நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

தமிழகத்திற்குத் தேவை தமிழ்வழிக் கல்வியே - தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு அறிக்கை

தமிழகத்தில் தமிழ்வழிப்பள்ளிகள் மறைந்து அனைத்து இடங்களிலும் ஆங்கிலவழிப் பள்ளிகள் தனியாராலும் அரசாலும் தொடங்கப்பெற்று வருகின்றன. இதனால் தமிழ்மொழி படிப்படியாக வழக்கற்றுப் போகும் நிலை உருவாகி வருகின்றது. இதனை நினைத்துக் கவலையுற்ற தமிழறிஞர்கள் குழுவினர் நேற்று(02.08.2012) சென்னையில் கூடி இதழாளர் சந்திப்பு ஒன்றை நடத்தித் தமிழகத்தில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், முனைவர் ச.முத்துக்குமரன், முனைவர் பொன்னவைக்கோ, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழகத்துத் தமிழறிஞர்களும், உலகத் தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும், கல்வியாளர்களும் கவனத்தில்கொள்ளவேண்டிய அறிக்கையை இங்கு என் பக்கத்தில் பதிகின்றேன். வெளியிட இசைவு தந்த அறிஞர் குழுவிற்கு நன்றியன். இந்த நிகழ்ச்சி குறித்துத் தமிழின் முதன்மையான இதழ்களும், ஆங்கில இதழ்களும் இன்று(03.08.2012)செய்தி வெளியிட்டுள்ளன.

அறிக்கை விவரம்:

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் நாட்டில் பள்ளிக்கல்வி தமிழ் மொழி வழியாகவே நடைபெற்று வந்தது; விதிவிலக்காக ஓரிரு தனியார் பள்ளிகளைத் தவிர. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஆங்கிலவழிப் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகிவருகின்றன. இந்நிலை மிகவும் வருந்தத்தக்கது.

ஆட்சியாளர்கள், தமிழ் நாட்டில் தமிழ்வழிக் கல்விக்கு முதலிடம் வழங்கவேண்டிய கொள்கைக்கு மாறாக, ஆங்கில மொழிவழிக் கல்விக் கொள்கையைச் செயற்படுத்தி, தனியார் பள்ளிகளில் ஆங்கில மொழிவழிக்கல்வியை அங்கீகரித்ததால், தமிழ் நாட்டில் 'எங்கும் தமிழ்' 'எதிலும் தமிழ்' என்னும் அடிப்படை மொழிக்கொள்கை மாறி எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் என்னும் தகாத நிலை தமிழ்நாட்டில் மேன்மேலும் பெருகிவருகிறது. இதைத் தடுத்து நிறுத்த அந்நாள் முதல், தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்ட பல்துறை அறிஞர்களும் பல அமைப்புகளும் எடுத்துக் கூறிவந்துள்ளனர். அத்தோடு நில்லாமல், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள என பல நிகழ்ச்சிகளை நடத்தி தமிழுக்கு தமிழ்நாட்டில் முதல் இடம் தர வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும் எத்தனையோ களப்போராட்டங்கள், நடைப்பயணங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போய் ஆங்கிலவழிக் கல்வியே மேன்மேலும் தலைதூக்கி வருகின்றது. இவற்றின் விளைவாக தமிழுக்கு உரிய இடமின்றி, தமிழகத்தில் தமிழ்மொழி இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் பெருகிவருகின்றது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல இதுவரை அரசுப்பள்ளிகளில் இடம் பெறாமல், தனியார் பள்ளிகளில் மட்டுமே கோலோச்சி முதன்மைபெற்று வந்த ஆங்கில வழிக்கல்வி, இப்போது தமிழகமெங்குமுள்ள அரசுப் பள்ளிகளிலும் நுழைத்திட தமிழக அரசு முனைந்துள்ளது. அண்மையில் தமிழக அரசு தாம் நடத்தும் தொடக்கப்பள்ளிகளில் பலவற்றைத் தேர்ந்தெடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க முடிவு எடுத்து ஆணை பிறப்பித்துள்ளது. இச்செயற்பாடு அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி கோலோச்சுவதை வலிமைப்படுத்தி தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லாத சிறுமையை எற்படுத்தும்.

"ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்று இடக்கு மடக்குத் தனமாக தமிழகஅரசுத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவது தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்யும் பெரும் கொடுமையாகும். இந்தியாவில் விடுதலைக்குப்பின் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களிலெல்லாம் அவரவர் தாய்மொழிக்கே முன்னுரிமை தரப்படுகிறது. ஆயினும், தமிழ்மொழியை முன் வைத்து தமிழ்நாட்டை ஆளவந்த தமிழக அரசினர், இதற்கு மாறாகத் தமிழ் நாட்டில் ஆங்கில மொழி ஆதிக்கத்திற்கே முன்னுரிமைத் தருவது வருந்தற்குரிய செயலாகும்.

இந்தியாவில் இந்திய ஆட்சிப் பணிகளின் (இ.ஆ.ப.) தேர்வுகள் அவரவர் தாய்மொழியிலேயே நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் இ.அ.ப. தேர்வு எழுதுபவர்களும் அவர்களது தாய்மொழியாம் தமிழ்மொழி வழியில் எழுதி, ஆங்கில வழியில் எழுதுவதைவிட மிகுதியாகத் தேர்ச்சிபெற்று இந்திய ஆட்சிபணிக்குச் செல்கின்றார்கள். இதிலிருந்து ஆங்கிலவழிக் கல்வியைவிடத் தமிழ் வழிக்கல்வியே தமிழர்களுக்கு வாழ்வளிக்கிறது என்பது வெள்ளிடைமலை. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணிகள், தொழிற்கூடப்பணிகள், கல்விநிலையப் பணிகள், பிற அலுவகப்பணிகள் மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு ஆற்றும் சேவைகள் ஆகிய பணிகளுக்கும் இந்திய ஆட்சிப்பணிகளுக்கும் தமிழ் வழிக் கல்வியே போதுமானது.

இந்தியா விடுதலை பெற்றது முதல் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக கற்பிக்கும் நிலை இந்தியாவில் இருந்து வருகிறது. ஆனால் எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே அம்மாநில அரசுப்பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசுப்பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியே நடைபெற்று வருகின்றது. தமிழ்வழிப்பயின்ற தமிழர்கள் இந்தியா மற்றும், உலகமெங்கும் பணியாற்றி சிறப்பெய்தியுள்ளனர். ஆனால் இன்று, நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறித் தழிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லா நிலை உருவாகியுள்ளது. இந்நிலை தொடருமானால், நாளைய தமிழன் தமிழ் நூல்களையும் தமிழ்ச்செய்தித் தாள்களையும் படிக்க இயலாத நிலை உருவாகிவிடும்.

தாய்மொழிவழிக் கல்வியே அறிவு வளர்ச்சிக்கு உகந்தது என்று உலக அறிஞர்களும் பலரும் கூறியுள்ளனர்;

“அ முதல் ன் வரை உள்ள அனைத்துப் பாடங்களையுமே தாய் மொழியில் கற்றுக்கொடுக்க வேண்டும்” என வலியிருத்தியுள்ளனர் மகாத்மா காந்தி. பாரதி, பாரதிதாசன் போன்ற சான்றோர்கள். இது தொடர்பாக நடுவணரசு நிறுவிய இராமமூர்த்தி கல்விக்குழு கீழ்க்கண்டவாறு பரிந்துரைத்துள்ளது;

“தாய்மொழி/தமிழ்வழிக் கற்பதுதான் சாலச்சிறந்தது என்று பொதுமக்களையும் பெற்றோர்களையும் உணரச்செய்து தாய்மொழித் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும்.”

நெதர்லாந்தைச் சேர்ந்த முனைவர் ழாக் வெர்ஃபைலே என்னும் உளவியல் நிபுணர் தமிழகக்கல்வி முறையைப் பற்றிக் கூறும்போது “கற்றலின் அடிப்படையை மொழியே தீர்மானிக்கிறது. பார்ப்பவை, கேட்பவை மூலமாகவே குழந்தைகள் தொடர்பு படுத்திக்கொள்ள பழகுகின்றனர். முதலில் வரன்முறைப்படுத்தாத தாய்மொழி அறிமுகம். பின்னர் முறைப்படுத்தப்பட்ட தாய்மொழிவழிக் கல்வி. அதை அடுத்து இரண்டாவது மொழி அறிமுகம், தொடர்ந்து மூன்றாவது மொழி அறிமுகம் எனப் படிப்படியாகத் தொடரப்படும் கல்வி முறையே குழந்தைகளுக்கு எளிமையானதாக இருக்கும். ஒரு குழந்தையின் மண், வேர், கலாச்சாரம் ஆகியவை அதன் தாய்மொழியிலேயே புதைந்திருக்கின்றன. தாய்மொழிப் புலமையின்றி ஆழமான அறிவாற்றலும் நுட்பமான சிந்தனை ஆற்றலும் பெறுவது அரிது.” என்று தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்திக் கூறுகின்றார்.

