நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 22 அக்டோபர், 2011

பேராசிரியர் முனைவர் ச.சாம்பசிவனார்


முனைவர் ச.சாம்பசிவனார்

தமிழ்மொழி பலநிலைகளில் பெருமைகளைக் கொண்டிருப்பதுபோல் இம்மொழிக்கு உழைத்த அறிஞர் பெருமக்களும் பலநிலைகளில் பெருமை பெற்றவர்களாகவும் பல திறத்தவர்களாகவும் உள்ளனர். அவ்வறிஞர்கள் வரிசையில் எண்ணத் தகுந்தவர் மதுரையில் வாழும் முனைவர் ச.சாம்பசிவனார் அவர்கள் ஆவார்கள்.

பலவாண்டுகளுக்கு முன்பே ஐயாவின் தொல்காப்பியம் குறித்த பேச்சைக் கேட்டுள்ளேன். அதுகுறித்த ஐயாவின் கட்டுரைகளையும் யான் கற்றுள்ளேன். தமிழ் மாருதம் என்ற ஏட்டின் வழியாகத் தொடர்ந்து தொய்வின்றித் தமிழ்ப் பணிபுரிந்துவரும் ஐயாவுக்கு அகவை எண்பதைக் கடந்துள்ளது.

தமிழும் சைவமும் தமதிரு கண்களாகப் போற்றும் பேராசிரியர் அவர்களுக்கு அண்மையில் முத்துவிழா நடைபெற்றதை அறிந்து மகிழ்ந்தேன். முத்துவிழா நினைவாக வெளிவந்த முத்துவிழா மலர் அளப்பரும் கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அதுபோல் சிந்தனைச் செழுந்தேன் என்ற தலைப்பில் முத்துவிழாவை ஒட்டி வெளிவந்த பேராசிரியரின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலும் தமிழுக்கு ஆக்கமான வரவேயாம். பேராசிரியரின் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

பேராசிரியர் ச.சாம்பசிவனார் அவர்கள் 29.09.1929 இல்(பள்ளிச்சான்று 10.05.1928) தேனி மாவட்டம் வள்ளல்நதி என்ற கண்டமநாயக்கனூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் க.ச.சங்கரலிங்கம், தில்லை என்ற மீனாட்சி.

மதுரைக் கல்லூரியில் இடைக்கலை வகுப்பு வரை படித்தவர். தந்தையார் இறந்ததும் படிப்பு இடையில் நின்றது. மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பாலபண்டிதம்(1954) முடித்து, மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதம்(1955) முடித்தவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான்(1961) பட்டம் பெற்றவர். தமிழக அரசின் பண்டிதப் பயிற்சியைக் குமார பாளையத்தில் முடித்தவர். 1966 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு முடித்து, 1974 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்தவர். நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி என்னும் தலைப்பில் பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி, பேராசிரியர் அனந்தகிருட்டிண பிள்ளை ஆகியோர் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வு செய்து 1983 இல் முனைவர் பட்டம் பெற்றவர்.

26.11.1950 இல் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தலைமையில் மனோன்மணி என்னும் அம்மையாரை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஆண்மக்கள் நால்வர் பெண்மக்கள் நால்வர்.

மதுரை இராமநாதபுரம் கூட்டுறவுமொத்த விற்பனைப் பண்டக சாலையில் கணக்குப் பிரிவு எழுத்தராகப் பணியைத் தொடங்கி, பின்னர் தமிழாசிரியராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணிநிலையில் உயர்ந்தவர்.


முனைவர் ச.சாம்பசிவனார்

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீசியசு எனப் பல வெளிநாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர். ஆய்வரங்குகளிலும், சமய மாநாடுகளிலும் உரையாற்றிய பெருமைக்குரியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் ச.சாம்பசிவனார் அவர்கள் பல நூறு கட்டுரைகளையும் வரைந்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விக்காகப் பல பாடநூல்களையும் எழுதியுள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியில் இருந்தார்.

