நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 ஜூலை, 2011

அமெரிக்காவின் உள்முகம் தேடல்…


மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் மு.இளங்கோவன்

அமெரிக்காவின் கல்விநிறுவனங்கள், கல்வி முறைகள் பற்றி அறிவதில் நாட்டம் கொண்டிருந்த நான் அந்த நாட்டில் வாழும் மக்களின் இறை நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள், பண்பாட்டுக்கூறுகள் பற்றி அறியவும் நினைத்தேன். எனவே என் விருப்பத்தை நிறைவேற்ற நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் அங்குள்ள சில கோயில்கள், தேவாலயங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நூலகங்கள் இவற்றைப் பார்வையிடும் வாய்ப்பை உருவாக்கினார்கள்.

28.06.2011 காலை பத்துமணியளவில் நண்பருடன் புறப்பட்டேன். வட அமெரிக்காவின் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ள இடத்தை அடைந்தோம். அழகிய கோயிலில் முருகன் காட்சி தருகின்றார். கோயிலில் கோபுரக் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதல் தளத்தில் முருகன் கோயிலும் கீழ்த்தளத்தில் அரங்கமும் உள்ளன. கீழ்த்தள அரங்கில் திருவள்ளுவர் வெண்பளிங்கு சிலை காட்சிக்கு உள்ளது. இதனை வி.ஜி,பி. நிறுவனத்தார் அன்பளிப்பாக வழங்கியுள்ளதையும் அறிந்தேன். கோயிலின் சிலைகளைப் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.

கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரை இக்கோயிலின் சிறப்புப் பற்றி வினவினேன். அகவை முதிர்ந்த இருவரும் மருத்துவப்படிப்பு முடித்தவர்கள். ஓய்வுக்காலத்தில் கோயில்பணிகளில் ஈடுபட்டு வருவதை உரைத்தனர். இக்கோயிலுக்கு ஈழத்தமிழர்கள் அதிகம் வருவதாகவும் அறிந்தேன். கோயில் விவரம் சொன்னவர்கள் இருவரும் புதுச்சேரியில் மருத்துவப்படிப்பு படித்ததாகச் சொன்னார்கள். நான் புதுச்சேரியிலிருந்து வந்துள்ளேன் என்று சொன்னதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் சென்றநாள் பணி நாள் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. விடுமுறை நாள்களில் மக்கள்கூட்டம் அதிகமாக இருக்குமாம். கோயில் பற்றிய விவரங்கள், குறுவட்டுகள், நூல்கள் அங்கு விற்பனைக்கு இருந்தன. கோயில்சார்ந்த நிகழ்வுகள் மட்டுமன்றி அங்குத் திருமணங்கள் மிகுதியாக நடக்கும் என்றும் அறிந்தோம். அங்குள்ள கலையரங்கில் நாட்டிய அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடப்பதாகவும் அறிந்தோம். அனைவரும் ஒன்று சேர்வதற்குரிய நல்ல இடமாக அந்த முருகன்கோயில் உள்ளது.

திருவள்ளுவர் சிலை கீழ்த்தளத்தில் இருப்பது மட்டும் கண்ணுக்கு உறுத்தலாக இருந்தது. அமெரிக்கா வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து வாசிங்டன் நகரின் முதன்மையான இடத்தில் ஒரு தமிழ்க்கூடம் நிறுவி அதில் திருவள்ளுவர் சிலை ஒன்றை வைத்தால் உலகெங்கும் புகழும் திருவள்ளுவருக்கு உரிய மதிப்பை வழங்கியவர்களாவோம். இவ்வாறு செய்யும்படி அமெரிக்கத் தமிழர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். தமிழகத்தை விடத் தமிழ்ப்பற்றும், பொருள்வளமும், மனவளமும் கொண்ட பல புரவலர்கள் அமெரிக்காவில் இருப்பதால் ஓர் இடம் வாங்குவதோ, தமிழுக்கு ஒரு வளமனை கட்டுவதோ, திருவள்ளுவர் சிலை நிறுவுவதோ அவர்களுக்குப் பெரிய செயல் இல்லை. எனவே அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமெரிக்கத் தலைநகரில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் அமெரிக்கா வந்தால் தங்கிச்செல்லும் வகையில் ஒரு தமிழ்மனை உருவாக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இது நிற்க.

அமெரிக்காவின் இன்னொரு இடத்தில் சிவா விட்னுகோயில் உள்ளது. தமிழ் மக்கள் மிகுதியும் கூடும் இடம் இது என்று நண்பர் சொல்லக்கேட்டேன். பலவகையான கோயில் சிலைகள், இறையுருவங்கள் தமிழகம்போலவே உள்ளன.

முருகன் கோயிலைப் பார்த்த நாங்கள் அடுத்து வாசிங்டன் கதீட்ரல் என்ற புகழ்பெற்ற தேவாலயத்தைப் பார்க்கச் சென்றோம். இந்தத் தேவாலயம் அமெரிக்காவில் புகழ்பெற்றது என்பதோடு அமையாமல் உலக அளவிலும் புகழ்பெற்றது. இந்தத் தேவாலயத்தில் அமெரிக்க அதிபர்கள் பலர் வந்து வணங்கியுள்ளதாக அறிந்தேன் அமெரிக்க மாநிலங்களின் அனைத்துக் கொடிகளும் இந்தத் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளன. கைதேர்ந்த சிற்பிகள் பலர் இணைந்து இந்தத் தேவாலயத்தை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு பகுதியையும் யார் உருவாக்கினார்கள் என்ற வராலாற்றுக் குறிப்பு உள்ளது. இந்தத் தேவாலயத்தையும் நெறியாளர்கள் அழைத்துச்சென்று ஒவ்வொரு பகுதியின் சிறப்பையும் விளக்குகின்றனர்.

நாங்கள் பார்வையிடப் பத்து டாலர் நுழைவுக்கட்டணம் செலுத்தினோம். நுழைவுக்கட்டணம் என்று இல்லாமல் அன்பளிப்பு என்று வாங்கினர். காணொளிகள் காட்சிகளாக ஓடிக்கொண்டுள்ளன. இதன் வழியாகத் தேவாலயத்தின் சிறப்புகள், கட்டட முயற்சிகள் பற்றி அறியலாம்.

கண்ணாடி வேலைப்பாடுகளும், பளிங்கு வேலைப்பாடுகளும், மர வேலைப்பாடுகளும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன. 3500 பேர் இந்த தேவாலயத்தில் அமர்ந்து கூட்டங்களைக் கேட்கமுடியும் என்றனர்.

தேவாலயத்தைப் பார்த்த நாங்கள் பகலுணவுக்குப் புகழ்பெற்ற ஓர் உணவகத்திற்குச் சென்றோம். அங்குள்ள தரமான உணவகங்களுள் இது முதலிடம் பெறுவது என்று நண்பர் சொன்னார். உலக அளவில் இதன் கிளைகள் இருப்பதாகவும் கூறினார். ‘பன்னு’ இரண்டன் நடுவே கோழியிறைச்சியை இணைத்துச் சுவையாகச் செய்திருந்தார்கள். தூய்மைக்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற அமெரிக்க உணவகங்களை நம்பி உண்ணலாம் என்ற அடிப்படையில் உண்டேன்.

நண்பர் அவர்கள் குளிர்க்குடிப்பு அருந்தும்படி அன்பால் வேண்டினார்கள். எனக்குக் குறைந்த அளவு உணவே போதும் என்றேன். எனினும் அவர் வாங்கிய குளிர்க்குடிப்பை இருவரும் பகிர்ந்து உண்டோம். வெளியேறும்பொழுது மேலும் குளிர்க்குடிப்பை நிரப்பிக்கொண்டு நண்பர் வந்தார். வழி நெடுக அருந்தலாம் என்பது அவர் எண்ணம். நம் ஊரில் உண்டுமுடித்து இலையை மூடிப்போட்டு,அதன்மேல் ஒரு குவளையை எடுத்து இலை பறக்காதபடி வைத்து வந்துவிடுவோம். ஆனால் உணவை வீணாக்காத அமெரிக்கர்களின் பழக்கம் நம் நாட்டில் என்றைக்கு வருமோ என்று ஏங்கினேன். காரணம் திருமண வீடுகளில், விருந்துகளில் நாம் உணவை வீணாக்குவதை அப்பொழுது நினைத்துகொண்டேன்.

உணவு முடித்து நாங்கள் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைப் பார்வையிடப் பிற்பகல் மூன்று மணியளவில் சென்றோம். மேரிலாந்து பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழைமையான பல்கலைக்கழங்களில் ஒன்றாகும். உலக அளவில் புகழ்பெற்ற பல ஆய்வுகள் இங்கு நடந்துள்ளன. இங்குப் பயின்றவர்கள் உலக அளவில் அறிவியல் அறிஞர்களாகப் புகழ்பெற்று விளங்குகின்றனர். பல்லாயிரம் மாணவர்கள் இங்குப் படிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பல கட்டடங்களாகப் பிரிந்து பல இடங்களில் இருந்தபடி மேரிலாந்து பல்கலைக்கழகம் கல்விப்பணியாற்றுகின்றது.

முதலில் நுண்ணுயிரியல் துறையினைப் பார்வையிட்டோம். அங்குப் பணிபுரிந்த நண்பரின் துணைவியார் அங்கு நடைபெறும் முக்கியமான ஆய்வுகளை எடுத்துரைத்தார். அங்குள்ள ஆய்வுக்கூட வசதிகள் எனக்குப் பெரு வியப்பை உண்டாக்கின. பலகோடி உருவாக்களை ஆய்வுக்கு வாரி இறைப்பதைக் கண்டு அறிவில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை வியந்தேன். வேறு சில துறைகளையும், வகுப்பறைகளையும், கருத்தரங்கக் கூடங்களையும், மாணவர் அமைப்புகளையும், விடுதிகளையும், விருந்தினர் இல்லங்கள்,எழுதுபொருள், சிற்றுண்டிக் கடைகளையும் மாணவர்களின் பொழுதுபோக்கு இடங்களையும் கண்டு வியந்தேன்.

நம்மூர் பாம்பு நடமாட்டப்புகழ் பல்கலைக்கழகங்களின் விருந்தினர் விடுதிகள் பற்றியும் அதில் தங்கிய அறிஞர் பெருமக்கள் பட்ட இடையூறுகள் பற்றியும் நான் அறிந்த செய்திகள் மெதுவாக என் நினைவுக்கு வந்து அலைமோதின.

பாம்புடன் கட்டிப் புரண்ட ஒரு பேராசிரியர் தலையணையால் பாம்பை அழுத்தி உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்ததை இப்பொழுது நினைத்துக்கொண்டேன். கல்விக்கண் திறந்த பெருமகனாரின் பெயரில் உள்ள பல்கலையின் விருந்தினர் விடுதியில் நான் ஒருமுறை தங்கநேர்ந்தபொழுது பலவாண்டுகளாகப் புற்று ஈசல் மண்டிய, ஒட்டடைகள் படிந்து, பலநாள் தூய்மை செய்யாமல் பூட்டிக் கிடந்த பாழும் மண்டபம் ஒத்த அந்த விடுதி அறையை விருந்தினர்களுக்குக் கூச்சம் இல்லாமல் வழங்கிய அந்தப் பல்கலைக்கழக நிர்வாகத்தை நினைத்து நான் கலங்கி நின்றேன்."மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்று விருந்தினரைப் போற்றிய மரபினர் நாம். இன்று யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனது. அமெரிக்காவில் அது சுடர்விடுவது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது.

எத்தனைப் பொறியாளர்கள், காவலர்கள், ஏவலர்கள், நிதி அலுவலர், பதிவாளர், துணைவேந்தர், ஆளவை, கல்விக்குழு என்று பல பெயரில் கல்வியாளர்கள் நம் நாட்டில் கூடிக் கூத்தடிக்கின்றனர். பலகோடி புரளும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லமும் எவ்வளவு வனப்புடனும் பாதுகாப்புடனும் போற்றிக் காக்கப்பட வேண்டும். ஆனால் சாதிச்சண்டைகளாலும், அரசியல் வல்லதிகாரக் கும்பலாலும், பணவேட்டைக் கல்வியாளர்களாலும் நம் நாட்டின் கல்விச்சூழல் பாழ்பட்டுப் போனதை நினைத்து வருந்தினேன். இத்தகு இழிநிலைக்கு யாரும் முடிவுகட்ட முன்வரவில்லையே என்ற ஏக்கமும் பெருமூச்சும் எனக்கு மேரிலாந்து பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டபொழுது ஏற்பட்டது.

