
முனைவர் மு.தமிழ்க்குடிமகன்
தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழ் இயக்கம் மொழி, இன, நாட்டு உணர்வுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பலவகையில் இவ்வியக்கத்தின் முன்னோடிகளாக இருந்து பலரை இவ்வியக்கத்திற்கு வளர்த்துள்ளனர்.
கல்வி, அரசியல், குமூகத்தில் பல மாற்றங்களும் ஏற்றங்களும் இந்த இயக்கத்தால் ஏற்பட்டன. தூய தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் இன்றும் பகடி செய்யும் இழிநிலை இருப்பது வருந்துவதற்குரியது. இந்த ஏச்சுகளையும் பேச்சுகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கல்வித் துறையில் செயல்பட்ட பெருமக்களுள் மூவரை இருபதாம் நூற்றாண்டுத் தனித்தமிழ் இயக்கம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
சாத்தையா என்ற தமிழ்க்குடிமகன், பிச்சை என்ற இளவரசு, சோசப்பு ராசு என்னும் வளன்அரசு என்னும் பெருமக்களே அவர்களாவர். கல்லூரிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பொது மன்றுகளிலும் தூய தமிழில் உரையாற்றிப் பல்லாயிரம் மக்களைத் தூயதமிழில் பேசுவதற்கு ஆயத்தம் செய்தவர்கள் இப்பெருமக்களாவர். இவர்கள் உரையாலும், எழுத்தாலும் உருவாக்கிய தனித்தமிழ் உணர்வு கடல்கடந்த நாடுகளிலும் நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகளில்-நகரங்களில் பரந்து வாழும் தமிழர்களின் தனித்தமிழ் ஆர்வத்தை நினைக்கும்பொழுது தனித்தமிழ் இயக்கம் இன்றும் அதன் பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ளலாம்.
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் கல்லூரி மாணவராக இருந்தபொழுதே பாவாணர் நூலில்(ஒப்பியன்மொழிநூல்) ஈடுபாடு கொண்டு விளங்கினார். தம்முடன் பயின்ற பிச்சை என்ற மாணவரும் இளவரசானார்.நாகராசன் அரவரசன் ஆனார். தமிழ்க்குடிமகன் சார்ந்த அவரின் நண்பர்கூட்டம் மெல்ல மெல்லத் தனித்தமிழில் ஈடுபாடுகொண்டு அதற்குரிய பணிகளைத் தமிழகம் எங்கும் செய்தது.
கல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தபொழுது மேடைப்பேச்சுகளால் மக்களிடம் தனித்தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்திய மு.தமிழ்க்குடிமகன் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தலைவராகப் பணியாற்றிய காரணத்தால் அவரின் கருத்துகள் உடனுக்குடன் உலக அளவில் பரவின. மக்கள் ஆர்வமுடன் அவர் முயற்சியை இனங்கண்டு பாராட்டினர். ஏடுகள் வாழ்த்தியும் தாழ்த்தியும் அவர் கொள்கைகளை மதிப்பிட்டன. யாவற்றுக்கும் அஞ்சாமல் தனி அரிமாவாகத் தனித்தமிழ்க் கொள்கையில் வழுவாமல் கடைசிவரையில் இருந்தார்.
பின்னாளில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையைத் தமிழக அரசு உருவாக்கியபொழுது அந்த இடத்தில் இருந்தும் ஆக்கமான பணிகளைச் செய்யத் தவறவில்லை. தமிழ்வழிக் கல்வி, திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு, பேருந்துகளில் தமிழில் எண்பலகை வைத்தல், விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம்பெறச்செய்தல் என்று தம் கொள்கையை உரியவகையில் சட்டமியற்றி நடைமுறைப்படுத்த முயன்றார்.
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களை 1987 முதல் நூல் வழி அறிவேன். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றபொழுது அவர் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட கல்லூரியில் உரையாற்றுவதை அறிந்து அதனைக் கேட்கச் சென்றேன். அவர் உரை என்னொத்த மாணவர்களின் உள்ளங்களை ஈர்த்தது. அதன் பிறகு பல மாநாடுகள், இயக்க நிகழ்வுகளில் கண்டு உரையாடியுள்ளேன். அவரின் சொல்லும் செயலும் என்னை மிகவும் ஈர்த்தன. அவர்மேல் அளவுகடந்த மதிப்பும் அன்பும் எனக்கு ஏற்பட்டன.
அரசியல் பரபரப்பு இல்லாமல் இருந்தபொழுது அவரை நன்கு அறியவும் அவருடன் நன்கு பழகவுமான வாய்ப்பு எனக்கு அமைந்தது.
அப்பொழுது நான் வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் தங்கியிருந்தபொழுது எங்கள் இல்லம் வந்து எங்கள் எளிய விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார். அவர் நினைவாக என் மகனுக்குத் தமிழ்க்குடிமகன் என்று பெயர் வைக்கும் அளவுக்கு அவரின் தமிழ்ப்பற்று என்னை ஆட்கொண்டது. (என் மகன் பிறந்த உடன் ஐயாவுக்குச் செய்தி சொல்லி அவர் பெயரைக் குழைந்தைக்கு வைத்துள்ளதைச் சொன்னதும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த இரண்டு கிழமையில் வேலூர் வரும்பொழுது நேரில் வந்து வாழ்த்துவதாகக் கூறினார். ஐயகோ! என் மகன் பிறந்த இரண்டு நாளில் ஐயா மறைந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது). பல மடல்களும் தொலைபேசி அழைப்பிலுமாக எங்கள் நட்பு கனிந்தது. அன்னாரின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் இயற்பெயர் மு.சாத்தையா ஆகும். 26.06.1939 இல் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் முத்தையா, குப்பம்மாள் ஆவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைச் சாத்தனூர் அரசு தொடக்கப் பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியைச் செங்குடி உரோமன் கத்தோலிக்க (R.C) நடுநிலைப் பள்ளியிலும், ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான கல்வியைத் தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். இளம் அறிவியல் (கணக்கு) பட்டப்படிப்பைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் முடித்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
