நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 31 மார்ச், 2013

தெருக்கூத்துக் கலைஞர் கோனேரி இராமசாமி




பொறியாளர் கோனேரி இராமசாமி


புதுவையில் இலக்கிய மேடைகளிலும் அரசு விழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் தெருக்கூத்து நடித்துக்காட்டுவதை வழக்கமாகக் கொண்டவர் கோனேரி இராமசாமி. இவர் புதுவையில் தெருக்கூத்துக் கலை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுபவர். தந்தையார் வழியாகத் தெருக்கூத்தைக் கற்றுத் தேர்ந்து ஐந்து வயதுமுதல் கடந்த நாற்பதாண்டுகளாகத் தொடர்ந்து தெருக்கூத்துக் கலையில் தம்மை ஈடுபடுத்தி வருபவர்.

தெருக்கூத்துக் கலைஞர்களின் நலனுக்காக மக்கள் கலைக்கழகத்தை 1990 இல் உருவாக்கி நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து வருபவர். தம் ஊதியத்தின் பெரும்பகுதியைத் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு வழங்குவதுடன் அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்பவர்.

கோனேரி இராமசாமி அவர்கள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடகங்களில் நடித்துள்ளார். இராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரன் கதை, காத்தவராயன்கதை, கந்தபுராணம் உள்ளிட்ட கதைகளின் அடிப்படையில் தெருக்கூத்து நிகழ்த்துவதுடன் காலத்திற்குத் தேவையான சமூக விழிப்புணர்வுச் செய்திகளைத் தெருக்கூத்துகளாக நிகழ்த்தி வருகின்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்குப் பயிற்சியளித்துத் தெருக்கூத்து நடத்த வழிவகை செய்துள்ளார். துரியோதனனாகவும், கர்ணனாகவும் கோனேரியார் மிகச்சிறப்பாக நடித்து மக்களின் மதிப்பைப் பெறுவது உண்டு. பெண் வேடம் கட்டியும் ஆடுவார். எந்த வேடத்தையும் ஏற்று நடிப்பதில் வல்லவர். அதுபோல் உடனுக்குடன் பாடல்புனைந்தும், சூழலுக்கு ஏற்பக் கதைகளைப் புனைந்தும் நடித்துக்காட்டுவார்.

கோனேரி இராமசாமி அவர்கள் இயற்கையாகப் பாட்டு எழுதும் ஆற்றல் பெற்றவர். சிக்கலான சிந்துப்பாடல்கள், வண்ணப்பாடல்களை மிக எளிதாக எழுதிவிடும் ஆற்றல் இவருக்கு உண்டு. சிறிய வயதிலிருந்து இசைப்பாடல்களைக் கேட்டு உள்வாங்கிக்கொண்டதால் எந்தத் தலைப்பிலும் எந்த அமைப்பிலும் உடன் பாடல் எழுதிவிடுவார்.

மூவுணர்வுகள்(காதல்), மூவுணர்வுகள்(பாசம்), மூவுணர்வுகள்(நட்பு), கல்லாடன் அந்தாதி, நரம்பின் நாதம், சிறுவர் சிந்து,  அந்தாதி சிந்தாயிரம், தமிழ்ப்பேரண்டம், கண்ணன் பிறப்பு(தெருக்கூத்து இசைநாடகம்), சக்தி சதகம், விராடபருவம் (தெருக்கூத்து நாடகம்) தமிழ்த்தாய்த் திருப்புகழ் (கூத்திசை வண்ணப்பாடல்கள்) உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கோனேரி இராமசாமியின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

கோனேரி இராமசாமி அவர்கள் 15.11.1966 இல் புதுவை மாநிலம் கோனேரிக்குப்பம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.  பெற்றோர் பாண்டுரங்கக் கவுண்டர் - கண்ணம்மாள் ஆவர். இவருடன் பிறந்தவர்கள் தட்சணாமூர்த்தி (இவரும் கூத்துக் கலைஞர்), இராமு, அமுது, தனலட்சுமி ஆவர்.

கோனேரி இராமசாமி எட்டாம் வகுப்பு வரை கூடப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்றவர். இளமையில் தமிழ் இலக்கியங்களில் நல்ல ஈடுபாடுகொண்டவர். திருக்குறளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறட்பாக்களை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். பத்தாம் வகுப்பில் புதுவை மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர். இவர் பெற்ற மதிப்பெண்422 / 500.

பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு பேச்சுப்போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும், திருக்குறள் மனப்பாடப் போட்டிகளிலும் பல பரிசில்களைப் பெற்றவர். புதுவை அரசின் மோதிலால் நேரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றவர். பின்னர்ப் பொறியியல் பயின்று, புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பொறியாளராகத் தற்பொழுது பணிபுரிகின்றார். கோனேரி இராமசாமி அவர்களின் கலைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு இவருக்குக் கலைமாமணி விருது(2002) வழங்கிச் சிறப்பித்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குத் தம் குழுவினருடன் சென்று தெருக்கூத்து நிகழ்த்திய பெருமைக்குரியவர்

கோனேரி இராமசாமி அவர்களின் துணைவியார் பெயர் மாலதி என்ற சரசுவதி. இவர்களுக்குச் செந்தமிழ்ச் செல்வன், செவ்வந்திமலர், செங்கதிர் வேந்தன் என்ற மழலைச் செல்வங்கள் உள்ளனர்.

நாள்தோறும் தெருக்கூத்துக் கலைஞர்களைச் சந்திப்பது, கூத்துப் பயிற்சியளிப்பது, நடிப்பது என்று தெருக்கூத்தை வளர்தெடுக்க வாழ்ந்து வருகின்றார் புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் இந்தப் பொறியாளர்.
 
கோனேரி பா. இராமசாமி அவர்கள் புதுவை நாட்டுப்புறக் கலைஞர்களை அறிமுகம் செய்யும் காணொலி!.
 

தொடர்பு முகவரி:
பொறியாளர் திரு.கோனேரி இராமசாமி அவர்கள்
எண் 2, முதல் பிரதானசாலை, ஆருத்ரா நகர், கவுண்டர்பாளையம்,
புதுச்சேரி- 605 009
பேசி: 0091- 9367600371 / 0091 - 9344440371







குறிப்பு: கோனேரி இராமசாமி அவர்களின் தெருக்கூத்து நேர்காணல்களை அடுத்த பதிவுகளில் வெளியிடுவேன்

கருத்துகள் இல்லை: