நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 10 மார்ச், 2013

புதுச்சேரியின் வீரப்பெண்மணி பவானி மதுரகவி


 பவானி மதுரகவி

புதுச்சேரியில் நடைபெற்ற பல்வேறு தமிழ்சார்ந்த போரட்டங்களில் பங்கெடுத்தவர்களில் பவானி மதுரகவி குறிப்பிடத்தகுந்தவர். குறிப்பாக ஈழத்தமிழ்ர்களின் நலனுக்காகத் தொடக்க காலத்தில் பாடுபட்ட பெருமை பவானி மதுரகவி அவர்களுக்கு உண்டு. புதுவைக்கு வரும் உலகத் தமிழர்களை வரவேற்று விழா நடத்துவது, ஆதரவு காட்டுவது பவானி அம்மா அவர்களின் இயல்பாக இருந்துள்ளது.  ஈழத்து அறிஞர் அமிர்தலிங்கனார் உள்ளிட்டவர்களை அழைத்து மாநாடு நடத்தியவர் பவானி மதுரகவி. அவர்கள்.
பவானி அவர்களைத் தலைவர் அமிர்தலிங்கனார் சிறப்பித்தல்

பவானி அவர்களை மங்கையர்க்கரசி அமிர்தலிங்கனார் சிறப்பித்தல்

 புதுவையில் வாழ்ந்த திருவாளர் தருமலிங்கம் விட்டோபாய் அவர்களின் முதல்மகளாகப் பிறந்தவர் (04.09.1940). தருமலிங்கம் அவர்களின் தாயார் சடைச்சியம்மாள் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் பவானி அவர்கள். பவானியின் வீட்டின் அருகில் வாழ்ந்த பொன்னம்பலனார் அவர்களின் பிள்ளைபோல் எந்தநேரமும் அவர் வீட்டில் வளர்ந்தவர். பொன்னம்பலனார் பாவேந்தரின் மாணவர் ஆவார். திராவிட இயக்க உணர்வாளர்.

பவானி புதுச்சேரி இலப்போர்த் வீதியில் இருந்த பள்ளியில் பயின்றவர். பத்தாம் வகுப்பு வரை அங்குப் பயின்றவர். பிறகு குடும்பம் திருபுவனை சென்றது. மீண்டும் புதுவை திரும்பி வாழ்ந்துவந்தனர்.

 பவானி அவர்களுக்கும் வீர.மதுரகவி அவர்களுக்கும் அரியபுத்திரனார் தலைமையில்15.07.1962 இல் திருமணம் நடைபெற்றது. பவானி அவர்கள் தையல் பயிற்சி முடித்தவர். 1963 இல் முதல் மகன் மணிமாறன் பிறப்பு, 1964 இல் மகள் மணிமேகலை பிறப்பு, 1965 இல் திருமாறன்,1966 இல் எழில்மாறனும்,1970 இல் அருள்மாறனும் பிறந்தனர்.

பவானி அவர்கள் தொடக்கத்தில் மாவு அரவை ஆலை நடத்தினார். அதன் பிறகு வேறுகடைகளையும் நடத்திப் பொருள்நிலையில் முன்னேறினார். பவானி அவர்கள் அரசியல் ஈடுபாடுகொண்டு தி.மு.க. கட்சியில் கோவிந்தசாலை கிளையின் செயலாளராக இருந்தவர். 1975 இல் கலைஞரை எம்.ஜி.ஆர் சிறையில் அடைத்ததைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பவானி சிறைசென்றவர். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் துணிச்சலாக ஈடுபட்டவர்.

புதுவை அண்ணாசாலையில் மின்னணுப் பொருட்கள் விற்பனையகம் நடத்தினார். தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடும் இடமாக அது விளங்கியது. புதுவைத் தமிழறிஞர்களான முனைவர் இரா. திருமுருகனார், அறிஞர் பி.எல்.சாமி ஆகியோர்க்குப் பாராட்டு விழா நடத்திய குழுவில் இவரும் இணைந்து நடத்திய பெருமை இவருக்கு உண்டு.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரியின் பாராளுமன்ற வேட்பாளாராக நின்று 26,000 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். தமிழ், தமிழர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட பவானி மதுரகவி அவர்கள் 02.07.2011 இல் இயற்கை எய்தினார்.

1 கருத்து:

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

ஆவணங்கள் அதிகம் இல்லாத தமிழர் வரலாற்றில் தாங்கள் செய்து வருவது பதிவல்ல. ஆவண காப்பகம். உங்களின் ஒவ்வொரு பதிவும் இன்னும் 100 வருடங்கள் கழித்தும் பயன்படும்.

தொடர வாழ்த்துகள், கூகுள் கூட்டலில் பகிர்ந்துள்ளேன்.