1963-1964 ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் உயர்நிலைப்பள்ளிக் கணக்கு ஆசிரியராகவும், தென்மொழி துணையாசிரியராகவும் பணியாற்றியவர். அடுத்த இரண்டு ஆண்டுகள் பறம்புக்குடி ஆ.வை. உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராகவும் பின் மூன்றாண்டுகள் நேரடி அரசியல் வாழ்க்கையிலும் இருந்தவர்.
1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றியவர். 1979 முதல் 1988 வரை கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.1989 முதல் நேரடியாக அரசியலில் இயங்கியவர். 1989 முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பணியாற்றியும், 1996 முதல் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர்.
1967 முதல் 1977 வரை தமிழில் வெளிவந்த மரபுக்கவிதை, புதுக்கவிதை நூல்கள் 614 ஐ ஆய்வுக்கு உட்படுத்திப் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1983 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர்.
எழுதிய நூல்கள்:
1. அந்தமானைப் பாருங்கள்
2. பாவேந்தர் கனவு
3. வாழ்ந்து காட்டுங்கள்
4. காலம் எனும் காட்டாறு
5. பாவேந்தரின் மனிதநேயம்
6. ஐரோப்பியப் பயணம்
7. மனம் கவர்ந்த மலேசியா
8. கலைஞரும் பாவேந்தரும்
9. தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு?
10. சீன நாடும் சின்ன நாடும்
11. மலேசிய முழக்கம்
12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)
இதழ்ப்பணி:
துணை ஆசிரியர்- தென்மொழி(1963-1966)
ஆசிரியர்- அறிவு(1970-1971)
ஆசிரியர்- கைகாட்டி (1971-1974)
சமுதாயப்பணிகள்:
பரிசுச்சீட்டு, திரைப்படக்கீழ்மை, வரதட்சணை முதலியவற்றால் விளையும் சமுதாயத் தீங்குகளைக் களையும் நோக்கில் மதுரை முத்துவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பேரவையின் பொதுச்செயலாளராக இருந்தவர். மதுரை நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.
அரசியல் பணி:
1989 இல் இளையான்குடித் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர். 1989 பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள் முதல் 1991 ஆம் ஆண்டுவரை தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், பின்னர் 1996 முதல் தமிழ் வளர்ச்சிப் பண்ப்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து பணிபுரிந்தவர்.
குடும்பம்
முனைவர் மு. தமிழ்க்குடிமகனின் துணைவியார் பெயர் வெற்றிச்செல்வி ஆவார்.இவர்களின் திருமணத்தில் பெருஞ்சித்திரனாரின் மகபுகுவஞ்சி என்ற அரிய நூல் வெளியிடப்பெற்றது. மூத்த மகன் மெய்ம்மொழி தமிழில் இ.ஆ.ப. தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். அடுத்த மகன் திருவரசன். கனரா வங்கியில் பணி. மகள் கோப்பெருந்தேவி தமிழிலக்கியத் துறையில் பயின்றவர். இளைய மகன் பாரி திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் வாழ்வு வாழ்ந்த முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் மாரடைப்பின் காரணமாக மதுரையில் 21.09.2004 இல் இயற்கை எய்தினார்.
அயல்நாட்டுச் செலவுகள்
மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொள்ளவும், ஆய்வுக்காகவும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இலண்டன், பாரிசு, அமெரிக்கா, துபாய் செர்மன், இத்தாலி, மொரீசியசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
இனிய குரலில் பாடவும், வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்களில் பேசவுமான ஆற்றல் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை, கல்விப்பேரவை ஆகியவற்றில் சிறப்பான பங்காற்றியவர்.
நாடகத்துறையில் முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. முதல்பரிசு, வாழவிடு, போராட்டம் உள்ளிட்ட சமூக நாடகங்களை இயற்றி, இயக்கி, நடித்தவர். மனமாற்றம், மணிமுடி போன்ற வரலாற்று நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்தவர்.
தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்தவர்.
பாவாணரின் உலகத் தமிழ்க்கழகத்தின் முகவை மாவட்ட அமைப்பாளராக இருந்து 1969 இல் பறம்புக்குடியில் உலகத் தமிழ்க்கழக மாநாட்டை நடத்திப் பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐயாயிரம் உருவா செலவில் 63 பேச்சாளர்களை அழைத்து மிகப்பெரும் தமிழ் விழாவை நடத்தியவர். தமிழியக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்து சிறப்பித்தவர்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாவாணரும் தனித்தமிழும் என்ற தலைப்பில் இவர் ஆற்றிய அறக்கட்டளைப் பொழிவு நூலாக்கப்பெற்றது. பாவாணரின் வாழ்வியலையும் தமிழ்ப்பணிகளையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்தளிக்கும் முதல்நூலாக இது மிளிர்கின்றது. தொலைக்காட்சி, வானொலிகளில் உரையாற்றியவர். தனித்தமிழ் இயக்கத்தின் விண்மீனாகச் சுடர்விட்ட மு.தமிழ்க்குடிமகன் தனித்தமிழ் ஆர்வலர்களின் உள்ளங்களில் எல்லாம் உயிர்வாழ்கின்றார்.

