நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

உக்கல் இளைஞர்களின் அன்பான வரவேற்பு...




 மழையும் காற்றுமாக மாலை நேரம் இருந்தது (15.08.2012). பெருமழை வந்தால் நிகழ்ச்சியை உக்கல் பெருமாள்கோயிலில் வைத்துக்கொள்ளலாம் என்று ஆசிரியர் சு.மோகனவேல் சொன்னார். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள கூழமந்தலிலிருந்து மூன்றுகல் தொலைவில் உக்கல் உள்ளது. குண்டும் குழியுமான தார்ச்சாலை.

 எங்கள் உந்து வண்டியில் கூழமந்தல் வழியாக நாங்கள் ஊர்முனையை நெருங்கியதும் ஒலிபெருக்கி எங்களை வரவேற்றது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் “உறியடி” என்னும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. உறியடி மகிழ்ச்சியிலும் எங்களைக் கண்டு ஓரிருவர் வரவேற்றனர். சிற்றூர்ப்புற நிகழ்ச்சி என்றாலும் வழக்கம்போல் வெட்டுருக்கள், பதாகைகள் வரவேற்றன. சு. மோகனவேல் அவர்களின் இல்லத்தை அடைந்தோம். சு.மோகனவேல் அவர்களின் தந்தையார் திரு. கோ.சுப்பிரமணியம் அவர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டவர். ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்து மக்கள்பணி செய்து வருகின்றார்.

 சு. மோகனவேல் வீடு எளிமையாகவும் அதேபொழுது வசதியாகவும் அமைந்துள்ளது. அவர்களின் குடும்பத்தார் யாவரும் ஒற்றுமையாக இருந்தமை எனக்கு மகிழ்ச்சி தந்தது. வீட்டில் காற்றுவளிப்பாடு இருந்தது. பகல் முழுவதும் அலைந்த அலைச்சல் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்தேன்.

 மோகனவேல் அவர்களின் தந்தையாருடன் உரையாடி ஊர்நிலை அறிந்தேன். உக்கல் சிற்றூர் சற்றொப்ப 800 குடும்பங்களைக் கொண்ட ஊர். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு பிள்ளைகள் காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்குதான் படிக்கவும், பணிக்கும் செல்ல வேண்டும்.

 உக்கலுக்கு அருகில் காஞ்சிபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் இப்பொழுது பன்னாட்டு நிறுவனம் ஒன்று தோல்பொருள் தொழிற்சாலை தொடங்கி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி வருவதாக உரைத்தார்கள். இந்தத் தொழிற்சாலை வந்த பிறகு காவல் நிலையங்களுக்குப் புதுப்புது வகையான வழக்குகள் வருவதாக அனைவரும் கூறிச் சிரித்தனர்.

 மோகனவேல் அவர்களின் தந்தையார் திரு. கோ.சுப்பிரமணியம் அவர்கள் உக்கலின் பழங்காலச் சிறப்புகளையும் இந்த ஊரில் அண்மைக்காலம் வரை வேளாண்மை செழித்திருந்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார். இந்த ஊரின் தென்பகுதியில் சேயாறும் (செய்யாறு), வட பகுதியில் பாலாறும் ஓடும் பெருமைக்குரியது. பண்டைக் காலத்தில் மழைவளம் மிக்கிருந்ததால் சோழப்பேரரசன் காலத்தில் புகழ்பெற்ற கோயில்களை எடுத்துள்ளனர். மேலும் மாமண்டூர் போன்ற ஏரிகளை உருவாக்கிப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வேளாண்மை செய்து நாட்டை வளப்படுத்தியுள்ளனர். இன்று இந்த ஊரின் நிலங்கள் யாவும் வீட்டு மனைகளாக்கப்பட்டுவிட்டன. சென்னை, காஞ்சிபுரம், நெய்வேலி முதலான ஊரிகளில் வாழும் செல்வ வளம் உடையவர்கள் இந்தப் பகுதியில் வீட்டு மனைகளை மூலப்பொருளாக்கிவிட்டனர். இதனால் வேளாண்மைக்கு உகந்ததாக இல்லாமல் ஊர் பாழடைந்து வருகின்றது என்ற கவலையை அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.