பேராசிரியர் எழுதிய நூல்களுள் மாநகர் மதுரை(1960), நாவலர் நால்வர்(1960), அரசஞ்சண்முகனார்(1961), தமிழவேள் உமாமகேசுவரனார்(1964), தமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை(1964), கவி மன்னர் மூவர்(1965), உடம்பும் உயிரும்(1965), புகழின் காயம்(1967), வள்ளுவர் தெள்ளுரை(1970), கண்ணன் பிள்ளைத் தமிழ் மூலமும் பொழிப்புரையும்(1971), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் குறிப்புரையும்(1978), தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதி 2 மூலமும் குறிப்புரையும்(1978), தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதி 1 மூலமும் குறிப்புரையும்(1980), ஐங்குறுநூறு: குறிஞ்சி மூலமும் விளக்க உரையும்(1980), மேகலை நாடகம்(1982), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் கருத்துக்கோவை(1982), நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி(1985), தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் முதலான 4 இயல் கருத்துக்கோவை(1986), பிழையின்றி எழுத(1996), திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள்(1997), திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள்(1998), தமிழா இதோ உன் புதையல்(1998), தொல்காப்பியம் பொருளதிகாரம் முதல் 5 இயல்கள் மூலமும் குறிப்புரையும்(1998), நாவலர் சோமசுந்தர பாரதியார்(1999), சிவஞானபோதச் செம்பொருள்(1999), நற்றமிழ்க்காவலர் நாவலர் சோமசுந்தர பாரதியார்(2000), அறநெறியண்ணல் கி.பழனியப்பனார்(2002), சைவசித்தாந்தக் கலைச்சொல் அகராதி(2003), இராமலிங்கர் பாடல்களில் சமய நல்லிணக்கச் சிந்தனைகள்(2004), இராமலிங்கர்(2004), சைவ சமய இலக்கிய அகராதி 1(2006), சைவ சமய இலக்கிய அகராதி 2(2008), உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை(2007) உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.

இவை தவிர நன்னூல், தண்டியலங்காரம், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக் காரிகை, மாறனலங்காரம், பிரபுலிங்க லீலை, தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

திருச்சிராப்பள்ளி, கோவை, மதுரை, சென்னை வானொலிகளில் உரையாற்றிய பெருமைக்குரியவர். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ் மாருதம் என்ற ஏட்டினைத் தொய்வின்றி நடத்தி வருகின்றார்.

மதுரை மாநகர் புறவழிச்சாலையில் பாரத வங்கிக் குடியிருப்பில் கட்டிய வீட்டின் ஒரு பகுதியை நூலகமாக அமைத்து ஆய்வாளர்கள் பயன்பெறும் வண்ணம் நூலகம் ஒன்றை உருவாக்கித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். நூலக நேரம் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணி வரையாகும். 04.02.2001 ஆம் ஆண்டு முதல் தமிழ்மாருதம் நூலகம் செயல்படுகின்றது.
மதுரைப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு இவரின் பங்களிப்பு அமைந்துள்ளது. நாவலர் சோமசுந்தர பாரதியாரின் வரலாறு தெளிவுபெற்றது பேராசிரியரின் முயற்சியால் எனில் மிகையன்று.

மதுரைத் திருவள்ளுவர் கழத்தின் பொறுப்பில் இருந்து இலக்கிய நிகழ்வுகள் சிறப்புற நடைபெறவும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பணிகள்-செந்தமிழ்க்கல்லூரியின் பணிகள் சிறப்புற நடைபெறவும் இவரின் பங்களிப்பு மிகுதி.

தமிழகத் தமிழ்க்கல்லூரி ஆசிரியர் மன்றம் என்ற அமைப்பை நிறுவியவர்(1970). கல்லூரித் தமிழாசிரியர்களுக்குப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமே வழங்கப்பட்டது. இதனை மாற்றி மற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போன்று தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்றதில் இம்மன்றத்துக்குப் பங்கு உண்டு. மதுரையில் நாவலர் பாரதியார் சிலை நிறுவும் கோரிக்கையை அன்றைய முதல்வர் ம.கோ.இரா அவர்களிடம் வைத்துச் சிலை நிறுவப்பெறுவதற்குக் காரணராக இருந்தவர்.

மதுரையில் தமிழ்ப்பணியாற்றிவரும் பேராசிரியர் அவர்கள் உடல்நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்த்தாய்க்கு ஆராய்ச்சி நூல்களை ஆரமாகச் சூட்டி மகிழ வேண்டும் என்பதே நம் விருப்பமாகும்.


முத்துவிழா மலர்


தமிழ்மாருதம்சிந்தனைச் செழுந்தேன்


தொடர்புக்கு:

முனைவர் ச.சாம்பசிவனார்
சிறப்பாசிரியர்-தமிழ் மாருதம்
எண் 67/1 ஸ்டேட் பேங்க் அலுவலர் முதல் காலனி,
புறவழிச்சாலை, மதுரை- 635 016
தொலைபேசி : 0452 -2384246


முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி
27,சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு,
இலாசுப்பேட்டை,புதுச்சேரி- 605008
0413- 6542526

2 கருத்துகள்:

naanjil சொன்னது…

நண்பர்களுக்கு வணக்கம்.

பேராசிரியர் முனைவர் ச.சாம்பசிவனார் ப‌ற்றி நல்ல‌ ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ளை அளித்த‌
முனைவர் மு.இளங்கோவன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்
www.fetna.org

arunan சொன்னது…

http://www.youtube.com/watch?feature=player_profilepage&v=H96-ydJdhvk
அருமையான பதிவு....
இத்துடன் இதையும் இணைத்துக் கொள்க.
அன்புடன்
அருணன்