ஜெர்மனி, ப்ஃரான்ஸ், இரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து மேற் படிப்பிற்குச் செல்லும் அனைவரும் முதலில் ஒரு பருவத்தில் அந்நாட்டு மொழியினைப் பயின்று, பிறகு அம்மொழிவழியே உயர் கல்வி பெற்று, அம்மொழியிலேயே தேர்வெழுதியும் ஆய்வுக்கட்டுரை வழங்கியும் பட்டங்களைப் பெற்று வருகின்றனர்.

உலக அறிஞர்களின் நிலைப்பாடு இப்படியிருக்க தமிழக அரசின் இம்முடிவு தமிழ்க் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குப் பெருங்கேடு விளைவிக்கும் என்பதாலும் தமிழகத்தில் தமிழ் சிறுகச்சிறுக இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தாலும் தமிழக அறிஞர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இருக்கின்ற தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை தமிழ்வழிப் பள்ளிகளாக மாற்ற தமிழ் அமைப்புகளும் பல துறை அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்துவதை ஏற்று தமிழகத்தில் கல்வி தமிழ் வழி நடக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

எனவே, அன்னைத் தமிழைக் காத்து அனைத்துக் குழந்தைகளின் வாழ்வும் வளம்பெற கல்விக் கூடங்களிலெல்லாம் தமிழ் வழிக்கல்வியே தொடர வேண்டுமென்றும், ஆங்கிலவழிக் கல்வித்திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்றும் தமிழக அறிஞர்கள் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றார்கள்.

மேலும், தமிழக அரசு தனது மொழிக் கொள்கைத் தன்மையை சற்று சீர்தூக்கிப்பார்த்து அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டு வருவதை நிறுத்திடவும் தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை நிலை வழங்கி ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்னும் கொள்கையை நிறுவிடவும் வலியுறுத்துகின்றோம்.

தமிழ்வழிக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு, அறிஞர் குழுக்களை அமைத்தும், பல்கலைக்கழகங்களின் கருத்துரைகளைப் பெற்றும், கருத்தரங்குகள் நடத்தியும், சட்டப்பேரவையில் விவாதித்தும் சிறந்ததொரு முடிவை எடுத்து தமிழகத்தில் தமிழ் நிலைக்க, தமிழ் மொழி செழிக்க, தமிழர் வளம் பெருக வழிகோல வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.
ஒருங்கிணைப்பாளர்கள்
தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

தமிழ்நாட்டில் தமிழர்கள் இல்லாதாகி வருகின்றனர், நாளை தமிழும் இல்லாதாகிவிடும் பின்னர் தமிழ்நாடா இல்லாமல் போகும்... தமிழா விழி!

தகவலுக்கும் உடன்வினைபுரிந்த தமிழறிஞர்களுக்கும் நன்றிகள் பல...

Unknown சொன்னது…

தமிழ்நாட்டில் தமிழர்கள் இல்லாதாகி வருகின்றனர், நாளை தமிழும் இல்லாமல் போய்விடும் பின்னர் தமிழ்நாடே இல்லையென்றாகிவிடும். தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.

தகவலுக்கும், உடன்வினைபுரிந்த அறிஞர்களுக்கும் நன்றிகள் பல...

நம்பள்கி சொன்னது…

தமிழ் நாட்டில் தமிழில் தான் ஆரம்பக் கல்வி இருக்கவேணும்; அதாவது வழக்கு மொழியில்...

இதில் தாய் மொழி என்பதில் ஒரு சிறிய மாற்றம் வேண்டும். எனது குழ்னதைகளின் தாய் மொழி தமிழ். ஆனால், வழக்கு மொழி, இங்கு ஆங்கிலம்...அதாவது அவர்கள் ஆங்கிலத்தில் Native speakers.

எனது நண்பர்கள் பலர் தாய் மொழி தெலுங்கு (பேச மட்டும் தான் தெரியும்). ஆனால் படித்தது எல்லாம் தமிழில் தான்; தமிழ் நாட்டில் வாழ்ந்தால் தமிழில் தான் படிக்க வேண்டும்; தமிழனாக இருந்தாலும் டெல்லியில் படித்தால் ஹிந்தி, பிரான்சில் படித்தால் பிரெஞ்சு...இப்படி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு தகவல்... மிக்க நன்றி முனைவரே...