நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 அக்டோபர், 2011

பவளவிழா நாயகர் முனைவர் ஆறு.அழகப்பனார்…


ஈர நினைவுகள் முனைவர் ஆறு.அழகப்பனார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரலாறு இருப்பதுபோல் அதில் பணிபுரிந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆறு.அழகப்பனாருக்கும் ஒரு வரலாறு உண்டு. பல்கலைக் கழகத்தின் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்து அப்பல்கலைக்கழகத்தின் பெருமைக்குப் பணிபுரிந்த நம் பேராசிரியரின் பணிகள் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கனவாகும்.

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் மாத ஊதியத்துடன் நிறைவடையும் பேராசிரியர் அல்லர். செயற்கரும் செயல்களைத் துணிந்து செய்த செயல்மறவர். அண்ணாமலை அரசரின் குடும்பத்திற்கு நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்த பேராசிரியர் அவர்கள் அரசர் குடும்பத்தினரின் குறிப்பறிந்து நடந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பல பணிகள் புரிந்துள்ளார்.

பாடம் நடத்துதல் மட்டும் தம் கடமை என்று கருதாமல் தமிழகத்தின் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அயல்நாடுகளில் வாழும் தமிழ்ப்பற்றாளர்கள் அனைவராலும் போற்றத் தகுந்தவராக விளங்கியவர். பணி ஓய்வுக்குப் பிறகு தம் இயக்கத்திற்கு ஏற்ற இடம் சென்னை என்று தேர்ந்து, விருகம்பாக்கத்தில் தமிழ்ச்சுரங்கம் கண்டு தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.

தமிழ்வளர்ச்சி, தமிழாராய்ச்சி சார்ந்த கருத்தரங்குகள், நிகழ்வுகள், மாநாடுகள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் முன்னின்று பணிபுரிபவர் நம் பேராசிரியர் அவர்கள்.
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்தபொழுது அவர்களின் திருமலைநாயக்கர் நாடகத்தைப் பாடமாகப் பயின்று மகிழ்ந்தவன். அதன்பிறகு குடந்தையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கண்டு அவர் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன். அதன் பிறகு தொடர்ச்சியாக இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாடுகளில் ஐயாவைக் கண்டு உரையாடுவது, புத்தகக் கண்காட்சிகளில், இலக்கிய அரங்குகளில் கண்டு நலம் வினவுவது என் விருப்பமாக இருக்கும்.

ஆறு.அழகப்பனாரின் தமிழ்ப்பணிகளையும் செயல்திறனையும் அவர்களின் மாணவரான பேராசிரியர் ஒப்பிலா.மதிவாணன் அவர்கள் வழியாக அறிந்து மகிழ்பவன். பேராசிரியரின் மாணவர்கள் பலரும் எனக்கு ஆசிரியர்களாக அமைந்ததால் நானும் பேராசிரியர் அவர்களுக்கு மாணவ வழி மாணவனாவேன். பேராசிரியர் அவர்கள் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்புகளில் அமர்ந்தும் அமராமலும் பணிபுரிபவர். அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடந்தாலும் தாம் சொல்ல வேண்டிய கருத்துகளை அரசுக்குச் சொல்லத் தயங்காதவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இன்றும் இணைந்து பணிபுரிகின்றார்.

அண்மையில் ஆறு.அழகப்பனார் அவர்கள் வரைந்த ஈர நினைவுகள் என்னும் நூலைக் கற்கும் வாய்ப்பு அமைந்தது. முப்பது தலைப்புகளில் தம் மனத்துள் தங்கிய முதன்மை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது தலைப்புகள் என்றாலும் முந்நூறுக்கும் மேற்பட்ட அரிய செய்திகள் அக்கட்டுரைகளில் உள்ளன. இன்னும் ஈர நினைவுகள் தொடராக வெளிவர வேண்டும் என்பதே எம் போல்வாரின் விருப்பமாகும். ஈர நினைவுகளில் ஆறு.அழகப்பனாரின் தன்வரலாற்றுக்கூறுகள் தெரிகின்றனவே தவிர அவை யாவும் தமிழக வரலாறாக மிளிர்கின்றன.

ஈர நினைவுகள் நூலில் உள்ள செய்திகள்…

பேராசிரியர் அ.சிதம்பரநாதனார் மேலவை உறுப்பினர் ஆனமை, அ.சிதம்பரநாதனாரிடம் தமிழ் கற்கத் தமிழ்நாட்டு மாணவர்கள் விரும்பியமை, தெ.பொ.மீ.யின் பண்புநலம், புலமைவளம், இந்தி எதிர்ப்புப்போரில் இராசேந்திரன் என்ற மாணவருடன் நெடுமாறன் என்ற மாணவருக்கும் குண்டுக்காயம் ஏற்பட்டமை, தந்தை பெரியாரைத் தமது இல்லத்தில் தங்க வைத்தமை,நாடகக் கலைஞர் நவாபு இராசமாணிக்கத்துக்கு அறக்கட்டளை தொடங்கியமை உள்ளிட்ட செய்திகளை அறியும்பொழுது புதிய செய்திகளை அறிந்தவர்களாகின்றோம்.

