
க.ச.சுப்பையா புலவர்
அண்மையில் சிவகாசிக்குச் சென்றுவந்தேன். பிரியதர்சினி அச்சுக்கூட உரிமையாளர் திரு. இரவி அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபொழுது நம் தமிழார்வம் அறிந்து பல வகையில்
மனந்திறந்து பேசினார். கடும் உழைப்பில் உயர்நிலைக்கு வந்துள்ள திருவாளர் இரவி அவர்கள் குறைந்த படிப்பு என்றாலும் தொழில் நிமித்தமாகப் பலமொழிகளில் உரையாடும் ஆற்றல் பெற்றவர்.பட்டறிவால் மேம்பட்டுச், செய்யும் தொழிலைச் சிறப்புறச் செய்து வருகின்றார்.
பேச்சு ஓட்டத்தில் நான் சந்திக்க வேண்டும் என்று ஒருவரின் தமிழ் ஆர்வத்தைத் திருவாளர் இரவி எனக்கு எடுத்துரைத்தார். தமிழார்வலரைச் சந்திக்காமல் சென்றால் என் வருகை குறையுடையதாகிவிடும் என்று கூறி அந்தத் தமிழன்பரைப் பார்க்க ஏற்பாடு செய்யச் சொன்னேன்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் ஒரு தமிழ்த்தொண்டர் என் முன் வந்து நின்றார். அவர் வருகை தந்ததும் அச்சுக்கூடத்தில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் ஆர்வமுடன் ஒன்றுகூடி விட்டனர். வந்த பெரியவர் வணக்கம் கூறி, தம் பெயர் க.ச.சுப்பையா புலவர் என்றும் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் என்றும் தமக்கு அகவை 66 என்றும் குறிப்பிட்டார். தமிழில் ஈடுபாடுடன் விளங்கித் தூய தமிழில் அதிகாரிகள் முதல் உள்ளூர்ப்பெருமக்கள் வரை பழகியதால் அவரை மக்கள் புலவர் என்று அழைப்பதை உரையாடலால் அறிந்துகொண்டேன்.
சிவகாசி நகராட்சியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்தபொழுது இவரின் மேலதிகாரிகள் பலரும் பாராட்டும் வண்ணம் தூயதமிழில் பேசியும், தூய உள்ளத்துடன் பொய்கூறாமலும் பணிபுரிந்துள்ளார். ஏற்ற இடங்களில் திருக்குறளை எடுத்து மேற்கோள் காட்டுவது இவர் இயல்பு. பல திருக்குறளை மனப்பாடமாகக் கூறும் ஆற்றல் பெற்றுள்ளார்.
இவரின் பேச்சு நிலையில் தெரித்து விழுந்த சில தூய தமிழ்ச்சொற்கள் இருப்பு நிலைய அதிகாரி, கோப்பு, மாவட்ட ஆட்சியர் கடிதம், ஆணையாளர், மேல் மடல், வெண்புகைக் குழல் ஊதி, சின்னம், மின்சாரப் பணியாளர் என்று அழகு தமிழில் உரையாடினார். இவருக்கு மூன்று பெண் மக்களும், ஒரு ஆண் மகனும் உள்ளனர். பெயரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் இவரின் தமிழார்வத்தைப் போற்றி முறம்பு பாவாணர் கோட்டத்தில் உள்ள தமிழன்பர்களைப் பாராட்டும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களும் என் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு புலவர் நெடுஞ்சேரலாதன் தலைமையில் வரும் 09.02.2011 இல் முறம்பு ஊரில் நடக்கும் பாவாணர் பெருவிழாவில் பாராட்ட உள்ளனர்.
புலவர் முகவரி:
க.ச.சுப்பையா புலவர் அவர்கள்
எண் 2039 / 1 சவகர்லால் நேரு சாலை
5 ஆம் தொகுதி,
பராசக்தி பகுதி(காலனி),
சிவகாசி
செல்பேசி : 95853 87882 (திரு.சங்கரபாண்டி த/பெ திரு.சுப்பையா)
3 கருத்துகள்:
இது போன்றோரை அடையாளம் காட்டும்
தங்களின் செயல்,
''இவரன்றோ இணையத் தமிழர்''என்று
எங்களைச் சொல்ல வைக்கின்றது.
தமிழ்ஆர்வலரை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!
நாம் தெரிந்து கொள்வதோடு பிறருக்கும் அறியத் தருவது பெருமகிழ்வுக்குரியது. தொடர்க தங்கள் பணி! வாழ்க சுப்பையா புலவர்!
கருத்துரையிடுக