முனைவர் மு.தமிழ்க்குடிமகன்

காலம் எனும் காட்டாற்றின் நூலாசிரியராக மு.தமிழ்க்குடிமகன்

மு.இளங்கோவன், முனைவர் மு.தமிழ்க்குடிமகன்

முனைவர் மு.தமிழ்க்குடிமகன், எங்கள் மகள் கானல்வரியைத்
தூக்கிக் கொஞ்சிமகிழ்தல்

புலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,மு.இளங்கோவன்

மு.இளங்கோவனுக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எழுதிய மடல்

மு.இளங்கோவனுக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எழுதிய மடல்
8 கருத்துகள்:
1964 தொடக்கம் 1966 வரை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்குடிமகன், துரைமுருகன், மாநிலக் கல்லூரியில் வைகோ கல்வி பயின்ற காலங்களில் நானும் ஒருசலை மாணாக்கனாய்ப் பயின்றேன். விடுதியில் தளத்தில் ஓர் அறையில் சாத்தையா + பிருதிவிராஜ அறை. முதல் தளத்தில் நான் + மலாய் அன்பர் அறை. கல்லூரிகளுக்கிடையான பேச்சுப் போட்டியில் இம்மூவரும் பங்குபற்றுவர். சில வாரங்களுக்கு முன்னர் வைகோவும் நானும் அந்த இனிய நாள்களை நினைவு கூர்ந்தோம்,
1964 தொடக்கம் 1966 வரை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்குடிமகன், துரைமுருகன், மாநிலக் கல்லூரியில் வைகோ கல்வி பயின்ற காலங்களில் நானும் ஒருசலை மாணாக்கனாய்ப் பயின்றேன். விடுதியில் தளத்தில் ஓர் அறையில் சாத்தையா + பிருதிவிராஜ அறை. முதல் தளத்தில் நான் + மலாய் அன்பர் அறை. கல்லூரிகளுக்கிடையான பேச்சுப் போட்டியில் இம்மூவரும் பங்குபற்றுவர். சில வாரங்களுக்கு முன்னர் வைகோவும் நானும் அந்த இனிய நாள்களை நினைவு கூர்ந்தோம்,
தமிழ்க்குடிமகன் அவைத்தலைவரானது மட்டும் தெரியும். மற்ற விவரங்கள் அறிய கொடுத்தமைக்கு நன்றி இளங்கோவன். நும் பணி சிறக்கட்டும்.
தமிழ்க்குடிமகன் அவைத்தலைவைர் என்பது மட்டும் அறிவேன். மற்ற தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி இள்ங்கோவன். நும் பணி மேன்மேலும் சிறக்கட்டும்.
எங்கள் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்தவரும், பகுத்தறிவுக் கருத்துகளையும், தனித்தமிழ் உணர்வையும் விதைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அமைச்சுப் பணியின் போதும் குறிப்பிடத்தக்க தமிழ்ப் பணியாற்றிய அய்யா தமிழ்க்குடிமகனார் குறித்து பகிர்ந்து கொண்ட தங்களுக்கு எம் நன்றி! தொடர்க நின் பணி!
வாசித்து, இன்புற்றேன். நன்றி!
வாழ்த்துக்கள் அய்யா. முனைவர் மு.தமிழ்க்குடிமகனார் பற்றிய பல சுவையான தகவல்களோடு தங்களின் தொடர்பு பற்றியும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுகள்.
தனித்தமிழ் மறவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் தமிழினத் தொண்டறம் காலத்தால் அழியாதன. மீண்டும் அத்தகு சான்றோரை என்று காண்போமோ?
கருத்துரையிடுக