நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 5 அக்டோபர், 2011

கணினி கற்கத் துடிக்கும் கி.இரா…


எழுத்தாளர் கி.இரா.

நேற்று பிரஞ்சு பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயகர் இல்லம் சென்றிருந்தேன். தமிழ்க்கல்விச்சூழல், மொழிபெயர்ப்புகள் குறித்த எங்கள் பேச்சு நிறைவு நிலைக்கு வந்ததும் விடைபெற நினைத்தேன். எழுத்தாளர் கி.இரா. அடுத்த தெருவில்தானே உள்ளார்கள் சென்று பார்த்து வருவோமே என்றேன். பேராசிரியரும் உடன்பட்டார். இருவரும் இலாசுப்பேட்டை அரசு அலுவலர் குடியிருப்புக்குச் சென்றோம். அந்தி மயங்கும் மாலை நேரம். கதவைத் தட்டினோம். கி.இரா.எதிர்கொண்டு அழைத்தார். பேராசிரியர் நாயகர் அவர்கள் என்னை அறிமுகம் செய்தார். தெரிந்தவர்போல் குறிப்பைக் காட்டினார். உண்மையில் பலமுறை இதற்குமுன் சந்தித்தித்துள்ளேன். எனினும் நினைவுக்குறைவால் மறந்திருந்தார். பின்னர் உரையாடலில் தமக்கு நினைவுக்குறைவு ஏற்படுவதையும் ஒத்துக்கொண்டார்.

கி.இரா.அவர்களின் துணைவியாரும் எங்கள் உரையாட்டில் கலந்துகொண்டார். இடையில் தேநீர் கலக்க அம்மா பிரிந்து அடுப்படிக்குச் சென்றார். கி.இரா. அவர்களைப் பற்றிய செய்திகளை மெதுவாக அறியத் தொடங்கிச் சில வினாக்களை வீசினேன்.

முதலில் அவர் வளர்த்த ஒரு பொலிகாளை பற்றிப் பேச்சு தொடங்கியது. பொலிகாளை என்றால் கி.இரா. என்ன பேசியிருப்பார் என்று தங்கள் நினைவுக்கே விட்டுவிடுகின்றேன். அவர் வளர்த்த பொலிகாளைக்குத் தமிழ்,தெலுங்கு மொழியில் பசுமாட்டுக்காரன் சொல்லும் குறிப்பும் புரியும் என்றார். இங்குதான் கி.இரா.என்ற கதை சொல்லி எங்களுக்குத் தெரிந்தார். அந்தக் காளையின் செயல்களை நாடகம்போல் எங்களுக்கு நடித்து விளக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சிறிய செய்தியைக் கூட மிகச்சிறப்பாக விளக்கிக்காட்டும் ஆற்றல் அவருக்குப் பிடிபட்டுப் போனதால்தான் அவரால் உயிரோட்டமான புதினங்கள், சிறுகதைகள், மடல்களை எழுதமுடிந்ததுபோலும்.

அவர் இல்லத்தில் இருந்த இசைஞானி இளையராஜா அவர்களின் படத்தைக் காட்டி எப்பொழுது எடுத்தது? என்றேன். இளையராஜாவின் இசைத்திறமையை வாயார மெச்சினார். அடிப்படையில் தாம் ஒரு இசையார்வலன் எனவும் தொடக்கத்தில் இசைத்துறையில்தான் தம் கவனம் இருந்தது என்றும் ஒத்துக்கொண்டார். எழுத்துத்துறையை விடத் தமக்கு இசைத்துறையில்தான் நல்ல ஈடுபாடு தொடக்கத்தில் இருந்தது என்றார். காருகுறிச்சி அருணாசலம், டி.என் இராசரத்தினம் ஆகியோரின் இசையில் தமக்கிருந்த ஈடுபாட்டை அறிந்த தம் நண்பர்கள் இவர்களின் இசைக்குறுந்தகடுகளை அன்பளிப்பாக வழங்கியதை நினைவுகூர்ந்தார்.

கி.இரா. அவர்களுக்கு இசை ஈடுபாடு இருப்பதை இந்தச் சந்திப்பில்தான் அறிந்தேன்.

தாம் எழுதும் எழுத்தில் சிலபொழுது எழுத்துப்பிழைகள் வந்துவிடும் என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். எழுத்துப்பிழைகளை எடுத்துக்காட்டி அமர்க்களப் படுத்தாமல் படைப்புகளை மட்டும் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.சோறு தின்னும்பொழுது கல் கிடாந்தல் எடுத்தெறிந்துவிட்டுத் தின்னுவதுபோல் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

உடலோம்பல் பற்றி கேட்டேன். கட்டுப்பாடான உணவும் நல்ல எண்ணங்களும்தான் உடல்நலத்திற்குக் காரணம் என்றார். நாற்பதாண்டுகளாக இனிப்புநோய் இருந்தாலும் இன்னும் இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்றார். அதுபோல் இரத்தக்கொதிப்பு இருப்பதால் உப்பும் அளவாகத்தான் இட்டுக்கொள்கின்றோம் என்றார்.

தமிழகத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறையினர், கல்வியாளர்கள் எனப் பலரும் கி.இராவுடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கின்றனர். தொண்ணூறு அகவையைத் தொடும் இந்தக் கரிசல்காட்டு எழுத்தாளருக்குக் கணினி குறித்த அறிமுகத்தைச் சொன்னேன். அங்கிலம் தெரியாமல் தமிழ் மட்டும் தெரிந்திருந்தால்கூடக் கணினியை இயக்க முடியும், இணையத்தைப் பயன்படுத்தமுடியும் என்றேன். அப்படியா என்று வியந்தார். விரைந்து மடிக்கணினியுடன் வருகின்றேன் என்று அவரிடமிருந்து விடைபெற்றோம்.


கி.இரா அவர்களும் அவர்களின் துணைவியார் கணவதி அம்மாளும்


கணவதி அம்மாள், கி.இரா, வெங்கட சுப்பராய நாயகர்


கணவதி அம்மாள், கி.இரா,மு.இளங்கோவன்

2 கருத்துகள்:

ko.punniavan சொன்னது…

வணக்கம்,
நானும் அவரைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். அவரின் சிறுகதைகள் நாவல்கள் வாசித்த ஈர்ப்பு. உங்கள் சந்திப்பை அருமையாக எழுதியிருகிறீர்கள்.நன்றி

Tamil Nenjan சொன்னது…

உங்களின் சந்திப்பு நாமும் ஏதோ அவரை நேரில் சந்தித்த உணர்வை ஏற்படுத்துகிறது. தகவலுக்கு நன்றி.