 இரவு 7.30 மணி ஆன பிறகும் நிகழ்ச்சி தொடங்கவில்லை. மோகனவேல் நேரு இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களைப் பார்த்து வேகப்படுத்தினார். அதற்குள் அங்கிருந்த கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள் பலரும் குடும்பத்தினருடன் வந்து என்னுடன் உரையாடி மகிழ்ந்தனர். அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் வகையில் பல அறிவுரைகளை வழங்கியும் எப்பொழுதும் உதவிக்குத் தொடர்புகொள்ளுங்கள் என்றும் கூறி என் முகவரி கொடுத்து ஊக்கப்படுத்தினேன். என் கையிலிருந்த ஐபேடில் என் வளர்ச்சி நிலை காட்டும் பல படங்களைக் கண்டு மோகனவேல் அவர்களின் தந்தையாருக்கு என்மேல் பேரீடுபாடு ஏற்பட்டது.

 இரவு 7.45 மணியளவில் மேடைக்குச் சென்றோம். ஒலிவாங்கி ஆய்வு, விளக்குகள் பொருத்தம் என்று மேடையருகில் வேலைகள் முனைப்பு காட்டின. மோகனவேல் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுவோம். அதன் பிறகுதான் மக்கள் கூடுவார்கள் என்று வரவேற்புரையாற்றி, என்னை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் தெருவெங்கும் மக்கள் அமர்ந்து பார்க்க ஆயத்தம் ஆனார்கள்.

 இளைஞர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், தாய்மார்கள் என்று பல தரத்து, மக்கள் கூடிக் கேட்க வந்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பெற்றது. பள்ளியில் பயிலும் இரு பெண்கள் நன்கு பாடினர். அதன் பிறகு கூட்டத்தைச் சேர்க்க அதே பெண்கள் வேப்பிலையைக் கையில் பிடித்தபடி “வெக்காளி அம்மனை” அழைத்துச் சாமிஆடும் பாடலுக்குத் தக ஆடினர். தங்கள் பிள்ளைகள் ஆடுகின்றனர் என்று இப்பொழுது கூட்டம் கூடத் தொடங்கியது.

 நான் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவே புதுவை திரும்பவேண்டும் என்பதால் முதலில் என்னைப் பேசச் சொன்னார்கள். அங்கிருந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கையூட்டும் சில கருத்துகளை எடுத்துப் பேசினேன். வறுமையில் வாடி, உழைத்து முன்னேறிய புகழ்பெற்றவர்கள் பலரின் வாழ்வியலை நினைவுகூர்ந்தேன். சிற்றூர்ப்புறத்தில் பிறந்து கல்வியை மட்டும் துணையாகக் கொண்டு முன்னேறிய என் வாழ்க்கையையும் சொன்னேன். மாணவர்கள் அமைதியாகக் கேட்டனர். முன்னேறுவதற்கும், படிப்பதற்கும் பணம் ஒரு தடையில்லை. படிக்க முன்வந்தால் பலர் உதவுவதற்குத் தயாராக உள்ளனர் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினேன்.

 இளைஞர்களைத் திரைப்பட நடிகர்கள், அரசியல்காரர்கள் பின் செல்லாமல் ஆக்கபணி செய்ய முன்வந்தமைக்குப் பாராட்டினேன். இணையம், கணினி, தட்டச்சு இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினேன். நிறைவாகச் சிற்றூர்ப்புற மக்கள் மிகுதியாக இருந்ததால் நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றைப் பாடி மகிழ்ச்சியூட்டினேன். தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரிகம், இன்றைய திரைப்படம், தொலைக்காட்சியால் அழிந்துவருவதை நினைவுகூர்ந்தேன். நடவுப்பாடல், ஒப்பாரி, தாலாட்டு, கும்மி, கோலாட்டம், உலக்கைப்பாடல்கள் என்று பலவகைப் பாடல்களைப் பாடி விளக்கியதால் அனைவரும் ஈடுபாட்டுடன் கேட்டனர். இதனை நண்பர்களும் உறுதிப்படுத்தினர். சற்றொப்ப ஒரு மணி நேரத்திற்கும் மேல் என் உரை நீண்டது.

 என்னிடம் இருந்த இணையம் கற்போம் நூல்களை அனைவரும் ஆர்வமுடன் வாங்கிக்கொண்டனர். குறைந்த படிகள் கையில் இருந்ததால் தேவையானவர்களுக்குத் தனித்தூதில் அனுப்புவதாக உறுதியுரைத்துப், பெயர் விவரம் பெற்றுக்கொண்டேன். உணவு முடித்துதான் செல்ல வேண்டும் என்று நேரு இளைஞர் நற்பணி மன்றத்துத் தோழர்கள் கேட்டுக்கொண்டனர். உக்கல் பெருமாள்கோயிலில் அமர்ந்தபடி சில நண்பர்களுடன் உரையாடியபடி உண்டோம். நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.

 சிற்றூர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்த நான் இந்த ஊரையும் மக்களையும் கண்டு அவர்களுள் ஒருவனாக மாறினேன். பத்து மணியளவில் அண்ணன் உதயகுமார், மோகனவேல், முகிலன் உள்ளிட்டவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கூழமந்தல் தார்ச்சாலையை நெருங்கினோம். அவர்களின் உந்து வண்டி எங்கள் வண்டிக்குப் பின்னாக வந்துகொண்டிருந்தது. மழை இப்பொழுது வலுவாகத் தூறுவதற்குரிய அறிகுறி இருந்தது. எனவே எங்கள் உந்துவண்டி வேகமெடுத்தது. கூழமந்தலை நாங்கள் அடைவதற்கும் எனக்குரிய பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. இரவு நேரங்களில் இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காது என்பதால் கிடைத்த பேருந்தில் ஏறவேண்டிய நிலை. மற்ற நண்பர்களிடம் விடைபெறத் திரும்பியபொழுது யாரும் இல்லை என்பதால் என்னை அழைத்து வந்த நண்பரிடம் மட்டும் சொல்லிவிட்டு உடன் பேருந்தில் ஏறினேன். பேருந்தில் ஏறிய பிறகு ஒவ்வொரு தோழர்களுக்கும் செல்பேசி வழியாக நன்றி கூறினேன். இரவு புதுச்சேரி வரும்பொழுது நடு இரவு இரண்டு மணியாகும்.


பார்வையாளர்களாக ஊர்ப் பெரியவர்கள்


பார்வையாளர்கள்(மகளிர்)


மாணவப் பார்வையாளர்கள்


உக்கல் விழாவில் மு.இ


உக்கல் விழாவில் மு.இ.


நேரு இளைஞர்கள் மன்றத்தின் தோழர்களுடன்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி சார்...

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் சொன்னது…

“நான் அங்கிருந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கையூட்டும் சில கருத்துகளை எடுத்துப் பேசினேன். வறுமையில் வாடி, உழைத்து முன்னேறிய புகழ்பெற்றவர்கள் பலரின் வாழ்வியலை நினைவுகூர்ந்தேன். சிற்றூர்ப்புறத்தில் பிறந்து கல்வியை மட்டும் துணையாகக் கொண்டு முன்னேறிய என் வாழ்க்கையையும் சொன்னேன். மாணவர்கள் அமைதியாகக் கேட்டனர். முன்னேறுவதற்கும், படிப்பதற்கும் பணம் ஒரு தடையில்லை. படிக்க முன்வந்தால் பலர் உதவுவதற்குத் தயாராக உள்ளனர் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினேன்.“

நன்று செய்துள்ளீர்கள் ஐயா,
இவ்வாறான சொற்கள் மாணவர்களின் ஆழ்மனதிற்குள் சென்று அவர்களது ஆயுட்காலம் வரையும் அவர்களை நல்லவர்களாக வல்லவர்களாக வாழ வைக்கும். இது போல் ஊருக்கு நான்கு நல்லவர்களும், உங்களைப்போன்ற நல்லாசிரியர் ஒருவரும் இருந்து விட்டால், நம்நாடு உலகஅரங்கில் உயர்ந்து நிற்கும்.

அன்பன்
கி.காளைராசன்

blow lamp சொன்னது…

இளைஞர்களைத் திரைப்பட நடிகர்கள், அரசியல்காரர்கள் பின் செல்லாமல் ஆக்கபணி செய்ய முன்வந்தமைக்குப் பாராட்டினேன். இணையம், கணினி, தட்டச்சு இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினேன்.

அண்ணா தாங்கள் இணையம், கணினி, தட்டச்சு இவற்றின் முக்கியத்துவத்தை கிராமத்தில் உள்ள படித்த இளைய சமுதாயத்தினருக்கும் படிக்கும் மாணவ, மாணவிய சகோதர சகோதரிகளுக்கும் எடுத்துரைத்து கணினி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செய்தது சிறப்பு.இது போன்ற தொழிற்நுட்பம் சம்மந்தமான கருத்துக்களையும் விழுப்புணர்வை ஏற்படுத்தும் தகவல்களையும் கிராமத்தில் உள்ளோருக்கு யாரொருவரும் எடுத்துரைப்பது சந்தேகமே. தாங்கள் இப்பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள்.