நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 20 ஜூலை, 2011

சார்ல்சுடன் நகர்நோக்கி…


சார்ல்சுடன் பாலம்

அமெரிக்கா ஐம்பது மாநிலங்களாகப் பரந்து கிடக்கும் நிலப்பரப்பைக் கொண்டது. அந்தந்த மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தமிழ்ச் சங்கங்கள், பள்ளிகள், பிற அமைப்புகளை நிறுவித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர். பிள்ளைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்தல், தமிழ்நாட்டியம், தமிழிசை பயிற்றுவித்தல், தமிழ்நாட்டு அறிஞர்கள், கலைஞர்கள் வந்தால் அவர்களை அன்புடன் வரவேற்றுப் பேசச் செய்து விருந்தோம்பல் செய்தல் அமெரிக்கா வாழும் தமிழர்களின் பொதுநிலை விருப்பமாக உள்ளது.

அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாகப் “பெட்னா” என்று செயல்படுகின்றது. இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்விழா அமெரிக்காவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறுவது வழக்கம். இதுவரை இருபத்து நான்கு இடங்களில் இவ்வாறு ஆண்டுவிழா நடந்துள்ளது. தமிழகத்திலிருந்து அறிஞர்பெருமக்கள், கலைஞர்கள், திரைக்கலைஞர்கள் பலர் அழைக்கப்பெற்று இந்த விழாவினை மிகச்சிறப்பாக நடத்துவது அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் விருப்பமாகும். அமெரிக்கத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகப் பல்லாயிரக்கணக்கில் இந்த விழாவுக்குத் திரள்கின்றனர்.

கணினித்துறையிலும் கல்வித்துறையிலும் ஆய்வுத் துறைகளிலும் வங்கிப் பணிகளிலும் புகழ்பெற்று விளங்கும் பொறியாளர்கள், அதிகாரிகள், அறிவியலாளர்கள்தான் இந்த விழாவை நடத்துபவர்கள். குடும்பம் குடும்பமாக இணைந்து ஆர்வமுடன் நடத்தும் இந்த விழாவுக்கு இந்த ஆண்டு நான் செல்ல நினைத்தமை, அங்குப் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது காரணமாகும். பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்களுக்கு இருக்கும் ஆர்வம் தமிழாசிரியனாகிய எனக்கு ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை.

இதற்கு வாய்ப்பாகப் பென்சில்வேனியாவில் தமிழ் இணையமாநாடு நடந்ததும் அதில் கலந்துகொண்டும், பல்வேறு பல்கலைக்கழகங்களைப் பார்வையிடவும் திட்டடமிட்டேன். அந்த வகையில் என் அமெரிக்க நண்பர்களின் ஒத்துழைப்புடன் பயணம் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டது.

பெட்னா விழாவுக்கு முறைப்படி அந்த அமைப்பினர் என்னை அழைத்தனர். நானும் அமெரிக்காவின் முற்பகுதிப் பணிகளை (கருத்தரங்கு, பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல், நகர்வலம்) முடித்துக்கொண்டு 01.07.2011 பகல் ஒரு மணியளவில் பால்டிமோரிலிருந்து புறப்படும் வானூர்தியில் சார்ல்சுடன்(தெற்குக் கரோலினா மாநிலம்) நகர்நோக்கிப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன்.

நண்பர் சங்கர் இல்லத்தில் இரவு தங்கியிருந்தேன். காலையில் எழுந்து காலைக்கடமைகளை முடித்து இணையத்தில் அமர்ந்து புதுவையில் உள்ள குடும்பத்தாருடன் பேசியபடி இருந்தேன். பிற கடமைகளையும் முடித்தேன்.

சங்கரின் குடும்பத்தார் இரவு முழுவதும் பயணத்திற்கான ஏற்பாட்டில் இருந்ததால் காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியுடன் எழுந்தனர். காலையில் நாக்குக்கு வாய்ப்பாக இட்லியும் மிளகாய்ப் பொடியும் காலை உணவாகக் கொடுத்தனர். சங்கரின் துணைவியார் கொங்குநாட்டுப்பகுதி சார்ந்தவர். அவர்கள் பகுதியில் செய்யும் ஒருவகையான பொடியைப் பயன்படுத்தும்படி சொன்னார்கள். சற்றுக் காரமாக இருந்தது. நம்மூர்ப் பொடியைப் பயன்படுத்தினேன்.
நண்பர் சங்கர் மிளகாய்த்தோட்டத்தின் உரிமையாளர்போல் எப்பொழுதும் காரப்பிரியர். அதனால்தான் அவர்செயல் காரமாக இருக்கின்றது என்று நம்புகின்றேன். நல்லெண்ணையில் குழைத்த பொடியில் நம் நாட்டு உணவு கிடைத்த மகிழ்ச்சியில் உண்டேன்.

உணவு முடிந்ததும் அனைவரும் அவரவர்களுக்கு உரிய பொருள்களை எடுத்துக்கொண்டு புறப்பட அணியமானோம். சங்கரின் வீட்டுக்கு அருகில் இந்தியக் குடும்பத்தினர் பலர் உள்ளதாகச் சொன்னார்கள். அக்குடும்பம் சார்ந்த நண்பர் ஒருவர் மகிழ்வுந்தில் எங்களை வானூர்தி நிலையத்துக்கு அழைத்துச் செல்ல சங்கர் திட்டமிட்டிருந்தார். வண்டியும் உரிய நேரத்தில் வந்தது.

அனைத்துப் பொருள்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டு புறப்பட்டோம்.
பால்டிமோர் வானூர்தி நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் நினைவாக எனக்குப் பகலுணவாகத் தயிர்ச்சோறும் ஊறுகாயும் எடுத்துக்கொண்டோம். அவர்கள் அடையோ, ரொட்டியோ தின்று பழக்கப்பட்டவர்கள். என்ன சாப்பிட்டாலும் கடைசியல் தயிர் இல்லை என்றால் சாப்பிட்ட நிறைவே எனக்கு இருக்காது என்பதால் தயிர்ச்சோற்றைக் கொண்டு வந்தோம். எங்களை அழைத்து வந்த மகிழ்வுந்து நண்பர்க்கு நன்றிகூறி அவரை அனுப்பிவிட்டோம்.

எங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்த அணியமானோம். எங்கள் பைகளை முதலில் அனுப்பினோம். ஆள் ஆய்வு அடுத்து நடந்தது. அப்பொழுதுதான் தெரிந்தது. சங்கரின் துணைவியார் செயந்தி அம்மா அவர்கள் ஆளறி அட்டை எதுவும் இல்லாமல் வந்தது. புறப்பட்ட விரைவில் அதனை வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளார்கள். பாதுகாப்பு ஆய்வு அமெரிக்காவில் மிகுதி என்பதால் எங்களை உள்ளே அனுப்பிவிட்டு அவரை மட்டும் தடுத்து நிறுத்தினார்கள். சங்கர் உரிய வேறு ஆவணங்களைக் காட்டியும் மனம் நிறைவடையவில்லை.

என்றாலும் சில அடையாளங்களைச் சொன்னால் சிறிது நேரத்தில் அவர்பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துவிடமுடியும். அமெரிக்காவில் உலவும் ஒருவர் பற்றிய அனைத்துப் புள்ளி விவரங்களையும் கணினியில் இணைத்துவைத்துள்ளதை அறிந்து வியந்துபோனேன். காலையிலிருந்து இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி வந்துள்ளதாகவும் இது தம் கடமை என்றும் அதிகாரிகள் அன்புடன் கூறினர். நம்மூர் அதிகாரிகளாக இருந்தால் எப்படியும் “கைநீட்டுவார்கள்”. அல்லது எரிந்து விழுவார்கள். திட்டித்தீர்த்திருப்பார்கள். மிக அன்பாகவும் மதிப்பாகவும் இதுபோன்ற நிலைகளில் நடந்துகொள்ளும் அமெரிக்க அதிகாரிகளை மனதுக்குள் பாராட்டினேன்.

ஒருவழியாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுச் சங்கரின் துணைவியார் எங்கள் குழுவுடன் சிறிது நேரத்தில் வந்து இணைந்தார்கள். அவரின் நிலையைச் சொல்லி எங்கள் குழு சிரித்து மகிழ்ந்தது.

இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவரின் கனடா நாட்டு மருத்துவ நண்பரும் எங்கள் குழுவில் இணைந்தனர். வேறு பல மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்க்குடும்பத்தாரும் எங்களுடன் வானூர்தி நிலையத்தில் இணைந்தனர். பெண்கள் பெண்களுடனும், பெரியவர்கள் பெரியவர்களுடனும் குழைந்தைகள் குழந்தைகளுடனும் அறிமுகம் ஆகி, நலம் வினவி, சென்ற ஆண்டு நிகழ்வுகளை நினைவுகூறி மகிழ்ந்தனர்.

எங்களுக்கு உரிய வானூர்தி அரைமணி நேரக் காலத்தாழ்ச்சியுடன் புறப்படும் என்றனர். கொண்டுவந்த தயிர்ச்சோற்றை ஆர்வத்துடன் உண்டேன். இலங்கை மருத்துவரின் தாயார் அன்பு பாராட்டி என்னுடன் உரையாட நானும் உணவை முடித்தேன். வானூர்தி வந்து நின்றது. அனைவரும் ஒரே குழுவாக அமர்ந்தோம். உரையும் பேச்சுமாக எங்கள் செலவு இருந்தது.

அடுத்த ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை. சார்ல்சுடன் நகரின் வானூர்தி நிலையத்தில் இறங்கினோம். நான் சிறப்பு விருந்தினர் என்ற அடிப்படையில் என்னை அழைக்க வண்டி ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அது தெரியாமல் சங்கருடன் நான் மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்தேன். மகிழ்வுந்தை இயக்க ஓட்டுநர் எங்கே என்று நண்பர் சங்கரைக் கேட்டேன். சங்கர் அமெரிக்க நடைமுறையைச் சொன்னார்.

நமக்கு மகிழ்வுந்து தேவை என்று முன்பே பதிவு செய்துவிட்டால் உரிய இடத்தில் மகிழ்வுந்து நமக்காக நிறுத்தப்பட்டிருக்கும். உரிய அலுவலகத்தில் ஆவணங்களைக் காட்டி வண்டியின் திறவியை வாங்கி நமக்குரிய இடத்திற்கு நாமே ஓட்டிக்கொண்டு செல்லலாம். நம் கடமை முடித்து மீண்டும் வண்டியை உரிய இடத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம் என்றார். சற்றொப்ப நம்மூர் வாடகை மிதிவண்டிபோன்ற நடைமுறை. பல இலட்சம் மதிப்புள்ள வண்டியை நம்மை நம்பித் தருகின்றார்களே என்று வியந்தேன்.

எனக்குத் தமிழகத்தில் மகிழ்வுந்து ஓட்டுநரைக் கட்டிப் போட்டு வண்டியைக் கொள்ளையடிக்கும் நம்மூர் ஆறலை கள்வர்களின் நினைவுதான் வந்தது. மகப்பேற்றுக்கும் விரைவுப் போக்குவரத்துக்கும் என வண்டியைப் பேசி எடுத்து வந்து ஓட்டுநரைக் கட்டி முந்திரித்தோப்பில் போட்டுவிட்டு மறுநாள் நாளிதழ்களில் செய்தியாக அடிபடும் நம்மூர் மகிழ்வுந்து ஓட்டுநர்களின் நினைவுக்கு இடையே நண்பர் சங்கர் எங்களைப் பாதுகாப்பாகப் புகழ்பெற்ற பிரான்சிசு மரியான் விடுதிக்கு அழைத்து வந்தார்.

கருத்துகள் இல்லை: