நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 31 மார்ச், 2013

நிலத்திணை (தாவரவியல்) அறிஞர்களுடனான சந்திப்பு…



முனைவர் நரசிம்மன், திரு.பஞ்சவர்ணம், முனைவர் க.இரவிக்குமார்

சென்னைக்கு அலுவல் நிமித்தம் நேற்று (30.03.2013) சென்றிருந்தேன். சென்றவேலை காலை 11.30 மணியளவில் முடிந்தது. புதுவைக்குப் பேருந்தேற அணியமானேன். இந்த நேரத்தில் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூலின் ஆசிரியர் திரு. பஞ்சவர்ணம் ஐயா செல்பேசியில் அழைத்தார்கள். புதுவைக்குப் பேருந்தேறக் குறிப்பிட்ட பேருந்து நிலையில் நிற்பதைச் சொன்னேன். அப்படியே அதே இடத்தில் நில்லுங்கள். இன்னும் அரைமணி நேரத்தில் அங்குத் தாம் வந்து சேர்வதாகச் சொன்னார்கள்.

திரு. பஞ்சவர்ணம் ஐயா சொன்னவண்ணம் வந்துசேர்ந்தார். மகிழ்வுந்தில் ஏறிக்கொண்டேன். அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, வழியே தாம்பரம் சென்ற மகிழ்வுந்து தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் தாவரவியில் துறையில் நின்றது.

மகிழ்வுந்தில் வரும்பொழுதே திரு. பஞ்சவர்ணம் ஐயா தம்முடன் வந்திருந்தவரை அறிமுகம் செய்தார். நண்பரின் பெயர் முனைவர் க.இரவிக்குமார் என்றார். பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் துணை இயக்குநராகவும், அறிவியல் அறிஞராகவும் பணியாற்றுகின்றார். தாவரவியல் துறையில் வல்லுநர். இந்தியத் தாவரங்கள் குறித்த பேரறிவுபெற்றவர். இந்தியாவில் இவர் கால் பதிக்காத காடு, மலை இல்லை. மூலிகைகள் குறித்த நுட்பமான அறிவுகொண்டவர் என்றார்.

முனைவர் க. இரவிக்குமார் அவர்கள் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள வெங்கடாம்பேட்டை என்ற சிற்றூரில் 06.01.1960 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் வீ. கலியமூர்த்தி படையாட்சி - அஞ்சலாட்சி அம்மாள். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரிலும், பள்ளியிறுதி வகுப்பைக் குறிஞ்சிப்பாடியில் உள்ள வேலாயுதம் முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர். பின்னர் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் பட்டம் பயின்றவர். 

முனைவர் க.இரவிக்குமார்

மதுரையிலும் கோவையிலும் பயின்று மதுரை மாவட்டத் தாவரங்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர்(1983-93) என்ற விவரங்களைச் சொன்னதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம் இந்த அறிஞர்தான் பஞ்சவர்ணம் ஐயாவின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூல் வெளிவருவதற்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கிக் கருத்து வேறுபாடுகள் வந்தபொழுது சீர்செய்து தெளிவு வழங்கிப் பேருதவி செய்தவர்கள். இன்று இதுபோல் மற்றவர்களின் ஆய்வுக்கு, வளர்ச்சிக்குத் துணையாக இருப்பவர்களைக் காண்டல் அரிது என்ற வகையில் முனைவர் க. இரவிக்குமார் அவர்கள் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. என்னிடமும் அன்புடன் பழகினார். முனைவர் க. இரவிக்குமார் அவர்கள் தம் குடும்பம் பற்றியும், பஞ்சவர்ணம் ஐயாவுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றியும் பல செய்திகளை நினைவுப்படுத்தியபடி மகிழ்வுந்தில் வந்தார்.

கிறித்துவக் கல்லூரியின் வளாகம் மரங்களடர்ந்த காட்டுக்குள் வனப்புடன் இருந்தது. கிறித்துவக் கல்லூரியின் தாவரவியல்துறை ஒரு காட்டுக்குள் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கும் மரங்களும், பொந்துகளும்,புதர்களுமாக இயற்கை எழிலும் இருந்தது. “வெயில் நுழைபு அறியாக் குயில்நிழல் பொதும்பராக” இருந்தது.

தாவரவியல் துறையில் நுழைந்ததும் அங்குக் கணினியில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்த பேராசிரியர் நரசிம்மன் ஐயா அவர்களை அறிமுகம் செய்தனர். அனைவரும் அறிமுகம் ஆனோம். விடுமுறை நாளிலும் பணிசெய்த அவரின் பொறுப்புணர்ச்சி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.