அண்ணாமலை அரசரின் படம் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக அலுவலர் இல்லங்களிலும் இடம்பெறப் பணிபுரிந்தமை, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்தால் அரசர் முத்தையா செட்டியார் அண்ணாமலை நகரில் தங்கமுடியாமல் பூம்புகாரில் தங்கியமை, சமூகப் பணிகளுக்கு மாத ஊதியம் முழுவதையும் வழங்கும் ஆறு.அழகப்பனாரின் இயல்பு, மேனாள் முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களுடனான நட்பு, பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் அமைந்த தொடர்பு, ஆறு.அழகப்பனாரின் தமிழர் உடை தாங்கும் நோக்கு, உயர்துணைவேந்தராக விளங்கியமை, “அழகப்பனைக் கைது செய்” என்று ஊழியர்கள் முழக்கமிடும் அளவுக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சார்பாக நின்றமை, ம.பொ.சி.அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கியமை அறியும்பொழுது ஒரு தமிழ்ப்பேராசிரியரின் செயல் ஆளுமை நமக்குப் புலனாகின்றது.

ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பக்கிரியா பிள்ளை சென்னையில் இருந்த தம் வீட்டை விற்றுத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக, கல்லூரிகளுக்கு அறக்கொடைக்கு வழங்கிய வரலாறு, நாடகக் கலைக்காகக் காமராசர் ஒரு மாணவர்க்கு வேலை கிடைக்க உதவியமை, திருமலை நாயக்கர் நாடகம் படமாக்கும் முயற்சி தோல்வி, நாடகக் கனவு, பர்மாவுக்குச் சென்றுஉரையாற்றியதால் அங்கு இராணுவ வீரர்களால் வெளியேற்றப்பட்டமை, இலங்கைப் பயணம், சிங்கப்பூர் செலவு, மலேசியாவில் டத்தோ சாமிவேலு அவர்களுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார் அவர்களைக் கொண்டு சிறப்பு செய்தமை, காசியில் திருக்குறள் மாநாடு நடத்தி வடநாட்டாருக்குத் திருக்குறள் சிறப்பு உணர்த்தியமை, நளினி விடுதலைக்குக் குரல்கொடுத்த பாங்கு, தமிழ்த்தாய்க்குச் சிற்பி கொண்டு சிலையும் ஓவியர் கொண்டு படமும் உருவாக்கிய வரலாறு யாவும் ஆறு.அழகப்பனாரின் தமிழ்ப்பற்றை நமக்குத் தெளிவாக்க் காட்டுகின்றன.

விருகம்பாக்கத்தில் தம் இல்லத்து முகப்பில் திருவள்ளுவர் சிலை நிறுவியமை, குடியரசுதலைவர் மாளிகைக்குத் தானியில் சென்று குடியரசுத்தலைவரைக் கண்டு உரையாடிப் பாராட்டு தெரிவித்தமை யாவும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் முயற்சியாக இருப்பதை இந்த நூலில் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

ஈர நினைவுகள் என்னும் பெயரில் வெளிவந்துள்ள இந்த நூல்போல் பேராசிரியர் இன்னும் பல நினைவுகளைத் தொடர்நூல்களாக வெளியிட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாகும்.

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்களின் தமிழ்வாழ்க்கை

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் வாழ்ந்த திருவாளர் ஆறுமுகம் செட்டியார், உண்ணாமுலை ஆச்சியார் அவர்களுக்குத் திருமகனாக 10.08.1937 இல் பிறந்தவர். 1953-54 இல் அண்ணாமலை நகருக்குப் படிப்பதற்கு வந்த பேராசிரியர் அவர்கள் 1955-57 இல் இண்டர்மீடியட் வகுப்பிலும், 1957-60 இல் முதுகலை வகுப்பிலும் பயின்றவர். 1960 முதல் 1998 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், துணைப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர், பதிப்புத்துறைப் பொறுப்பாளர் என்று பல நிலைகளில் பணிபுரிந்தவர். சென்னையில் அமைந்துள்ள தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள் தெ.பொ.மீ, அ.சிதம்பரநாதனார், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், இ்லால்குடி நடேச முதலியார், க.வெள்ளைவாரணனார், மு.அருணாசலம் பிள்ளை, வித்துவான் முத்துசாமி பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, செ.வை.சண்முகம், உலக ஊழியர், கே.என்.சிந்தாமணி, மு.இராமசாமி பிள்ளை, மு.அண்ணாமலை, மெ.சுந்தரம், புலவர் தில்லைக்கோவிந்தன், டாக்டர் ஆறுமுகனார், மு.அருணாசலம், வி.மு.சோமசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்.

இவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கன:

1. திருமலை நாயக்கர்
2. நாடகச் செல்வம்
3. திருவள்ளுவர் நாடகம்
4. எள்ளல் நாடகம்
5. கரிவேப்பிலை
6. நாட்டுப்புறப்பாடல்கள் திறனாய்வு
7. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்(முனைவர் பட்ட ஆய்வேடு)
8. தாலாட்டுகள் 500
9. பெரியார் ஈ.வே.இரா (சாகித்ய அகாதெமிக்காக)
10. உ.வே.சா.சொல்லும் சுவையும் (உ.த.நி.)
11.இராசா சர் முத்தையா செட்டியார் (வானதி பதிப்பகம்)

தமிழக அரசின் கலைமாமணி விருது(1981), திருவள்ளுவர் விருது(2004-05)
பெற்றவர்.

10.08.2011 முதல் 10.08.2012 வரை பேராசிரியர் ஆறு.அழகப்பனாரின் பவள விழா தமிழகம் முழுவதும் அவர்தம் மாணவர்களால் கொண்டாடப்படுகின்றது.

தொடர்புக்கு:

பேராசிரியர் ஆறு.அழகப்பனார் அவர்கள்,
தமிழ்ச்சுரங்கம்
50. வெங்கடேச நகர் முதன்மைச்சாலை,
விருகம்பாக்கம், சென்னை- 600 092
செல்பேசி: + 91 9444132112

கருத்துகள் இல்லை: