை


குகை குறித்த அறிவிப்பு


மாமண்டூர் குகையில் சிவலிங்கம்


குகை குறித்த விளக்கப்பலகை


குகையின் உள் பகுதி


குகையின் உள் வாயிலில் உள்ள சிற்பங்கள்


குகையின் தூரக்காட்சி


மாமண்டூர் குகைசிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த குகை


வௌவால் சிறுநீர்ப்பெருக்கால் நனைந்த அரிய கல்வெட்டுகள்

குகையின் தூரக்காட்சிமலைக்கோயிலுக்குச் செல்லும் வழி


மலைக்கோயில் கல்வெட்டு


அரிய கல்வெட்டு(நன்றி:முகிலன்)


கற்பதுக்கைகளில் நீர்விழிந்தோடும் பாதை (நன்றி: முகிலன்)


அரிய கல்வெட்டு(நன்றி: முகிலன்)


மாமண்டூர் ஏரி மதகு அண்மைத் தோற்றம்


மாமண்டூர் ஏரி மதகுமாமண்டூர் ஏரி


ஏரிப் பின்புலம்


மாமண்டூர் ஏரியைக் காட்சிப்படுத்தும் முயற்சியில் மு.இ.

11 கருத்துகள்:

Innamburan சொன்னது…

இந்த கட்டுரை ஒரு வரலாற்று கருவூலம். எனவே நல்வரவு. நான் இர்ப்பது இங்கிலாந்து. இங்கெல்லாம் சுருக்கமாக் இந்த செய்தியை பரப்பவேண்டும். உற்ற ஆய்வுகளின் அடிப்படையில் இண்டாலஜி வல்லுனர்களுக்கு தெரிவிக்கவேண்டும், முனைவர் இளங்கோவனின் மு அனுமதியுடன். எனக்கு தனி மடல் அனுப்பச்சொல்லி, அவரை கேட்டுக்கொள்கிறேன்.
இன்னம்பூரான்

eraeravi சொன்னது…

சிறப்பான கட்டுரை பாராட்டுக்கள்

பெயரில்லா சொன்னது…

Excited to read and see this post.... Keep Continue....

Murugeswari Rajavel சொன்னது…

நேற்றைக்குத் தான் பத்தாம் வகுப்பு மாணவியருக்கு தொன்மைத் தமிழகம்,
தொல்லியல் ஆய்வுகள் குறித்த பாடப்பகுதியை நடத்தினேன்.இந்தக் கட்டுரையை எம் மாணவியருக்குக் காண்பித்தால் அந்தப்பகுதியில் மேலும் விளக்கம் பெறுவர்.வாய்ப்பு?பள்ளியில்
கணினிகள்,இணைய இணைப்பு எல்லாம் இருக்கிறது.
சிறப்பான கட்டுரை.தங்கள் முயற்சிகள் யாவும் போற்றுதலுக்குரியது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கட்டுரை சார்... வாழ்த்துக்கள்...

பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி...

InSPA சொன்னது…

Dear Dr. Elangovan
Really exciting article. Well done. Congrates

kadambooran சொன்னது…

a real historical artical thanks i will tell to my students if any chance i will see it

நாகு சொன்னது…

Good and Worthy article....thanks kindly pass this article to educational sites.

regards

nagu
www.tngovernmentjobs.in

balu manjai ngp சொன்னது…

சு.பாலசுப்பிரமணியன்

அன்பு நண்பரே உங்கள் ஆய்வுப் பணியும் போற்றுதற்குரியன.
ஒரு ஐயம் நண்பரேஇ நமது நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை பல மையங்கள் பத்திரப்படுத்தியுள்ளதாகவும் படி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயின் அதை ஆராயும் எண்ணமும் ஆராய்ச்சி செய்பவருக்கு பணப்பயன் கிட்டுமளவுக்கு அரசோ பல்கலைக்கழகங்களோ செம்மொழி மையமோ உதவுகிறதா?
ஆய்வு செய்ய விரும்புவோருக்கு என்ன வகையான உதவிகள் கிடைக்கும்? எனப் பல நண்பர்கள் கேட்கின்றனர். விளக்கம் கிட்டுமா?


முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

உண்மையான ஆய்வாளர்களுக்குப் பணவருவாய் பற்றிய வழி தெரியாது. 'இருவேறு உலகத்து இயற்கை"

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நல்ல முயற்சி.வாழ்க வளர்க.