முனைவர் நரசிம்மன் அவர்கள்

முனைவர் நரசிம்மன் அவர்கள் தாவரவியல் துறையின் மாணவராகக் கிறித்துவக் கல்லூரிக்குள் நுழைந்தவர். கடந்த நாற்பதாண்டுகளாக மாணவராகவும், விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் வளர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தம் அறிவுச்செல்வத்தை வாரி வழங்குவதைத் தடையில்லாமல் செய்துவருகின்றார்.

தாவரவியல் அறிஞர் என்று பேராசிரியர் நரசிம்மன் அவர்களை ஒரு வட்டத்துக்குள் அடக்கிவிடமுடியாது. தெலுங்குச் சூழல் அவருக்கு அமைந்திருந்தாலும் தமிழில் நல்ல பற்றுடையவர்.

பேராசிரியர் நரசிம்மன் அவர்கள் கலைசொற்களைத் தம் துறைசார்ந்து பல்லாயிரம் உருவாக்கிப் பயன்படுத்தி வருபவர். கொல்லிமலை மூலிகைகள், தாவரங்கள் குறித்து பல உயராய்வுகளை இவரும் இவர் மாணவர்களும் செய்துள்ளனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்களுடன் இணைந்து கவியரங்குகள் நடத்துவது, நூல்வெளியிடுவது என்று தம் பணிகளை அகன்று நின்று செய்கின்றார். கிறித்துவக் கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர்களான முனைவர் கு. அரசேந்திரன், முனைவர் பாலுசாமி உள்ளிட்டவர்களுடன் இணைந்து தமிழாக்கப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.

பேராசிரியர் நரசிம்மன் அவர்கள் தாளை விலாசம் என்ற நூல் பற்றி தெரியுமா என்ற வினாவை வீசினார். இயற்றியவர் திருக்குடந்தை அருணாசலம் என்றார். அதில் 801 பனையின் பயன்பாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டார். அந்த நூலைத் தேடிக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார். பனைமரக்கும்மி என்ற நூல் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்குத் தேவையான நூல்களைத் தேடித்தருவதாக உறுதியளித்தேன்.

முனைவர் க. இரவிக்குமார் அவர்களும் முனைவர் நரசிம்மன் அவர்களும் இணைபிரியாத உயிர்த்தோழர்கள் என்பதை அவர்களின் உரையாடல் எனக்குக் காட்டியது. இவர்களையொத்த நட்புடையவர்களைக் கண்டு பலவாண்டுகளானது. இவர்களைப் போன்ற நண்பர்கள் பழகியதுடன் நின்றுவிடாமல் குடும்பத்துடனும், வாழ்க்கை வளர்ச்சியுடனும் இணைந்து நட்பை அமைத்துக்கொள்வது எம்மைப் போன்ற இளையவர்களுக்குப் பாடமாகும்.

கிறித்துவக் கல்லூரியின் தாவரவியல்துறை சார்ந்த சில ஆய்வேடுகளைப் பார்த்தேன். அதில் மலைபடுகடாம் நூல் குறிப்பிடும் சவ்வாது மலைப்பகுதி, செங்கத்தை அடையும் பாதை குறித்த ஒரு ஆய்வேட்டை நரசிம்மன் ஐயா அவர்கள் காட்டி மகிழ்ச்சியூட்டினார். கூத்தன் புறப்பட்டு மலைவழியாகச் சென்று சங்கத்தை அடைந்த வழியை ஆய்வாளர் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்தார். உடன் நான் இணையத்தில் பதிந்திருந்த நவிரமலை குறித்த கட்டுரையை அனைவரின் பார்வைக்கும் வைத்தேன்.

தாவரவியல்துறை சார்ந்தவர்களுடன் உரையாடியதிலிருந்து தமிழாய்வுகள் பலதுறையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதை அறிந்தேன். காரணம் தமிழர்கள் வரைந்த சங்கப்பனுவல்களில் இயற்கை, நிலைத்திணை, விலங்குகள், பறவைகள், மீன்கள் குறித்த பின்புலத்துடன் பாடல்கள் யாக்கப்பட்டுள்ளதால் இத்துறைகளில் உள்ள வல்லுநர்களின் கருத்துகளைத் தமிழில் பொருத்திப் பார்ப்பது தேவையாக உள்ளது.

தாவரவியல் துறையில் வெளிவரும் ஆய்வேடுகளின் சுருக்கத்தையும், பெருக்கத்தையும் தமிழ்ப்படுத்தி இணையதளங்களில் வெளியிடுங்கள் என்று என் விருப்பத்தைக் கூறி அனைவரிடமும் விடைபெற்றேன். திரு.பஞ்சவர்ணம் ஐயா மகிழ்வுந்தில் மீண்டும் அழைத்துவந்து பெருங்களத்தூரில் பேருந்தேற்றி வழியனுப்பினார்.

கருத்துகள் இல்லை: