நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 1 ஜூலை, 2011

துரை மகனார் இல்லமும் பதிவர் சந்திப்பும்…


துரைமகனார் இல்லம்(Thoreau’s House)

அமெரிக்க மக்களின் உயரிய இயல்பு மிகுதியாக உழைத்துப் பொருளைத் திரட்டுவதும், பின்னாளில் அதனை மக்களுக்கே திருப்பி வழங்குவதுமாக இருப்பதை அறிந்தேன். மிகப்பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்த துரைமகனார் ஒருவர் எல்லாச் செல்வச் செழிப்பிலிருந்தும் நீங்கி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் ஏரிக்கரையில் ஒரு சிறுகுடில் அமைத்துத் தங்கி வாழ்ந்ததாக நண்பர் பாலா சொன்னார்.

இளமுருகு, பாலா, நான் மூவரும் அந்தக் குடிலுக்குச் செல்ல நினைத்தோம். காடும் மலையுமான பல பகுதிகளைக் கடந்து துரைமகனாரின் இல்லத்தின் அருகில் எங்கள் மகிழ்வுந்து நின்றது. சிறு வீடு. எளிமையாக காட்சியளித்தது. மூன்று நாற்காலி, ஒரு புல்லாங்குழல், ஒரு மெத்தை, இரும்பு அடுப்பு ஒன்று இருந்தது. குளிர்காலத்தில் வெதுப்பாக இருக்க வைத்திருந்தனர் போலும். ஒரு மிசை மட்டும் இருந்தது.

அந்தத் துரை மகனாரின் பெயரை நினைவுகூர்ந்து Thoreau’s House என்ற பெயரில் அந்த வீடு அழைக்கப்படுகின்றது. இதனைக் காண அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். காரி, ஞாயிறு விடுமுறை என்றால் கூட்டம் அலைமோதுமாம். அவரின் சிலையும் அங்கு இருந்தது.

இயற்கை வாழ்க்கை வாழ்ந்த அந்தப் பெருமகனாரின் சிலையையும், குடியிருப்பையும் எளிமையையும், எழுத்து வாழ்க்கையையும் பார்த்தபொழுது எங்கள் அன்புக்குரிய பேராசிரியர் ம. இலெனின்தங்கப்பா அவர்கள்தான் நினைவுக்கு வந்தார். ஆர்ப்பாட்ட உலகில் அமைதி வாழ்க்கை வாழ்பவர்களை நம் நாட்டினர் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் அமெரிக்க மக்கள் அவர் இல்லத்துக்கு வந்து போவது மகிழ்ச்சி தந்தது. நம் ஊரில் நினைவில்லங்கள் அமைப்பதில் எத்தனைவகையான உள்ளடி வேலைகள் நடக்கின்றன என்பதை நினைத்துக் குமைந்தவனாய் அந்தப் பெருமகனின் வாழ்ந்த காலத்திற்கு நினைவு வழியாகச் சென்று பார்த்தேன்.

அவர் இல்லத்தில் இருக்கும் புல்லாங்குழல் எத்தனையோ செய்திகளைத் தாங்கிக்கொண்டு அமைதியாக அந்தப் படுக்கையில் இருந்தது. அருகில் அந்தத் துரைமகனாரின் வாழ்க்கைக் குறிப்பு, அந்த இல்லத்தின் கட்டுமானப் பொருட்கள், அதற்குரிய அந்த நாளைய விலை விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.சற்றொப்ப இருபத்தொன்பது டாலர் செலவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதையும் ஒவ்வொரு பொருளும் அந்த நாளில் என்ன விலைக்கு விற்றன என்ற விவரமும் அறிந்து திகைத்தேன்.

அருகில் இருந்த ஏரிக்கரையின் எழில்கொஞ்சும் அழகைப் பார்த்தபடி பதிவர் சந்திப்புக்குப் புறப்பட ஆயத்தமானோம்.

முன்பே திட்டமிட்டபடி இந்திய உணவகம் ஒன்றில் பதிவர்கள் ஒன்றுகூடினோம். இதில் இளமுருகு, பாலா, இராஜேஷ், வேல்முருகன் உள்ளிட்ட நால்வரும் கூடிப் பதிவுலகப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டோம்.

என் பணிகளை அவர்கள் ஆர்வமுடன் கேட்டனர். பதிவுலப் போக்குகள் பற்றி மனம் திறந்து உரையாடினோம். இடையில் இந்தியவகை உணவுகள் ஒவ்வொன்றாக வருவதும் அழிவதுமாக இருந்தன. விடுதியில் பணிபுரிந்த பணியாளர்கள் சிலர் புதுச்சேரிக்காரர்களாக இருந்தனர். தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் பதிவுலகம் பற்றியும் அங்குள்ள பணியாளர்கள் அறிந்திருந்தனர். இடையிடையில் அவர்களும் எங்கள் பேச்சில் கலந்துகொண்டனர். விருந்தும், உரையாடலும் நிறைவுற்றதும் அவரவர்கள் அவரவர் தேசத்துக்குப் பிரிந்தனர். நாங்கள் வீடு வந்து சேரும்பொழுது நடு இரவு இருக்கும்.


துரைமகனார்( Thoreau’s)சிலை


துரைமகனார் சிலை,மு.இ


வீட்டுப்பொருள் விளக்கும் வரைபடம்


வீடுகட்டிய செலவு விவரம்


அடுப்பு


பதிவர்கள்


பதிவர்கள்

1 கருத்து:

vidivelli சொன்னது…

anaiththum vaasiththean
nalla pathivu
valththukkal