நம் நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குப் பணிவாய்ப்பு வேண்டிப் பாரதிதாசன், திருவள்ளுவர், பாரதியார், சுந்தரம்பிள்ளை போன்ற அறிஞர்பெருமக்கள் நேர்காணலுக்கு வந்தாலும் அவர்களிடம் பணப்பை கேட்கும் நிலைதான் உள்ளது. கல்விக்கு முதன்மையளிக்காத எந்த நாடும், எந்தச் சமூகமும் முன்னேறியதாக வரலாறே இல்லை. இவை முற்றாக ஒழியாதவரை நம் நாட்டில் உயர்கல்வியில் முன்னேற்றம் காண இயலாது. இந்த நினைவுகளுடன் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் உள்ளே சென்றேன்.

எத்தனை வகையான நூல்கள், குறுவட்டுகள், ஒளிநாடாக்கள், வரைபடங்கள், செய்தி ஏடுகள், மேசைகள், கணினிகள், இணைய இணைப்புகள். உள்ளே நுழையும் ஒவ்வொருவனையும் அறிவாளிகளாக மாற்றாமல் அந்த நூலகம் விடாது. அந்த அளவு நூலகங்களுக்கு அமெரிக்காவில் முதன்மை உண்டு.மேரிலாந்து பல்கலைக்கழக நூலகமும் அதன் பல மாடிக்கட்டட வனப்பும், அலுவலர்களும் என் கனவுக்காவலர்களாகத் தெரிந்தனர். நுண்படச்சுருளில் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழ்கள்,இதழ்கள்,ஆவணங்கள் அங்குப் பாதுகாக்கப்படுகின்றன.

நம்மிடம் உள்ளதுபோல் சில மூடப்பழக்கங்களும் அங்கு இருப்பதை அறிந்தேன். நூலகத்தின் முகப்பில் ஓர் ஆமையின் படிமம் இருந்தது. இதன் மூக்கைத் தடிவிப் பார்த்தால் நல்ல மதிப்பெண் வரும், தேர்வில் மிகுந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம் என்று அந்த நாட்டு மாணவர்கள் நம்புகின்றனர்.அது அவர்களின் நம்பிக்கை என்று நானும் அந்த ஆமையின் மூக்கைத் தடவிப்பார்த்தேன். எல்லோர் கையும் பட்டுள்ளதால் அந்த ஆமை வழவழப்பாக இருந்தது. "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கிக் கிடக்கும்" அந்தத் திருவள்ளுவர் கண்ட ஆமை என்னை வரவேற்று நலம் வினவியதாக உணர்ந்தேன்.



மேரிலாந்து நூலக முகப்பு


கண்டுபிடிப்புகளுக்கு முதன்மையளிக்கும் மேரிலாந்து பல்கலைக்கழகம்


மேரிலாந்து பல்கலைக்கழக நூலக முகப்பில்


மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஒரு கட்டடப்பகுதி


கருத்தரங்க அறைகள்


முருகன் கோயில் வழிகாட்டிப் பலகை


அமெரிக்காவின் முருகன்கோயில்


சிவா-விட்னு கோயில் முகப்பு


தேவாலயத்தின் உள்பக்கம்(கலை நயத்துடன்)


வாசிங்டன் தேவாலயம்


தேவாலயத்தின் கலைநுட்பம் வாய்ந்த பகுதிகள்

3 கருத்துகள்:

மயிலாடுதுறை சிவா சொன்னது…

மிக அருமை இளங்கோவன்

மேலும் அமெரிக்க தகவல்களை பற்றி எழுதுங்கள்.

நன்றி

மயிலாடுதுறை சிவா...

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

ஐயா! அருமையான செய்திக்களஞ்சியம் இந்த பதிவு.

.கவி. சொன்னது…

அன்புள்ள இளங்கோவன்.

திருவள்ளுவர் சிலையை இன்னும் ஓர் ஓரத்திலேயே வைத்திருப்பது மிகவும் வருத்தம் தரும் செயல்.

அடுத்த வருடம் வாசிங்டனில் நடத்தும் நடத்தும் திருவிழாவாவது இதற்கு நல் வழி காணட்டும்.

நடிக, நடிகைகளை அழைக்க பல ஆயிரம் டாலர்கள் செலவு செய்யும் போது அமெரிக்காவில் திருவள்ளுவரின் நிலை வருத்தம் அளிப்பதாகவே உள்ளது

நட்புடன்
.கவி.