
பால்டிமோர் துறைமுகத்தின் அழகின் சிரிப்பு
அமெரிக்காவில் பால்டிமோர்(Baltimore) என்பது குறிப்பிடத்தக்க நகரமாகும். இது மேரிலாந்து மாநிலத்தின் தலைநகரமாகும். இங்கிருந்து வாசிங்டன் நகரைக் குறைந்த மணி நேரத்தில் அடையலாம். வாசிங்டன் நகருக்குப் பலர் இங்கிருந்து பணிக்குச் சென்று திரும்புவது வழக்கம். காலையில் நண்பர் சங்கருக்குப் பணி இருந்ததால் என்னைப் பால்டிமோரின் துறைமுகத்தில் விட்டுவிட்டு அவர் பணிக்குச் சென்றார்.
பால்டிமோர் துறைமுகம் என்று சொன்னாலும் உண்மையில் அங்கு இப்போது கப்பல் போக்குவரத்தை விட, சுற்றுலாத் தொழில்தான் சிறப்பாக உள்ளது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூர்ச் சுற்றுலாக்காரர்களும் அதிகமாக வருகின்றனர். பேருந்துகள் நம்மூரில் வரிசைகட்டி நிற்பதுபோல் சிறு சிறு படகுகளும், கப்பல்களும் துறைமுகத்தில் அணிவகுத்து நிற்கின்றன. அமெரிக்க உள்ளூர்க்காரர்கள் படகு ஓட்டம் நிகழ்த்துவதில் ஆர்வலர்கள். பலர் தங்கள் மகிழ்வுந்தில் படகுகளைக் கட்டிக்கொண்டு வருகின்றனர். கடலில் அல்லது ஆற்றில் இறக்கி ஒரு ஓட்டம் நடத்தி மீண்டும் படகைத் தூக்கிக் கட்டிக்கொண்டு ஊருக்குப் போகின்றனர். சிலர் வாடகைக்குக் கடலில் தங்கள் படகை நிறுத்தி வைக்கின்றனர். மாத வாடகையோ, ஆண்டு வாடகையோ செலுத்திப் படகைக் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைப்பது உண்டாம்.
சில கப்பல் அல்லது படகு நிறுவனங்கள் சுற்றுலாப் பயணிகளைக் குறிப்பிட்ட கட்டணத்தில் அழைத்துச்சென்று ஒரு வட்டமடித்துக் கடலைக் காட்டிக் கொண்டு வருகின்றனர். கரையைச்சுற்றி உணவுக்கூடங்கள், காட்சியகங்கள் உள்ளன. மீன்காட்சியகத்தில் நுழைய கட்டணம் 30 டாலர் என்றனர். தனியே சென்றதாலும் நீண்டநேரம் அங்கு ஆகும் என்பதாலும் மீன்காட்சிகம் நான் செல்லவில்லை. மறுநாள் நான் தெற்குக் கரோலினாவில் மீன்காட்சியகம் பார்க்க உள்ளதாலும் அங்குச் செல்லாமல் நேரே நாற்பது மாடிகளாக உயர்ந்து நிற்கும் ஒரு கோபுரக் கட்டடத்திற்குச் செல்ல நினைத்தேன். ஐந்து டாலர் கட்டணம் கட்டி உயரே சென்றேன். அங்கிருந்து பார்த்ததும் பால்டிமோர் நகரம் முழுவதையும் பார்க்க முடிந்தது. அழகிய கட்டடங்கள் இருக்கின்றன. வங்கிகள், வணிக நிறுவனங்கள் யாவும் வானுயரும் கட்டடத்தில் உள்ளன.
சற்றொப்ப 300 ஆண்டுகள் பழைமைகொண்ட பால்டிமோர் துறைமுகத்தில் சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல் போக்குவரத்து 1950-ஆண்டளவில் நலிந்துபோய்விட்டது. எனவே பழைய இடங்களை இடித்துத் தள்ளிவிட்டு, சுற்றுலா மையங்களைக் கட்டியுள்ளனர். மீன் காட்சியகம், கப்பல் காட்சியகம், அறிவியல் மையம், வணிகமையம், உணவு விடுதிகள் என்று பழைய அடையாளம் தெரியாமல் மாற்றப்பட்டுவிட்டது. எங்கும் மக்கள் போவதும் வருவதுமாக இருக்கின்றனர். பால்டிமோர் துறைமுகம் பல போர்கள் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
இரண்டாம் உலகப்போரின்போது சப்பான் கப்பல்களைக் கடைசியாக அழித்த அமெரிக்க நீர்முழ்கிக் கப்பல் டோர்சுக் இப்போது காட்சியகத்தில் இருக்கிறது. வருடந்தோறும் உலகத்தின் உயரமான கப்பல்களின் அணிவகுப்பு விழா பால்டிமோர் துறைமுகத்தில் நடக்குமாம்.
பால்டிமோர் கோபுரக்கட்டடத்தில் ஒவ்வொரு பார்வைப்பகுதியிலும் தென்படும் கட்டடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்துள்ளனர். வளிப்பாடு கட்டடம் முழுவதும் உள்ளது. அங்கு ஒரு மணி நேரம் இருந்து அனைத்துக் கோணத்திலும் பால்டிமோரின் அழகைக் கண்டு மகிழ்ந்தேன். அங்கு ஒரு இந்தியக் குடும்பத்தினர் வந்தனர். என் உருவம் கண்டு இந்தியன் என்று அவர்கள் பேச்சுக்கொடுத்தனர். அவர்கள் பஞ்சாபியர்கள் ஆவர். நாட்டு ஒற்றுமையால் மனம் குளிர்ந்து பேசினோம். சிறிது நேரத்தில் அவர்கள் மீன்காட்சியகம் சென்றனர். நான் கீழிறங்கித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள், போர்க்கப்பல்கள் பலவற்றைப் பார்த்தேன்.
ஒவ்வொரு கப்பலின் உள்ளே சென்று பார்க்கவும் கட்டணம் வைத்திருந்தனர். குழுவாக இருந்திருந்தால் சென்று பார்க்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தனி ஆளாக அங்குமிங்கும் நடந்தேன். கடற்கரைத் துறைமுகத்தின் நீண்ட தூரம் நடந்து அழகுக்காட்சிகளைப் பார்த்துத் திரும்பினேன்.
இப்பொழுது இரண்டுமணி நேரம் கடந்திருந்தது.
மீண்டும் நண்பர் சங்கருக்குத் தொலைபேசி செய்தேன். அந்தக் கருவி புதியது என்பதால் அதனை எனக்கு இயக்கத் தெரியவில்லை. அருகிலிருந்த ஒருபெண்மணியிடம் கொடுத்து தொடர்புகொண்டு சங்கரைப் பிடித்தேன். ஒரு மின்னஞ்சலும் தட்டினேன். அவர் சிறிது நேரத்தில் நான் இருக்கும் இடம் வந்து என்னை அழைத்துக்கொண்டார். அவர் பணிபுரியும் இடத்தில் நின்ற அவர் மகிழ்வுந்தில் அமர்ந்தோம். அரைமணி நேர ஓட்டத்தில் அவர் இல்லம் வந்தோம். பகலுணவு அவர் இல்லத்தில் முடித்தேன். தயிர்ச்சோறும் ஊறுகாயும் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி. கேட்டு வாங்கி விரும்பி உண்டேன். கடை உணவுகளைவிட வீட்டு உணவுக்கு நான் முதன்மை அளித்தேன். சங்கர் இல்லத்தில் இணைய இணைப்பு கிடைத்ததும் என் குடும்பத்தாருடன் உரையாடல், பதிவிடல் நடந்தது. சங்கர் வீட்டிலிருந்தபடியே அலுவலகப்பணியைக் கவனித்தார்.
சற்று ஓய்வுக்குப் பிறகு இரவு ஒரு விடுதிக்கு உணவு உண்ணச் சென்றோம். அமெரிக்கா வந்துள்ளதால் அங்குள்ள சிறப்பு உணவை உண்ணும்படி சங்கரின் துணைவியார் கேட்டுக்கொண்டார். உண்ணமுடியவில்லை என்றால் வீட்டில் உணவு தயாராக இருக்கும் நிலையையும் சொன்னதால் மனம் துணிந்து அமெரிக்க வகையிலான உணவுகளை உண்டோம். மிதிவண்டி ஓட்டப் பயிற்றுவிப்பதுபோல் சங்கர் அந்த உணவை உண்ணும் முறையை எனக்குக் கற்பித்தார். அங்குப் பரிமாறிய இளைஞர் படிக்கக்கூடியவர் என்றும் அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் உழைத்துப் படிக்க வேண்டியதைக் கடமையாகக் கொண்டவர்கள் என்றும் அங்குள்ள கல்விமுறை, மாணவர்களின் நிலை, தமிழ் அமெரிக்காவில் கற்பிக்க எடுக்கப்படும் முயற்சி பற்றி நீண்டநேரம் உரையாடியபடி உணவைமுடித்தோம்.
மறுநாள் அனைவரும் தெற்குக் கரோலினாவில் நடக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டுக்குச் செல்ல உள்ளதால் துணிமணிகளை ஒழுங்கு செய்து பெட்டியில் அடைத்தபடி இருந்தோம். நான் என் துணிகளைத் தேய்த்து அடுக்கினேன். சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தேன். சங்கர் குடும்பத்தார் தீபாவளிக்குப் பண்ணியம் சுடுபவர்கள்போல் இரவு முழுவதும் கண்விழித்திருந்தனர். சங்கர் அலுவலகப்பணி, மாநாட்டுப்பணி, புறப்படுவதற்குரிய ஆயத்தம்,தொலைபேசி அழைப்புகளுக்கு விடைதரல் என ஒரு போராளி போல் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் துணைவியார் பெட்டிகளை நிரப்பி நான்கு நாளுக்கு வேண்டிய ஆடைகள், பொருள்களை அடுக்கிவைத்தார்.
காலையில் கண்விழித்துக் கதவைத் திறந்து பார்த்தேன். வீட்டுப் பொருள்கள் அனைத்தையும் அடக்கியதுபோல் நான்குபெட்டிகள் கண்முன் தெரிந்தன.

பால்டிமோர் துறைமுகம்

பால்டிமோருக்கு அழகு சேர்க்கும் கட்டடம்

நீர்மூழ்கிக்கப்பல் அருகில் மு.இ

போர்க்கப்பல் அருகில் மு.இ

படகுகள்,கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி

துறைமுகம் சூழ்ந்த கட்டடங்கள்
1 கருத்து:
பால்டிமோர் மேரிலாந்து மாநிலத்தின் பெரிய நகரம், ஆனால் தலைநகரம் வேறு.
கருத்துரையிடுக