திங்கள், 27 டிசம்பர், 2010
சிறப்பாக நடந்த கோவைத் தமிழ் இணையப் பயிலரங்கம்
கோவைக்கு முதன்முதல் கணிப்பொறியை அறிமுகம் செய்த கணிப்பொறி வல்லுநர் கு.வெ.கி.செந்தில் நிகழ்ச்சி பற்றிய மதிப்பீடு வழங்குதல்
கோவையில் பயிலரங்கம் நடத்தும் விருப்பத்தை நண்பர் பிரின்சு அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். உரிய காலம் அமையட்டும் என்று காத்திருந்தோம். எனக்கு அமைந்த விடுமுறையைப் பயன்படுத்தி மிகச்சிறப்பாக நடத்த ஆயத்தம் செய்தோம்.
கோவையில் கல்வியகம் என்னும் பெயரில் தொடர்ந்து கல்விப்பணி செய்த தமிழன்பர் கு.வெ.கி.ஆசான் ஐயா அண்மையில் மறைந்தார்கள். அவர்களின் நினைவாகப் பயிலரங்கம் ஒன்று நடத்தி மாணவர்களுக்கு இணையக்கலவி பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி செய்ய அவர் மகனாரும், குடும்பத்தாரும் இயக்கத்தாரும் விரும்பினர்.
நான் 25.12.2010 இரவு புதுவையில் புறப்பட்டு 26.12.2010 காலையில் கோவை சென்றேன். காலை பத்து மணியளவில் பயிலரங்கம் தொடங்கியது. பேராசிரியர்கள் துரை, இரவி(பேராசிரியர் கி.நாச்சிமுத்து ஐயா அவர்கள் தந்த தகவலின்பேரில் வந்தார்கள்), கூட்டுறவு த்துறை சார்ந்த பன்னீர்செல்வம், திரு.சிவக்குமார் உள்ளிட்ட நண்பர்கள் என் தொலைபேசி செய்தியறிந்து வந்தனர். வசந்தம் கு.இராமச்சந்திரன் ஐயா தலைமையில் தொடக்கவிழா நடந்தது. திரு.சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்.பிரின்சு தமிழ் இணையப் பயிலரங்கத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
நான் காலையில் 10.30 மணியிலிருந்து பகல் 1 மணி வரையிலும் பிற்பகல் 2.15 மணியிலிருந்து 4.15 மணி வரையிலும் தமிழ் இணையப் பயன்பாடு பற்றி பயிற்சியளித்தேன். மாணவர்கள்,தமிழ் ஆர்வலர்கள் ஊக்கமுடன் கற்றுக்கொண்டனர். தமிழ்த் தட்டச்சு தொடங்கிப் பல வகையான பயன்பாடுகளை இணையம் வழி எடுத்துரைத்தேன். திருவாளர் செந்தில் அவர்கள் கணிப்பொறித்துறை வல்லுநர் என்பதால் அவரிடம் அகண்டவரிசை இணைய இணைப்பு, கணிப்பொறிகள், அவை சார்ந்த பொருட்கள் சிறப்பாக இருந்தன. ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக இருந்தது. மின்சாரமும் தடையில்லாமல் இருந்தது. பார்வையாளர்கள் நூறுபேர் வருவார்கள் என்று விழாக்குழுவினர் எதிர்பார்த்தனர். நூற்றைம்பது பேருக்கு மேல் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பிரின்சு பெரியார் இடையில் சில விளக்கங்கள் சொல்லி எனக்கு உதவியாக இருந்தார்.
இணையம் வழியாக அமெரிக்காவில் இருந்த வைரம், சென்னையில் இருந்த தமிழ்த் தேனீயுடன் உரையாடினோம். அரங்கினர் பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாகக் கணிப்பொறி வல்லுநர் செந்தில் அவர்களும், பேராசிரியர் துரை அவர்களும் மதிப்பீட்டு உரை வழங்கினர். அனைவரிடமும் விடைபெற்று அறைக்கு வந்தேன்.
என் நண்பர் பேராசிரியர் அன்பு சிவாவுக்கு ஒரு தொலைபேசி பேசினேன். அடுத்த ஐந்து நிமையத்தில் அறைக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்தபடியே இந்துத்தான் கல்லூரிப் பேராசிரியர் மணிவண்ணன் அவர்களிடம் பேச வாய்ப்பை உருவாக்கினார். நலம் வினவினோம்.
பேராசிரியர் மணிவண்ணன் அவர்களைச் செம்மொழி மாநாட்டில் சந்தித்தேன். என் இணையம் கற்போம் நூலை அப்பொழுது அவர்கள் வாங்கினார்கள்.அதன்பிறகு இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவாக உரைத்தார்கள்.அன்பு சிவாவும் முன்பு ஒரு பயிற்சியில் கலந்து கொண்டவர். இப்பொழுது தமிழ்த்தட்டச்சு அவருக்கு எளிதாகிவிட்டது. தட்டச்சில் புகுந்து விளையாடுகின்றார்.
மீண்டும் விழாக்குழு சார்பில் கு.வெ.கி.செந்தில்,சந்திரசேகர், தமிழ்முரசு ஆகியோர் அறைக்கு வந்து விருந்தோம்பல் செய்து இரவு என்னை வழியனுப்பி வைத்தனர்.
பிரின்சு என்னாரெசு பெரியார் இணைய தளங்களின் உள்ளடக்கம் பற்றி உரையாற்றுதல்
பதிவர் இலதானந்து தம் பதிவுலகப் பட்டறிவை விளக்குதல்
பேராசிரியர்கள் இரவி, துரை, திரு.பன்னீர்செல்வம்(கூட்டுறவுத்துறை)உள்ளிட்டோர் பார்வையாளர்கள் வரிசையில்
பேராசிரியர் துரை அவர்கள் பார்வையாளர்கள் சார்பில் மதிப்பீடு வழங்கல்
ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
கோவைப் பயிலரங்கு வெற்றி பெற்றமைக்கு பாராட்டுக்கள்...
தங்களின் தொடர்ந்த தமிழிணைய சேவையை வாழ்த்துகிறேன்
கோவை இணைய பயிலரங்கு குறித்த செய்தியினை தங்களது வலை பூவிலிருந்து எடுத்து தங்களது அனுமதியின்றி வெளியிட்டுவிட்டோம். தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்... நன்றி அய்யா..
sentil sir vankkam great sir
பரவ வேண்டிய செய்திகளை வெளியிடுவதில் தவறில்லை.
முடிந்தால் ஒரு இணைப்பு வழங்கவும்.
தங்கள் தளத்தைப் பார்வையிடும் நண்பர்கள் என் பக்கத்துக்கு வர அது உதவியாக இருக்கும்.
நன்றி. வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக